ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதங்களின் உட்பொருள் அறிதல்
இவ்விரிவுரை இங்குத் தொடங்குகிறது. இனி ஒவ்வொரு பத்தியையும் வ்யாக்யானத்தோடு நோக்குவோம். ஸ்வாமி வேதங்களின் ஸாரமான பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.
மூன்றாம் பத்தியின் சுருக்கம்:
வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும் உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.
இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்துகொள்ள முடியும்.
வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.
ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்துகொள்ளப் படவேண்டும். அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை, வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபடவேண்டும். இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.
உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால் வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை. ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது. ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது. சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ்முறையும், ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர். இதில் முன்னது தாழ்ந்த நிலை, பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.
ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார் பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவச்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை. மாறாக, இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்படவேண்டும். ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே. ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்துகொண்டு செயல்படுகிறார், ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார். ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல், பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது. பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி. எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் ஈவிர உறுதியான அன்பே பக்தி. இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.
ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத் ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று. ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர். சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர். ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே. ஞானமே பக்தியாக முதிர்கிறது, அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது. ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.
எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்கலமே வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.
“இணையடித் தாமரைகள்” என்பதால் ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார். எத்தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை. அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது. உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய், பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.
ஈச்வரானுபவமானது அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே. கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று, ஈச்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா. இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார். ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால், அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா. ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது. கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.
இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம் ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.
ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால் சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன. இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.
சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.
வேதாந்த வாக்யங்கள் இவ்வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன. அவை ஆத்மாவின் உண்மை சாரம், இறைவனின் உண்மை நிலை, ஈச்வரனை வணங்கும் வகை, ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.
ஸ்வாமி தொடங்கும்போதே வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வஜன சுகம் என்பதை விளக்கினார். வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது. துயரத்தை மறுப்பதுமட்டுமன்று, பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.
வேதாந்த வாக்யங்கள் யாவைக்கும் இதே நோக்கம்தான். “தத்வமஸி”, “அயமாத்மா ப்ரஹ்ம”, “ய ஆத்மனி திஷ்டன் நாத்மனோந்தரோ யமாத்மா ந வேத, யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத:”, “ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹதப் பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:”, “தமேதம் வேதா நு வசநேன ப்ராஹ்மணா விவிதிச்யந்தி யஞ்ஞேன தானேன தபஸா நாசகேன”, “ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”, “தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயநாய வித்யதே” என்பன சில இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இம்மேற்கோள்கள் வேதாந்தத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, எந்த இடம்தொட்டாலும் இந்த தொனி வருமாறு அமைத்துள்ளார். சில பகுதிகள் எம்பெருமானும் ஆத்மாவும் ஒன்றென்னும், சில வேற்றுமையைப் பேசும், ஆனால் எம்பெருமானும் ஆத்மாவும் பரஸ்பரம் உறவுபட்டுள்ளதையே யாவும் காட்டும். யாவுமே இவ்வுலகியலில் மாறுவதுபோலத் தோன்றினும், ப்ரஹ்மத்தை உபாஸித்து வழிபட்டவனுக்கு முடிவிலாப் பேரின்பம் என்றே காட்டும்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/02/vedartha-sangraham-3-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org