வேதார்த்த ஸங்க்ரஹம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 1

வேதார்த்த ஸங்க்ரஹம்

வேதங்களின் உட்பொருள் அறிதல்

தொடக்க ச்லோகம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II

இந்த ச்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.  அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்துகொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில் அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது. வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம்  மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ச்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார். இம்மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார். இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

பரம்” எனும் சொல் எல்லாவகையிலும் மேன்மையைக் குறிக்கும். வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது. ப்ரஹ்மம் எல்லா  மங்கலங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது. ஆகவேதான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது, அறியப்படவேண்டியது என ஓதப்படுகிறது. தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன – (i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மைதான் யாது? (ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது (ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய உணர்வுபூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும். ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை, பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது. ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின்பாற்பட்டனவே. மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும். முதலில் தான் ச்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.

மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின்  அம்மாயை முன்பே இருக்க வேண்டும். ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாகவேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது. தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை/அவித்யை எவ்வாறோ குழப்புகிறது என்பதை நிலைநிறுத்துவதில் உள்ள ச்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார். “பர” என்றதால் இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது. இவ்வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை. இவற்றால் தளையுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ்விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும் துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன/அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும், ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும்  கருதினார். அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாலும், நிலைநில்லாமையாலும் ஏற்படுகிறது. அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிகொள்வதாலும் அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது. வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம் “ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும், அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது. ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக, ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள்  இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும். அதாவது எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும் எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்  ஆனந்த ஸ்வரூபமானதும் குறைகளே அற்றதும் எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ்விளக்கங்களால் அறிந்துகொள்வது தவறான அறிவும், அறியாமையும் ஆகும். “இதம் தம:” என்றது இதையே.

இத்தகைய புரிந்துகொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது. வேதங்களைப் புரிந்துகொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை, வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன, பலரும் இக்கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே. இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே! நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப்பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழிதவறிப் போவர். இக்கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை. ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ்விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கியருளுகிறார். வேதங்களுக்குத்  தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார். ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப்படுத்துவது கடமையாகும். ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி: = இச்சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம் ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார். தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜயகோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும். தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டியுள்ளதாக்கியுள்ளார்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/01/vedartha-sangraham-2-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment