ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸாக்ஷாத்காரமென்றும், விபூதிஸாக்ஷாத்காரமென்றும், உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும், ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும். ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாநவிஶேஷம். விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை. உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை. ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை, இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை, அப்புருஷார்த்தமே உபாயம் என்றறிகை. கீழ்ச்சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததேயாகிலும் ப்ரத்ய க்ஷஸாக்ஷாத்காரம் இல்லாதபோது அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை. அவைதான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்கமாட்டாது. அவையாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும். பரத்வம் நித்யமுக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்காலவர்த்திகளுக்கும், அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதிஶூந்யர்க்கும். இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்டவொண்ணாது. இனி இவையிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்யாமையாலே இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி. ஆகையாலே பத்தசேதநன் முக்தனாம்போது, ஸகலஶாஸ்த்ரங்களாலும் அறுதியிட்டுப்பார்த்தவிடத்தில், ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாநப்ரதாநம் பண்ணவொண்ணாமையாலே ஜ்ஞாநப்ரதாநம் பண்ணின வஸ்துதானே உபேயமாகவேணும்; உபேயமான வஸ்துதானே உபாயமாகவேணும்; இவ்விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும். மயர்வற மதிநலமருளப்பெற்று இவ்வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும், மயர்வற மதிநலமருளினவன் தானே இவனுக்கு அவையெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்; அல்லாதது உபாயாந்தரங்களோபாதி. இப்பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக்குறை ரஹஸ்யத்திலே வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச்செய்தார்.
“ஆசார்யாபிமாநமாவது இவையொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து, ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும் மாதாவைப்போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல பரமதயாளுவான மஹாபாகவதாபிமாநத்திலே ஒதுங்கி, “வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும் இவ்வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தார். லோகாசார்யரும் தாம் பேரருளாளப்பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்துநம்பியாருக்கு ப்ரத்யக்ஷம். இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச்செய்தருளினார். இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச்செய்தவை பலவுமுண்டு; அவையெல்லாம் க்ரந்த விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்.
ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும், அவற்றினுடைய தாத்பர்யங்களை யதாதர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபயவிபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து ஸகலவேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின ப்ரபந்நஜனகூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும், ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் தொடக்கமான இவ்வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏககண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன்தானே ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதியிட்டுப் பலவிடங்களிலும் கோஷிக்கையாலே, அநாதிகாலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட” பரத்வாதி பஞ்சப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திருமந்த்ரமுகேந “கடுங்கதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டுபோய், “ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” என்கிற அக்கரையேற்றி, அமாநவ கரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து நித்யவிபூதியிலே நித்யகைங்கர்யம் கொண்டருளக்கடவோம் என்று திருவுள்ளம்பற்றி, ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப்போலே இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக ‘ஸாக்ஷாந்நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்| மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா” என்கிறபடியே ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன்தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ளவேணும்.
இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச்சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ணவேணுமென்று கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்யபுத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது. ஆகையாலே மநுஷ்யபுத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும், தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது. “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே குருவிஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்யபுத்தியை ஸவாஸநமாக விட்டு, “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ளவேணுமென்னும் இவ்வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாணபரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலைநிற்கும். ஆக இப்படி “யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்” என்றும், “பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபாமூர்த்தியாய், அதிஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே “உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”, “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உபாயோபேயமாகப் பற்றவேண்டியிருக்க, அத்தைச்செய்யாதே ‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”, “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும், “ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும், ‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும், ‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப” என்றும் சொல்லுகிறபடியே அதிதுர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய், ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும் “ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய், அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய், “வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய், “க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,
“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து| குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே “ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில் ஸகலபுருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டியிருக்க, அங்ஙனம் அன்றிக்கே, தத் விஷயத்தில் ஸர்வஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து, அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி ‘இதுதானே ஸத்ஸம்ப்ரதாய பரம்பராஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது – ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்யவிஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப்பாக்யரான ஶுஷ்கஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே மேலெழுந்தவாரியான இடுசிவப்புப்போலே இவ்வர்த்தம் நெஞ்சில் நிலையில்லாது. “ஆசார்யாயாஹரேதர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்| தததீநஶ்சவர்த்தேத ஸாக்ஷாந்நாரயணே ஹி ஸ:”, “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந்தீபப்ரதே குரௌ, ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாச்சரரூபீ ந ஸம்ஶய:”, ‘குருரேவ பரம்ப்ரஹ்ம”, “குருமூர்த்திஸ்திதஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்யநிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்; அல்லாதபோது ஈடேற வழியில்லை என்று அஸ்மதாசார்யோக்தம். “ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்தார்.
இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும், அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும், அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்யபூமியும் அவன் எழுந்தருளியிருக்கிற இடமாகவும், அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப்படியே தாரகாதிகளாகவும், “உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும், “எதிராசா என்னையினிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும், “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும், “என்பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக்களைந்த இராமாநுசன்” என்றும், “கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றியருளினான்” என்றும் சொல்லுகிறபடியே அவனே இஷ்டப்ராப்தி – அநிஷ்டநிவாரணம் பண்ணித்தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு “குருணாயோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌபரமாம் ஸித்திம் நியமாது பகச்சத:” என்று ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றேயாகிலும் ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன்கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே ஸ்வகதஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தைவிட்டு “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகதஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதியிட்டு “ஸம்ஸாராவர்த்தவேக ப்ரஶமந ஶுபத்ருக் தேஶிகப்ரேக்ஷி – தோஹம்” என்றும், “நிர்பயோ நிர்பரோஸ்மி” என்றும், “ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம்பீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும், ‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து. “இருந்தேனிருவினைப் பாசங்கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று, “இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”, “தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”, “நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும், “இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச்சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே நித்யவிபூதியோடு லீலாவிபூதியோடு வாசியற காலதத்தவமுள்ளதனையும் ஆநந்தமக்நராய்க்கொண்டு வாழத்தட்டில்லை.
ஆகையாலிறே இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று மாணிக்கமாலையிலே நிஶ்சயமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது. ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில், நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து “மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க, அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க, திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக்கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்தபின்பு இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும் இவ்வார்த்தை கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Swamin. the link for this chapter 12 is missing in chapter 11 page. There is no option to comment there hence commenting here