திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

நம்மாழ்வார் – குமுதவல்லி நாச்சியார் ஸமேத திருமங்கை ஆழ்வார்

நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நம்மாழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும் உள்ள நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஓர் அற்புத ஸம்பந்தம் உண்டு. முதலில் அதைச் சுருக்கமாக அனுபவித்த பின்பு இக்கட்டுரையில் திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வாரை அனுபவிப்போம்.

மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் “மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த” என்று ஓர் அற்புத விஷயத்தை நமக்காக அருளிச்செய்துள்ளார். இவரே நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றும் இதே ப்ரபந்தத்தில் அருளியுள்ளார். நம்மாழ்வார் வடமொழி வேதங்களான ரிக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களின் ஸாரமான அர்த்தங்களை தன்னுடைய நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி மூலம் முறையே வெளியிட்டு அருளினார்.

வேதங்களுக்கு ஆறங்கம் சீக்ஷா, வ்யாக்ரணம், நிருக்தம், கல்பம், சந்தஸ், ஜ்யோதிஷம். இதே போல நம்மாழ்வாருடைய நான்கு ப்ரபந்தங்களுக்கு அங்கமாக திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்று ஆறு ப்ரபந்தங்கள் அருளியுள்ளார்.

நம்மாழ்வார் சுருக்கமாக அருளியதை திருமங்கை ஆழ்வார் விரிவாக அருளிச்செய்வார். நம்மாழ்வார் விரிவாக அருளியதைத் திருமங்கை ஆழ்வார் சுருக்கமாக அருளிச்செய்வார். உதாரணத்துக்கு, நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருக்குடந்தை ஆராவமுதன் எம்பெருமானுக்கு ஒரு பதிகம் (பத்துப் பாசுரங்கள்) ஸமர்ப்பித்தார். திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கை ப்ரபந்தத்தையே ஸமர்ப்பித்தார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் நான்கு பதிகங்களில் எம்பெருமானுக்குத் தூது அனுப்பினார். திருமங்கை ஆழ்வார் சில பாசுரங்களில் எம்பெருமானுக்குத் தூது அனுப்பினார்.

மேலும் நம்மாழ்வாருடைய பாசுரங்களில் மிகத் தேர்ந்தவராகத் திருமங்கை ஆழ்வார் இருந்ததால் அவர் “இருந்தமிழ் நூற்புலவன்” என்றே கொண்டாடப்பட்டார். திருவாய்மொழிக்கு “இருந்தமிழ் நூல்” என்ற சிறப்புத் திருநமத்தை ஆழ்வார் தாமே திருவாய்மொழியில் அருளிச்செய்துள்ளார். நம்மாழ்வாரிடத்திலே இருந்த பேரன்பால் இவரே பெரிய பெருமாளிடம் ப்ரார்த்தித்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கொண்டாடும் அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கி வைத்து, அதைப் பல காலம் நடத்திவந்தார்.

நம்மாழ்வார் இன்பமாரி என்று அழைக்கபடுவதும், திருமங்கை ஆழ்வார் அருள்மாரி என்று அழைக்கப்படுவதும் நாம் அறிந்ததே.

இந்த முன்னுரையுடன் திருமங்கை ஆழ்வார் எம்பெருமான் விஷயமாக மிகவும் ஈடுபட்டு அருளிச்செய்த திருநெடுந்தாண்டகத்தின் கடைசிப் பாசுரம் நம்மாழ்வார் விஷயத்தில் மிகப் பொருத்தமாக அமைந்திருப்பது ஓர் அற்புதமான விஷயம். இதுவே இக்கட்டுரையின் முக்கிய விஷயம். இதைச் சிறிது அனுபவிப்போம்.

மின்னுமா மழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை

இங்கே வ்யாக்யானத்தில், இவ்வரிகள் எம்பெருமான் விஷயமாகப் பெரியவாச்சான் பிள்ளையால் அற்புதமாக விளக்கப் பட்டுள்ளன. சுருக்கமாக – வேதம் தொலைந்துபோன காலத்திலே, எம்பெருமானை ப்ரஹ்மாதி தேவர்களும், முனிவர்களும் ஸ்தோத்ரம் செய்து துதிக்க, எம்பெருமான் ஒரு அன்னமாக அவதரித்து வேதத்தை வெளியிட்டருளினான். அப்படிப்பட்ட எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் “பெரிய மழை மேகத்தைப் போன்ற கரு நீல வண்ணனே, நித்யஸூரிகளின் தலைவனே! எங்களுக்கு அருளாய்” என்று கொண்டாடுகிறார். இன்னொரு விளக்கம் – எம்பெருமானை “பெரிய மழை மேகத்தைப் போன்ற கரு நீல வண்ணனே, நித்யஸூரிகளின் தலைவனே! எங்களுக்கு அருளாய்” என்று ப்ரஹ்மாதி தேவர்களும், முனிவர்களும் ஸ்தோத்ரம் செய்து துதிக்க, எம்பெருமான் ஒரு அன்னமாக அவதரித்து வேதத்தை வெளியிட்டருளினான்.

இவ்வரிகள் நம்மாழ்வார் விஷயத்தில் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பது ஒரு அற்புத ரஸானுபவம்.

  • மின்னுமா மழை தவழும் மேகவண்ணா – எம்பெருமான் எப்படி கருநீல நிறத்தை உடையவனோ அதைப் போல ஆழ்வாரும் கருநீல நிறத்தை உடையவரே. இவர்கள் இருவரும் கருணையிலும் காளமேகத்தைப் போன்றவர்களே.
  • விண்ணவர்தம் பெருமானே – நம்மாழ்வாரின் பெருமைகளைக் கண்டு நித்யஸூரிகளே அவரை மிகவும் கொண்டாடித் தங்கள் தலைவராக ஏற்பார்கள் என்பது நம் ஆசார்யர்கள் திருவுள்ளம். மதுரகவி ஆழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பிலே கடைசிப் பாசுரத்தில் “நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே” என்ற இடத்துக்கு வ்யாக்யானம் செய்யும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “மதுரகவி ஆழ்வார் ஏன் இந்த ப்ரபந்தத்தை நம்பி அதன் படி வாழ்பவர்கள் பரமபதத்தை அடைவார்கள் என்று சொன்னார்? ஆழ்வார்திருநகரியை அடைவார்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?” என்று கேட்டு, அதற்கு விளக்கமாக “ஆழ்வார்திருநகரியில் ஆதிப்பிரான் ஆட்சியும் ஆழ்வார் ஆட்சியும் சேர்ந்து நடக்கும், ஆனால் பரமபதம் ஆழ்வார் ஆட்சியாகவே இருக்கும், அதனால் அங்கே செல்வதே உசிதம்” என்று அருளிச்செய்கிறார். ஆக நித்யஸூரிகள் தலைவர் ஆழ்வார் என்பது மிகப் பொருத்தம்.
  • அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த – ஆழ்வாரிடம் அடிபணிந்து ப்ரார்த்தித்தவர்கள் ஸ்ரீமன் நாதமுனிகளும் (முனி), எம்பெருமானாரும் (அமரர் – நித்யஸூரி – ஆதிசேஷன்).
  • அன்னமாய் – ஆழ்வாரோ பரமஹம்ஸர் – சாஸ்த்ரத்தில் அஸாரத்தை விலக்கி ஸாரத்தை தாமும் பருகி நமக்கும் அளித்தவர்
  • அருமறையை வெளிப்படுத்த – மதுரகவி ஆழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பிலே “அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள்” என்று சொன்னபடிக்கு அறிவதற்கு அரிய வேதத்தின் பொருளை ஆழ்வார் அருளிச்செய்தார்.
  • அம்மான் – ஆழ்வார், ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்திலே “குலபதேர் வகுளாபிராமம்” என்று அருளிச்செய்தபடிக்கு, நம் குலத்துக்கே பதி, ஸ்வாமி.

இப்படி இவ்வரிகள் எம்பெருமானுக்கு இருப்பது போலே ஆழ்வாருக்கும் பொருத்தமாக அமைந்துள்ளன.

ஆழ்வார்திருநகரியில் ஆழ்வார் க்ருபையாலே இந்த அனுபவம் அடியேனுக்கு ஏற்பட்டது. எப்படி என்றால் – ஆழ்வார் திருநக்ஷத்ர மஹோத்ஸவத்திலே ஒன்பதாம் திருநாளில் திருத்தேரிலே ஆழ்வார் எழுந்தருளியிருக்க, பெரிய திருமொழியும் திருநெடுந்தாண்டகமும் சாற்றுமுறை ஆகும். அதன் பின்னர் ஆழ்வார் கோயிலுக்குத் திரும்பும் புறப்பாட்டிலும் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படும். இரவு ஆழ்வாருக்குத் தவழ்ந்த க்ருஷ்ணன் திருக்கோலம் சாற்றி திருவீதிப் புறப்பாடு நடக்கும் சமயத்திலும் திருநெடுந்தாண்டகம் அனுஸந்திக்கப்படும். இந்த அற்புதச் சூழலில் அடியேனுக்கு இந்த அனுபவம் ஆழ்வார் க்ருபையால் தோன்றியது. அருகில் இருந்த சில ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலே இதைப் பகிர்ந்துகொள்ள அவர்களும் இதை மிகவும் ரஸித்தார்கள். இதையே இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். குற்றம் குறைகளை க்ஷமிக்கவும்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment