ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதத்தின் உட்பொருளை அறிதல்
அத்வைத விமர்சம்
பத்தி 31
மேலும், ஒரு விஷயத்தின் விவரங்களை உபஸம்ஹரிக்கும்போது முடிவுகளை எடுக்கையில் அவ்விவரணங்களின் தொடக்கத்தோடு முரண்படலாகாது. ப்ரஹ்மம் பலவாக ஸங்கல்பித்தது என்பதே முதல் விஷயமாகும். ப்ரஹ்மம் தன் ஸத்ய ஸங்கல்பத்தால் பலவாக ஸங்கல்பித்தது, அதனால் தானே ஜகத் காரணம் என்று ஸ்தாபித்தது. ப்ரஹ்மத்துக்கு அவித்யா எனும் தோஷம் உண்டு என்பது, ப்ரஹ்மம் குறைகள் அற்றது என்பதோடு முரண்படுகிறது.
கருத்துகள்
ப்ரஹ்மம் எல்லா நிறைவுகளும் கொண்டது எனத் தொடக்கத்திலேயே சொல்லப்படுவதால், தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே அது ஜகத் ஸ்ருஷ்டி செய்கிறது என்பதோடு அதற்கு அவித்யை/அஞ்ஞானம் உண்டு என்பது சேராது. அடுத்த பத்தியில் வேதம் ப்ரஹ்மத்துக்கு குணங்கள் இல்லை என்னுமாகில் அத்தால் ப்ரஹ்மத்தை விவரிக்க முடியாது என்பது கூறப்படுகிறது.
பத்தி 32
வேதம் சொற்களாலும் வாக்யங்களாலும் ஆனது. சொற்கள் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பொருள்களை உணர்த்துவதால் அர்த்தமுள்ளவை ஆகின்றன, வெவ்வேறு பொருள்களை, வஸ்துக்களைக் குறிப்பதால் சொற்களும், அவற்றால் வாக்கியங்களும் விபின்ன விஷயங்களை உணர்த்தும். ஆகவே குணங்களில்லாமல் ஒரு வஸ்துவை வேதம் உணர்த்த முடியாது.
“குணங்களற்றது” என வேதம் சொல்வது மற்ற வஸ்துக்களில் காணப்படும் குணங்கள் இல்லாமை பற்றி. ஆகவே ப்ரஹ்மம் குணமற்றது என்னவியலாது. அவ்வாறாயின், வேதம் ப்ரஹ்மம் பற்றி ஏதுமே சொல்லியிராது, அவ்வாறாயின் வேதம் ப்ரஹ்மம் பற்றிய ஞானத்துக்கு ஊற்றாயிராது.
ஒவ்வொரு சொல்லும் வேர், உரி இரண்டாலும் ஆனது. பொருள்களை வேறுபடுத்தி உணர்த்த வெவ்வேறு வேர், உரிகள் பயன்படுகின்றன. ஒவ்வொரு வாக்கியமும் இத்தகு சொற்களால் ஆனவை.
கருத்துரை
ஒவ்வொரு வைதிக ஸம்ப்ரதாயமும் வேதமே ப்ரஹ்ம ஞானத்துக்கு அடி என ஒப்புகிறது. வேதம் உபயோகப்படுத்தும் சொற்கள், வாக்யங்களைப் பொறுத்தே வெவ்வேறு வஸ்துகள், அர்த்தங்களைக் குறிக்கும். வேதம் தானே ஒரு பண்பும் அற்ற ஒரு வஸ்துவைக் காட்டாது. அது அதன் ஸ்வபாவத்துக்கு மாறானது.
ஒரு வஸ்துவை இயல்புகள் அற்றது என வேதம் பகரும் என வலியுறுத்தப்படுமேயானால், அவ்வஸ்துவைப் பற்றி அது ஒன்றுமே சொல்லாது! ஏனெனில் அவ்வஸ்துவின் இயல்புகள் பற்றிச் சொல்லாமல் அதனால் அவ்வஸ்துவைப்பற்றிச் சொல்லமுடியாது. வேதம் உண்மையில் ப்ரஹ்மத்திடம் உள்ள சில இயல்புகள் பிற வஸ்துக்களில் இல்லை என்றே சொல்கிறது. உதாஹரணமாக, ப்ரஹ்மம் ஜகத் காரணம், ஸத்ய ஸங்கல்பம் உள்ளது, ஸர்வ வ்யாபி என்கிறது. இவ்வாறு அதுவே ப்ரஹ்மம் பற்றிய தகவல்களைத் தருகிறது.
பத்தி 33
அத்வைதி இவ்விஷயத்தை இவ்வாறு மறுக்கலாம்:
””நாங்கள் குணங்களற்றதைப் பற்றிய தகவல் களஞ்சியம் வேதம் என்ன மாட்டோம். தன்னால் ஒளிரும் வஸ்துவை வேதம் காட்ட வேண்டியதில்லை. அனைத்து வேற்றுமைகளையும் வேதம் மறுத்து விட்டால், மிச்சம் இருப்பது ப்ரஹ்மம் தானே! இவ்வாறு தான் வேதம் ப்ரஹ்மத்தை உணர்த்திகிறது.” என்னலாம்.
பத்தி 34
இந்த வாதம் சரியன்று. எல்லா வேறுபாடுகளும் நீக்கப் பட்டுவிட்ட வஸ்து எப்படி விவரிக்கப்படும்?
அந்த வஸ்து அறிவு மட்டுமே (ஞப்தி மாத்திரம்) என்பது சரியன்று.
அப்படிப்பட்ட ஞானமும் இயல்பு கொண்ட வஸ்துவை மட்டுமே குறிக்கப் பயன் படும். “ஞா அவபோதனே” என்றுள்ளதால் மற்றப் பொருள்களைக் குறிக்கவும் ஞானம் தேவை, வஸ்துவை ஒருவருக்கு உணர்த்துகிறது. அறியும் போது அறிவு தன்னால் வெளிப்படுகிறது. பிற வஸ்துக்களையும் உணர்த்துகிறது.
கருத்து
அத்வைதி விசேஷங்களற்ற வஸ்து பற்றிப் பேச தயங்குவதே இல்லை. அதை ஞானம் என்று உறுதியாக கூறுகிறார். பிற வஸ்துக்களை அறியும் பொது அறிவு தன்னால் விளங்குகிறது. நவீன குருக்கள் சிலர் ச்வாஸத்திலோ, ஆனந்தத்திலோ நிலை நிற்கும் அறிவை தூய்மையான அறிவாக தவறாக கருதுகிறார்கள். ஆனால் அந்த அறிவு ஒரு வித விசேஷத்தை ஆதாரமாகக் கொண்ட அறிவு தான். சில போதகர்கள் மனம் எதைப்பற்றியும் எடைபோடாத நிலை தூய்மையான அறிவின் நிலை என்கிறார்கள். அதுவும் ஒரு வகை பண்பு சார்ந்த அறிவு தான், பண்புகளற்ற அறிவல்ல. நமது போதகரே அதின் பண்புகளை அழகாகச் சொற்களைக்கொண்டு விவரித்து விட்டார்! எந்த பொருளையோ பண்பையோ சாராத அறிவு அறிவே அல்ல. அறிவின்மை அல்லது மயக்க நிலை ஆகும். ஞானம் எப்போதும் பண்புகளை உடையதே. அப்பண்புகளைப் பற்றி அத்வைதி பேச நிறுத்திவிடுவதால் அது பண்புகளற்றது ஆகிவிடாது.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/09/vedartha-sangraham-10-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org