ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானுக்கும் சேதனருக்கும் உள்ள ஸம்பந்தங்களை ஒன்பதாகப் பகுத்து அவற்றைத் தமது நவ வித ஸம்பந்தம் எனும் அத்புத ரஹஸ்ய கிரந்த நூலில் வியத்தகு முறையில் அருளிச் செய்துள்ளார். பரம காருணிகரும் வியாக்கியான சக்ரவர்த்தியுமான பெரியவாச்சான் பிள்ளை இவர்க்கு முன்பாகவே ரஹஸ்ய கிரந்தங்கள் இட்டருளும் வகையில் “நிகமனப் படி” எனும் தமது அதி ஸங்க்ஷிப்தமான (மிகச் சுருக்கமான) ரஹஸ்ய நூலின் திருமந்திரப் ப்ரகரணத்தில்: “அநுஸந்தான அர்த்தம் ஸம்பந்த அநுஸந்தானம்; ஸம்பந்தம் ஏதென்னில்:- அகார பதத்தாலே பிதா புத்ர ஸம்பந்தம் சொல்லி, “அவ ரக்ஷணே ” என்கிற தாதுவினாலே ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம் சொல்லி, லுப்த சதுர்த்தியாலே ஶேஷி ஶேஷ ஸம்பந்தம் சொல்லி, உகார பதத்தாலே பர்த்ரு பார்யா ஸம்பந்தம் சொல்லி, மகார பதத்தாலே ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் சொல்லி, நம: பதத்தாலே ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் சொல்லி, நார பதத்தாலே ஶரீர ஶரீரி ஸம்பந்தம் சொல்லி, ஆய பதத்தாலே போக்த்ருத்வ போக்யத்வ ஸம்பந்தம் சொல்லி, ஆக திருமந்த்ரத்தால் நவவித ஸம்பந்தம் சொல்லித் தலைக் கட்டுகிறது” என்று அத்புதமாகத் தெரிவித்துள்ளார்.
திருமந்த்ரமே ப்ரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உயிரான மந்த்ரம். அதில் பெறப்படும் உய்திப் பொருளே நவ வித ஸம்பந்தம் என்பதைப் பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவருளால் அனுபவிக்கப் பெறுகிறோம்.
உலகத்தில் உள்ள எல்லாமதங்களிலும் ஆத்மாவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆத்மா தன் முயற்சியால் ஈஶ்வரனை நினைத்தும், தொழுதும், பல்வேறு உபாஸனை முறைகளாலும் அவனை அடைவதாகக் கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானே எல்லாவற்றுக்கும் மையப் பொருளாய் உள்ளான். அவன் அருளால் ஆத்மா அவனை அடைகிறது அவன் ஆனந்தத்தின் பொருட்டு. அதிலும் அடைபவன் அவனே. அடைந்த இன்பமும் அவனுக்கே. தன்னை அவன் அடையத் தான் ஒரு தடையாக இல்லாமல் இருப்பதே இவன் செய்யக் கூடியது. இவ்வாறு எல்லாக் கருமங்களுக்கும் கர்த்தாவாகவும், அவற்றின் பயனாகவும், அப்பயனைத் துய்ப்பவனாகவும் எம்பெருமானே ஶாஸ்த்ரங்களிலும் காட்டப் படுகிறான். எனவே அவனுக்கே ஸ்வாதந்தர்யம், தன் இச்சையாய் தொழில் புரியும் தகைமை உண்டு என்பதும், ஆத்மாக்களுக்கு தம் ரக்ஷணம் உட்பட எவற்றிலும் அதிகாரம் இல்லை என்பதும் தெரிகிறது.
இவ்வாறு அவனையே எல்லாவற்றிலும் ஆத்மா சார்ந்திருப்பதன் அடிப்படையிலேயே எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள ஸம்பந்தம் அமைகிறது. இந்த அமைப்பு வேதங்கள், வேத அங்கங்கள், வேதாந்தம், அவற்றை விளக்கும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள், யாவற்றிலும் தெளிவாக உள்ளது. மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் அவர்களின் வழிநின்று வேத வேதாந்தங்களை விரித்துரைத்த ஆசார்யர்களும் ஒரே குரலாக இதையே ஓதினார்கள்.
இந்த சார்புத் தொடர்பை ஒட்டி எம்பெருமானுக்கும் சேதனர்க்கும் உள்ள ஸம்பந்தம் அதாவது தொடர்பு ஒன்பது வகையில் அமையும் என்று ஆசார்யர்கள் திருவுள்ளம். இந்த ஒன்பது உறவு முறைகளும் ஆத்மாவின் எம்பெருமானைச் சார்ந்த நிலையையே காட்டும்.
ஒன்பது உறவு முறைகள்
“பிதா ச ரக்ஷகஸ் ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி: |
ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாபி மனூதித: ||”
पिता च रक्षक: शेषी, भर्त्ता ज्ञेयो रमापति:।
स्वाम्याधारो ममात्मा च भोक्ता चापि मनूदित:।।
என்கிற ஶ்லோகத்தில் “ஶ்ரிய: பதியான எம்பெருமான் இச்சேதனனுக்குத் தந்தையும், ரக்ஷகனும், ஶேஷியும், பர்த்தாவும், அறியத்தக்கவனும், ஸ்வாமியும், ஆதாரமும், ஆத்மாவும், போக்தாவும் ஆவான்” என்று இந்த ஒன்பது உறவு முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஒன்பது உறவு முறைகளும் ஆத்மாவுக்கு எம்பெருமானோடு நிருபாதிகமாக, ஒரு காரணமின்றி, ஸ்வாபாவிகமாக ஏற்பட்டவை. உலகிலுள்ள உறவு முறைகள் யாவும் ஒரு உபாதியினால், கர்மம் காரணமாக, பிறப்பினால் அல்லது அதுபோன்ற லௌகிக காரணங்களால் வருவன. அக்காரணங்கள் முடிந்ததும் உறவும் முடிகின்றது. ஆனால் எம்பெருமானோடுள்ள உறவோ, “ஒழிக்க ஒழியாது” என்றபடி அவனாலும் ஒழிக்க ஒண்ணாது, நம்மாலும் இயலாது, இருவராலும் ஒழிக்க இயலாது. இப்படிப்பட்ட ஸம்பந்தம் பெற்றுள்ள நாம் அவசியம் இதை அறிந்துகொள்ள வேண்டும், இதைப் பேணவும் வேண்டும்.
இவ்வுறவை வேதங்களும், வேதாந்தமும் எப்படிச் சொல்கின்றன, நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எப்படிச் சொல்கின்றனர் என்பது அறிய ரஸமானது, பயனுள்ளது.
பிள்ளை லோகாசார்யர், “நம் ஆசார்யர்கள் ப்ரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவ வித ஸம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்யாநுஸந்தேயம் என்று அநுஸந்தித்தும் உபதேஶித்தும் போருவர்கள்” என்று அருளிச் செய்கிறார். ஆகவே, இந்த ஸம்பந்தமே மந்த்ர ரஹஸ்ய தாத்பர்யம் என்று மேலோர் கருதினர். மேலும், அவர்கள் அப்படியே இதைத் தாமும் அனுசந்தித்து, தம் ஶிஷ்யர்களுக்கும் உபதேஶித்தார்கள்.
இவ்வுபதேஶ பரம்பரை நெடுநாள்களாக வந்திருந்தது என்பது அருளிச் செயலில் பெரியாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருப்பல்லாண்டு தொடங்கி, திருமங்கை ஆழ்வாரின் தமிழ் மறைக்கு அமைந்த ஆறங்கங்கள் நடுவாக, ஆழ்வாரின் திருவாய்மொழி ஈறாக இதே விஷயம் நமக்குப் ப்ராப்தமாவதில் புலனாகிறது.
பெரியாழ்வார், “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ் படிகால்” என்றும் ;
ஆண்டாள், “உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்” என்றும்;
“உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்றும்; “உன்றன்னோடுற்றோமே ஆவோம்; உனக்கே நாமாட் செய்வோம்” என்றும் ஸம்பந்தத்தை, உறவை மறவாது வாய் வெருவினார்கள். “அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே” என்றும்; “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே” என்றும் குலசேகரப் பெருமாளும் அருளினார். திருமங்கை ஆழ்வாரும் “எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் …” என்று இதையே விளக்கினார்.
அவை ஏது எனில்,
(1) விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தம்
(2) ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம்
(3) ஶேஷ ஶேஷி ஸம்பந்தம்
(4) பர்த்ரு பார்யா ஸம்பந்தம்
(5) ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம்
(6) ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்
(7) ஶரீர ஶரீரி ஸம்பந்தம்
(8) தார்ய தாரக ஸம்பந்தம்
(9) போக்த்ரு போக்ய ஸம்பந்தம்.
(1) விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தம்
இந்த ஸம்பந்தம் யாதெனில் 1. பகுதியில் (அ எனும் சொல்லின்) பொருள் கொள்வதில் ஏற்படக் கூடிய ஸந்தேகத்தை விலக்குவதாய், 2. ஆஶ்ரய ஆஶ்ரயியாய், 3. வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாய் இருப்பது.
- திருமந்திரத்தில் முதல் பதமான ப்ரணவத்தில் முதல் எழுத்து அகாரம். இதற்குப் பொருள் ஸகல ஜகத் ரக்ஷகன் எம்பெருமான் என்பது. இலக்கண விதிப்படி ‘அவ- ரக்ஷணே’ என்று (தாது) வேர்ச் சொல் இருப்பதால் அகார வாச்யனான எம்பெருமான், அகாரத்தால் அறியப்படும் எம்பெருமான் ரக்ஷகன் ஆகிறான். ஆகில் சித், அசித் எனும் இரு பொருள்களுக்கும் அவன் (மூல) காரணம் என்று கொள்ளும்போது, அவன் அந்தக் கார்யங்களாய், பொருள்களாய் ஆகும்போது அவற்றின் அநித்யத்வம், நிலையில்லாமை எனும் தோஷம் அவனுக்கும் வருமே எனும் ஸந்தேகத்தை இவ்வுறவுமுறை நிவர்த்திக்கிறது. எப்படி எனில், அப்பொருள்கள் யாவும் நித்தியமான அவனுக்கு விஶேஷணமாய் இருப்பதால், அவன் அவற்றோடு கூடி இருக்கிறான் என்பதால் அவை சத்தை (இருப்பை) அடைகின்றன. அவற்றின் மாறுபாட்டால் அவன் விகாரம் அடைவதில்லை.
- பொருள்கள் அனைத்தும் அவனை ஆஶ்ரயித்திருக்கின்றன, சார்ந்திருக்கின்றன. அவை அவனுடைய இருப்பைச் சார்ந்திருக்கின்றன. அதாவது, துணியின் வெண்மை துணியைச் சார்ந்திருப்பது போல். துணி இல்லாமல் துணியின் வெண்மை தனித்திருக்க முடியாது. ஈஶ்வரனின் ஸ்வரூபத்தைப் பற்றியல்லது பொருள்களுக்கும் இருப்பு என்பது இல்லை.
- வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாவது: எம்பெருமான் மற்றெல்லாவற்றிலுமிருந்து வேறுபட்டிருப்பதும், அவன் அப்படி வேறுபட்டிருக்கும் தன்மை இவை இல்லாமல் தெரியாதிருப்பதும். இத்தன்மையினாலேயே அவனது நித்ய கார்யம் கால அளவுகளைத் தாண்டியது, அநாதியானது என்று இந்த ஸம்பந்தத்தால் விளங்கும்.
“அகாரார்த்தோ விஷ்ணு:, ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத்” [अकारार्थो विष्णु: जगदुदयरक्षाप्रळयकृत] என்கிற அஷ்ட ஶ்லோகீ ஸ்ரீ ஸூக்தியில் பராஶர பட்டர் இந்த அகாரம் எம்பெருமானின் ஶ்ருஷ்டி (ஜகத் காரணத்வம்), ரக்ஷா (ஜகத்தை ரக்ஷிப்பது: அதாவது இஷ்ட ப்ராப்தி நல்குவது, அநிஷ்டத்தைத் தொலைப்பது எனும் கருணை), ப்ரளய க்ருத் (ஊழிக்காலத்தில் அனைத்தையும் தன்னுள் வைத்துக் காத்து புனர் ஶ்ருஷ்டிக்கு எடுத்துச்செல்வது) என்று நித்ய கார்யம் அநாதி என்று காட்டுகிறார்.
(2) ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம்
1, இந்த ஸம்பந்தம் தாது ஸித்தமானது. 2. அ எனும் பகுதியின் மேல்வினைப்பாட்டைக் காட்டுவது. 3. காப்பவன் காக்கப்படுபவன் இருவரின் ஸ்வரூபத்துக்கும் உசிதமானது.
1. தாது சித்தம் ஆகையாவது அ காரத்தில் அவ ரக்ஷணே என்கிற வேர்ச் சொல்லின் பொருளான ரக்ஷணம்=காப்பு, ஒரு பொருளைப் பற்றியன்றி நில்லாது. அதாவது ரக்ஷகன் ஒருவன் ரக்ஷிப்பானே ஆகில், அவ்வாறு ரக்ஷிக்கப்படுபவன் ஒருவன் அல்லது ரக்ஷிக்கப்படும் பொருள் ஒன்று அவசியம் இருந்தாக வேண்டும். அன்றேல் ரக்ஷகம், காப்பு என்பதற்குப் பொருள் சேராது.
“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபி ஸம்விஶந்தி தத் விஜிக்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி” (தைத்திரீய ப்ருகுவல்லி)
[यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्मेति] (யாதொன்றினிடமிருந்து இந்த ஜீவராஶிகள் தோன்றுகின்றனவோ, தோன்றினவை எதனால் (ரக்ஷிக்கப்பட்டு) உயிர் வாழ்கின்றனவோ, எதை ப்ரளயத்திலும் மோக்ஷத்திலும் அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம்) என்கிற புகழ் வாய்ந்த ஶ்ருதி வாக்கியம் இந்த ரக்ஷ்ய ரக்ஷக ஸ்வரூபத்தைக் காட்டுகிறது.
2. அகாரம் காட்டும் காரணத்வத்துக்கு அடுத்த செயல் பாட்டைக் காட்டும் ஸம்பந்தம் இது ஆகிறது. ஆழ்வார் இதை, “மூவாத் தனி முதலாய் மூவுலகுங் காவலோன்” என்று அருளிச் செய்தார். எக்காலத்திலும் மூப்பறியாத, தானே தனி முதல் வேராகி அனைத்துக்கும் வித்தானவன் தான் ஶ்ருஷ்டித்தவற்றுக்குத் தானே ரக்ஷகனாகவும் இருந்து காக்கிறான்.
3. இருவரின் ஸ்வரூபத்துக்கும் உசிதமானது: உபய ஸ்வரூப உசிதமானது என்பர். இருவர் ரக்ஷ்யனும் ரக்ஷகனும், அதாவது காக்கப்படுபவனும், காப்பவனும், காக்கப்படுபவன் ஸ்வரூபம் பாரதந்தர்யம். காப்பவன் ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம். காக்கப்படுபவன் தன் ரக்ஷணத்தில் கண் வையான். ஏனெனில் ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயம் ப்ரபன்னனுக்கு ஸ்வரூப விரோதம். பரதந்த்ரனுக்கு ஸ்வரக்ஷண அந்வயம் கூடாது என்பதை இந்த ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம் காட்டும்.
“என் நான் செய்கேன் யாரே களை கண்? உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்”, என்றும்
“களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்றும் ஆழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்தன இஸ்ஸம்பந்தத்துக்கு மிக உகந்த அநுஸந்தானம்.
(3) ஶேஷ ஶேஷி ஸம்பந்தம்:
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் உயிர் நாடியான ஸம்பந்தம் இது. எம்பெருமானும் பிராட்டியுமான சேர்த்தியிலே சரணாகதி, அதிலவர்களுக்கு உகப்பான நித்ய ஸர்வ வித ஸர்வகால ஒழிவில் கைங்கர்யமே ப்ராப்யம் என்பதாலும், ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆன படியாலும், ஶேஷத்வம் கைங்கர்யத்தாலேயே ப்ராப்தமாகிறது என்பதாலும் இந்த முக்யத்வம் குறிக்கொள்ளத்தக்கது. இது, 1. விபக்தி ஸித்தமாய் இருப்பது. 2. தாத்வர்த்த பரார்த்ததா ப்ரகாஶகமாய் இருப்பது. 3. போகாநுரூபதா தர்ஶகமாய் இருப்பது.
1. விபக்தி ஸித்தம்: அகாரத்தில், முதல் எழுத்திலேயே, சேதனன் தனக்குரியன் அல்லன், பிறர்க்குரியன் அல்லன், எம்பெருமான் ஒருவனுக்கே உரியன் என்கிற நான்காம் வேற்றுமை உருபு (சதுர்த்தி) மறைந்து கிடக்கிறது. ப்ரணவத்தில் மகார வாச்யனான சேதனன் அகார வாச்யனான எம்பெருமானுக்கே ஶேஷப் பட்டவன் என்பதை இந்த சதுர்த்தியும், நடு எழுத்தான உ காரமும் உணர்த்தும். “உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தம்” [उकारोऽनन्यार्हं नियमयति संबन्धम्] என்று ஸ்ரீ பராஶர பட்டர் இதை அஷ்ட ஶ்லோகியில் ஸாதிப்பர். இதை ஶ்ருதியும்:
“யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” [यस्यामस्मि न तमन्तरेमि] (தைத்திரீய யஜுர் ப்ராஹ்மணம்) (எவனுக்கு நான் தாஸனாய் இருக்கிறேனோ அவனை விட்டு வேறொருவரிடம் செல்ல மாட்டேன்). இந்த அநந்யார்ஹ ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூப நிரூபகமாக இருப்பது. அப்படியே அவனும் உளன் என்பதை, பல இடங்களில் காணலாகும், ஆழ்வாரும், “நீ என்னையன்றி இலை” என்றார். தன்னையே பற்றியவர்களையே தான் சார்ந்திருப்பதை, எம்பெருமானும் “மம ப்ராணாஹி” [मम प्राणाहि] என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். இந்த ஸ்தான த்ரயோசித பக்தியையே அன்றோ எம்பெருமானாரும் தம் ஶரணாகதி அனுஷ்டானத்தில் நம்பெருமாளிடம் இரந்து வேண்டியது.
2. தாத்வர்த்த பரார்த்ததா ப்ரகாஶகம்: இந்த உறவு முறையிலேயே நமக்கு அவரக்ஷணே எனும் வேர்ச் சொல்லில் உள்ள ரக்ஷணம் எம்பெருமான் தனக்கு ஶரீரமான சேதனன் விஷயமாகச் செய்யும் ரக்ஷணம் அவன் தன் உகப்புக்காகச் செய்யுமது என்கிற மிக உயர்ந்த அர்த்த விஶேஷமும் கிடைக்கிறது. “ப்ராப்தாவும், ப்ராபகனும், ப்ராப்திக்கு உகப்பானும் அவனே” எனும் ஆசார்ய ஸ்ரீ ஸூக்தியை நினைப்பது.
3. போகாநுரூபதா தர்ஶகம்: ஶேஷ வஸ்து ஸ்வரூபம் ஶேஷி விநியோக அநு குணமாய் இருப்பது. அதாவது, ஶேஷிக்கு எம்பெருமான் அநுபவம் தனக்கு ஓர் இன்பம் என்றிராமல் அது எம்பெருமான் போகத்துக்கு என்றிருத்தல். இப்படிப்பட்ட அநுபவம் ப்ராப்தமாம் பொழுது, ஶேஷன் தனது நீர்மையையும் எம்பெருமான் மேன்மையையும் நினையாதே அவனது முகோல்லாஸத்துக்கு முற்றிலும் தன்னை ஒருப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது. இந்நிலையில் ஶேஷனுக்கு ஸ்வாபாவிகமான ஆகிஞ்சன்யம் தாஸத்வம் என்பவற்றைவிட அவன் உகப்புக்கு உறுப்பாய் இருப்பதே அவனுக்கு ப்ரயோஜனம் என்பது இந்த ஸம்பந்தத்தில் தெரிகிறது.
ஶேஷ ஶேஷி ஸம்பந்தமே மிகவும் பேசப்படுகிறது. ஈஶ்வரனுக்கும் நமக்கும் உள்ள அத்யந்த ஆத்ம பந்துத்வம் ஸித்திப்பது இதிலே. ஆகவே, ஒரு சேதநன் தான் ஈஶ்வரனுக்கு ஶேஷப்பட்டவன், அவனுக்கு மட்டுமே ஶேஷப்பட்டவன் , தனக்குமல்லன், வேறு ஒருவருக்கும் அல்லன் என்ற திட அத்யவஸாயம் மனதில் ஊன்றுவதே இவனது ப்ராப்யத்வரையைக் காட்டும். திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் சொல்ல வந்த நம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் இந்த ஐந்தினையும் மூன்றில் சுருக்கி அவற்றையும் ஒன்றினில் அதாவது உறுதிப் பொருள், புருஷார்த்தம் ப்ராப்யம் ஒன்றே என்று காட்டி அருளினார்.
ப்ராப்யம், அடையத் தக்கது எம்பெருமானும் பிராட்டியுமான சேர்த்தியில் கைங்கர்யம். இதையே ஆழ்வார், “ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய வேண்டும்” என்று எம்பெருமானிடம் திருமலையில் கைங்கர்ய ப்ரார்த்தனையாகச் செய்து த்வயத்தின் செம்பொருளை நமக்குக் காட்டினார். இந்தக் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி, அதாவது இந்தத் தொண்டை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியோடு கூடிய எம்பெருமான். இந்தக் காரணத்தினாலேயே திருமந்திரத்தில் உகாரம் அநந்யார்ஹ ஶேஷத்வத்தை அறிவுறுத்துகிறது.
பெரியவாச்சான்பிள்ளை, தமது “ரஹஸ்யத்ரய விவரணம்” எனும் நூலில், “உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்திப்பது அதற்குப் ப்ரதி ஸம்பந்தியான ஶேஷித்வம் ஓரிடத்தில் இளைப்பாரில்; அங்ஙன் அன்றிக்கே, அநேகம் ஶேஷிகளாகில், அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்தியாது. அந்யராயிருப்பார் சில ஶேஷிகள் உண்டாகில் அந்ய ஶேஷித்வம் ஸித்திப்பதொழிய அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்தியாது” என்று ஸாதிக்கிறார்.
கைங்கர்யமே ஆத்மாவுக்கும் எம்பெருமானுக்குமிருக்கும் ஶேஷ ஶேஷி ஸம்பந்தத்தை உறுதி செய்கிறது. ஆகவே நம் ஆசார்யர்கள் கைங்கர்யமே ஶேஷ வ்ருத்தி அதாவது ஶேஷனின் செயல் என்று பலகாலும் சொன்னார்கள். இங்கும் பெரியவாச்சான் பிள்ளை, அநந்யார்ஹ ஶேஷத்வத்தை விளக்க, ஒருவன் ஶேஷன் ஆகில் அவன் கைங்கர்யம் ஒருவனுக்கே அமையும், அவ்வாறு அமையாமல் பலர் ஶேஷிகள் இருக்கில் அநந்யார்ஹ ஶேஷத்வம் குலையும். ஆத்மா பலருக்கு அடிமை ஆகில் ஸ்வரூப நாஶம் விளையும். ப்ரணவத்தில் உகாரமும், மத்யம பதமான நம : பதமும், சரம பதமான நாராயண பதத்தில் ஆய எனும் வ்யக்த சதுர்த்தியும் (வெளிப்படையாகத் தெரியும் நான்காம் வேற்றுமை உருபும்) இதையே தெரிவிக்கும். திருமந்திரத்தின் நோக்கே ஸ்வரூபத்தில் தான், ஸ்வரூபம் நிறம் பெறுவது எம்பெருமானுக்கே அவன் உகப்புக்காகக் கைங்கர்யம் பிராட்டி சேர்த்தியில் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்வதுதான்.
இந்த ஶேஷ ஶேஷி பாவத்திலிருந்து பிறக்கின்றன மற்ற ஸம்பந்தங்கள்.
(4) பர்த்ரு பார்யா ஸம்பந்தம்:
பர்த்ரு பார்யா ஸம்பந்தம் எம்பெருமான் கணவன் என்றும், ஜீவாத்மா மனைவி என்றும் முறைப்படுத்தும். இதுவும் ஒரு பிரபலமான பலரும் அறிந்துள்ள ஒரு உறவு முறை.
பர்த்ரு பார்யா ஸம்பந்தமாவது 1. உகார ஸித்தமாய் , 2. விபக்த்யர்த்த ஶோதகமாய் , 3. ஸ்வரூப ப்ராப்தமாய் இருப்பதொன்று.
ஒவ்வொரு ஸம்பந்தத்தையும் ஶாஸ்த்ர முகேனவும் ஸாம்ப்ரதாயிக பூர்வாசார்ய விவரணத்தோடும் விளக்கியருளும் உலகாரியர் இவ்வுறவைச் சொல்லும்போது “ஸ்வரூப ப்ராப்தமாய் இருப்பதொன்று” என்கிறார். அதாவது ப்ரபன்னனின் அநந்யார்ஹ ஶேஷத்வ, அநந்ய கதித்வ , அநந்ய போக்த்ருத்வங்களுக்கு மிகப் பாங்கான உறவு இது.
ஆழ்வார்களின் அகத்துறைப் பாசுரங்கள் யாவும் இதில் பரிணமித்துள்ளது.
1. உகார ஸித்தம்: ப்ரணவத்தில் உகாரார்த்தம் அவதாரணமாய் உள்ளது. அதாவது, அகாரத்தால் குறிக்கப்படும் எம்பெருமானுக்கு மகாரத்தால் குறிக்கப்படும் ஜீவாத்மா ஏகதேசமாக அவன் ஒருவனுக்கே ஆள் செய்யக் கடமைப் பட்டவன், தனக்கும் அல்லன் பிறிதொருவருக்கும் அல்லன் என்று, “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்றும், “மாம் ஏகம்” என்றும் இந்த ஏவகாரம் பிரிநிலை ஏவகாரமாக வேறு ஒருவருக்கும் அருகதை இல்லை, என்று காட்டுகிறது. கற்பு நெறி வழுவாத தலைமகனும், தலைமகளும் ஒருவர்க்கொருவர் வைத்துள்ள அந்யோன்யம் இதில் தெளிவு. ஸ்ரீராமாயணம் முழுவதும் பெருமாளும் பிராட்டியும் ஒரே மாதிரியான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கொண்டு தாங்கள் இருவரும் கதிரும் ஒளியும் போலப் பிரிக்க முடியாதவர்கள் என்று கூறியுள்ளனர். ஆத்மாக்கள் அனைவரும் தமக்கு ஒரே புருஷனாக எம்பெருமானைப் புருஷோத்தமன் என்று பற்றுகையால் இந்த ஸம்பந்தம் ஶாஸ்த்ர ஸம்மதமும் ஆயிற்று. பகவத் கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்தில் புருஷோத்தம யோகமே பேசப் படுகிறது. அதில் பத்தர் முக்தர் தேவர் அனைவர்க்கும் எம்பெருமானே நிகரற்ற புருஷோத்தமன் என்பது தெரிவிக்கப் படுகிறது.
இந்த ரக்ஷகனான எம்பெருமானுக்கே ரக்ஷ்யமான ஆத்மா அற்றுத் தீர்ந்திருக்கும் என்பதாம்.
2. விபக்த்யர்த்த ஶோதகம்: அகாரத்தில் உள்ள லுப்த சதுர்த்தி (மறைந்து நழுவிய நாலாம் வேற்றுமை உருபு) இந்த ஜீவாத்மா எம்பெருமானுக்கே உரியவன் என்று ஸ்வரூபம் சொல்லும். இந்த அநந்யார்ஹ ஶேஷத்வம் கணவன் மனைவிக்கு மட்டுமே உள்ள சிறப்பான உறவு. ஒருவர் பிறர்க்கு எவ்வகையிலும் உரிமையின்றி இருவரும் பரஸ்பரம் சேர்ந்திருப்பதுபோல் எம்பெருமானுக்கே உரியனான சேதனன் என்கிற அப்ருதக் ஸ்திதி பிரிக்கவொண்ணாத நிலையை இது காட்டும்.
“உன்றன்னோடு உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது” என்ற இடத்தில, “இவ்வுறவை எங்களால் ஒழிக்க இயலாது , உன்னால் ஒழிக்க இயலாது, இருவராலும் ஒழிக்க இயலாது” எனும் பூர்வாசார்ய வ்யாக்யானம் நினைக்கத் தக்கது. இவ்விடத்திலேயே, ஆண்டாளின், “மற்றை நம் காமங்கள் மாற்று” என்பதும் அனுஸந்தேயம் . சேதனனுக்கு அநந்யார்ஹ ஶேஷத்வமும், அவிச்சின்னமான கைங்கர்யமுமே அடையாளங்கள். இதற்கு பர்த்தாவிடம் பத்னி காட்டும் அநந்யார்ஹமே சிறந்த எடுத்துக்காட்டு. பகவத் ஶேஷத்வமும், உலகியலில் பத்னி பர்த்தாவிடம் காட்டும் அநந்யார்ஹ ஶேஷத்வ ஸ்வரூபமாய் இருக்கும்.
3. ஸ்வரூப பிராப்தம்: பர்த்ருத்வம் பும்ஸ்த்வத்துக்கும், பத்னித்வம் ஸ்த்ரீத்வத்துக்கும் விளக்கம் ஆகுமாபோலே , சேதனனின் ஶேஷத்வம் பத்னித்வம் ஆகவும் , எம்பெருமானின் பாரதந்த்ர்யம் பர்த்ருத்வம் ஆகவும் பரிமளிக்கும்.
இவ்விடத்தில் பர்த்ரு பார்யா ஸம்பந்தம் சொல்லும் பிள்ளை லோகாசார்யர், அந்யார்ஹ ப்ரஸங்க அஸஹம் இந்த ஸம்பந்தம் என்று ஸாதித்தார். அதாவது, பிறன் ஒருவன் ஸம்பந்தத்தை ஸஹியாத உறவு என்றபடி. எம்பெருமானின் மாம் ஏகம் எனும் அவதாரணம் எவ்வாறு அவன் அங்கு நின்ற அந்த தேரோட்டி நிலையிலேயே அர்ஜுனனனுக்கு ஆஸ்பதம் ஆயிற்றோ அதேபோல் அவனை ஶரண் புகுந்தவன் பிறிதோரிடத்தில் கண் வைப்பதை ஒரு நல்ல கணவன் போன்றே அவன் சகிப்பதில்லை.
இந்நிலை, பெருமாளுக்கு மட்டுமே தானோ எனில் அவ்வாறில்லை. ஶரணாகதரான பெரியாழ்வார்,
“உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன், இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத் தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்” என்று அவனை ஶரண் புகுந்த தாம் இன்னொருவன் வாசலில் நின்று ஒன்று வேண்டினால் அது எம்பெருமான் புகழுக்கு இழுக்கு(சாயை அழிவு=உனக்குள்ள ஆளுமை அழிந்து போகும்) என்று ஸாதிக்கிறார் . இதிலும் இருவருக்கும் பரஸ்பரம் உள்ள உறவின் மேன்மையும் , ஒருவர்க்கு இன்னொருவர் இன்றியமையாமையும் தெளிவாகிறது. பெரியாழ்வாரின் இப்பாசுரம் ப்ரபன்னனின் ஸ்வரூபகத ஸ்வீகாரத்தைக் காட்டவல்லது, அவன் அருள் அல்லது அருள் அல்ல, பிறர் மாட்டுச் சென்று நிற்பதும் அவன் ப்ரக்ருதிக்குச் சேராது என்று காட்டுகிறார். குண க்ருத தாஸ்யத்தைப் பார்க்கிலும் ஸ்வரூபகத தாஸ்யத்வமே நம் ஆசார்யர்கள் மிகவும் போற்றி ஏற்று ஒழுகியது. ஆகவே, இந்த பர்த்ரு பார்யா ஸம்பந்தமும் இவ்வகையில் சேர்ந்தது.
ஸ்ரீவசன பூஷணத்தில்: சூ 108ல் :”பகவத் விஷயத்தில் இழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூப ப்ராப்தமென்று”;
111, 112ல்: ”குண க்ருத தாஸ்யத்திலுங்காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே ப்ரதாநம்” என்று அருளிய லோகாசார்யர், “அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது” என்று இவ்விஷயத்தை ஸ்ரீராமாயணத்தில் பெருமாளை உபாய உபேயமாகப் பற்றித் தன் ஆகாரத்ரயமும் பொலிய விளங்கிய பிராட்டியை எடுத்துக்காட்டி முடித்தார்.
அநஸூயைப் பிராட்டியை, பெருமாளின் பெருமைகளால் அவரைச் சார்ந்திருப்பதாகக் கூற, பிராட்டி,“பெருமாள் எல்லா நல் இயல்புகளும் நிரம்பப் பெற்றவரே; ஆகிலும், அவர் அங்ஙனல்லராகிலும் அடியேன் அவரையே சார்ந்திருப்பேன்” என்று தன் அப்ருதக் ஸ்திதியை வெளிப்படுத்தினாள். இதைவிட பர்த்ரு பார்யா ஸம்பந்தத்துக்கு வேறு சிறப்பான எடுத்துக்காட்டு இருக்க முடியாது: அவர்கள் திவ்ய தம்பதிகள், சூரியனும் ஒளியும் போல், சொல்லும் பொருளும் போல் பிரிக்கவொண்ணாதவர்கள்.
பெரியவாச்சான் பிள்ளை, பிராட்டி பெருமாள் ஸம்பந்தத்தை எடுத்துரைக்கும்போது, “மத்ஸயத்தினுடைய ஆகாரமெல்லாம் ஜலமயமாய் இருக்குமாப்போலே, ஸ்ரீமானுடைய வடிவத்தனையும் ஸ்ரீமயமாய் இருக்கும்” என்று பெரிய முதலியார் அருளிச் செய்வர் என்று ஆளவந்தார் திருவுள்ளத்தை எடுத்துக் காட்டினார்.
நம் ஸம்ப்ரதாயத்தில் பிராட்டி விஷயமாக அவள் தத்வ ரஹஸ்யங்களை முதல்முதலில் ஶ்லோக ரூபமாக சது: ஶ்லோகீ என்று அருளிச் செய்தவர் ஆளவந்தார். இதுவே பின்பு பிராட்டி விஷயமான அனைத்து க்ரந்தங்களுக்கும் அடிவேராய் அமைந்தது.
(5) ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் :
அறிபவன், அறியப்படுபவன் எனும் இது மூன்று விஷயங்களைக் கூறும்: 1. மகாரத்தை விளக்குவதாய் இருக்கும். 2. உகார அர்த்த அநுஸந்தான அபேக்ஷிதமாய் இருக்கும். 3. அசித் வ்யாவ்ருத்தி வேஷமாய் இருக்கும்.
ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் எம்பெருமான் ஒருவனுக்கே கர்த்ருத்வம் உண்டென்பதை சரம ஶ்லோக வாக்யார்த்தம் போல் எல்லாக் கார்யங்களாகவும், கார்யங்களின் பயனாகவும் எம்பெருமான் இருப்பதை அறிந்து, தன் ஞாத்ருத்வம் ஶேஷத்வம் அறிந்து அவனிட்ட வழக்காய் இருத்தலே என்பது. ஆத்ம வஸ்துவுக்கு ஞானமுண்டு. மகார வாச்யனான ஜீவாத்மா சைதன்யம் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் “கண்கள் சிவந்து பெரியவாய்” திருவாய்மொழியில் ஆழ்வார் ஸாதித்தபடிக்கு அடியேன் உள்ளான் என்பதே சேதனனுக்கு வாழ்ச்சி. இந்த நுண் பொருளையே திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானார்க்கு ஆழ்வான் வழியாகத் தெரிவித்து, ஸ்வாமி தம் ஸ்ரீபாஷ்யத்தில் ஆழ்வான் கருதியபடி ஆத்மாவுக்கு அடையாளம் ஶேஷத்வமே, ஞாத்ருத்வம் அன்று என அறுதியிட்டு உரை அருளினார்.
1. மகாரம் ஞான வாசியான ஜீவனைக் குறிக்கிறது. அந்த ஞானத்துக்கு என்ன குறிக்கோள், பயன் என்றால் பகவத் ஸ்வரூப ரூப குணங்களை அறிவது.
நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கத்தவம் சார்த்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க்கன்றுரைத்த
ஆலமமர் கண்டத் தரன்
என்கிற பாசுரத்தில் ஆழ்வார் இந்திரியங்கள் அடங்கியபின் சேதனனின் அறிவு குவிந்து நெறியும், வாசலும் தானே ஆகி நின்ற உபாயமும் உபேயமும் தானே ஆன, ப்ராப்யமும் அதை அடைய வழியான பிராபகமும் தானே ஆன எம்பெருமான் ஒருவனே ஞானத்தின் பயன் என்று காட்டினார். இப்பாசுரத்தில் இவ்வுண்மையை அறிந்தவன், தான் அறிந்தவாறு அகஸ்த்யர், தக்ஷர், புலஸ்த்யர் மற்றும் மார்க்கண்டேயர் ரிஷிகளுக்கு உரைத்ததாகத் தெரிகிறது.
நம் ஆசார்யரும், “விதி ஶிவ ஸனகாத்யை: த்யாதும் அத்யந்த தூரம்” [विधिशिवसनकाद्यैर्ध्यातुमत्यन्तदूरं] என்று ஸ்தோத்ரரத்னத்தில் (ஶ்லோ-47) பணித்தார். வெறும் த்யானம் அல்லது ஞானம் கொண்டு எம்பெருமானை அடையாது, எம்பெருமானை அடைய எம்பெருமானே வழி என்ற ஞானமே, அந்த ஞானத்தை ஒரு ஸாதனம் ஆக்காமல் ஸித்த ஸாதனமான எம்பெருமானைக் காட்டித்தரும்.
2. இந்த உறவு உகார அர்த்த அனுஸந்தானமாய் அமையும்போது, பர்த்ரு பார்யா ஸம்பந்தத்துக்கு இந்த ஞாத்ருத்வம் அவசியம். உகாரம் அநந்யார்ஹ ஶேஷத்வம் சொல்லும் பதம். பிறர்க்குக் கைங்கர்யமோ, பிறரிடம் ஒரு ப்ரயோஜனம் கருதி ஒரு நமஸ்கார ப்ரதக்ஷிணமோ செய்வது பத்நியின் ஸ்வரூபத்துக்குச் சேராது.
சிறிய திருமடலில், “செங்குறிஞ்சித் தாரார் நறுமாலை சாத்தற்குத் தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள் ” எனும் தலைவி நிலையை விளக்கும் பெரியவாச்சான் பிள்ளை, ஒருவேளை யாதானும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ என்று தாயார் கவல்வதாக வ்யாக்யானித்தருளினார். அதாவது, ஒரு பயன் கருதி ஒருவனை வலம் செய்வதோ வணங்குவதோ, ஸ்வரூப விருத்தம் என்றபடி.
இத்தகைய அநந்யார்ஹ ஶேஷத்வம் அமைவதற்கு, தனக்கும் எம்பெருமானுக்கு உள்ள நிருபாதிக ஸம்பந்தம் ஸ்வப்ரயோஜனமானது, அவனுக்கும் தனக்கும் மட்டுமேயான அப்ருதக் ஸ்திதியைக் காட்டுவது, பிறர்க்காம்போது அது தேவ யஜனமான புரோடாஸம் நாய்க்கிடுமா போல் ஆகும் என்கிற ஞானமே இந்நிலையில் இவனது ஞாத்ருத்வத்துக்கு அடையாளம்.
3. அசித் வ்யாவ்ருத்தி வேஷம்: இந்த ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் இந்த ஸம்பந்தங்களை அறிகையும் , இவற்றின் ஞானமாயும் அறிந்த ஞாதாவாயும், அறிந்த பின் அந்த ஞானங்களுக்கு அறிந்தோன் அதீனமாயும், அவனுக்கு ப்ரயோஜனமுமாய் இருக்கும்.
ஶேஷத்வம் அசித்துக்கும் உண்டு, சித்துக்கும் உண்டு. ஆனால் சித்துக்கு ஶேஷத்வத்தின் பயன் கைங்கர்யம் என்கின்ற ஞானம் உண்டு, அசித்துக்கு அது இல்லை. புஷ்பம் சந்தனம் போன்றவை எம்பெருமானுக்கு உகப்பளிப்பவை; ஆயினும் தம்மால் அவனுக்கு உகப்பு ஏற்பட்டது என்பதை அவை அறியா. சேதனனோ எம்பெருமான் முக மலர்த்தியே தன் கைங்கர்யத்தின் பயன் என்று அறியக் கூடியவன்; அப்படி அறிந்தும் அந்தக் கைங்கர்யம் அவன் முக மலர்த்திக்கானது, தான் செய்தது என்ற ஸ்வகீய புத்தியோ, தனக்கு இதில் மகிழ்ச்சி என்ற ஸ்வார்த்த நினைவோ, இதன் பயன் தனக்கு எனும் பயன் கருதும் நினைவோ இன்றிச் செய்வதால் இவனுக்கும் அசித்துக்கும் வ்யாவ்ருத்தி (வேறுபாடு) உண்டு. அந்த வ்யாவ்ருத்திக்காக மட்டுமே இவனுக்கு இந்த ஞாத்ருத்வம். இது தெரிவதற்கு இந்த ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தமும், பர்த்ரு பார்யா ஸம்பந்தமும் துணை நிற்கும்.
(6) ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் மூன்று விஷயங்களைக் காட்டும்:
- இது நமஸ் ஶப்த தாத்பர்யமாய் இருக்கும்
- மகாரார்த்த நிபந்தன ப்ரம நாஶக ப்ரகாரமாய் (கலக்கத்தைப் போக்குவதாக) இருக்கும்
- ஸ்வாபாவிகமாய் இருக்கும் ஒரு ஸம்பந்தம்
- நமஸ் ஶப்த தாத்பர்யமாக அமைவது எப்படி எனில்: நமஸ் ஶப்தம் அஹம் (நான்), மமதா (என்னுடையது) என்கிற இரு விரோதிகளைக் களையறுக்கிறது. உகாரம் காட்டும் அநந்யார்ஹ ஶேஷத்வத்தை, நம: ஶப்தம் விஶதீகரிக்கிறது. ‘ந:’ என்று முதலில் எனக்கில்லை என்கிற நிஷேதத்தைப் பண்ணி அதன் பின்பே ‘ம’ என்று தன்னைச் சொல்லும் அளவுக்கு இதில் ஸ்வாந்வய நிவ்ருத்தி தெரியும். அதாவது ஸ்வரக்ஷணத்தில் ஸ்வ அந்வயம் இன்மை. தன்னைத் தான் காத்துக்கொள்வது என்பது , “அவனை ஒழியத் தான் தனக்கு நன்மை தேடுவதாவது – ஸ்தநந்தய ப்ரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி, காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமாபோலே இருபத்தொன்று” (ஸ்ரீவசனபூஷணம் சூ. 179) என்று லோகாசார்யர் ரக்ஷணம் தன் ஸ்வாமியான எம்பெருமான் (உடைமையாளன்) பொறுப்பாய் இருக்க, தன்னைத்தானே காத்துக்கொள்வதென்பது ஒரு கைக்குழந்தையை அதன் தாய் தந்தையிடமிருந்து வாங்கி, அதற்குப் பாதுகாப்புத் தருவதாக நினைத்து அதை ஒரு கசாப்புக்கடைக்காரனிடம் ஒப்படைப்பது போன்றது என்கிறார்.
“களைவாய் துன்பம், களையாதொழிவாய், களைகண் மற்றிலேன் ” என்று திருக்குடந்தையில் ஶரணாகதி செய்த ஆழ்வார் ஈஶ்வரனின் ரக்ஷணத்தை நினைத்து ஸ்வரக்ஷணத்தில் தமக்கு அந்வயம் இல்லை என்று தெரிவித்தார். ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் ஸ்வரூப விரோதி; ஸ்வரக்ஷணத்தில் பிறர் ஸஹாயம் நாடினால் உபாய விரோதி; அவன் உகப்புக்கு அவன் கைங்கர்யம் ஏற்காமல் ஸ்வபோக்யத்துக்கு அவன் கைங்கர்யம் ஏற்கில் ப்ராப்ய விரோதி என்று மூவகை விரோதிகளும் காட்டப் பட்டு, இதைக் களை எடுக்க நம: பதமும், உகாரமும், இறுதிப் பதமான திருநாமத்தில் வ்யக்த சதுர்த்தியும் நமக்கு அனுஸந்தேயம் என்று ஸ்ரீ பராஶர பட்டர் அஷ்ட ஶ்லோகியில் அருளிச்செய்யும்படி:
“உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தம் அனயோ :” [उकारोऽनन्यार्हं नियमयति संबन्धमनयो:] மேலும்
“நம இதி ச பதம் பாந்தவாபாஸ லோல: ஶப்தம் நாராயணாக்யம்” [नम इति च पदं बान्धवाभासलोल: शब्दं नारायणाख्यं] என்றும்.
“மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர் கம்யம் ஶிக்ஷிதம் ஈக்ஷிதேன புரத: பஶ்சாதபி ஸ்தானத:” [मन्त्र ब्रह्मणि मध्यमेन नम: पुंस:स्वरूपं गति: गम्यं शिक्षितमीक्षितेन पुरत: पश्चादपि स्थानत:] என்றும் உகாரம், மத்யம பதமான நம இந்த இரண்டும் சேதனனின் ஸ்வரூபத்தைக் காட்டுவனவாய் உள்ளன, இவன் ஸ்வாதந்த்ர்யம் பாவிப்பானாகில் அகாரத்தில் அவனே ரக்ஷகன் என்றுள்ளது கொண்டு தெளிக; ஸ்வயத்னத்தை நம்புவானாகில் நமப்பதத்தின் பொருள் உணர்ந்து அதை விடக்கடவன் ; பிறர்க்கடிமை எனும் எண்ணம் தோன்றுமேல் ஆபாசமான அனைத்து உறவுகளும் நாராயண பதத்தின் பொருள் நினைத்து ஒழியக் கடவது என்கிறார்.
நமப்பதம் முன்னும் பின்னுமாக நோக்கி இவனுக்கு ஸ்வரூபம் ஶேஷத்வம் என்பதையும், இவனுக்கு ஸ்வரக்ஷணத்தில் அந்வயம் இல்லை என்பதையும், எம்பெருமானே ஸ்வாமியாதலால் அவன் தன் சொத்தைப் புறக்கணியாமல் போற்றிக் காப்பான் என்றும் விசுவசிக்கக் கடவன்.
இதில் பலியும் (பலத்தை, பயனை, ப்ராப்யத்தை அனுபவிப்பவன் பலி) அபிமானியும் ஆன எம்பெருமானுக்கே சேதனன் உடைமையாய்த் தோன்றுவதைப் விளக்குகிறார். இவன் உடைமையாய் இருப்பதால் போக்யதா புத்தி ஏற்பட வழியில்லை. உடையவன்தான் போகி , உடைமை அன்று. உடைமை வெறும் போக வஸ்து . அதன் போக்த்ருத்வமும் எம்பெருமானுக்கே உரியது.
2. மகாரார்த்த நிபந்தன பிரம நாஶகம் – சேதனன் ஸ்வாதந்த்ர்யம் பாவிக்கில் அநுபவமும் அதில் திருப்தி மகிழ்ச்சியும் ஏற்படும் பிரமமுண்டாகும். எம்பெருமான் ஸ்வாமி தான் ஸ்வம் (சொத்து) எனும் தெளிவு ஏற்பட்டபின், “யானே என்னை அறியகிலாதே யானே என்தனதே என்றிருந்தேன் யானே நீ என் உடைமையும் நீயே ” என்ற நினைவுண்டாகி எம்பெருமான் முகோல்லாஸத்துக்குத் தன் கைங்கர்யம் எனும் ஞானம் பிறந்து, ஞானம் அடியாக வந்த கர்த்ருத்வ மயக்கம் அறும். சேதனனுக்கு ஶேஷத்வமே அடையாளம், ஞாத்ருத்வம் அன்று எனச் சொன்னதற்குக் காரணமே இந்த ஞாத்ருத்வம் அஹங்கார கர்ப்பமானது. பிள்ளான், இதை, “மதிரா பிந்து மிஶ்ரமான ஸாத கும்பமய கும்ப கத தீர்த்த ஸலிலம் போலே அஹங்கார மிஶ்ரமான கைங்கர்யம்” என்று திருவுள்ளம் பற்றினார். ஸ்வ ஸ்வாமி ஸம்பந்த ஞானம் இந்த அஹங்காரமாகிய களையை நீக்கும். அதாவது, பராதீனமான இந்த ஆத்மாவின் குணவிஶேஷங்களும் பராதீனம், அவை முற்றிலும் எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யத்தையே சார்ந்து அவன் இட்ட வழக்காய் இருக்கும். இதனால், சேதனனுக்கு, தனக்குக் கர்த்ருத்வம் உண்டு எனும் பிரமம் அறும் . இவனுக்கு, கர்த்ருத்வம் இல்லாததால் அந்த கர்த்ருத்வத்தால் வரும் சங்கிலித் தொடர்களான பாபங்கள், பிறவிச்சுழல் முதலியன நீங்கும்.
“என்னைத் தீமனம் கெடுத்தாய்”, என்றும், “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்றும் சேதனனுக்கு உண்டாகும் மங்களங்கள் அனைத்தும் எம்பெருமான் ஸ்வாமித்வத்தால் வருவன.
3. ஸ்வாபாவிகம் – ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் ஸ்வாபாவிகமானது, இது வந்தேறியன்று. அஹங்காரம் மமகாராம் இவற்றின் விளைவான ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் , எம்பெருமான் கைங்கர்யத்தில் மமதா புத்தி, சேர்த்தியில் போக்த்ருத்வ புத்தி ஆகியன யாவும் வந்தேறிகள். ஆனால் அவன் உடையவன், நாம் உடைமை என்பது இயற்கையான உணர்வு. ஏனெனில், “ஸ்வஸ்வம் ஆத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” [स्वस्वमात्मनि संजातं स्वामित्वं ब्रह्मणि स्थितम्] என்கிற (உடைமையாய் இருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது. உடையவனாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்தினிடமுள்ளது. இருவர்க்கும் இதுவே ஸம்பந்தம் . வேறு ஸம்பந்தம் எனக்கு இஷ்டமில்லை) விஷ்ணு தர்ம வசனம் ஜீவ பரர்களின் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் ஸ்வதஸ் ஸித்தமானது என்று உணர்த்துகிறது. ஸ்வத்துக்கு ஸ்வரக்ஷண கர்த்ருத்வம் இல்லை என்றும், ஸ்வாமிக்கே அது தொழில் என்றும் இந்த ஸம்பந்தம் காட்டுகிறது. நிலத்தை உடையவன் அந்த நிலத்தை உழுவது, நீர் பாய்ச்சுவது, அங்கேயே குடில் கட்டி இருந்து பாதுகாப்பது செய்வான். நிலம் உடையவனைப் பாதுகாப்பதில்லை. பாதுகாப்பது ரக்ஷகனுடைய, உடைமையாளனுடைய காரியம். இந்த ஸம்பந்தம் இதைக் காட்டுகிறது.
(7) ஶரீர ஶரீரி ஸம்பந்தம்
ஶரீர ஶரீரி ஸம்பந்தம் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்துக்கு , விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்துக்கு மகுடமாக அமைந்தது. இது:
- நாராயண பதத்தில் ஸமாஸ விஶேஷ ஸித்தமாய் இருப்பது.
- நமஶ் ஶப்தார்த்த ஸ்வரூப ப்ரகாசகமாய் இருப்பது.
- ஸாமாநாதிகரண்ய யோக்யமாய் இருப்பது.
- ஸமாஸ விஶேஷ சித்தமாவது: நாராயண பதம் பஹுர்வ்ரீஹி ஸமாஸத்தில் எம்பெருமான் ஸகல சேதன அசேதனங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளான் என்று அறிகிறோம். அதாவது அவன் அவை யாவற்றையும் தனக்கு ஶரீரமாகக் கொண்டுள்ளான். அந்நிலையில் அவன் அவ்வனைத்தினுள்ளும் வ்யாபித்து அவற்றின் ஶரீரியாகத் தான் உள்ளான். ஶரீரம் உடல். ஶரீரி ஆத்மா.
நார ஶப்தம் நித்ய வஸ்துக்களின் திரளைக் குறிக்கும். முமுக்ஷுப்படியில் பிள்ளை லோகாசார்யர் இவற்றை :
“ஞான ஆனந்த அமலத்வாதிகளும், ஞான ஶக்த்யாதிகளும், வாத்ஸல்ய ஸௌஶீல்யாதிகளும், திருமேனியும், காந்தி ஸௌகுமார்யாதிகளும், திவ்ய பூஷணங்களும், திவ்யாயுதங்களும், பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும், நித்ய ஸூரிகளும், சத்ர சாமராதிகளும், திருவாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும் பரமாகாஶமும், ப்ரக்ருதியும், பத்தாத்மாக்களும், காலமும், மஹதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டத்துக்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்”
என்று எம்பெருமான் ஶரீரமாக அனைத்துப் பொருள்கள்: சேதன அசேதனங்கள், கொண்ட பூரணமான ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.
இவை அனைத்தையும் தன ஶரீரமாகக் கொண்ட எம்பெருமான் தனது அளவற்ற மேன்மையை, பரத்வத்தைக் காட்டுகிறான். பகவத் கீதையில் விபூதி அத்யாயம் தன்னில் அர்ஜுனன் கண்ட அனைத்தும் இவற்றில் உள்ளன. ஆழ்வாரின், “கடல் ஞாலம்”, “நல்குரவும்” ஆகிய பதிகங்கள் இந்த விசித்திர ஶ்ருஷ்டி விஶேஷத்தையும் அதை அவன் எளிதாகத் தாங்குவதையும் காட்டும். “நல்குரவும்” திருவாய்மொழிக்கு அந்தாதி வெண்பா அமைத்த மணவாள மாமுனிகள் “விருத்த விபூதியன்” என்கிற வியத்தகு சொல்லை உபயோகிக்கிறார். அதாவது முற்றிலும் மாறுபாடான ஒன்றுக்கொன்று முரண்பாடானவற்றைத் தன் விபூதியாக ஐஶ்வர்யமாகக் கொண்டவன் என்று.
நாராயண பதத்தை நிர்வகிக்கும் நம் ஆசார்யர்கள் ஸமாஸ த்வந்த்வம் என்று இருவகையாக விளக்குகிறார்கள். ஒன்று யாவும் அவனுக்கு ஶரீரம் என்று. இவற்றில் அவன் ஶரீரியாய் இருப்பது. இன்னொன்று அத்துணை ஶரீரங்களிலும் தான் உள்ளே இருந்து அந்தராத்மாவாய் அவற்றுக்கு சத்தை தந்து, தனது எளிமை=நீர்மை=ஸௌலப்பியத்தையும் காட்டுகிறான்.
2. நமஶ் ஶப்தார்த்த ஸ்வரூப ப்ரகாஶகம்: நமஶ் ஶப்தத்தில் வரும் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் கிருஹ க்ஷேத்ராதிகளில் போலன்றிக்கே அப்ருதக் ஸித்தமாய் இருக்கும் என்று லோகாசார்யன் சாதிக்கிறார். இது ஓர் அத்புத விளக்கம். நாம் உலகியலில் காணும் உடைமையாளன், உடைமை இவை தனித்தே உள்ளன. வீடு தானே தனியாய் உள்ளது, வீட்டுக்கு உரியவன் தனியே உள்ளான். நிலம் தானே தனியாய் உள்ளது, நிலத்துக்கு உரியவன் தனியே உள்ளான். ஆனால், எம்பெருமானான ஸ்வாமி(உடையவன்)யும் , சேதன அசேதனங்களான அவனது உடைமைகளும் அவனிடமிருந்து பிரிக்க முடியாதபடி இணைந்தே உள்ளன. இந்த நிலையே “அப்ருதக் ஸ்திதி” என்னப்படுகிறது.
ஈஶ்வரன் உள்ளே உள்ளபடியால் உயிர்வாழிகள் ஸத்தை (உயிர் உள்ளனவாய் இருக்கும் நிலை) பெற்றுள்ளன. அந்த ஆத்மா தனது இப்பிறவி ஶரீரம் விட்டவுடன் ஶரீரம் செயல் இழந்து வெறும் அசேதனமாக, கட்டை, கல் போல் ஆகிறது. “ஶரீரம் யத் அவாப்னோதி” [शरीरं यदवाप्नोति] என்று பெருமாள் இதை தனது பகவத் கீதா திவ்ய ஶாஸ்திரத்தில், புருஷோத்தம யோகம் உணர்த்துமுகமாக அர்ஜுனனுக்குத் தெளிவிக்கிறார் .
3. ஸாமாநாதிகரண்ய யோக்யமாகையாவது – ஸ்வரூப பேதத்தாலே பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தமான ஜீவ பர ஸ்வரூபம் ஶரீர ஶரீரியான ஐக்யத்தாலே ஒன்று என்னலாகை .
இந்த அதி அத்புத விளக்கத்தை அருளிய லோகாசார்யர், “விஶிஷ்டாத்வைத ப்ரகாஶகம் இந்த ஸம்பந்தம் ” என்று ஸாதிக்கிறார் .
ஒரு பெரிய ஆல மரத்தைப் பார்க்கும்போது அது ஒரு மரமாகக் காட்சி தருகிறது. அதன் பெரிய சிறிய கிளைகள், அதன் பருத்த அடிமரம், அதன் தொங்கும் நீளமான விழுதுகள், அதன் அடர்த்தியான இலைகள் சேர்ந்த கிளைகள், அதிலுள்ள பழங்கள், இவற்றோடு இருக்கும் அவ்வப்போது வந்து செல்லும் பறவைகள் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் காட்சி தரும். கிளைகள் அந்த மரத்தின் பகுதிகளே. அடிமரமும் அதன் பகுதியே. விழுதுகளும் அவ்வண்ணமே. இவை யாவும் சேர்ந்து நமக்கு ஒரே பொருளாக ஆல மரமாக , வட வ்ருக்ஷமாகத் தோற்றுகிறது . கிளையை மட்டும் பார்த்தால் ஆலம் கிளையும், விழுது மட்டும் பார்த்தால் ஆல விழுதும் இதேபோல் பிறவும் தனித்தனியே தோற்றுகின்றன . ஆனால் உள்ளது ஒரே மரம். அதுவே தொகுதியாக ஒரு மரமாகவும், பல பகுதிகளாக கிளை, இலை , அடிமரம், விழுது என்றும் தோன்றுகிறது.
ஸகல சேதன அசேதனங்களைத் தன் ஶரீரமாகக் கொண்ட எம்பெருமானும் இவ்வாறே அவ்வப்பொருள்கள், உயிர்வாழிகளாகவும் தானே தனி பரப்ரஹ்மமாகவும் காட்சி தருகிறான். இவ்விஷயத்தை வேதாந்தம் ஸாமான்யாதிகரணம் என்கிறது.
ஸ்வாமி எம்பெருமானார் இந்த உத்தியைக் கொண்டு, ப்ரஹ்மம் அனைத்துப் பொருள்களையும் தன்னோடு எப்போதும் கொண்டுள்ளது. அவையே நமக்கு அவனது பல வடிவங்களாகத் தோற்றுகிறது என்று நிர்வகித்தார்.
ஸ்வாமியின் இந்த ஶரீர ஶரீரி பாவ விளக்கத்துக்கு ஆழ்வாரின் திருவாக்கே வேராக அமைந்தது:
“உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்பது ஆழ்வார் திருவாக்கு. நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? ஓரிடத்தில் இருந்தாலும் ஞானத்தால் எல்லாவிடத்திலும் பரந்து வ்யாபித்துள்ளது. ஆனால் அது இல்லாதபோது ஶரீரம் அசேதனமாகி விடுகிறது. எப்போதும் ஶரீரம் அசேதனமே ஆகிலும் உயிர் உள்ளபோது அறிவும் உணர்வும் அவற்றால் அனுபவமும் உண்டாகிறது.
இவ்வாறு ப்ரஹ்மம் விஶிஷ்டமாக, இந்த விபூதிகளை உடையதாக இருப்பதால் இதைச் சொல்லும் தத்துவத்துக்கு விஶிஷ்ட அத்வைதம் என்கிற பெயர் ஏற்பட்டது.
இக்காரணம் பற்றியே உலகமும், உயிர்களும், யாவும் உள்ளன எதுவும் மாயை அன்று, ஏனெனில் அவை ஈஶ்வரனின் திருமேனியில் ஒன்றி உள்ளன, அவனால் ரக்ஷிக்கப் படுகின்றன, ப்ரளய காலத்தில் அவனிலேயே லயமாகி மீண்டும் அவனாலேயே ஶ்ருஷ்டி செய்யப்படுகின்றன என்றார் ஸ்வாமி.
“வித்தாய் வேர் முதல்” என்று ஆழ்வார் அவனே முதல், வித்து, வேர் என்று மூல காரணம் அவனே என்கிறார் ஆழ்வார்.
ஶரீர ஶரீரி ஸம்பந்தம் கொண்டே ஸ்வாமி எம்பெருமானார் சேதநாசேதனங்கள் அனைத்தும் எம்பெருமானின் ஶரீரமாய் உள்ளன, அவன் ஸூக்ஷ்ம அவஸ்தையில் அவற்றின் காரணமாயும், ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் உள்ளான், “பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி ” [बहुस्यां प्रजायेय इति] எனும் வேதாந்த வாக்கியம் இதைக் காட்டுகிறது என்கிறார். ஆனால் இந்த காரியத்தை எம்பெருமான் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே செய்கிறான். ஆகவே இந்த ஸ்வரூப மாற்றமோ அல்லது அவற்றின் ஸ்வபாவ மாற்றமோ ப்ரஹ்மத்தில் ஒரு மாற்றமும் விளைவிப்பதில்லை. ஆகவே, “அவிகாராய ஶுத்தாய நித்யாய பரமாத்மனே” [अविकाराय शुद्धाय ] என்கிற வசனத்துக்கு அவன் விளக்கமாய் இருக்கிறான். அளவற்ற முதலும் முடிவும் அற்ற இத்தனை வஸ்துக்களின் ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் அவன் காரியமாய் இருப்பினும், இதை “தத் ஐக்ஷத ” [तत् ऐक्षत] எனும் வேதாந்த வாக்யத்தின்படி ஸங்கல்ப மாத்ரத்தாலே செய்வதால் ப்ரஹ்மத்தின் நிலையில் ஒரு குறைவோ நிறைவோ ஏற்படுவதில்லை. ஆகில் இதைச் செய்வான் என் எனில், “லீலாவத் து கைவல்யம் [लीलावत् तु कैवल्यं] ” என்று வேதாந்தம் இதை விளக்குகிறது. அவன் கேவல லீலையாகவே இதைச் செய்வதால் “அலகில் இன்புறும் விளையாட்டு” என்றும் பேசப்படுகிறது.
“திட விசும்பெரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே” எனும் ஆழ்வார் திருவாக்கை வைத்தே ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்யம் அமைந்தது. இதை விளக்க வந்த அழகியமணவாளப் பெருமாள் நாயனார், “இது கொண்டு பாஷ்யகாரர் ஸூத்ர வாக்யங்களை ஒருங்க விடுவர்” என்று திருவாய்மொழியின் சீர்மையை எடுத்துரைத்தார்.
இவ்விடத்தில் ஈடு வ்யாக்யாநம் சாதிக்கும் நம்பிள்ளை, ஸாமானாதிகரண்யம் சொன்ன ஆழ்வார் அத்தால் பலித்த ஸம்பந்தம் ஶரீராத்ம பாவம் என்கிறார் என்றார். “அநேந ஜீவேந ஆத்மநா அனுப்ரவிஶ்ய நாம ரூபே வ்யாகரவாணி”, “யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ருத்வீ ஶரீரம்” [अनेन जीवेन आत्मना अनुप्रविश्य नाम रूपेण व्याकरवाणि, यस्य आत्मा शरीरं यस्य पृथ्वी शरीरं ] என்கிற ஶ்ருதி வாக்யங்களைக் காட்டி, “விஶிஷ்டத்திலேயிறே ஶரீராத்ம பாவம் கொள்ளலாவது” என்று தெளிவுபடக் கூறுகிறார். அதாவது, அவனுக்கு இவை உடலாய் அவனை விவரிக்கக் கூடிய விஶேஷணமாய் இருப்பது. அவனை விவரிக்கும்போது இவைகளாய் இருப்பவன், இவற்றை ஆக்கியவன் என்ற இரு நிலைகளும் எம்பெருமானுக்கு உபாதான காரணம், ஸஹகாரி காரணம், நிமித்த காரணம் என பொருள்களுக்கான மூன்று காரணங்களாகவும் தானே இருப்பவன் என்கிறார்கள். இதனால் இந்த சேதனாசேதனங்களை அவன் பெரும் பரிவுடன் நடத்துவதில் ஆழ்வார்கள் மிகவும் ஈடுபட்டார்கள்.
“ஒன்றும் தேவும் உயிரும் மற்றும் யாதும் இல்லாத அன்று ” எம்பெருமான் இந்த அண்ட சராசரங்களைப் படைக்க நான்முகனைப் படைத்து அவன் மூலமாக அனைத்து தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்களையும் செய்து அவற்றை உள ஆக்கினான்.
(8) தார்ய தாரக ஸம்பந்தம்
தார்ய தாரக ஸம்பந்தம் 1. ஸமாஸாந்தர ஸித்தமாய் இருப்பது 2. ஶரீர ஶரீரி ஸம்பந்தைக லக்ஷணமாய் இருப்பது 3. அசித் அவிஶேஷ ஸ்திதி ஸம்பந்தமாய் இருப்பது.
1. ஸமாஸாந்தர ஸித்தமாவது – நாராயண பதத்தில் தத் புருஷ ஸமாஸமாக விவரிக்கும்போது, அவன் அனைத்துக்குள்ளும் வியாபித்து, நார பதத்தால் விளக்கப்படும் பொருள்கள் அனைத்தையும் தான் தாங்கி நிற்பதால், அவை தார்யம் (தாங்கப்படுபவை ) என்றும், தான் தாரகன் (தாங்குபவன்) என்றும் இருக்கும் நிலை. பகவத் கீதையில் இந்த விஷயத்தை பகவான் அர்ஜுனனுக்குப் பலவாறு எடுத்துரைக்கிறார்.
“ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணி இத்யுபதாரய [एतत् योनीनि भूतानि सर्वाणि इति उपधारय]
அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத : ப்ரபவ: ப்ரலயஸ்ததா” [ अहं कृत्स्नस्य जगत: प्रभव: प्रलयस्तथा] என்றும்,
“மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம் ஸூத்ரே மணி கணா இவ” [मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव।] என்றும்,
“மத்ஸ்தானி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:” [मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः] என்றும் வரும் கீதாஶ்லோகங்கள் எம்பெருமான் தாங்குகிறான், மற்றெல்லாப் பொருள்களும், சேதனங்களும் அசேதனங்களும் , தாங்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. அகாரத்தின் விரிவாய் உள்ள நாராயண பதம், அகாரத்தின் பொருளான ரக்ஷகத்தை விரிவாக விளக்குகிறது.
2. ஶரீர ஶரீரி ஸம்பந்தைக லக்ஷணம் என்றால், ஶரீர ஶரீரி ஸம்பந்தம் ஒன்றையே தன் வடிவாகக் கொண்டது தார்ய தாரக ஸம்பந்தம் எனப் பொருள்படும். ஶேஷத்வம் உணரப்படும்போது கைங்கர்யம் பெறுமவன் ஆதேயனாயும், செய்யுமவன் விதேயனாயும் இருக்கிற நிலை.
தார்ய தாரக ஸம்பந்தம் உட்கொண்டுள்ள விஶேஷமானது, ஆதேயத்வம்/விதேயத்வம் எனும் ஶேஷத்வ ரூபமான ஶரீர லக்ஷணங்களிலும், ஆதாரத்வ/விதாயகத்வம் எனும் ஶேஷித்வ ரூபமான ஶரீரி லக்ஷணங்களிலும் இது ஒன்றாய் இருக்கும். அதாவது, எம்பெருமான் கைங்கர்யத்தைப் பெறும் போது அந்த ஶேஷத்வ ரூபமான கைங்கர்யத்தைச் செய்யுமவன் விதேயனாக (வேலைக்காரனாக) இருக்க, அதைப்பெறுமவன் ஆதேயனாக இருக்கை . இதில் ஶரீர லக்ஷணம் தெரியும். அவன் இவனுக்கு ஆதாரமாக, சேதனனைத் தாங்குமவனாக எம்பெருமான் இருந்து இந்தக் கைங்கர்யத்தை ஸ்வீகரிக்கும்போது ஶரீரி லக்ஷணம் தெரியும். அதாவது, கைங்கர்யத்தை அநுபவிப்பது எனும் சேதன கார்யத்தை ஶரீரியாக அநுபவிக்கும் புருஷனாக இருந்து எம்பெருமான் அனுபவிப்பதால் சேதநன் அதில் தானும் அஹங்காரமடியாக அல்லது தன் உவப்புக்காக என்றில்லாமல் அசேதன ஸமமாக இருந்து அவன் அனுபவத்தையே நோக்கும். இவ்வாறு இதிலும் ஶேஷ ஶேஷி ஸம்பந்தம் உணர்த்துகிறார் பிள்ளைலோகாசார்யர்.
ஸகல ப்ரமாண தாத்பர்யத்தில் பெரியவாச்சான் பிள்ளை இவ்விஷயத்தை, “தாரகமாய், நியாமகமாய், ஶரீரியாய், ஶேஷியாய் ” என்று அருளிச் செய்கிறார்.
“இப்படிப்பட்ட ஸமஸ்த விஶேஷண விஶிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறொன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன். இந்த அதிகாரியே ஞாநாதிகரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும், ஆசார்யனுக்கும், பிராட்டிக்கும் , ஶ்ரிய:பதிக்கும் அத்யந்தப்ரியதமன்” என்று கீதையில் எம்பெருமான் தனக்கு ப்ரியர், ப்ரியதரர், ப்ரியதமர் என்று காட்டுமத்தை ஸூசிப்பிக்கிறார் .
3. அசித் அவிஶேஷ ஸ்திதி ஹேது : – “அநேந ஜீவேனாத்மநாமநுப்ரவிஶ்ய நாம ரூபே வ்யாகரவாணி”(சாந் 6-3-2) [अनेन जीवेन आत्मना अनुप्रविश्य नाम रूपे व्याकरवाणि’] என்பதில் அந்தர் வ்யாப்தியினால் எம்பெருமான் சேதனங்களுக்கு நாமங்களையும் ரூபங்களையும் தருகிறான். அவன் உள்புகுந்து அவற்றுக்கு ஞாத்ருத்வம் அளித்திலனேல், அவை அறிவற்ற ஜடப் பொருள்களாகவே கிடக்கும். இத்தோடு, அவ்வாறன்றி, வெளியிலிருந்து சேதனங்கள் அசேதனங்கள் இரண்டுக்கும் அவற்றின் இயல்பான தோற்றம் இருப்பு ஆகியவற்றுக்கும் காரணமாய் இருக்கிறான். இந்த ஸம்பந்தத்தாலேயே சித், அசித் இரண்டுமே நித்யத்வம் பெறுகின்றன.
(9) போக்த்ரு போக்ய ஸம்பந்தம்
அனுபவிப்பவன், அனுபவம் என்று இரண்டுபடியாக இருப்பது. எம்பெருமானே அனுபவிப்பவன், தனது ஶேஷத்வம் உணர்ந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் சேதனன் தன்னை அவனது போகத்துக்கான பொருளாக நினைத்திருக்கக் கடவன். இதுவும் மூன்று படியாய் இருக்கும்: 1. சரம விபக்தி ஸித்தமாய் இருக்கும், 2. பூர்வ ஸம்பந்த ப்ரயோஜன ப்ரதர்ஶகமாய் இருக்கும். 3. ப்ரதி ஸம்பந்தி போகாநுரூபமாய் இருக்கும்.
1. சரம விபக்தி ஸித்தம் : “நாராயணாய” என்பதில் உள்ள சதுர்த்தீ விபக்தி (நாலாம் வேற்றுமை உருபு-ஆய என்பது), எம்பெருமானுக்கே அநந்யார்ஹமாக ஶேஷப் பட்டிருக்கும் சேதனனுக்கு அந்த ஶேஷ வ்ருத்தி ஸஹஜமானது, பிறவி இயற்கை, வந்தேறியன்று . ஆகவே அவன் செய்யும் கைங்கர்யங்கள் தரும் ஆனந்தம் ஶேஷியான எம்பெருமானையே சேரும். அந்த ஆனந்தத்தில் இவனுக்குப் பங்கில்லை. அதாவது, போகம் என்பது இவனாக, போக்தா அனுபவிப்பவன் எம்பெருமானே என்பது தெரிகிறது. எம்பெருமான் ஶரீரி, ஶரீரத்தை உடையவன். ஆகவே போக்த்ருத்வம் அனுபவித்தல் அவனுக்கே உரியது. இவன் வெறும் ஶரீரமாய் இருப்பதால், சைதன்யம் உள்ளவன் ஆனாலும் ஶரீரியான எம்பெருமானே போக்தா என்றிருக்கக் கடவன்.
“யானே என்னை அறிகிலாதே யானே, எந்தனதே என்றிருந்தேன் யானே நீ, என் உடைமையும் நீயே” என்று ஆழ்வார் திருவாய்மொழியில் அருளினார். தனக்கு ஶரீரி எம்பெருமான் என்ற உணர்வு வந்ததும், தனக்கு ஒரு அனுபவமும் கிடையாது அனுபவம் எம்பெருமானுக்கே உரியது, அவனே போக்தா அவனுடைய போக்கியமாய் அடியேன் உள்ளேன் எனும் நிலை இது.
“அஹம் அந்நம் அஹம் அந்நம்” [अहं अन्नं अहं अन्नं] (நான் அன்னம், நான் அன்னம்) என்று சேதனன் நிற்க, “அஹம் அன்னாத:” [अहं अन्नाद:] என்று ஸ்வாமி தன்னை உண்பவனாகக் காட்டும் நிலை இது.
2. இது பூர்வ ஸம்பந்த ப்ரயோஜன ப்ரகாஶகம். இது எங்ஙனே எனில், ஸர்ப்பத்துக்கும் விஷத்துக்கும் தார்ய தாரக ஸம்பந்தம் இருந்தும், அந்த விஷத்தைத் தாங்கி இருக்கும் ஸர்ப்பத்துக்கு அதனால் ஒரு பயனும் இல்லை; அந்த ஸம்பந்தத்தில் போல் அல்லாமல் இதில் உள்ள சுவை, பயன் அனைத்தும் தாரகனான எம்பெருமானுக்கே ஆகும்படி, தார்யனான சேதனன் தனக்கு இந்த அநுபவத்தில் பங்கில்லை என்றிருத்தல். கைங்கர்யம் செய்பவனைவிட, அதை ஏற்பவனுக்கன்றோ அந்த கைங்கர்ய ருசி ரசிப்பது?
3. பிரதி ஸம்பந்தி போகாநுரூபம் – இந்த ஸம்பந்தமே கைங்கர்யத்தின் ரஸத்தை , சுவையை கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான எம்பெருமானே அனுபவிக்கத் தக்கவன், அந்தக் கைங்கர்யத்தில் அதன் சுவை, ரஸத்தில் தனக்கு ஒரு பங்கும் இல்லை என்று நசையற்று இருப்பதே கிங்கரனான கைங்கர்யபரனான சேதனனுக்கு ஸ்வரூப லாபம். கைங்கர்யம் சென்று சேர்விடம் எம்பெருமான், செய்பவன் சேதனன். அந்தக் கைங்கர்யம் செய்பவன் அந்தக் கைங்கர்யத்திலும் அதின் ரஸம்/சுவையிலும் தானும் ஈடுபடுவானாகில் அவனது அத்யந்த பாரதந்த்ர்ய ஶேஷத்வ ஸ்வரூபம் நாசமாகும்.
“உனக்கே நாம் ஆட் செய்வோம்” என்றது உன் உகப்புக்கே நாம் ஆட் செய்வோம் என்றபடி. ஆழ்வாரின் “வேய் மருதோளிணை ” திருவாய்மொழியில், பராங்குஶ நாயகி பெருமாளுக்கு விருப்பமான “ஒசிசெய் நுண்ணிடையிளவாய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே ” என்றும், “உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர்கெடும்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் ” என்றும் ஆழ்வார் திருவாக்கு அமைந்தது.
ஶேஷித்வம் ஶேஷத்வம் இரண்டிலும் மறுக்களைந்தது இந்த ஸம்பந்தம் என்று லோகாசார்யர் ஸாதிக்கிறார். ஶேஷியின் கைங்கர்ய ரஸாநுபவத்துக்கும் கைங்கர்ய ஆச்ரயமான ஶேஷபூதனுடைய ஶேஷி போக விருத்த ரஸத்வ ராஹித்யத்தையும் இது சொல்லும். அவன் உகப்பே கைங்கர்யத்தின் பயன்; எனவே அவன் உகக்க உகக்க இது நடைபெற வேண்டும். அப்படி நடக்கையில் அவன் இன்புறுதலுக்குத் தான் எவ்விதத்திலும் தடையாய் இல்லாதிருக்க வேண்டும். “ஶேஷிக்கு அதிசயத்தை விளைவிக்கை ஶேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும்” என்று முமுக்ஷுப்படியில் இவர் அருளிச் செய்யும்படி.
நவவித ஸம்பந்தம் – ஸங்க்ரஹம்
பிள்ளை லோகாசார்யர் நவ வித ஸம்பந்தங்களையும் விவரித்தபின், இதில் எந்தெந்த ஸம்பந்த ஞானம் ஏற்படுவதால் சேதனனுக்கு எந்தெந்த விஷயங்களில் ஸந்தேஹம் நீங்கும் என்று அத்புதமாக ஒரு சுருக்கம் அருளிச் செய்கிறார்:
- விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்த ஞானம் பிறந்தால், ஜகத் காரணன் எம்பெருமானே என்பதில் உள்ள ஸந்தேஹம் அறும் .
- ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்த ஞானம் பிறந்தால், எம்பெருமானைத் தவிர பிறர் ஒருவர் ரக்ஷகர் எனும் ஸந்தேஹம் அறும் .
- ஶேஷ ஶேஷி ஸம்பந்த ஞானம் பிறந்தால் வேறொருவன் ஶேஷி (உடைமையாளன்) எனும் ஸந்தேஹம் நீங்கும்.
- பர்த்ரு பார்யா ஸம்பந்த ஞாநம் பிறந்தால் சேதனனுக்கு அநந்யார்ஹ சங்கை, தான் எம்பெருமானை அல்லாது வேறொருவர்க்கும் அருகதை உள்ளவன் என்கிற சங்கை ஒழியும்.
- ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்த ஞானம் பிறந்தால், அறியப்பட வேண்டிய(து)வன் வேறொருவன் (வேறொன்று) என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
- ஸ்வ ஸ்வாமி ஸம்பந்த ஞானம் பிறந்தால், தனக்கு ஸ்வாதந்த்ர்யம் உண்டு என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
- ஶரீர ஶரீரி ஸம்பந்த ஞானம் பிறந்தால் ஸ்வரூபம் ஒன்று என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
- தார்ய தாரக ஸம்பந்த ஞானம் பிறந்தால் தனக்கு தாரகன் வேறொருவரும் உண்டு எனும் ஸந்தேஹம் நீங்கும்.
- போக்த்ரு போக்ய ஸம்பந்த ஞானம் பிறந்தால், தனக்கு போக்த்ருத்வம், அனுபவம் உண்டு என்கிற ஸந்தேஹம் நீங்கும் (போக்தா அனுபவிப்பவன் எம்பெருமானே என்கிற தேற்றம் உண்டாகும்).
ஆக இவ்வாறான நவவித ஸம்பந்தமும் அறிந்து ஆனந்தித்திருக்கவும் என்று பிள்ளை லோகாசார்யர் இந்த நவவித ஸம்பந்த விளக்கத்தை நம் எல்லார்க்கும் ஒரு மங்களாஶாஸனத்தோடு முடிக்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளை இந்த அர்த்தம் அறிந்து அநுஸந்திப்பவனையே ஆசார்யர்களும், பிராட்டியும் எம்பெருமானும் தமக்கு மிக ப்ரியதரமானவன் என்று கொண்டாடுவர் என்று நமக்கு ஆஶ்வாஸம் தந்தருளினார்.
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம். உலகாசிரியர் திருவடிகளே ஶரணம். ஜீயர் திருவடிகளே ஶரணம்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
பிதா ச ரக்ஷகஸ் ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி: |
ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாபி மனூதித: ||”
Where is the above slokam (original source) found?
It is part of the piLLai lOkAchArya’s nava vidha sambandham grantham itself.
adiyen ramanuaj dasan
DhanyOsmi Swamin for the detailed descriptive narration of nava vidya sambandham 🙏🙏
Swami, can we get the explanation in english language too?