ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< 6 – எம்பெருமானாரின் பெருமைகள்
உடையவர் திருகுருகைப்பிரான் பிள்ளானுக்குத் திருவாய்மொழி ப்ரஸாதிக்கிற போது “பொலிக பொலிக” வந்தவாறே திருகுருகைப்பிரான் பிள்ளான் ஹர்ஷபுலகிதகாத்ரராய் விஸ்மயாவிஷ்டசித்தராய் எழுந்தருளியிருக்க, உடையவரும் அத்தைக் கண்டு , ‘இதென்ன வேறுபாடு தோற்றியிராநின்றீர்’ என்று கேட்டருள, “ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று அருளிச் செய்தார். அப்படியே தேவரீரும் உருக்கள்தோறும் நாமே இதுக்கு விஷயமென்று தொட்டுக் காட்டியருளிற்று.
அத்தை எல்லாம் இப்போது நினைத்து ஹர்ஷ்பரவஶனாய், ஆழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வோத்தாரகராய் நாடு அடங்க வாழும்படி திரு அவதரித்த தேவரீரிடத்திலே ஸம்பந்தமும் பெற்று, தேவரீர் திருப்பவளத்தாலே திருவாய்மொழிக்குப் பொருள் கேட்கும்படிக்கு ஒரு ஸுக்ருதம் நேர்படுவதே! என்று விஸ்மயப்பட்டிருந்தேன்” என்ன, உடையவர் மிகவும் உகந்தருளி, அன்று ராத்ரி காலத்திலே பிள்ளானை அழைத்தருளி, அவர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு பேரருளாளர் ஸன்னதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித் தம்முடைய திருவடிகள் இரண்டையும் அவர் முடியிலே வைத்தருளி, “இத்தையே தஞ்சமாகப் பற்றி விஶ்வஸித்திரும், உம்மை அடைந்தார்க்கும் இத்தையே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்து, “நாளை பேரருளாளர் ஸன்னதியிலே தொடங்கி திருவாய்மொழிக்கு, ஶ்ரீ விஷ்ணு புராண ஸங்க்யையிலே ஆறாயிரம் க்ரந்தமாக வ்யாக்யானம் பண்ணும்” என்று நியமித்தருளினார். இத்தால் தம்முடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டபடியிறே.
உடையவர் தம் திருவடிகளில் ஆஶ்ரயித்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும், அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கூட்டிக் கொண்டு திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு இருக்கிற நாளிலே, ஆசார்யர்கள் எல்லாரும் உடையவர் திருவடிகளிலே மேல் விழுந்து ஆஶ்ரயிக்க, இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும், உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கவேணுமென்று எழுந்தருள, அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தருளினார். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் போர பயப்பட்டு, “குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினாப்போலே செய்தாரித்தனை. இதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் போராது, எம்பெருமானார் ஸர்வோத்தாரகராய்க் கொண்டு ஜகத்தடைய வாழப் பிறந்தவராகையாலே நமக்கெல்லாம் அவர் திருவடிகளேயாகையாலே, எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்து நிர்ப்பரராய் இருங்கோள்” என்று அருளிச் செய்தார். பின்பு உடையவர் அவர்களை அழைத்தருளி, “ நாம் பகவத்ஸம்பந்தம் பண்ணினோமில்லை என்று குறைப்பட்டிராதே கிடீர்கோள்; அவர் பண்ணினதே நாம் பண்ணினது. உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம்” என்று அருளிச்செய்து, திருவடிகளிரண்டையும் நெருக்கி வைத்தருளி, “இத்தையே தஞ்சமாக நினைத்திருங்கோள்” என்று அருளிச்செய்தாரிறே.
உடையவர், முதலிகளும் தாமுமாகத் திருவேங்கடமுடையானை ஸேவிக்கவேணுமென்று பேரருளாளனை அநுமதிகொண்டு திருப்பதியிலே எழுந்தருளி, “விண்ணோர் வெற்பு” என்கிறபடியே நித்யஸூரிகள் வந்து பரிமாறுமிடத்தே நாம் கால் கொண்டு மிதிக்கையாவதென்னென்று அங்கே திருத்தாழ்வரை அடியிலே எழுந்தருளியிருந்து, “தானே தொழுமத்திசையுற்று நோக்கியே” என்கிறபடியே திருவேங்கடமுடையானை திசை கைகூப்பி ஸேவித்து மீண்டு எழுந்தருளுவதாக உத்யோகித்தவளவிலே, அனந்தாழ்வான் தொடக்கமான ஶ்ரீவைஷ்ணவர்கள் எல்லாரும், ‘தேவரீர் ஏறாவிடில் நாங்களும் ஏறோம்; மற்றையொருவரும் ஏறுவதில்லையாகையாலே தேவரீர் அவஶ்யம் எழுந்தருள வேணுமென்ன’, உடையவரும் திருமேனி ஶோதனையும் பண்ணிக் கொண்டு, 32. “பாதேநாத் யாரோஹதி” என்று ஶ்ரீவைகுண்டநாதனுடைய நியோகத்தினாலே பாதபீடத்திலே அடியிட்டு ஏறுமாப்போலே திருவேங்கடமுடையான் அருளப்பாடிட்டருளத் திருமலையிலே ஏறியருளித் திருப்பரியட்டப்பாறையளவாக எழுந்தருளாநிற்க, “முடியுடைவானவர் முறை முறை எதிர் கொள்ள” என்கிறபடியே பெரிய திருமலைநம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ராஸாதமும் கொண்டு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே எதிர்கொள்ள, உடையவரும் தண்டம் ஸமர்ப்பித்து, தீர்த்தப்ரஸாதமும் ஸ்வீகரித்து, “தேவரீர் எழுந்தருள வேணுமோ? ஒரு சிறியாரில்லையோ” என்ன, “நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன். தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும், ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது , ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய, உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி, தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி, “நாம் உமக்கு முன்பே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர்?” என்ன – நாயன்தே! “கிடந்ததோர் கிடக்கை” என்றும், “பிரானிருந்தமை” என்றும், “நிலையார நின்றான்” என்றும் சொல்லுகிறபடியே தேவரீர் நிற்றல், இருத்தல், கிடத்தல் செய்தால் அது மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும். அதில் கிடையழகு கோயிலிலே காட்டியருளிற்று, நிலையழகு ஹஸ்திகிரியிலே காட்டியருளிற்று, “அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்கிறபடியே திருமலையிலே குணநிஷ்டருக்கும் கைங்கர்ய நிஷ்டருக்கும் காட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிற நிலையழகும் கண்டு அநுபவிக்க வேணுமென்று விடைகொண்டேன் என்ன, ஆகில், இங்கு வாருமென்று திருவடிகளிலே திருமுடியை மடுக்கச் சொல்லி “இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்ஶனத்தை நடத்தி வையும், உபய விபூதிக்கும் நீரே கடவீர் . உம்முடைய அபிமானத்திலே ஒதுங்கினவர்களே நமக்கு வேண்டியவர்கள், எல்லாரையும் நமக்காளாம்படி திருத்தும், ஜகத்தை அடையத் திருத்த வேணுமென்றாய்த்து, நாமும்மை நம் முதன்மையில் நின்றும் அழைப்பித்தது, உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கு ஒரு குறைகளுமில்லை.
“சூழல் பல பல” என்கிறபடியே நாம் அனேகாவதாரங்கள் செய்தவிடத்தில் ஒருவரும் அகப்படாமல் இழவோடே போனோம். அந்த இழவை நீர் தீர்ப்பீரென்று ஆறியிருக்கிறோம். அப்படியே செய்யப்பாரும்” என்றருளிச் செய்தார். இத்தால் திருவேங்கடமுடையானும் இவருடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டானாய்த்து.
அனந்தரம், உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –
33. बहुने मे व्यतीतानी जन्मानी तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणी नत्वम वेत्थ परन्तप ॥ ( गीता ४.५ )
“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,
34. आसूरीं योनिमापन्ना मूढ़ा जन्मनि जन्मनि।
मामप्राप्येव कौन्तेय ततो यांत्यधमां गतिम ॥
“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்
18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.
மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.
நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று சதுரராய் கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.
35. “ प्रयाण काले चतुरस श्वशिष्यन पधाथीकास्थान वरदो ही वीक्ष्य |
भक्ति प्रपत्ति यदि दुष्करेव रामानुजार्यम नम तेत्यवादीत ||”
“ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.
காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத் தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.
கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,
36 “ सत्यम सत्यम पुन: सत्यम यतिराजो जगद्गुरु |
स एव सर्वलोकानाम उद्धार्ता नात्र संशय ||”
(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org