ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேதஸாதநம்| யதிசேத் குருவர்யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும், “குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத்புத்ரஶிஷ்யயோ:” என்றும். “குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும் ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும் விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு ஆசார்யன் அமுதுசெய்து திருக்கை மாற்றியருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும், “ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச| நித்யம் விதிவதர்க்யாத்யைராவ்ருதோப்யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரமபாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப்பால் போலே தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.
அவ்வளவன்றிக்கே “கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந்நைமிஶாதபி| பாவநம் விஷ்ணுபக்தாநாம் பாதப்ரக்ஷாலநோதகம்”, “யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:| நிர்ணீதம் பகவத்பக்தபாதோதக நிஷேவணம்”, “திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவநத்ரயே| வைஷ்ணவாங்க்ரி ஜலாத்புண்யாத்கோடிபாகேந நோ ஸம:”, “ப்ராயஶ்சித்தமிதம் குஹ்யம் மஹாபாதகிநாமபி| வைஷ்ணவாங்க்ரிஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம்ப்ராப்யதே யதி”, “நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்| க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||, “தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக்கணிவனே”, “தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”, “தத்பாதாமப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்| ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் ஶுசி”, “கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோஜ்ஞாநத: க்ருத: |ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரமஸாத்த்விகராய், ஆசார்யதுல்யராயிருக்கும் மஹாபாகவதர்கள் அமுதுசெய்தருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும், அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் வைதமாக ஸ்வீகரிக்கையன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின் எல்லை நிலமாகையாலே ஸத்தாதாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்கவேணும்.
அது எங்ஙனே என்னில், “ஶரீரமேவ மாதாபிதரௌஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில், “பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று அவர்களுடைய ஶிஷ்யபுத்ரர்களுக்கு ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷிதானே “ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச்ச்ரேஷ்டம் ஜந்ம” என்று ப்ரஹ்மவித்யாப்ரதனாகையாலே விஶேஷபிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும் இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத்துல்யர்கள் அமுதுசெய்தருளின தளிகையில் ப்ரஸாதமும், அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாயஸித்தமிறே. இவ்விடத்தில் ஸதாசார்ய தத்துல்யரென்றது ஆரை என்னில் – ‘ஆசார்யவத்தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீவைஷ்ணவர்களை ஆசார்யதுல்யரென்று சொல்லுகையாலும், “அநுகூலராகிறார் ஜ்ஞாநபக்திவைராக்யங்கள் இட்டுமாறினாப்போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்” என்றும், “அதாவது ஆசார்யதுல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும், “அநுகூலர் ஆசார்யபரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச்செய்த திவ்யஸூக்திப்படியே பரம பாகவதர்களாய், “இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”, “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே அர்த்த காமங்களில் நசையற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.
இன்னமும் இவ்வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶயவிபர்யயமற ஸப்ரமாணமாக ஸ்வஸ்வப்ரபந்தங்களிலே தெளிய அருளிச்செய்தார்கள். மற்றுள்ளாரும் சொல்லுவார்கள். அதெங்ஙனே என்னில், “நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர், அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”, “இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து, எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே” என்று நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச்செய்தார்.
கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசரபட்டர் பகவத்விஷயம் அருளிச்செய்த கொண்டு தாமும் முதலிகளும் கூடிப் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே எழுந்தருளி தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு ‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன, அப்போது ஆண்டாள் அருளிச்செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளியிருக்கிற முதலிகளைப் பார்த்து ‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்படவேணும், தான் ஏறியருளப்பண்ணிக்கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள் ஶுஷ்கஹ்ருதயராய், யதாஜ்ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச்செய்தார்.என்னும் இப்ப்ரஸங்கம் திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார். ஆண்டாள்தாம் அப்படி செய்தது என்கொண்டு? என்ன, ‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயணபராயணா:” என்றும், “வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடுவினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org