சரமோபாய நிர்ணயம் 6 – எம்பெருமானாரின் பெருமைகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சரமோபாய நிர்ணயம்

<< 5 – ஸ்ரீ ராமானுஜரின் அவதார ரஹஸ்யம்

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.

ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

 

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

2 thoughts on “சரமோபாய நிர்ணயம் 6 – எம்பெருமானாரின் பெருமைகள்”

Leave a Comment