ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
இன்னமும் ஆசார்யவைபவம் – ஸதாசார்யஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி, அன்று தொடங்கி இவனுக்கு நல்விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் – “புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும், “ஆதித்ய – ராம – திவாகர – அச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாதபோதிற்கமலமலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும், விடியாவெந்நரகான ஸம்ஸாரமாகிற காலராத்ரிக்கு ஆசார்யன்தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள். “பார்வை செடியார் வினைத்தொகைக்குத்தீ” என்றும், “ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: | தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும், “யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி | தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும் சொல்லுகிறபடியே ஆசார்யகடாக்ஷமானது ஸ்வவிஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேண்டாதபடி தானே தூறுமண்டிக்கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ்ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை அவர்கள் முன்பு மஹாபாபிகளேயாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய் அவ்வளவன்றிக்கே பின்பு ஸுஸ்திரமான பரமபதத்தையும் சென்றடையப் பெறுவார்கள். “நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதியன்றோ சீராருமாசாரியனாலேயன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”, “உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப்பேருண்டிறே, அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பாரொருவருண்டிறே, அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதியிடக்கடவோம்”.
பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம்” என்றார். ஶ்ரீமதுரகவிகள் “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார். அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார். இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார். அவர் “அடிக்கீழ்மர்ந்து புகுந்தேன்” என்றார். இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார். அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார். இவர் “தேவு மற்றறியேன்” என்றார். அவர் “பாடியிளைப்பிலம்” என்றார். இவர் “பாடித்திரிவனே” என்றார். அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார். இவர் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்” என்றார். அவர் “உரியதொண்டன்” என்றார். இவர் “நம்பிக்காளுரியன்” என்றார். அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார். இவர். “அன்னையாயத்தனாய்” என்றார். அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார். இவர் “என்னையாண்டிடும் தன்மையான்” என்றார். அவர் “கடியனாய்க்கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார். இவர் “சடகோபன்” என்றார். “யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார். இவர் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார். அவர். “எமரேழுபிறப்பும் மாசதிரிதுபெற்று” என்றார். இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார். அவர் “என்னால் தன்னை இன்தமிழ் பாடியவீசன்” என்றார். இவர் “நின்றுதன்புகழேத்த அருளினான்” என்றார். அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார். இவர் “என்றுமென்னை இகழ்விலன்காண்மினே” என்றார். அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார். இவர் “எண்டிசையுமறியவியம்புகேன் ஒண்தமிழ்ச்சடகோபனருளையே” என்றார். அவர் “அருளுடையவன்” என்றார். இவர் “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார். அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான்” என்றார். இவர் “நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார். அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார். இவர் “ஆட்புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார். அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார். இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” என்றார். அவர் “ஆராதகாதல்” என்றார். இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார். அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார். இவர் “தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார். அவர் “உலகம் படைத்தான்கவி” என்றார். இவர் “மதுரகவி” என்றார். அவர் “உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகுந்தம் ஊரெல்லாம்” என்றார். இவர் “நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டியருளினார். அவர் “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றார். இவர் “கோலத்திருமாமகள்கொழுநன் தானே குருவாகித்தன் அருளால்” என்றும், ***
“தான் ஹிதோபதேஶம் பண்ணும்போது” என்று தொடங்கி, “நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்தரத்தை உபதேஶித்தவனை. ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந்மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை. ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப்போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன். ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி. ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக்கடவன். ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம். அவன் பூர்ணனாகையாலே கொள்ளான். அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது. ஈஶ்வரனைப்பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி. ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும். ஆகையிறே குருபரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் அபயப்ரதாநமும் அருளிச்செய்ததும், ஆசார்யனுக்கு ஸத்ருஶப்ரத்யுபகாரம் பண்ணலாவது விபூதிசதுஷ்டயமும் ஈஶ்வரத்வயமும் உண்டாகில். ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும். ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும். ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாநபக்திவைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி, “இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும். ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”. “நல்லவென் தோழி” என்று தொடங்கி, “அசார்யாபிமாநந்தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும். பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது. இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும், பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாக்கும்”.
“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று ஆச்சான் பிள்ளை அருளிச்செய்வர். விபரீதஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்ஷுவுக்கு த்யாஜ்யன். விபரீதஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச்சொல்லுமவன். ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும். ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு முழுகுமவனன்று, தன்னைக் கரையேத்தவல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே. ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும். கருடத்யாநத்துக்கு விஷம் தீருமாப்போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம் என்று அருளிச்செய்வர்கள். ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும் பெரிய மதிப்பனாய், அர்த்தகாமோபஹதனன்றிக்கே லோக பரிக்ரஹமுடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org