அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 15

பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள்

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள்கலந்து தொழுகுலமானவன் நிலையார்பாடலாலே ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய், தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து. தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும், தூதுமொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக்ஸகுணஸஹபோஜநமும், ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸுநுஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச்செய்த புத்ரக்ருத்யமும், புஷ்பத்யாக போக மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும், வைதிகோத்தமரும், மஹாமுநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில் காயாந்நஸ்தலஶுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது. அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யாவ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் பிள்ளை லோகாசார்யர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பயஜநகம். அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும். அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்மஸித்தம். ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”. நிக்ருஷ்டஜந்மத்தால் வந்த தோஷம் ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம்போது ஜந்மக்கொத்தை போகவேணும். ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும் “பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச்செய்தார். வேதகப்பொன்போலே இவர்களோட்டை ஸம்பந்தம். இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியும், ஆதிக்யபுத்தியும் நடக்கவேணும். அதாவது ஆசார்யதுல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை. ஆசார்யஸாம்யத்துக்கடி ஆசார்யவசநம். இப்படி நினையாதொழிகையும் அபசாரம். இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும், கண்சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல்தேனிலும், மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம். க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான். பெருமாள்  இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்செய்தார். பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணியருளினார். தர்மபுத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார். ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்மஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள். க்ருஷ்ணன் பீஷ்மத்ரோணாதி க்ருஹங்களைவிட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான். பெருமாள் ஶ்ரீஶபரிகையாலே அமுது செய்தருளினார். மாறனேரி நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவருக்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்தார். “பவத்தயயா யதீந்த்ர த்வத் தாஸதாஸ கணநாசரமாவதௌய: தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச்செய்தருளினார்.

திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும் ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து. அவரொரு நாள் அநுஷ்டாநம்பண்ணி மீண்டு வாராநிற்கச்செய்தே இருந்த ப்ராஹ்மணர் ‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க, ‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:| அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று, ‘நீங்கள் ப்ராஹ்மணவர்ணதர்மிகள், நாங்கள் தாஸவ்ருத்திகள். கைங்கர்யபரர். ஆகையாலே உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறைவேறிட்டுப் போந்தாரென்று இவ்வ்ருத்தாந்தம் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச்செய்தார்.

“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற்பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம், பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” என்றும், “குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியேயாகும்” என்றும், கேவலவர்ணாஶ்ரமங்களையேபற்றி நிற்கவில்லை ஒரு ப்ரயோஜநமில்லை; ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும் ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித்தாமரைகளேகாணும் என்று ஞானசாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தார்.

“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ணபேதேந கிம்பலம்| கதிஸ்ஸர்வாத்மநாம் ஶ்ரீமந்நாராயண பதத்வயம்” “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ … தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக்கடவதிறே. “அத்யப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்| அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம்” என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷிதாம் வேதவ்யாஸ புத்ரராயிருக்க ஶுகதாதர் என்று தம்மையிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும்படியான ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே, “நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்| வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரியகிங்கரா:” என்று தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும் அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி, தத்ஸம்பந்தத்தையும் அறுத்து, அவ்வளவுமன்றிக்கே, “நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா| கிந்து ஶ்ரீமத்புவந பவநஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீபர்த்துர் நரஹரிதநோர் தாஸதாஸஸ்ய தாஸ:” – என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களைவிட்டு நிரூபிக்கப்பட்டது; ஜ்ஞாநாநந்தங்களும், பகவச்சேஷத்வமும் புறவிதழ் என்னும்படி ததீயஶேஷத்வத்தையிட்டே நிரூபிக்கும்படியிருக்கும். இப்படியானபின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய வேறொருபடி சொல்லத்தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷி லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு ஶேஷபூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப்போனார்களென்னுமது ஜகத்ப்ரஸித்தமிறே.

“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்சஸம்ஸ்காரயுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: | தேவர்ணாநாம் பஞ்சமாஶ்சாஶ்ரமாணாம் விஷ்ணோர்பக்தா: பஞ்சகால ப்ரபந்நா:”, “தேவர்ஷிபூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்| ஸர்வாத்மநாயஶ்ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோககுரும்ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது. ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர்ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்றுமிடத்தில் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும், மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும், உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும், அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகாராநுகுணமாயிருக்கும்.

ஆகையாலேயிறே “நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ| காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான் ‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும், மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச்செய்தார்.

உடையவர், கூரத்தாழ்வான்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment