அந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 5

திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க, நம்பியும் ஒருநாழிகைப்போது திருக்கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு ‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலேகாணும் இருப்பது; அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச்செய்வர்.

 

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே அவனைக் கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக்கொண்டு ஸம்ஜ்ஞையாலே தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டியருள, ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத் கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்தபின்பு ‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில் இப்பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கியருளுவர்; கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து விட்டாராகையாலே எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு அநதிகாரியாய் விட்டேன்’ என்று ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற திருப்பதியிலே எழுந்தருளினவாறே அவ்வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க, உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க, அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன, உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன, அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச்செய்கையாலே திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய, உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போரவித்தராய், அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத் தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன, அவளும் தம்முடைய அகத்தைக்காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி, அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப்போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித் தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார். அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத்ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச்செய்வர்கள். இந்த வ்ருத்தாந்தங்களாலே ‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா | ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே ஶாஸ்த்ராநதிகாரிகளான இவர்களெல்லாம் பரமக்ருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

  • திருக்குருகைப்பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந்நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண, அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
  • ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க, வடுகநம்பி எழுந்திருந்து குருபரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவகாரியம் என்று அருளிச்செய்து அவ்வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும் “நாவகாரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலையாண்டான் அருளிச்செய்யும்படி – நாம் பகவத்விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ்ஸம்ஸாரத்தில் ஆளில்லை; அதெங்ஙனே என்னில், ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச்சுமந்து ரக்ஷித்து அதினருகே கூறைகட்டிப் பதினாறாண்டுகாலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது; அதுபோலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரமபதத்தை, இதுக்குடலாக ஒரு நல்வார்த்தையருளிச்செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலாகிலும் க்ருதஜ்ஞராகாத ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தாமாலையிலே ப்ரஸித்தம். “கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்நவ்ரதே ததா| நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி:” என்கிறவிடத்தில் க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்யோபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதியில்லாத பாபமென்றால் அப்ராக்ருதமாய், நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி, “அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாநப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும்போது உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையையிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து தெளிந்த நீரானது மேலே நிற்குமாப்போலே அஜ்ஞாநப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்; தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே, பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப்போய், அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும் கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத்துல்யர்கள் கண்வட்டத்திலே வர்த்திக்கை ஸ்வரூபம் என்று பூர்வாசார்யர்கள் அருளிச்செய்வார்கள். (கதகஷோத இத்யாதி).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக்கெழுந்தருளுகிறபோது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரியாண்டானை ‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள, ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர, பெருமாள் அவரைப்பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம்பற்றியருள, ‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டேயாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று அவரும் விண்ணப்பம் செய்ய, ‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள, அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக்காதவழி மீண்டு, கரைமனையாற்றங்கரையிலே விட்டெழுந்தருளியிருந்தார். ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க; அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச்சோலைகள் தோன்றுகிறது, ஶ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு போய் ஸேவித்துவாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள; ‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய, ‘இது ஒரு அதிகாரம் இருந்தபடியென்! இந்நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து ‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி “ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன, அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று. இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச்செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது, ** பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க, அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம்போலேகாணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே “நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும், “யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன, அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு, ‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன, அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத்விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு ஒரு தேஶவிஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன, “பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில் மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது, அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார். பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து, ‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார். ‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை; ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன். தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றியருளி உலாவியருளும்போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார். இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’ என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே “பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும், அவர் அருளிச் செய்தருளும் நல்வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய், ஆனந்த மக்நராய்க்கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச்செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட, இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்துருந்து தண்டனிட வேண்டுகையாலே ‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலியெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக்கடவோம்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு ‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்; வேர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால் உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளிவிடப் போகிறார்களோ? இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்கவன்றோ உள்ளது” என்று அருளிச்செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி, அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப்பூமரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு திருவேங்கடமுடையானுக்குத் திருநந்தவநம் செய்கிறத்தைக் கண்டு ‘அந்ந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்யஸூரிகளை ஒருவிடத்திலே இருக்கவொட்டாமல் கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க்கொண்டு ஏதுக்கு நலக்குகிறீர்; அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திருமாளிகையிலே நாள்தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள் அமுதுசெய்தருளின இலை மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்; அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து *பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம். திருப்பூமரங்களை பாதியாமல் எழுந்தருளமாட்டீரோ?’ என்று அருளிச்செய்தார். அநந்தரம் அங்குத்தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து அநந்தாழ்வானுடைய திருமடியிலே கண்வளர, அந்ந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து ‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க, அவரும் ‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின அவருடைய திருமாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச்செய்த உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினார். இத்தால் சொல்லித்தென் என்னில், அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க, அதில் ஒரு தாத்பர்யமற்று ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமானபடி சொல்லிற்று.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment