அந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 3

வடுகநம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள் அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள, உடையவர் புறப்பட்டு ஸேவித்து, “வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள, வடுகநம்பி, ‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும். ஆகையால் இத்தைவிட்டு வரக்கூடாது’ என்று அருளிச்செய்தார் என்று ப்ரஸித்தமிறே. “உன்னையொழியவொரு தெய்வமற்றறியா, மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலையை, என்றனுக்கு நீ தந்தெதிராசா எந்நாளும், உன்றனக்கே ஆட்கொள் உகந்து” என்று வடுகநம்பி நிலையையும் நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித்தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத்வைத்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான்; ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்  (2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத் தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி, பின்பு, ‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள, ‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய, அபிமாநநிஷ்டனாகில் இப்படி இருக்கவேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும் (3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு ஸாத்த்விகையைப் பார்த்தருளி, ‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன, ‘புழங்குகாண், “வேர்த்துப்பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல் அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச்செய்தார் என்றும் இம்மூன்று வார்த்தையும் பலகாலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர். இதில் வார்த்தை உபதேஶத்தாலே அறியவேணும்.

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்றொருவர் வித்யையாலும் ஶிஷ்யஸம்பத்தாலும் அறமிகுந்தவராய் அநேகஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி எடுப்பித்துக்கொண்டு தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க, பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளியிருக்க, அவ்வளவில் அருளாளப்பெருமாள் தம்முடைய வெற்றிதோற்ற எழுந்திருந்து அற்றைக்குப்போக, உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை ‘இத்தனைகாலமும் தேவரீருடைய ஸ்வரூபரூபகுண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்; இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டுவந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும் அழித்துப்பொகட்டு லீலை கொண்டாடத் திருவுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று அமுது செய்தருளாமல் கண்வளர்ந்தருள, பெருமாளும் அந்த க்ஷணத்திலே ‘உமக்கு ஸமர்த்தனாயிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்; அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத்தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக்கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு “வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை” என்கிறபடியே மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்ககோஷ்டிக்கு எழுந்தருள, அவ்வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிறபோது இங்கு நின்றும் சோம்பிக்கொண்டெழுந்தருளாநின்றார், ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ, உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன, அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து ‘தேவர்க்கு இப்போது பெரியபெருமாள் ப்ரத்யக்ஷமானபின்பு தேவரீரென்ன, பெரியபெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன். இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய்திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை. ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருளவேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க, உடையவரும் அவ்வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப் பெரியதொரு மடத்தையும் கொடுத்து, ‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும், உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை. விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி வ்யாக்யாநம் பண்ணிக்கொண்டு ஸுகமே இரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள, அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

எம்பெருமானார் – அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க, அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன, புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷணவர்கள் நெஞ்சுளைந்து “நீங்கள் இரண்டு சொல்லுவானென்? இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன, அவர்கள் ‘உண்டு காணும்; அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்; ஆகையாலே சொன்னோம்’ என்ன, ‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன, ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர்காட்ட, அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள். இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு, ‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை எம்பெருமானார்க்கு எதிராகச் சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று மிகவும் வ்யாகுலப்பட்டு, அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து உடையவர் திருவடிகளைக் கட்டிக்கொண்டு ‘அநாதி காலம் இவ்வாத்மா தேவர் திருவடிகளை அகன்று அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும் அகற்றிவிடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க, உடையவர் ‘இதுவென்’ என்ன, அங்குப்பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய, உடையவரும் அச்செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி, ‘ஆனால் இனி உமக்கு நாம் செய்யவேண்டுவதென்’ என்ன, அருளாளப் பெருமாளெம்பெருமானார் ‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும் , ‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் வைத்துக்கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த் தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம் அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும் பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற ப்ரபந்தங்களையும் இட்டருளி, அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும் “தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே ஸச்சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பரதேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும், அவன்தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார் அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment