ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பத்தி 28
ஆனால், ப்ரஹ்மம் என்பது வெறும் சுத்த ஞானமே என்று படிப்பிக்கப்பட்டால் எல்லா குணங்களும் அற்றது என்று பொருள்பட்டு விடாதா?
அன்று அது அவ்வாறன்று. குணங்களைக் குறிக்கும் சொற்கள் அவ்வவப் பொருள்களின் அடிப்படை இயல்புகளைக் குறிக்கின்றன, அதன்வழி அவ்வவப் பொருள்களின் இருப்பை உணர்த்துகின்றன. இது ஸ்வரூப நிரூபக தர்மம் எனப்படுகிறது.
வேதாந்த ஸூத்ரகாரர், “அடிப்படை இயல்பாய் இருத்தலால் அக்குணம் அவ்வஸ்துவின்/பொருளின் ஸ்வரூபத்தை உணர்த்துகிறது, அதை அறிபவரின் இயல்பை உணர்த்துவதே போல” (2-3-29) என்றும் “அவ்வாறு உயர்த்துவதில் குறை இல்லை, குணங்கள் அவ்வவ வஸ்துவோடு எப்போதும் இருப்பதால்” (2-3-30) என்றும் கூறுகிறார்.
இங்கேயும் ஞானம் என்பது ப்ரஹ்மத்தின் ஓர் அடிப்படைக் குணம் ஆதலால் அதை அவ்வாறே உணர்த்துகிறது. அது நமக்கு, “ப்ரஹ்மம் இயல்புகளற்ற வெறும் ஞானமே” என்று உணர்த்தவில்லை.
நாம் இதை எவ்வாறு அறிகிறோம்?
வேதம் தெளிவாகச் சொல்கிறது, ”யாவற்றையும் அறிந்தவன், புரிந்துகொள்கிறவன் எவனோ” என்கிறது (முண்டக 2-2-7); “அவனது ஆற்றல்கள் மிகப் பெரியன, பல்வகைப் பட்டன” ச்வேதாச்வதார (6-6-17). “அறிபவன் அறிந்துகொள்ளப் படுவது எங்கனம்?” ப்ருஹதாரண்யகம் (4-4-14). ப்ரஹ்மம் வெறும் அறிவு, ஞானம் மட்டுமல்லன், அறிபவனும் கூட! ஆகவே அறிவு அவனது அடிப்படை இயல்பு, குணம். ப்ரஹ்மத்தின் வஸ்து ஸ்திதிக்கு ஞானம் அடிப்படை இயல்பாதலால் வேதம் ப்ரஹ்மத்தைக் குறிக்க ஞானத்தைச் சொல்கிறது.
பத்தி 29
தத்வமஸியில் இச்சொற்கள் குணங்களற்ற ஒரே ப்ரஹ்மத்தைக் குறிப்பதாகக் கொண்டால் இச்சொற்கள் தரும் பொருளை முற்றிலும் தவிர்ப்பதாகவே ஆகும்.
அத்வைதி இவ்வாதத்தை மறுக்கிறார். சொற்களின் அடிப்படைப் போக்குளை ஏற்க வேண்டும் என அவர் இசைகிறார். ஆனால் சொற்களின் அடிப்படைப் பொருள் எதிர்மறையான இருப்பின் மாற்றுப் பொருளைக் கருத வேண்டும். தத் என்பதால் சுட்டப்படும் ப்ரஹ்மம் காரணத்வத்தை அடிப்படையாய்க் கொண்டது. த்வம் என்பதால் சுட்டப்படும் ப்ரஹ்மம் அந்தர்யாமித்வத்தை அடிப்படையாய்க் கொண்டது.(உள்ளுறையும் நியந்தா) உண்மையில் காரணத்வம் அந்தர்யாமித்வம் என்பன இரு வேறு இயல்புகள், ஆகவே இரு வேறு இயல்புடைய தர்மத்தையுடைய தர்மியைக் குறிப்பன. ஒரு தர்மம் அல்லது இயல்புடைய தர்மி அல்லது பொருள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொரு இயல்போடு எவ்வாறு பொருந்த முடியும்? அவர்கள் சொல்லும் ஐக்யத்தை எவ்வாறு அடைய முடியும்? இயல்புகள் யாவும் மறுக்கப்பட்ட இயல்புகள் இல்லாத வஸ்துவே அத்வைதிகள் காட்டும் வஸ்து.
“இவன் அந்த தேவதத்தன்” எனும்போது ஒரு குறிப்பிட்ட மனிதனின் அடையாளம் குறிக்கப் படும். இதில் இவன் என்பது இப்போதைய நேரத்தையும் இடத்தையும், அந்த என்பது கடந்த காலத்தையும் வேறு இடத்தையும் குறிக்கும். நிகழ்காலத்து மனிதனையே கடந்த காலத்துக்கு குறிப்பும் உணர்த்தும் எனில் இயலாது. ஏனெனில் நிகழ் காலம், கடந்த காலம் என்பன இரு வேறு தர்மங்கள். அதே போல் ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களோடு தொடர்புபடுத்தப்பட முடியாது. இதைப் புரிந்துகொள்ள ஒரே வழி அடிப்படைப் பொருள்களைக் கொடுக்கும் இயல்புகள், ஆகிய இடம், காலம் இரண்டையும் தள்ளிவிடுவதேயாம்.
பத்தி 30
அத்வைதியின் இவ்வாதம் சரியன்று. இவனே அந்த தேவதத்தன் என்பதன் அடிப்படைப் பொருள் இரண்டாம் நிலைப் பொருள்களை வைத்து எண்ணாமலே செல்லுபடி ஆகும்.
ஒரு மனிதன் இரு வேறு காலங்களில் இரு வேறு இடங்களில் இருப்பதாக நினைப்பது தவறு எனும் அத்வைதக் கோட்பாடு சரியன்று. ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருப்பதாகக் கூறுவது பிழைபட்டது, ஆனால் அவனே வேறு காலங்களில் இரு வேறு இடங்களில் இருக்கக் கூடும். இருக்க முடியாது என்பது பிழை. முன்பு பிறந்திராத ஒரு குழந்தை இப்போது பிறந்திருக்கலாம். அப்பொழுதே “அக்குழந்தை முன்பு இருந்தது” என்பது பொருந்தாது.
ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருப்பதாகச் சொல்வது முரண்பாடானது. ஆனால் இரு வேறு காலங்களில் இரு வேறு ஓடங்களில் இருப்பதாகச் சொல்வது சாத்தியமே.
அத்வைதி இதை மறுத்தாலும், இந்த அந்த இரண்டனுள் ஒன்றையே அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டையுமன்று. இரண்டாம் பொருளை ஊகிக்க வேண்டிய தேவை இல்லை. அடிப்படை அர்த்தம் தானே நிலை நிற்க இயலும்.
“தத் தவம் அஸி”யில் இக்கஷ்டமும் இல்லை. ப்ரஹ்மம் புற அண்டமாகவும், உள்ளுறையும் நியந்தாவாகவும் இருக்கக் குறை இல்லை. இதில் முரண்பாடுமில்லை, ப்ரஹ்மத்துக்கு ஒன்றனுக்கு மேற்பட்ட இயல்புகள், உண்மையில் கணக்கற்ற இயல்வுகள் உண்டு. இதுவே ஸாமானாதிகரணத்தின் ஆழ்பொருளாகும். ஆகவே தான் அறிஞர்கள் ஒரே வஸ்துவின் பல இயல்புகளைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் பயன்படுவதாகக் கூறுகிறார்கள்.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/08/vedartha-sangraham-9-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org