அந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 4

 

ஆழ்வான், பட்டர், நாச்சியார் ஸமேத நம்பெருமாள்

கூரத்தாழ்வான் திருவயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக்கொள்ள, பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான், அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன, பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன, ‘உண்டு’ என்று சொல்ல, அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய், வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று ‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர் இரண்டாற்றுக்கும் நடுவே பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன, வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன, ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன, வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும் ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார். அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று, ‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன, ‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன, ‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன, ‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன, பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும் வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து வேதாந்திகளுடனே சொல்லாமல் வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன, அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேதஶாஸ்த்ரங்களொழிய உமக்கு மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன, ‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர் ‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர்பூதராம்படி பண்ணிக்கொள்ளவேணும்’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து, ‘மேல்நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார். அவரைத் திருத்தி நம்முடைய தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ணவேணும் என்று அங்கே விடைக்கொள்ளுகிறேன், அவரை நன்றாகத் திருத்தி ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றியருளவேணும்’ என்று பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய, பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித் தம்முடைய குமாரரான வாசிதோற்ற, ‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப்போம்’ என்றுவிட,

பட்டர்  – நஞ்சீயர்

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’ என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும் இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று, ‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க, அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன, அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி – ‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப்போகாது. அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்துவிடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலைவாசலிலே இருந்து நாலிரண்டு மாஸம் வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுரவொட்டாதே தள்ளிவிடுவார்கள்’ என்ன, பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி – ‘வேதாந்திகள் தநவானாகையாலே அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர், அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ரத்திலே சென்றால் வேதாந்திகளைக் கண்களாலே காணலாம். ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’ என்று சொல்லிப்போனார்கள். பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம்பற்றித் தம்முடைய அனைத்து பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி, ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி இடுக்கிக்கொண்டு ஒரு காவி வேஷ்டியையும் தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனேகூட கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேலே பெரிய மதிப்போடே இருக்க, ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர, பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள, வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன, ‘எல்லாரும் உண்கிறவிடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’  என்ன, ‘எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன, வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன, பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன, வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது நம்முடைய முன்வந்துநின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்கவல்லார் இந்த லோகத்திலே இல்லையாகையாலே, வேஷம் கார்பண்யமாயிருந்ததேயாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து ‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன, அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை இவையெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளிநின்று மஹாவேகத்திலே உபந்யஸிக்க, அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரைகுலையத் தலைகுலைய இறங்கிவந்து பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி, வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணியருளி, ‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச்சொல்லாவதில்லை. விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயாவாதத்தை ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி, ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச்செய்து, ‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று உத்யோகிக்கிறவளவிலே ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகாரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து பட்டரை மீளவும் ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருபல்லக்கிலேற்றி உபயசாமரங்களைப் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண்டு புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு ‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும் கடைகெட்டு ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார், அநாதிகாலம் தப்பி அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கைகழிந்துபோன இவ்வாத்மா என்றும் தப்பிப்போம் என்று திருவுள்ளம்பற்றி, இப்படி அதிகார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதிதுர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய்விட, பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி, ‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச்செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிதுநாள் எழுந்தருளியிருந்து பட்டரைப் பிரிந்திருக்கமாட்டாதே கோயிலுக்கு எழுந்தருளத்தேட அங்குள்ளவர்கள் அவரைப் போகவொண்ணாதென்று தகையத் தமக்கு நிரவதிக தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து, மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத்தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு ஸந்யஸித்துக் கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும் தம்மதென்கிற அபிமாநத்தைவிட்டு, பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திருமாளிகையிலே விட்டுவைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க, அவ்வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு ஒருக்ஷணமும் பிரியாமல் தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார். ஜீயரும் பட்டரையல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார். பட்டர் நஞ்சீயர் என்று அருளிச்செய்தவன்று தொடங்கி வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று. நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்வர்.

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க, அவர்களும் ‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’ என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய, ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக்காட்டுங்காண்’ என்ன, அவரும் எழுதிக்கொடுக்க, ஜீயர் அத்தைக்கண்டு ‘எழுத்து முத்துப்போலே நன்றாயிருந்தது; ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய, திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’ என்று ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தையறிந்து ‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

நஞ்சீயர் – நம்பிள்ளை

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி ‘இப்படித்தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க, அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய, ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட, வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே கட்டிக்கொண்டு நீஞ்ச, அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக, அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து, ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச்செய்தருளின அர்த்தம் ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே ஓரொரு பாட்டுக்களிலே உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க, ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்தவளவிலே தாமருளிச்செய்த கட்டளையாயிருக்கச்செய்தே ஶப்தங்களுக்கு மிகவும் அநுகுணமாக அநேக விஶேஷார்த்தங்கள் பலவிடங்களிலும் எழுதியிருக்கையாலே அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி வரதராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிராநின்றது; இதேது சொல்லும்’  என்ன, அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க, ஜீயரும் ‘நீர் பயப்படவேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன, வரதராஜனும் ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன். ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப்போய்த்து. இது தேவரீர் அருளிச்செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய, ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹாஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக்கலிக்கன்றிதாஸர்’ என்று திருநாமம் சாத்தித் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக்கொண்டு பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார். ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று தொடங்கி வரதராஜனுக்கு நம்பிள்ளை என்று திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை “நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர், அவரவர்தம் ஏற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே, ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார். ‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன் கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில் சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளையுடைய வைபவமிருப்பது.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment