ஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிற மஹாசார்யர், ஆழ்வார்கள் எழுதிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கவுரை எழுதியுள்ளார். ‘திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்றும், ‘திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குரு என்றும் இவரைச் சிறப்பித்துச் சொல்கிறார் மணவாள மாமுனிகள் என்னும் ஆசார்யர். அபயப்ரதராஜர், வியாக்கியானச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவர், நான்கு திசைகளிலும் நான்கு ஸிம்ஹாஸனம் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். இப்படிச் சொல்லப்படுகிற நான்கு ஸிம்ஹாஸனங்கள் யாவை? நாலாயிர திவ்யப்ரபந்தங்களுக்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானங்கள் முதல் ஸிம்ஹாஸனமாகும். மற்றவை முறையே: ஶ்ரீராமாயணம், பாரதம் முதலியவற்றின் தேர்ந்த ஶ்லோகங்களின் வியாக்கியானங்கள், ரஹஸ்யக்ரந்தங்களின் வியாக்கியானம், ஆளவந்தார், எம்பெருமானார் போன்ற ஆசார்யர்கள் எழுதிய க்ரந்தங்களின் வியாக்கியானங்கள் ஆகும்.

ஶ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையிலே நடுநாயகமாக விளங்குகின்ற ஶ்ரீராமாநுஜர் தமது ஐந்து ஆசார்யர்களிடமிருந்து திவ்யப்ரபந்தங்கள், ஶ்ரீராமாயணார்த்தங்கள், ரஹஸ்யார்த்தங்கள், ஸ்தோத்ரார்த்தங்கள் முதலையவற்றைக் கேட்டு அறிந்துகொண்டார். ஆயினும் சீழ்ச்சொன்ன இந்த க்ரந்தங்கள் நம்போல்வார் எளிதில் கற்றுத்தெளிய வியாக்கியானங்களாக தம் பெருங்கருணையினால் வெளியிட்டருளிய பெரியவாச்சான் பிள்ளையைப் ‘பரமகாருணிகர்’ என்றும் ‘அபாரகருணாஸாகரர்’ என்றும்  கொண்டாடுகிறார்கள். பேதை பாமரர்களும் ஶ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் பொருள்களை உணரும்படி பற்பல நூல்களை இயற்றி இவர் உதவியதுபோலே வேறு எந்த ஆசார்யருமே செய்ததில்லை என்பதை எவரேனும் மறுப்பரோ?

திருமடந்தை மண்மடந்தை இருபாலுந்திகழ, நலமந்தமில்லதோர் நாட்டில் என்று தொடங்கி ஶ்ரீராமாயணம் பாசுரப்படி அருளிச்செய்த இவர், ஶ்ரீராமாயணத்தில் ஆழங்கால் பட்டு அருளிச்செய்த  க்ரந்தங்களினுள் ஶ்ரீராமாயண தனிஶ்லோகீ என்பது தனிப்பெரும்பெருமை பெற்று விளங்குகிறது. ஶ்ருதிகள், இதிஹாஸ புராணங்கள், தர்ம ஶாஸ்த்ரங்கள், காவியநாடக அலங்கார க்ரந்தங்கள், மீமாம்ஸா முதலான ஶாஸ்த்ர க்ரந்தங்கள் முதலியவற்றிலிருந்து பற்பல விஷயங்களை எடுத்தெழுதியும், ப்ரமாணங்களை மேற்கோளாகக் காட்டியும் ஶ்ரீராமாயண ஶ்லோகங்களை விவரித்துத் தந்திருக்கிறார்.

ஶ்ரீராமாயணத்தில் மொத்தம் 24,000 ஶ்லோகங்கள் உள்ளன. இவற்றுள், தனிஶ்லோகீ வியாக்கியானத்திற்கு இவர் எடுத்துக்கொண்டவை மொத்தம் 159 மட்டுமே. பால காண்டத்தில் 6, அயோத்யா காண்டத்தில் 14, ஆரண்ய காண்டத்தில் 4, கிஷ்கிந்தா காண்டத்தில் 4, ஸுந்தர காண்டத்தில் 10, யுத்த காண்டத்தில் 121; ஆக மொத்தம் 159. ஶ்ரீராமாயணம் ஒரு ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்பதால், யுத்த காண்டத்திலிருந்து  121 ஶ்லோகங்களை எடுத்துக் காட்டியருளியுள்ளார்.

ஶ்ரீராமாயணம் என்பது ஒரு ரத்தினஸாகரம். அதில் எங்கு காண்கினும் முத்தும் பவழமுமாய் நிறைந்திருக்கும் போது, அதில் மூழ்கிச்  சில இரத்தினங்களைத் தேடிப்பிடித்து விளக்கம் தருவது என்பது எங்ஙனம்  ஸாத்தியம்?  இருப்பினும், பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் ஈறாக ஒவ்வொன்றுக்கும் இரண்டு ஶ்லோகங்கள் என்ற கணக்கில் பன்னிரண்டு ஶ்லோகங்களைத் தேர்ந்து இந்தப் பாடத்திட்டத்தில் பரமகாருணிகரான ஶ்ரீபெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வியாக்கியானங்களைக் கொண்டு நாமும் இங்கே சிறிது அநுபவிப்போம்.

[குறிப்பு: ஸுந்தரகாண்டத்தின் ஏற்றத்திற்கிணங்க, மூன்று  ஶ்லோகங்களை எடுத்துக்கொண்டு, கிஷ்கிந்தையில் ஒன்று மட்டும் எடுத்து மொத்தம் பன்னிரண்டு ஶ்லோகங்களையே காண்போம்]

இங்கே விஷயமாக எடுத்துக் கொண்டுள்ள ஶ்லோகங்கள்.

  1. அஹம் வேத்மி (பா.கா; ஸ-19; ஶ்லோ-14)
  2. இயம் ஸீதா (பா.கா; ஸ-73; ஶ்லோ-27)
  3. இச்சாமோஹி (அ.கா; ஸ-2; ஶ்லோ-22)
  4. பவாம்ஸ்து (அ.கா; ஸ-31; ஶ்லோ-25)
  5. தருணௌ ரூபஸம்பந்நௌ (ஆர.கா; ஸ-19; ஶ்லோ-14)
  6. தம் த்ருஷ்ட்வா (ஆர.கா; ஸ-30; ஶ்லோ-39)
  7. த்வமப்ரமேயச்ச (கி.கா; ஸ-24; ஶ்லோ-31)
  8. துஷ்கரம் (ஸு.கா; ஸ-15; ஶ்லோ-53)
  9. த்ருணமந்தரத: (ஸு.கா; ஸ-21; ஶ்லோ-3)
  10. மித்ரமௌபயிகம் (ஸு.கா; ஸ-21; ஶ்லோ-19)
  11. ஸக்ருதேவ ப்ரபந்நாய (யு.கா; ஸ-18; ஶ்லோ-33)
  12. பாபாநாம் வா ஶுபாநாம் வா (யு.கா; ஸ-113; ஶ்லோ-46)

பால காண்டம்

ஸர்க்கம்-19; ஶ்லோகம்-14

அஹம் வேத்3மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம்|

வஸிஷ்டோ2பி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்தி2தா:||

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् ।

वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:।।

பொழிப்புரை: இராமனை மஹாத்மாவாகவும், ஸத்யபராக்ரமனாகவும் இருப்பதாய் நான் அறிவேன். மஹாதேஜஸ்வியான வஸிஷ்ட2 மஹரிஷியும் அறிவார். மற்றும் இங்கே கூடியுள்ள தபஸ்ஸில் நிலைபெற்ற மஹரிஷி க3ணங்களும் இவ்வாறு அறிவார்கள்.

அயோத்தியில் த3ஶரத2ரின் அரசவைக்கு வருகை தந்த விஶ்வாமித்ர மஹரிஷி தஶரதனிடம், கரிய செம்மல் ஒருவனைத்  (இராமனை) தன்னுடன் அனுப்பிவைத்து அவர் செய்யும் யக்ஞத்திற்கு உதவியாய் தர்மத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார். இராமனை அனுப்ப மனமில்லாத தஶரதன் அதற்கு காரணமாக இராமன் மிக இளம்பருவம் உடையவன், அரக்கர்களை எதிர்கொள்ளச் சக்தியற்றவன் என்பன பலவார்த்தைகளைச் சொல்லித் தட்டிக்கழிக்கிறான். அதைக்கேட்ட விஶ்வாமித்திரர் கூறும் பதிலாக அமைந்ததுதான் இந்த ஶ்லோகம்.

3ஶரத2ன், “ ந யுத்34யோக்3யதாம் அஸ்ய பஶ்யாமி” அதாவது, ‘இவனிடம் போர் செய்வதற்குண்டான அருஹதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று வாத்ஸல்ய மேலீட்டால் சொன்னாலும், விஶ்வாமித்திரருக்கு மனதிலே கோபம் கனன்று எழுகிறது. “அஹம் வேத்3மி” ‘நானறிவேன்’ இவன் யாரென்று. இவனை மஹாத்மாவாகவும், ஸத்யப்ராக்ரமனாகவும் நானறிவேன். பரமாத்மா கண்ணாலே காணப்படுகிறவன் அல்லன் (ந சக்ஷுஷா க்3ருஹ்யதே: மு.உ.3-1-8), தூய்மையான மனத்தாலேயே காணத்தக்கவன் (மநஸா து விஶுத்3தே4ந: வி.த.275-2). உன்னைப்போலே ஊனக்கண்களால் காண இயலாது. ‘என்றேனும்  காணாத கட்கண்ணால் அவ்வுருவை நெஞ்சேனும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ (பெரி.தி.-28). (1) யோகத்தினாலே அழுக்கற்ற உட்கண்ணாகிற நெஞ்சாலே நான் அறிவேனேயொழிய, வெளிக்கண்ணாகிற கட்கண்ணாலே காணும் உனக்குத் தெரியாதுகாண். அரசனே! என்னால் அறிவில் முதிர்ந்த பல மஹநீயர்கள் உபாஸிக்கப்பட்டிருக்கிறார்கள். (2) பல ஆசார்யர்களை ஸேவித்த நான் அறிவேனேயொழிய பாமரர்களால் ஸேவிக்கப்படும் நீ அறிவாயோ? (3) கையிலே புல்லைப் பிடித்த நான் அறிவேன்; கையில் வில்லைப் பிடித்த நீ அறிவாயோ? (4) தலையிலே சடையை உடையவனான நான் அறிவேன்; தலையிலே முடிதரிக்கும் நீ அறிவாயோ? (5) ஸாத்விக ஸ்வரூபனான நான் அறிவேன், ராஜஸஸ்வரூபியான நீ அறிவாயோ? (6) குருவின் ஆஸநத்திற்கு கீழே இருந்த எனக்குத் தெரியுமேயொழிய பிரபு என்று ஸிம்ஹாஸநத்தின் மேலிருக்கிற உனக்குத் தெரியுமோ? (7) யோகவழியறியும் நான் அறியும் விஷயத்தைப் போகவழியறியும் நீ அறிவாயோ? (8) மோக்ஷத்தை விரும்பி யாகம் செய்த நான் அறியும் விஷயத்தைப் புத்ரனை விரும்பி யாகம் செய்த நீ அறிவாயோ? (9) த4ர்ம மோக்ஷ புருஷார்த்தங்களில் ஈடுபட்ட நான் அறிவதை அர்த்த காம புருஷார்த்தங்களில் ஈடுபட்ட உன்னால் அறியமுடியுமோ? இதுபோன்று பலவாறாக வினவிய விஶ்வாமித்திரர் மேலும் பரமாத்மாவை யார் யார் அறியமாட்டார்கள் என்றும் சொல்லத் தொடங்குகிறார்.

‘ப்ருஹ்மம் இவ்வளவுமட்டுமன்று, இப்படிப்பட்டது (வேறொன்றும்) இல்லை’ [நேதி, நேதி: ப்ருஹ.உப. 4-3-6], ‘அந்த ப்ருஹ்மம் எப்படிப்பட்டது என்று எவன் அறிவான்?’ [க இத்தா2 வேத3யத்ர ஸ: கட.உப. 1-2-25] என்றும் ப்ரமாணங்களாக இருக்கும் வேதங்களும் அறிந்தனவா? வேறு சொல்வானேன்? ‘நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் எம்பெருமான் தன்மையை யாரறிகிற்பார்?’ [திருவாய் 8-3-9]. என்றும் அறிவாளிகளான ப்ருஹ்ம ருத்ராதி3களுக்கும் அறியக்கூடிய விஷயமாவானோ? அவன் தானே தன்பெருமையை அறிவானோ, அறியமாட்டானோ? [தை-ப்ரா 2-8-9] தனக்கும் தந்தன்மை அறிவரியானை [திருவாய் 8-4-6]. இத்தனை பேர்கள் அறியாதிருக்கும் போது, ஓராசார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அல்லவோ இவர்கள் யாரும் அறிந்திலர்? இது இவ்வாறிருக்க, தான் மட்டும் எங்ஙனம் அறிந்து கொண்டார்? ‘நான் என் பக்தர்களுக்கு என்னை அறிய உதவும் புத்தியைக் கொடுக்கிறேன்’ என்று தேர்த்தட்டிலிருந்து சொன்ன வாக்கியமிருக்கிறதே [த3தா3மி புத்3தி4யோக3ம் தம்; கீதை 10-10], ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பதும் ஸித்தமாயிருக்கிறதே. அவனை அறிகைக்கு நான் பட்டவருத்தம் சொல்லப்போமோ? ‘கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான பரமாத்மா தியானிக்கத்தக்கது’ [ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய: ப்ருஹ. உப. 6-5-6] என்று அவனை அறிய நான் பட்ட சிரமம் சொல்லவும் முடியுமோ?

வடிவு சிறுத்திருந்தாலும் பரத்வம் நிறைந்திருக்கும் அல்லவா? தேஜஸ்ஸை உடையவர்களிடத்தில் வயது கவனிக்கப்படுவதில்லை [தேஜஸாம் ஹி ந வய: ஸமீக்ஷ்யதே; ரகு4வம்ஶம் 11-1]. அவனை மஹாத்மா என்று அறியவேண்டும். வைஜயந்தி என்னும் நூல் ஆத்மா என்னும் பதத்தின் தன்மையை விவரிக்கிறது. அதாவது ஆத்மா ஜீவனிடமும், தைர்யத்திலும், தேஹத்திலும், ஸ்வபாவத்திலும், முயற்சியிலும் என்று இவ்வாறு பல விஷயங்களில் ப்ரயோகம் உள்ளது என்று சொல்லுகிறது. 1. எவனுக்கு ஆத்மா ஶரீரமோ, எவன் ஆத்மாவில் நின்றுகொண்டு ஆத்மாவில் நுழைந்திருக்கிறானோ [ப்ரு.உப] எல்லா ஜீவாத்மாக்களும் தன்னுடைய ஶரீரமாம்படி இருக்கும் மஹாசேதனன் என்று அறிவேன். 2. ஆபத்துக் காலத்திலும் தைர்யத்தோடு நிலைநிற்கும் தன்மை உடையவன் [தாடகை, ஸுபாஹு மாரீசாதிகளை வதம் செய்யும் வலிமையும் தைர்யமும் பொருந்தியவன்] 3.நித்யனாய், நித்யமான தேஹத்தை உடையவன் [மாசூணாச்சுடருடம்பு; திருவாய் 3-1-8] சத்ருக்களால் அழிக்கமுடியாதபடி நித்யன் 4. ஸ்வபாவவாசியாய், என்னைச் (பரமாத்மாவை) சரணமென்று வந்தவர்க்கு எல்லா பூதங்களிடமிருந்தும் அபயமளிக்கிறேன், இது என் விரதம் [அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வ்ரதம் மம; ராமாயணம் யுத்: 18-34]. 5. பரமாத்ம வாசியாய், இவனைக் காட்டிலும் மேலொருவனில்லை என்ற பரம ஶப்தார்த்திற்கு ஏற்ப [ஒத்தார்   மிக்காரை இலையாய  மாமாயா; திருவாய் 2-3-2] தன்னையொழிந்த எல்லா தேவதைகளுக்கும் மேலாய், அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறபடியை அறிவேன். 6. யத்ந வாசியாய், அதாவது பிரயத்நமாய். துஷ்ட நிக்ரஹத்திற்காக உத்ஸாஹிப்பது ஆத்ம தர்மம்மாகும். [விநாஶாயச து3ஷ்க்ருதாம் ஸம்ப4வாமி; கீதை 4-8] 7. அர்க்க வாசியாய், அதாவது ஆத்மா அர்க்கன் அல்லது ஸூர்யன் [ராம தி3வாகர:] சர ஸமூகங்களாகிற கிரணங்களையுடைய ராமன் என்னும் ஸூரியன், ஸத்ருராக்ஷஸர்களாகிற நீரை வற்றச்செய்யும் வல்லமை உடையவன் என்று அறிவேன். 8. ராமனை அக்நி ஸ்வரூபனாயும் அறிவேன். ராமன் கோபமடைந்தால், தன் கண்களாலே எரித்துவிடுவார் [நிர்த3ஹேத3பி காகுஸ்த்த2: க்ருத்34ஸ்தீவ்ரேண சக்ஷுஷா; ஸு.கா: 30-14], அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் [திருநெடு -1] ஸத்ரு ஶரீரங்களைச் சாம்பலாக்க வல்லவர். 9. மதி வாசியாய், ராமன் எல்லா தத்துவங்களையும் அறிந்தவர்  [ஸர்வ ஶாஸ்த்ரார்த்த2 தத்வஜ்ஞ: ரா. பால.கா. 1-15] இருந்த இடத்திலேயிருந்தே ஶத்ருக்களை அழிக்க வல்லவன் 10. வாத வாசியாய், (வாயு ரூபியாய்) ‘வாயு ரூபியாய் இருக்கும் அவனுக்கு நமஸ்காரம்’ [தஸ்மை வாதாத்மநே நம: விஷ்.புரா. 1-14-31]. “காலாய்த் தீயாய்” [திருவாய் 6-9-1] என்றுசொல்லுகிறபடியே, பெருங்காற்றால் அடிக்கப்பட்ட பஞ்சுக்குவியலைப் போலே எதிரிகளைப் போனவிடமறியாதபடி விரட்டிவிடும் மஹாவாயு இவர் என்பதை அறிவேன். அன்றிக்கே ‘ராமவ்ருத்தாந்தம் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பது”  [ம்ருத ஸஞ்ஜீவநம் ஹி ராமவ்ருத்தாந்தம்; பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யம்] என்று எல்லா உயிர்ப்பிக்கும் காற்று போலே அநுகூலர்களை உய்ப்பிக்கும் மஹாவாயு என்று அறிவேன்.

தானும் அறிந்து பிறரையும் அறிவிக்கையாலே வேதம் [‘வேத்தி வேத3யதீதி வேத3:’] என்று வேத பதத்திற்கு வ்யுத்பத்தி சொல்லுமிடத்திலே, நான் இந்தப் புருஷனை அறிவேன் [வேதா3ஹமேதம் புருஷம்; புரு.ஸூக்], என்று சொல்லி, அறிந்தது எப்படி? என்னும் கேள்வி எழ, ‘அறிந்தன வேதவரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல்’ [திருவாய்: 9-3-3] என்கிறபடியே, அளவற்றவன் என்று சொல்லி (மஹாந்தம்) முடித்தது அன்றோ? எவனுக்கு அப்பரவஸ்து அளவிட்டு அறியப்படாததாகிறதோ அவனுக்கு அறிப்படாததாகிறது. எவன்  அளவிட்டு அறிந்தேன் என்று சொல்வானோ அவன் உண்மையில் அறியாதவனாகிறான். கேனோபநிஷத் இதைச் சொல்லுகிறது. வேதா3ஹமேதம் (வேத3+அஹம்+ஏதம்), வேத என்னும் பதத்தை இங்கே ‘வேத்3மி’ என்றது; அஹம் என்பது இரண்டு இடங்களிலும் மாறாமல் இருக்க, ஏதம் என்னும் பதம் இங்கே ‘ராமம்’ என்று குறிக்கிறது. அஹம் வேத்3மி ராமம் என்பது வேதவாக்கியமான ‘வேதா3ஹமேதம்’ என்பதுடன் பொருந்தியிருக்கிறது. அங்கே புருஷ ஶப்ததாலே காட்டப்பட்ட சௌர்ய வீர்யாதி குணங்களை இங்கே’ ஸத்யபராக்ரமம்’ என்னும் பதம் காட்டுகிறது. குணங்களாலே பூர்ணன் (புருஷன்) அங்கு ‘மஹாந்தம்’ இங்கு ‘மஹாத்மாநம்’ ஆகிறது. மஹாத்மா என்னும் பரமாத்மா இந்த உலகத்திலே ஒருவருக்கும் எட்டாததோவென்னில், ‘பிதரம் ரோசயாமாஸ’ என்று உன்னையிசைவித்து,  ராமரூபேண வந்து பிறந்தவர் அந்த பரவஸ்து என்பதை அறிவாயாக. ராமன் இப்படித் தன்னைத் தாழவிட்டுக்கொண்டு இருப்பதனால் நீ அவன் பெருமையை உணரவில்லை. ராமனை மஹாத்மாவானவனை ‘அவன் பிறந்த பிறகே மேன்மையை அடைகிறான்’ [ஸ உ ஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந: யஜுர்.அஷ்.3-6-3] என்பதால் அறியலாம்.

ராமன் மிக இளம்பருவத்தினன்:

‘என் மகன் ராமனுக்குக் இன்னும் பதினாறு வயது நிரம்பவில்லை; [ஊனஶோடஷ] இவனுக்கு வடிவில் மெருகழியவில்லை; கடினகாரியங்களைச் செய்து உடல் இன்னும் இறுகவில்லை; இவன் பெருஞ்செயல் செய்யவல்லனோ? ரமயதீதி ராம: ரமிக்கச்செய்பவனாக இருக்க இவனை அரக்கர்களை அடக்க நான் எவ்வாறு உம்முடன் அனுப்புவேன்?’ என்று பதிலிறுத்த தஶரதனுக்கு, விஶ்வாமித்திரர் எப்படி ‘ஸத்யப்ராக்ரமம்’ (ராமம் ஸத்யபராக்ரமம்) என்னும் பதத்தின் உட்பொருளை விளக்குகிறார் என்று இங்கே காண்போம்.

  1. ஸத்யபராக்ரமன் என்றால் நித்யமான, என்றும் மாறாத பராக்ரமத்தை உடையவன்.  ஸதை3கரூபரூபாய [விஷ்.ஸஹ] என்பதிலிருந்து அறியலாம்.
  2. ஸத்யப்ராக்ரமன் எப்பொழுதும் ஒருபடிப்பட்டிருக்கும் பராக்ரமத்தை உடையவன். த இமே ஸத்யா: காமா: என்று விஷ்ணு புராணத்திலும், பகவானுடைய இந்த குணங்கள் ஸத்யமான காமங்கள் என்பபடுகின்றன என்று சாந்தோக்கியத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அவதார விக்ரஹம் இச்சையினால் எடுக்கப்படுவதால், குணங்கள் நித்யமாய் காணக்கிடைக்கின்றன என்று விஷ்ணு புராணத்திலும் காணலாம். தேஜஸ், பலம், ஐஶ்வர்யம், ஞான வீர்ய ஶக்தி ஆகிய குணங்களின் குவியலாய் இருப்பவன் பரமாத்மா என்றும் விஷ்ணு புராணம் மேலே விவரிக்கிறது.
  3. லௌகீகர்களுடைய பராக்கிரமம் போலே அன்றிக்கே, ஸத்யபராக்ரமன் ‘ஜயிக்காமல் திரும்பமாட்டான் ராமன்’ [அபி4யாதா ப்ரஹர்த்தா ச; அயோ.கா. 2-37] என்றும், ‘சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே’ [திருச்சந்த 56] என்று சொல்லுகிறபடியே, இவர் போர் புரியப் புறப்பட்டால், எதிரிகளை வெல்லாமல் திரும்பமாட்டார் காண்.

ஆக, இப்படியாக அழகையே ஆயுதமாகக் கொண்டும் வெல்வான் ராமன். ஶ்ரீமான் ஸுக2ஸுப்த: பரந்தப: [யு.கா. 38-25] என்று சொல்லுகிறபடியே அழகும் எழிலுமாகவே எதிரிகளின் படையை அழிக்க வல்லவன் ராமன் என்று அறியலாம்.

அடுத்தது,  வஸிஷ்டரும் அறிவார் (வஸிஷ்டோபி மஹாதேஜா) என்று ஏன் சொன்னார் என்று பார்ப்போம். விஶ்வாமித்திரர் அரசரிடம், ‘என் கார்யம் நடக்கவேண்டும் என்று வந்து உன்னிடம் கேட்கும் என்னை நீ நம்பமாட்டாயானால், உனக்கு ஆப்தனான வஸிஷ்டபகவானைக் கேட்கலாமே! ரிஷிகளில் மஹாதேஜஸ்வியானவர். ப்ருஹ்மாவின் புத்திரர். லோகநாதனான புருஷோத்தமனும் தன்னை வணங்கும்படி ஏற்றமுள்ளவர். அவரது திருவாயாலே அடியேனுக்கு ப்ருஹ்மரிஷி பட்டமும் தந்தவர். ஸத்யம் வத3, த4ர்மம் சர என்று அனைவருக்கும் உபதே3ஶிக்கும்படியான இந்த கு3ருவரர் அஸத்யம் சொல்வாரோ? ‘தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’ [புருஷ. ஸூ] என்று ராமனுடைய ஜந்மரஹஸ்ய ஞானமுடைய வஸிஷ்டரைக் கேளாய்!’

மேலும் இங்கே கூடியிருக்கும் மற்ற ரிஷிகணங்களும் அறிவார்கள் (யே சேமே தபஸி ஸ்திதா2: ) என்பதை விளக்குகிறார். “அகஸ்த்யர், பராஶரர், வியாஸர் என்ற பல மேன்மை மிக்க ரிஷிவரர்கள் ஒருவேளை தம் பெருமை நிலைநிற்க பக்ஷபாதம் செய்யக்கூடும். ஆனால், இங்கே அமர்ந்திருக்கும் ரிஷிகளோ தபஸ்ஸில் நிலை நின்றவர்கள். இவர்களுக்குப் பெருமை என்னவென்றால், இவர்களது நரைத்தலையும், ஒட்டிய கன்னமும், சுருங்கிய சருமமும், ஜபிக்கிற வாயும், வடிகின்ற கண்ணீரும் மட்டுமே அடையாளங்கள். விஷ்ணுதத்துவத்தில் சொன்னபடி. பகவதநுபவத்தாலே ஆநந்தம் பெருக குளிர்ந்த கண்ணீர் பெருகுபவராய், மயிர்க்கூச்செறியும் தேஹத்தினராய், எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இவர்கள் (இமே) பெருமையை அளவிடமுடியுமோ? ‘சிறியனென்று இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்; சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்  சென்று கேள்’ (பெரியாழ்வார் 1-4-8) என்று எங்கேயோ பாதாளத்திற்குச் சென்று மஹாபலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய வாமனன் பெருமை அன்று; இவன் பெருமை அறிய இதோ இங்கிருக்கும் இவர்களிடம் கேள். மஹாபலியோ ஒரு அஸுரன்; இவர்களோ பரமஸாத்விகர்களான ரிஷிகள்; என்னையும், வஸிஷ்டரையும் போல் தனி ஒருவரல்லர்; பலராய் இங்கே இருக்கிறார்கள்; உனது நம்பிக்கைக்கு ஹேதுவாக இருக்கும்.” என்று விஶ்வாமித்திரர் அரசருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஒருகால் இவர்கள் அஸத்யம் சொல்வரோ என்ற ஸந்தேஹம் அரசரின் மனத்தில் தோன்றினால், என் செய்வது? என்று எண்ணி, விஶ்வாமித்திரர், மேலும் சொல்கிறார். இவர்கள் பொய் சொல்லாத தார்மிகராக இருப்பாரோவென்னில், தபஸி ஸ்திதா2: என்றார். ‘தபோ தா3னம் தபஸ் ஸத்யம் தபோ த4ர்ம: ப்ரதிஷ்டித2:’ என்கிறபடியே எக்காலமும் தபத்திலே ஈடுபட்டவராகையாலே தர்மஶ்ரேஷ்டரென்கிறது. மேலான தர்மமான (பரமம் யோ மஹத்தப: விஷ்ணு. ஸஹ) பகவானிடமே பக்தி செய்பவராய் தபஸ்ஸிலே நிலைநிற்பவர்கள் (தபஸி ஸ்திதா2:) என்றுமாம்.

பால காண்டம்

ஸர்க்கம்-73; ஶ்லோகம்-27

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத4ர்ம சரீதவ|

ப்ரதீச்ச2 சைநாம் 4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

इयं सीता मम सुता सहधर्मचरीतव।

प्रतीच्छ चैनां भद्रंते पाणिं गृह्णीष्व पाणिना।।

பொழிப்புரை: என்னுடைய பெண்ணான இந்த ஸீதையானவள் உமக்கும் தர்மங்களைக் கூட இருந்து செய்யக்கூடியவள்; இவளை அங்கீகரிப்பீராக; உமக்கு மங்களமுண்டாகட்டும்; இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்.

இந்த ஶ்லோகத்தில் புருஷகாரத்துக்கும் புருஷகாரானாகும் ஜநகரின் நிலையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார் பெரியவாச்சான்பிள்ளை. ராமபிரான் ஶிவதநுஸ்ஸை முறித்து பித்ரு பாரதந்த்ரியம் தோன்ற அடக்கவொடுக்கத்துடன் நிற்க, ஜநகர் சிந்தார்ணவம் என்னும் கவலைக்கடலிலிருந்து கரையேறினவராய், மிகவும் மனமுவந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்து வைக்க எண்ணி, பெருமாள் கையிலே பிராட்டியைக் கொடுப்பதன் மூலம் தன் காரியத்தை முடிக்கிறான். சேதனரைப் பெருமாளிடம் சேர்ப்பிக்கும் புருஷகாரபூதையான பிராட்டியையே பெருமாளிடம் சேர்ப்பிப்பதன் மூலம் பிராட்டிக்கும்  புருஷகாரமாகிறான் இவன்.

இதோ இருக்கிறாள் ஸீதை, (இயம் ஸீதா) இங்கேயும் பாரும் என்று ராமனை நோக்கிச் சொல்வதாய் அமைகிறது இங்கே. சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவனாய், அந்தச் சந்திரனைக்காட்டிலும் அழகு பொருந்தியவனாய், வடிவழகு, வண்மை குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்களையும், நெஞ்சங்களையும் கொள்ளை கொள்பவனாய் இருக்கும் ராமனிடம் (சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவப்ரியத3ர்ஶநம், ரூபௌதா3ர்யகு3ணை: பும்ஸாம் த்3ருஷ்டிசித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29 ) ‘உம்மைப் பார்த்து இறுமாந்திராதீர்; இவளையும் பாரீர்; குணம், வயது, நடத்தை முதலியவற்றால் வேறு ஒருவருக்கும் பொருத்தமின்றிக்கே, உமக்கே பொருத்தமாயிருக்கிற (துல்ய ஶீலவ்யோவ்ருத்தாம்; ஸுந்தர.கா. 16-5) காரணத்தால் உமக்குத் தருகிறேனத்தனை காணும்’ என்று மனத்தில் நினைத்திருப்பதாகக் கற்பித்து வியாக்கியானம் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

‘என்னைக் காட்டிலும் இவளுக்கு ஏற்றமேது?’ என்று ராமன் நினைப்பானாகில், இவள் ஏற்றம் சொல்லும் வகையாக, இவள் என் மகள் (மம ஸுதா) என்கிறான். இவள் நற்குடியில் பிறந்தவள்; உன்னைப்போல் அல்லாமல் கர்ப்பவாஸம் பண்ணாதவள்; ஸீதா லாங்கலபத்ததி: (கலப்பை உழுத வழி ஸீதை எனப்படும்) என்பதற்கிணங்க, பொற்கொடிபோலே பூமியிலே பிறந்தவள். ஹிரண்யவர்ணை (ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்; ஶ்ரீ ஸூக்தம்) ஆயிற்றே இவள்! பற்றி எரியும் மிதிலையில் எனக்குவொன்றும் இல்லை என்று அபிமானமற்று இருந்த எனக்கும், ‘இவள் எனது பெண்’ என்று அபிமானிக்கும்படியாக ஏற்றமுள்ளவள். ‘வள்ளி மருங்குல் என்றன் மடமான்’ (பெரிய திருமொழி 3-7-1) என்று தாயார் பெண்ணின் பெருமையைச் சொல்லுமாப்போலே சொல்லுகிறான். பிறவாமையிலும் ஏற்றமுண்டு; பிறப்பிலும் ஏற்றமுண்டு; இரண்டிலும் இவளுக்கு ஏற்றமுண்டு. ‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்; திருமகள் போல வளர்த்தேன்; (பெரியாழ்வார் திருமொழி 3-8-4) என்று சொல்கிறான்.

மேலும், ஜநகர் ராமன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணுகிறார். ஒருவேளை, ‘இந்த வைலக்ஷண்யத்தில் எமக்கு என்ன தேட்டம்? எனது தர்மத்துக்கு உதவியாய் இருப்பாளா?’ என்று ஸங்கித்து இருப்பானாகில் என் செய்வது? என்று நினைத்து, மேலும் கூறுகிறான். உமக்கு தர்மங்களைக் கூட இருந்து செய்யக்கூடியவள் (ஸஹத4ர்ம சரீதவ) என்றும் சொல்கிறான். நண்பனாக வேஷம் தரித்து வந்தாலும் கைவிடமாட்டேன் (மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3) என்கிற உமது ஸங்கல்பத்துக்கு உறுதுணையாக இருப்பாள்; என்னைச் சரணமடைந்தவனுக்கு எல்லா பூதங்களினின்றும் நான் அபயமளிக்கிறேன்; இது என் விரதம் (அப4யம் ஸர்வ பூதேப்4ய; த3தா3மி ஏதத் வ்ரதம் மம; யுத்.கா 18-34) என்று விரதம் மேற்கொண்ட உமக்கு உறுதுணயாக இருப்பாள்; இப்படித் தேவரீர் அருளிச்செய்த அர்த்தத்தை ‘ராக்ஷஸிகளான உங்களுக்கு அபயம் அளிக்கிறேன் (அலமேஷா பரித்ராதும் ரக்ஷஸீர் மஹதோ ப4யாத்; யுத்.கா 27-46) என்றும், ராக்ஷஸிகளை பெரும் பயத்தினின்றும் காப்பாற்ற இப்பிராட்டியே தகுந்தவள்; பாபிகளாயினும், நல்லோர்களாயினும், கொல்லத்தக்கவரேயாயினும் பெரியோனால் அவர்கள் விஷயத்தில் கருணை காட்டப்படவேண்டும்; குற்றம் செய்யாதவர்கள் யாருமில்லை என்று ராக்ஷஸிகளுக்குப் பரிந்து பேசக்க்டியவள் (பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாணாம் வா ப்லவங்கம; கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நபராத்4யதி; யுத்.கா. 116-44).

இவளை அங்கீகரிப்பீராக (ப்ரதீச்ச) என்றவுடன், ஜநகர் மனதில் ஒரு ஸந்தேஹம் நிழலாடுகிறது. நந்தகோபன் திருமகனைப் போன்றவனன்றே இவன்! ராமனும், ‘நாம் இதுக்குக் கடவோமோ? ஐயரும், ஆச்சியரும், வஸிஷ்டாதிகளும் அன்றோ செய்விக்கவேண்டும்?’ என்றான். ஜனகரும் இதையறிந்து, ‘நின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தால் என் நினைத்திருந்தாய்?’ (பெரிய திரு. 2-7-1) என்று கேட்டு, ஒத்தகுணம், வயது, நடத்தை (துல்ய ஶீல வயோவ்ருத்த:) ஆகியவற்றை உடையவளாயிருப்பினும் பயனில்லையே; இவள் இறையும் அகலகில்லேன் (திருவாய்மொழி 6-10-10) என்று இருப்பதுபோல், நீரும் ஸீதையை விட்டு ஒருகணமும் ஜீவியேன் (ந ஜீவேயம் க்ஷணமபி; ஸு.கா. 66-10) தானே வருகிற ஶ்ரீதேவியைக் காலாலே தள்ளாதே கொள்ளும்’ என்று வேண்டி நின்றார்.

ஶ்ரீராமன் தந்தை இசைந்திருந்ததைப் போன்றே தானும் இசைந்திருந்தான். இவன் பெருமைக்கேற்ற பெருத்த கண்ணாலங்கள் செய்து (பெரியாழ். திரு. 3-7-10), நாடு நகரமறிய நல்லதோர் கண்ணாலம் செய்து தக்கவா கைப்பற்றுங்கொலோ (பெரியாழ். திரு.3-8-6) என்று ஆசைப்படுகிறான் ஜனகன்.  வெள்ளி வளைக்கை (பெரியாழ். திரு; 3-7-1) என்னும் கையைப் பற்றச்சொல்கிறான் ( ஏநாம் பாணிம் க்3ருஹ்ணீஷ்வ). இவ்வேப்பங்குடி நீரையன்றோ உம்மைக்குடிக்கச்செய்வது? பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டியிருப்பதே!  பால்மொழியாள் (பெரியாழ். திரு. 3-10-5), இவள் ஆயிற்றே! இனியவள்; இனிய பேச்சை உடையவள் (மது4ரா மது4ராலாபா4; ஸு.கா. 66-15) என்று சொல்லப்பட்டவளன்றோ? உனக்கு மங்களமுண்டாகட்டும் ( பத்3ரம்தே) பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் கண்டவுடன் மங்களாஶாஸனம் பண்ணுகிறார். பரமபுருஷனுக்குப் பெண்பெற்றுக் கொடுத்தாரெல்லாம் பெரியாழ்வாரைப்போலே திருப்பல்லாண்டு பாடவேண்டும் அன்றோ? நன்று நன்று நறையூரர்க்கே (பெரிய திரு 8-2-2).

இப்போது செய்யவேண்டுவது என்ன? ‘இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்’ (பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா) அம்மி மிதிக்கும்போது காலைக்  கையாலே பிடிப்பீர்; இப்போது, கையைக்  கையாலே பிடிப்பீர்’ என்கிறான்.  மதுஸூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் (நா. திரு.6-6 ), என்கைப் பற்றித் தீவலஞ்செய்யக் கனாக் கண்டேன் (நா. திரு. 6-7), செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் (நா. திரு. 6-8) என்ற பகவானது கையைக் காட்டிலும், கைமேல் என்கை (நா.திரு. 6-9) என்கிற பிராட்டியின் கை இனிமையில் விஞ்சியிருக்கையாலே, கையால் கையைப்பிடி என்னாதே, கையைக் கையாலே பிடி என்றது மிகப் பொருத்தம்.

அயோத்யா காண்டம்

ஸர்க்கம்-2; ஶ்லோகம்-22

இச்சா2 மோஹி மஹாபா3ஹூம் ரகு4வீரம் மஹாப3லம்|

3ஜேந மஹதா யாந்தம் ராமம் 2த்ராவ்ருதாநநம்||

इच्छामो हि महाबाहुं रघुवीरं महाबलम्।

गजेन महता यान्तं रामं छत्रावृताननम् ।।

பொழிப்புரை: நீண்ட திருக்கைகளை உடையவராய், ரகு குலஶ்ரேஷ்டராய், மஹாபலம் பொருந்தியவராய் இருக்கும் ராமனைப் பெரிய யானையின்மேல் எழுந்தருளுபவராயும், வெண்கொற்றக்குடையால் (வெய்யிலிலிருந்து) மறைக்கப்பட்ட திருமுகமண்டலத்தை உடையவராயும் காண நாம் ஆசைப்படுகிறோமன்றோ!

ராஜ்ய பாரத்தை மகனிடம் கொடுத்து வானப்ரஸ்தாஶ்ரமம் மேற்கொள்ளவேண்டும் என்ற ரகுவம்ஶ குலவழக்கத்தின் படி, ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க விரும்பினான் தஶரதன். தனது மனக்கிடக்கையை அப்படியே செயற்படுத்திவிடின், ஒருகால், அயோத்தியா நகரவாஸிகள், ‘ஒரு பச்சிளம் பாலகன் கையில் நாட்டை இப்படிக் கொடுத்துவிட்டீரே! பகைவரிடமிருந்து மக்களைக் காக்கும் திறல் பெற்றவனோ இந்த ராமன்?’ என்று ஸந்தேகிக்கக்கூடும் என்று தன் மனத்துள்ளே சங்கித்து மேலே செய்வது யாது என்ற யோசனையுடன் அரசன் இருந்தான். ‘அறுபதினாயிரம் ஆண்டுகள் வெண்கொற்றக் குடையின் நிழலிலேயே நான் கிழத்தனம் அடைந்தேன்’ [பாண்ட3ரஸ்யாதபத்ரஸ்ய சா2யாயாம் ஜரிதம் மயா; அயோ.கா 2-7] என்று மனதுளே எண்ணி,  இனி தாமதிக்காமல், குலவழக்கப்படி ராஜ்யத்தை மகனுக்கு அளித்தலே மேல் என்றும் எண்ணி, [க3லிதவயஸாமிக்ஷ்வாகூணாமித3ம் ஹி குலவ்ரதம்; ரகுவம்ஶம் 3-70] நகரத்தாருடன் கலந்து யோசிக்க விரும்பினான்.

ஒருநாள், நகரத்தாரையும், நாட்டாரையும் ஒருங்கே கூட்டி, அவர்களிடம், ‘ராஜ்ய பாரத்தைப் பிள்ளையிடம் வைத்து இடர் தீருகிறேன்’ [க3தக்லேஶோ ப4விஷ்யாமி புத்ரேஸ்மிந் ஸந்நிவேஶ்ய வை; அயோ.கா. 2-14] என்றும், ‘பிள்ளையை ப்ரஜா ரக்ஷணத்திற்கு வைத்துவிட்டு நான் இளைப்பாறுகிறேன்’ [ஸோऽஹம் விஶ்ரமம் இச்சா2மி புத்ரம் க்ருத்வா ப்ரஜாஹிதே; அயோ.கா. 2-10] என்றும் சொல்கிறான். இவ்வாறு சொல்லி, அவர்களிடம், ‘நீங்களும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்’ [ப4வந்தோ மேऽநுமந்யந்தாம்; அயோ.கா 2-15] என்று வேண்டி நிற்க, ஜனங்களும் இதைக்கேட்ட உகப்பாலே, அரண்மனையின் கோப்பு குலையும்படி [விமானம் கம்பயந்நிவ; அயோ.கா. 2-18] பெரியதொரு ஆரவாரத்தைச் செய்தனராம். அரசன் தங்களிடம் வைத்த ப்ரார்த்தனையை அங்கீகரிப்பதோடு மட்டுமின்றி தங்கள் அபிப்ராயத்தையும் சேர்த்தே, ‘அரசே!, உமக்கு வயது பல்லாயிரம் கடந்து விட்டது; வெகு விரைவில் ராமனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யுங்கள்’ [அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்34த்வமஸி பார்த்தி2வ; ஸ ராமம் யுவராஜாநம் அப்4யஷிஞ்சஸ்வ பார்த்தி2வம்; அயோ.கா.2-21] என்று விண்ணைப்பிளக்கும் அளவிற்கு ஆர்பரித்தனர்.

இச்சா2:’ (விரும்புகிறோம்) என்று மக்கள் சொன்னதற்கு பல வியாக்கியானங்கள் தருகிறார் பெரியவாச்சான்பிள்ளை. 1. மாலை சூடிக் கிரீடம் தரித்து எங்கள் முன்னே அரசனாகக் காண விரும்புகிறோம், 2. நாங்கள் விருப்பம்தான் செய்யமுடியும், செய்து வைத்துத் தலைக்கட்டவேண்டியவன் நீங்கள் அல்லவோ? எனவே விரும்புகிறோம், 3. ‘பெரியோர்களுக்கும் நற்காரியங்கள் செய்யப்புகின் இடையூறுகள் பலவாய்த் தோன்றும்’ [ஶ்ரேயாம்ஸி பஹுவிக்3நாநி மஹதாமபி] என்ற உலக வழக்கின்படி, நாங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவிக்கலாம், எனவே விரும்புகிறோம், 4. நல்ல விஷயத்தைக் கண்டால் ஆசைப்படுவது மனுஷ்ய ஸ்வபாவமன்றோ! ஒரு குறையுமில்லாமல் எம்மை இதுவரை காத்துவந்த உம்மிடம் குறை சொல்ல ஒரு காரணமும் இல்லை. என்றாலும், நீரே இப்படிக் கேட்டபிறகு, நாங்களும் ராமனையே அரசனாகக் காண விரும்புகிறோம் என்று சொல்வதில் தவறில்லையே, 5. இந்தவிருப்பம் சிலருக்கு உண்டு, சிலருக்கு இல்லை என்ற பேதமின்றிக்கே நாங்கள் அனைவரும் விரும்புவதால், பஹூவசனத்தில் ‘இச்சாம:’ விரும்புகிறோம் என்றபடி.

இப்படி விருப்பம் தெரிவித்த நகரத்தாரிடம், தஶரதன், ‘ஆமாம், நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள்; ராமன் ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தகுதி உடையவன் தானா என்று யோசித்தீர்களா?’ என்பது போல் அவர்களை நோக்க, அவர்களும், ‘அவர் தோள் பரப்பைக் காணுந்தோறும் இந்த மண்ணுலகும் ஒரு பொருட்டோ? [மஹாபாஹும்], மூவுலகையும் ஆளவல்லவர், இந்த பூமியை ஆளவல்லவர் என்று சொல்லவும் வேண்டுமோ? [ஶக்த: த்ரைலோக்யமப்யேஷ போ4க்தும் கிந்நு மஹீமிமாம்; அயோ.கா.2-45] [மஹாபா3ஹும், ஆஜாநுபா3ஹும்] என்றபடி. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய செல்வன் அன்றோ இவன்? [நாச்.திரு. 11-3] என்று அகல்விசும்பும் நிலனுமாகிற உபயவிபூதிகளைத் தாங்கும் தோள்கள் அல்லவோ இவனுடைய தோள்கள்? எந்த மஹாத்மாவினுடைய தோள் நிழலில் உலகெல்லாம் விளங்குகிறதோ அவருடைய தோள் நிழல் போதாதோ எங்களைக் காப்பாற்றுவதற்கு? [பா3ஹுச்சா2யாம் அவஷ்டப்3தோ4 யஸ்ய லோகோ மஹாத்மந: ஸூந்.கா. 34-31].

ராமன் தோள்வலியால் மட்டுமே பகைவரை வெல்ல வல்லவனா? ஒரு அரசனுக்குத் தோள்வலிமை மட்டுமே போதுமானதா? என்று வினவின், தார்மீகராய் ரக்ஷிக்கும் பெருமை இல்லையோ? என்றும் சங்கித்திருந்தால், அவன் ரகுவீரன் அல்லனோ? தீனர்களை தானத்தால் வெல்கிறான் [தீ3னான் தா3னேன ராக4வ: அயோ.கா. 12-29]. தர்மத்தாலே ரக்ஷிக்கும் தன்மை ரகுகுலத்தில் பிறந்ததாலே ராமனுக்குப் பிறவிக்குணமாகவே இருக்கிறதே. ‘இரக்கம் என்ற மேலான தர்மம் உம்மிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது’ என்று தாய்மைக்குணம் நிரம்பிய பிராட்டியே ஆநந்திக்கும்படி [ஆந்ருஶம்ஸ்யம் பரோ த4ர்மஸ்த்வத்த ஏவ மயா ஶ்ருத: ஸுந்.கா 38-41] என்று பிறருக்கும் உபதேஶிக்கும்படியன்றோ இவன் பெருமை இருப்பது!  தீனர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில், லக்ஷ்மணனையோ, பிராட்டியையோ பின் தள்ளி ஆஶ்ரிதர்களை முன் வைப்பவன். காட்டில் பிராம்மணர்களுக்குச் செய்த ப்ரதிக்ஞையைக் காப்பாற்றுவதற்கு என் உயிரையும் விடுவேன்; லக்ஷ்மணனுடன் கூடிய உன்னையும் விடுவேன்; [அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம்; ஆர.கா.10-19] என்றும், ப்ராணனைக் காட்டிலும் மேலானவள் என்ற பிராட்டியையும் தியாகம் செய்வேன் [ப்ராணேப்யோபி க3ரீயஸி; ஆர.கா 10-22] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்வத்தைக் கடைபிடிக்கிறான்.

ஶரணமடைந்தவர்களை ரக்ஷிப்பது என் வ்ரதம்  [ஏதத் வ்ரதம் மம; யுத்.கா.18-34 ], ஶரணமடைந்தவர்களை ஒருபோதும்  கைவிடமாட்டேன் [ ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா. 18-3] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்தில் உறுதி உடையவர். ரகுவீரம் மஹாபலம் என்று இங்கே கூறுமிடத்தே, தேஹபலம் என்று பொருள் கொள்ளாதே, மனோபலம் என்றே பொருள் கொள்ளவேண்டும். மஹாபாஹும் என்று முன்னமே கூறப்பட்டுவிட்டதாலும், இந்த பரமாத்மாவானவன் மனோபலமற்றவனால் அடையத்தகாதவன்  [நாயமாத்மா ப3லஹீநேந லப்4ய:, முண்.உப. 3-2-4] என்றும் மனோபலத்தைப் பல ஶப்தத்தால் குறிப்பதாலும், இங்கே மனோபலம் என்பதே பொருந்தும். மேலும், தொடங்கிய காரியத்தில் அசஞ்சலாராய் இருக்கும் ராமனை தைர்யத்தில் ஹிமவானைப் போன்றவர் [தை4ர்யேண ஹிமவாநிவ; பால.கா 1-17] என்பதால் அறியலாம்.

இப்படியாக அரசரும், நகரத்தாரும் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதே உசிதம் என்று உறுதி செய்த பிறகு, நகரத்தார் அரசரிடம், ‘உமது விருப்பத்திற்கு நாங்கள் உடன் பட்டோம்; இப்போது எமது விருப்பத்தைக் கேளீரோ’ என்றனர். அப்படியாகில், நீங்கள் சொல்வதென்ன என்று வினவ, ‘கழுத்தில் மாலையும், கவித்த அரசமகுடமும் தாங்கி ஶத்ருஞ்ஜயம் மேலே பவனி வரவேண்டும்’ [க3ஜேந மஹதா யாந்தம்] என்றனர். அரசருக்கு ஏற்ப அரசத்தேரில் பவனி வருவதை விரும்பாமல், யானை மீதேறி வருமாறு விழைவது என்? மதம்கொண்ட யானையைப் போன்ற நடையுடையவன் அன்றோ அவன்?  [மத்த மாத3ங்க கா3மிநம்; அயோ.கா.3-28]. அதற்கேற்ப யானைமீதேறி வரவேண்டாவோ? அது செய்யுமிடத்தில், ஏதேனும் ஒரு யானையாக ஒண்ணாதோ? ஸர்வலக்ஷணங்களும் பொருந்தியதான பட்டத்து யானையாக இருக்கவேண்டும். [க3ஜேந மஹதா], ஸர்வ ஶக்திபொருந்தியவனை எழுந்தருளப்பண்ணும்படியான பட்டத்து யானையாக இருக்கவேண்டுமன்றோ! யானை மீது ஏற்றம் மட்டும் போதாது; அயோத்தி மாநகரின் பெருந்தெருவே ஊர்வலமாய் வரவேண்டும்; சுற்றத்துத் தோழர்கள், தோழிமாருடன் உடனிருந்து முகமும், முறுவலும், கஸ்தூரி நாமமும் கருணாகடாக்ஷத்தோடே எழுந்தருள ஸேவிக்கவேண்டும். அது மட்டுமன்று. வெய்யில் திருமுகத்தில் படாதவாறு வெண்கொற்றக்குடை நிழலிலே எழுந்தருளக் காண வேண்டும்.

அயோத்யா காண்டம்

ஸர்க்கம்-31; ஶ்லோகம்-25

4வாம்ஸ்து ஸஹ வைதே3ஹ்யா கி3ரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்3ரத: ஸ்வபதஶ்ச தே ||

भवांस्तु सह वैदेह्या गिरिसानुषु रंस्यते।

अहं सर्वं करिष्यामि जाग्रत:स्वपतश्च ते।।

பொழிப்புரை: [ரகு குலத்தை ஆநந்திப்பவராய், மிகுந்த கீர்த்தியும் உடையவரான அந்த லக்ஷ்மணன் தன் தமையனாரான  ராமனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக்கொண்டு, ஸீதா பிராட்டியையும், பெரிய வீரத்தையுடைய ராமனையும் பார்த்து, கீழ்வருமாறு சொன்னார்]

ஶ்ரீராமனே! தேவரீரோ ஸீதாபிராட்டியோடு கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர். அடியேன், தேவரீர் விழித்துக்கொண்டிருக்கும் போதும், மற்றும் உறங்கிக்கொண்டிருக்கும் போதும் எல்லா அடிமைகளும் செய்யவேண்டுவேன் ஆகவேண்டும்.

பரமபதத்திலும், திருவயோத்தியிலும் வாழும் போதும் அங்குள்ளார் பலரும் அடிமை செய்ய, பரமபதத்திலிருந்து தேவரீர் திருவயோத்திக்கு எழுந்தருளிய போது, அடியேனையும் எப்படி அழைத்துப் போந்தீரோ, அவ்வாறே திருவயோத்தியிலிருந்து வனவாஸம் செய்ய எழுந்தருளும் போதும் அடியேனை கூடவரும்படி அங்கீகரித்த படியால், தேவரீருக்கு எல்லா அடிமைகளும் செய்வேன். என்னைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று சொல்வதாக இங்கே பொருள் கொள்ளலாம்.

தேவரீருக்கு அடிமை செய்யாவிடில் அடியேன் உயிர் தரியேன். அடியேனது ஸ்வபாவம் அடிமை செய்வதே. அது எனது ஸ்வரூபநிரூபக தர்மம். தேவரீரோ நிறைவானவராதலால், அடியேனிடம் அடிமை பெறாவிடினும் உயிர்வாழ வல்லவர் ஆவீர். என்னுடைய ஶேஷத்வம் நிலைநிற்பதற்காக தேவரீர் கைங்கர்யம் கொண்டருள வேண்டும். காட்டில் மிருகங்களை வேட்டையாடச் செல்லும் நேரங்களில் மட்டுமின்றி, ஸீதாப்பிராட்டியோடு எழுந்தருளியிருக்கும் இருப்பிலேயும் அடிமை கொண்டருள வேண்டும். மலைத்தாழ்வரைகளிலும், நதிஜலங்களிலும் விளையாடிக் களித்திருக்கும் காலங்களிலும் இருவருமான சேர்த்தியிலும் அடிமை கொள்ள வேண்டும்.

லக்ஷ்மணா, உன்னை நோக்கி ஸீதாபிராட்டி பல வெற்றி வாக்கியங்களைச் சொன்னாள் என்று [த்வாமாஹஸீதா பஹுவாக்யஜாதம்; ஆர.கா.63-12] ஒருவருக்கொருவர் வெற்றி கொண்டாடி ரஸிக்கும் போதும் கைங்கர்யம் செய்யக்கடவேன். அடிமைச் சுவைகளை நான் ஒருவனே அநுபவிக்கும்படி அடிமை கொள்ளவேண்டும்.

1.வேட்டையாடச் செல்லுமிடத்தில், கையும், வில்லும் கொண்டு அடிமை செய்வதும், 2. காயும் கிழங்கும் வெட்டுமிடத்தில், மண்வெட்டியும் கூடையும் சுமந்து அடிமை செய்வதும், 3. உண்ண எழுந்தருளும்போது, உணவினைப் பக்குவம் செய்தும், 4. பர்ணசாலை கட்டியும் 5.ஜலக்ரீடை பண்ணும்போது, மரவுரியினைப் பிழிந்து உலர்த்தியும் 5. ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்யும் போது, பிராட்டிக்குக் காவலாயிருந்தும், ஆக இப்படி எல்லா கைங்கர்யங்களுடன் செய்யக்கடவேன். தேவரீர் உறங்கும் போதும், காட்டில் துஷ்ட பிராணிகளும், துஷ்ட ஸ்வபாவர்களான ராக்ஷஸர்கள் அணுகாதபடியும் கையிலே விற்கொண்டு ரக்ஷிப்பேன்.

ஆரண்ய காண்டம்

ஸர்க்கம்-19; ஶ்லோகம்-14

தருணௌ ரூபஸம்பந்நௌ ஸுகுமாரௌ மஹாப3லௌ|

புண்ட3ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம்ப3ரௌ ||

तरुणौ रूपसंपन्नौ सुकुमारौ महाबलौ।

पुण्डरीक विशालाक्षौ चीरकृष्णाजिनांबरौ।।

பொழிப்புரை: [காதும் மூக்கும் அறுபட்டு தன் தமையனார்களிடம் சென்று முறையிடும் சூர்ப்பணகா என்னும் அரக்கியின் வாக்காக அமைகிறது இந்த ஶ்லோகம்]. வாலிபர்களாய், அழகு நிறைந்தவர்களாய், மிகவும் மிருதுவான தன்மையை உடையவர்களாய், பெரிய பலத்தை உடையவராய், தாமரை போன்ற மலர்ந்த கண்களை உடையவராய், மரவுரியையும், மான்தோலையும் உடுப்பாக உடையவர்களாய் [ராம லக்ஷ்மணர்களைக் காண்கிறேன்.]

தருணௌ: அவர்களுடைய பருவமிருக்கிறபடியும், வடிவழகு இருக்கிறபடியும், செயலிருக்கிறபடியும், மிடுக்கிறபடியும், கண்ணழகு இருக்கிறபடியும், ஒப்பனை இருக்கிறபடியும் கண்டு அவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை கண்டு சொல்வதாக அமையப்பெற்றது. இந்த உருவமைப்பும் இளமையும் வேறொருவருக்கும் இல்லை காண். ‘என்னை இது விளைத்த ஈரிண்டு மால்வரைத்தோள் மன்னன்’ [பெரிய திருமடல்] என்று என்னை இப்படி காதல் வயப்படும் செய்திட்டது இந்த குணஸமுதாயமன்றோ! வேதங்களில் சொல்லப்பட்ட ‘யுவாகுமார:’ என்றும், ‘அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை’ [பெரி.திருமொழி 7-10-1] என்றும் அரக்கியான இவள் சொல்லுவதே! மற்றுமொரு அரக்கியான மண்டோதரியும் ‘ இந்த ராமன் பெருந்தவத்தை உடையவராயும், மூலப்ரகிருதியைக் காட்டிலும் மேம்பட்டவராயும், சங்க சக்கரங்களைத் தரிப்பவராயும் காண்கிறேன்’ என்றாளிரே! [யுத்.கா.111-14]. ‘கரியானொரு காளை’ [பெரிய திரு.3-7-1] என்றும், ‘கோவிந்தனென்பானோர் காளை புகுதக் கனாக்கண்டேன்’ [நாச்.திரு.6-2] என்றும் முக்தரையும், பக்தரையும் எம்பெருமான் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தன் பருவத்தைக் காட்டியன்றோ!

மேற்சொன்ன பருவத்தில் ஈடுபட்ட இவள், ராமனிடத்திலே முதலில் ஈடுபட்டாளாகையால், அவனை மட்டும் ஒருமையில் சொல்லாமல் இருவரையும் சேர்த்து இருமையில்  சொல்வானென்? என்பதற்கு ஒரு ரஸமான வியாக்கியானத்தை அருளிச் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை. அழகுக்கும் ஆண்பிள்ளைத்தனத்துக்கும் ஒருவர்க்கொருவர் குறையாதவர்கள்  ஆகையாலும், ‘நான் திருமணமானவன்; இவள் மனத்துக்கினிய மனைவியாவாள்’ [க்ருத தா3ரோஸ்மி,  ப4வதி பா4ர்யேயம் த3யிதா மம; ஆர.கா.18-2] என்று சொல்லி மறுத்து, அவளை லக்ஷ்மணனிடம் அனுப்பிவைக்க அந்த அரக்கியும் இளையபெருமாளிடம் ஈடுபட்டாள். ஆனால், அவனோ, ‘என்னை நெருங்காதே! நானோ என் தமையனாருக்கும் தாயான ஸீதாபிராட்டிக்கும்  அடிமைத் தொழில் புரிபவன்; என்னை மணந்து நீயும் அடிமையாக ஆவாயோ? நீயோ ராணியாகத் தகுந்தவள். எனவே தமையனாரிடமே மீண்டும் செல்’ என்று சொல்ல அவள் ராமனிடம் மீண்டும் ஈடுபட்டாள். ஆக இப்படி இருவரிடமும் ஈடுபட்டதால் அவர்களை இருமையில் சொன்னாள் என்று கொள்ளலாம். மேலும், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து, ‘லக்ஷ்மணா, இவளை அங்கபங்கம் செய்வாயாக’ [விரூபயிதுமர்ஹஸி; ஆர.கா 18-20] என்று ராமன் கார்யம் செய்விப்பனாகவும், உடனே ‘பலவானான லக்ஷ்மணன் கத்தியை உருவிக் காதையும் மூக்கையும் அறுத்தான்’ [உத்3த்4ருத்ய க2ட்க3ம் சிச்சே23 கர்ணநாஸம் மஹாப3ல: ஆர.கா 18-21] என்று கார்யம் செய்து முடிப்பவனாகவும், ஆக இப்படி இருக்கையாலே, ‘அந்தப் பெண்ணிற்காக அவ்விருவராலும் நான் இந்த நிலையை அடைவிக்கப்பட்டேன்’ [தாப்4யாமுபா4ப்4யாம் ஸம்பூ4ய ப்ரதமதா3மதி4க்ருத்ய தாம், இமாமவஸ்தா2ம் நீதாஹம்; ஆர.கா. 19-18] என்று இருவரையும் கூடச் சொல்லுகிறவளாகையாலே, இருமையிற் சொல்லுகிறாள் என்று கொள்ளலாம். ‘இருவராய் வந்தார்; என் முன்னே நின்றார் [திருநெடு.21] என்னுமாப்போலே ஒருவரே இரண்டுருக் கொண்டு வந்ததுபோல் வந்தன்றோ என்னை ஈடழித்தது! தம்பி தமையனிடம் சிறிதேனும் வயது வேறுபாடு காணலாமென்னிலோ, இவர்கள் அடுத்தடுத்த நாளில் பிறந்தவரன்றோ, எங்ஙனம் வேறுபாடு காண்பது? பருவத்திலேயும் சரிநிகர் ஸமானமானவரன்றோ!

ரூபஸம்பந்நௌ: இவர்களது இளமை கண்டு மயங்காது, வடிவுதன்னை நோக்கினால், அழகு வேண்டியிருப்பார் இவர்களிடம் வந்து யாசித்துப்பெற்றுப் போகலாம்படி இருக்கும் அழகுதான் என்னே! ‘காமனார் தாதை’ [பெரிய திருமொழி 1-1-3] என்கின்ற அந்த மன்மதனும் இவனுடைய ஒருபகுதி அழகைப்பெற்றல்லவோ மன்மதனாகிறான்! ராமன் ‘ரூபதாக்ஷிண்யங்களோடே பிறந்தவர்’ [ரூப தாக்ஷிண்யஸம்பந்ந: ப்ரஸூத:, ஸுந்.கா. 35-9]. மேலும், ‘வடிவுடை வானோர் தலைவனே’ [திருவாய். 7-2-9] என்றபடியும், ‘அச்சோ ஒருவர் அழகியவா’ [பெரிய திருமொழி 9-2] என்றபடியும், ‘என்முலையாள ஒருநாள் உன் அகலத்தால்  ஆளாய்’ [பெரிய திருமொழி 3-6-9] என்றபடியும், ‘காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றா திரிதருவன்’ [சிறிய திருமடல்] என்றபடியும், ‘எப்பொழுதும் ராம,ராம என்றே மனப்பூர்வமாய் ஸ்மரித்து, வாயினாலும் அவரையே கூறுகிறவள்’ [ராமேதி ராமேதி ஸதை3வ பு3த்3த்4யா விசிந்த்ய  வாசா ப்3ருவதி தமேவ; ஸுந்.கா 32-11] என்றபடியும் பெண்பிறந்தாரைப் பிச்சேற்றி வாய்வெருவப்பண்ணும் வடிவன்றோ அவரது வடிவம்! அவர் தம்பியன்றோ மற்றவர்? இவர்கள் இருவரின் வடிவழகிலேதான் நான் உழலுகிறது என்கிறாள் ஸூர்ப்பணகை.

ஸுகுமாரௌ: ‘உருவுடையார்’ என்று சொல்லப்பட்ட அழகு மட்டுமில்லாமல், அணைப்பதற்கும் மென்மையாய் இருப்பவர்கள். உங்களைப்போலே காடின்யமுடையவரல்லர் காண்; அவர்களுடைய மென்மையிருக்கிறபடியைப் பார்த்தால், பூவிலே அணைந்தாற்போலன்றோ இருப்பது! பரமபுருஷனின் திருமேனிக்குத் த்ருஷ்டாந்தம் சொல்லும் போது காயாம்பூவை அன்றோ சொல்வது உண்டு. ‘அதஸீபுஷ்ப ஸங்காஶம்’ என்றும், ‘பூவைப்பூவண்ணா’ என்றும் ‘காயாம்பூவண்ணா’ என்றும் புஷ்பத்தை ஒப்பாகக் காட்டியே சொல்லிற்று. ‘வடிவிணையில்லா மலர்மகள், மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி’ [திருவாய் 9-2-10] என்று பூவில் பரிமளத்தையும், மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாகவுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கையன்றிக்கே, அடுத்தடுத்துப் பார்க்கவும் பொறாதபடியாய் அவர்கள் மென்மை இருந்தபடி. ‘நடந்த கால்கள் நொந்தவோ’ [திருச்சந்த-61 ] என்றும், ‘அடியார்  அல்லல் தவிர்ந்த அசைவோ, அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ?’ என்றும் [திருவாய் 8-3-5], ‘அன்று இவ்வுலகமளந்த அசைவே கொல்’ என்றும் [மூ.திரு.34] இயற்கையாய் திருமேனிக்கு ஒவ்வாது என்று ஆஶ்ரிதர்கள் வயிறு நோவும்படி மென்மையுடைய திருமேனி என்றபடி.

மஹாபலௌ: இப்படி இளமையினால் வடிவும் அழகும் ஒன்று சேர தூரத்திலே நின்று பார்ப்பவர்களை மட்டும் ஈடுபடுத்துவதாய் மட்டுமின்றி வலிமிக்கதோர் தேஹம் பொருந்தியவராயும் காண்கிறாள். ‘தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு’ என்றும் [திருவாய் 2-1-7], ‘வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என்வரிவளை’ என்றும் [பெரிய திரு 8-3-1] பெண்பிறந்தார் தோற்றுப்போய் எழுதிக்கொடுக்கும்படியாய் அன்றோ இருப்பது! ‘ஸீதாபிராட்டியோடு இராமபிரான் பல வருஷங்கள் இன்புற்றார்’ என்றும் [ராமஸ்து ஸீதயா ஸார்த4ம் விஜஹார ப3ஹூன் ருதூன், ரா. ஆர.கா.  ] ‘மைந்தனை மலராள் மணவாளனை’ என்றும் [திருவாய் 1-10-4] ‘மைந்தனை’-வலிமிக்கவனை என்றும் சொல்லுகிறபடியே  சிருங்கார ரஸம் அநுபவித்தாலும், நாயகியானவள் அப்ரதா4நையாம்படி [ஸஹயுக்தே ப்ரதா4நே என்னும் பாணினி ஸூத்ரத்தின்படியும்], தான் ப்ரதா4நராகவன்றோ இருப்பது!  ‘காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி நங்கண்ணன் தோழி, கொடியனே’ என்கிறபடியே [திருவாய்: 5-3-4] யௌவனப்பருவத்தையும், வடிவழகையும், மென்மையையும்  காட்டி, வெட்டுண்ட வாழைக்குலை போலே விழுந்து துடிக்கும்படி பண்ணி, அதற்குப்பின் அவருடைய நினைவுக்கும் எட்டாதவராம்படியான பெரிய மனோபலத்தைக் [மஹாபலௌ] கொண்டவர்கள் என்றும் கொள்ளலாம்.

புண்டரீக விஶாலாக்ஷௌ: ஸமுதாய ஶோபை இவ்வாறிருக்க, அவயவஶோபையில் ஏதேனும் குறையிருக்குமோவென்னில், ‘தாமரைத் தடங்கண்ணர்’ என்றபடி அவன் கண்ணழகைத் தப்பினாலன்றோ வேறொரு அவயவத்தில் ஈடுபடுவது? யௌவனம், வடிவழகு, மென்மை, பலம் இவையெல்லாம் அணுகினால் அழியக்கூடியவை. இக்கண்ணழகோவென்னில் அப்படியல்லாமல், ‘தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசி’ என்றும் [திருவாய் 9-9-9] ‘தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ’ என்றும் [திருவாய் 10-3-1] தூரத்திலே தோன்றியபோதே அழிக்கும்படியன்றோ கண்களிருப்பது! ‘ஸம்ரக்தநயநா: கோரா:’ [ஆர.கா.20-12] என்று உங்களைப்போலே எரிவிழியாயிருக்கையன்றிக்கே, ‘புண்டரீகம் ஸிதாம்போஜம்’ என்னுமாப்போலே அக்கண்களிருந்தபடி காண் என்று ஸூர்ப்பணகை தன் அண்ணன்மார்களிடம் கூறுகிறாள். ‘என்னை மனிதனாகவே நினைக்கிறேன்’ என்று [ஆத்மாநம் மாநுஷம் மன்யே; யுத்.கா.129-11] தம்மை மறந்தாராகிலும், ‘அப்பரம புருஷனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரைபுஷ்பங்கள் போலே இருகண்கள் உள’ [தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ; சாந்.1-7] என்கிறபடியே உள்ளேகிடந்த பரத்வத்தைக் கண்களே வெளிக்காட்டித் தருகின்றன. பாற்கடல்போல் அக்கண்களுக்குள்ள அகலம் ஒருவரால் கரைகாணவொண்ணாது. கண்ணிலுண்டான தெளிவுக்குத் தாமரையை ஒரு போலியாகச் சொன்னதுபோல், கடலில் புக்கார் அதன் கரைகாணாதார் போலே, ‘புடை பரந்து, மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்ட அப்பெரியவாய கண்கள்’ [திருப்பாணாழ்வார்-அமலனாதிபிரான் -8] வேறொரு பாசுரமிடவொண்ணாது காண்.  ‘தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணா’ என்றும் [பெரிய. திரு. 7-1-9], ‘தடங்கொள் தாமரைக் கண்விழித்து’ என்றும் [திருவாய் 9-2-3] சொல்லுகிறபடியே, பக்தர், முக்தர், நித்யர் என்று மூவகைப்பட்ட உபயவிபூதியையும் ஒருபார்வையிலே கடாக்ஷிக்கவல்ல பரந்த கண்களாயிருப்பது! பலத்தைக் காட்டி அவர்களைத் தோல்வியுறச் செய்து, ‘தாமரைக் கண்ணனே நீ என்னை ஜெயித்தாய்’ [ஜிதந்தே புண்டரீகாக்ஷ; ஜிதந்தா 1-1] என்றும் ‘தாமரைக் கண்ணனை, விண்ணோர் பரவும் தலைமகனை’ [திருவாய் 2-7-3] என்றும் அவர்களை அடிமையாக்கிக் கொள்வது கண்ணழகைக் காட்டியன்றோ?

அவர்கள் பலத்திலே ஈடுபட்டவர்கள், பலத்தைக் கண்டு பயந்து விலகாமல், ‘அச்சுதனே, மறுபடியும் கடாக்ஷிப்பதன் மூலம் என்னைக் காப்பாற்றுவாயாக’ [அவலோகநதானேன பூயோ மாம் பாலய; விஷ்.புரா. 1-20-16] என்றும், ‘புண்டரீகாக்ஷனே என்னைக் காப்பாற்று’ என்றும் [புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம்; பாரதம், ஸபா-96] ‘தாமரைக் கண்களால் நோக்காய்’ [திருவாய் 9-2-1] என்றும் அன்புசெய்து பகவானையே மறுபடியும் கட்டித் திரியும்படி செய்வன அக்கண்களில் வழியும் இரக்கமன்றோ! ஸுகுமாரௌ என்ற பதத்தால் இவர்களை மன்மதர்கள் என்று சொல்லிற்றே, அப்படியென்றால் புஷ்பபாணர்களாக இருக்கவேண்டாவோ? ‘கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை’ [நாச்.திரு.13-3] என்னும்படி என்னை நிலைகுலைந்து போகும்படி புஷ்பபாணங்கள் இருந்தன காண்.

சீரக்ருஷ்ணாஜிநாம்பரௌ: அவயவத்தின் அழகினைக் காட்டியே அகப்படுத்துவது சிறப்பைத் தருமோ என்னில், ஒப்பனை அழகாலும் அவர்கள் மனத்தைக் கொள்ளை கொள்வர் என்கிறாள் ஸூர்ப்பணகை. ‘செவ்வரத்த உடையாடை அதன்மேலோர் சிவளிகைக் கச்சு’ [பெரிய திருமொழி 8-1-7] என்று சொன்னாற்போலே, உள்ளுடுத்துவது வரவுரி, மேற்சாத்துவது கலைத்தோல் அன்றோ. இளமை, அழகு, மென்மை, பலம், கண்ணழகு என்னும் குணக்கூட்டங்களாகிற ரத்தினங்களை முடிந்திருக்கும் துணியிருந்தபடி, அழகிய உடலுக்கு எதுதான் அலங்காரமாகாது? [கிமிவ ஹ மது4ராணாம் மண்ட3நம் நாக்ருதீனாம்; ஸாகுந்தலம் 1-19] என்றபடியே கடினஹ்ருதயரான ரிஷிகளும் ஈடுபடும்படியாக அம்மரவுரியும் மாந்தோலும் இயற்கையிலேயே அழகர்களான அவர்கள் திருமேனியில் சேர்ந்தபடியாலே அழகுபெற்றிருந்தபடியைப் பார். ஏதாயிருந்தாலும் பரமபுருஷனுடைய திருமேனியில் சாற்றியிருந்தால், காண்பார் நெஞ்சை இழுப்பதாகவே அன்றே இருக்குமன்றோ! ‘புன்சிரிப்புடன் கூடிய திருமுகத்தாமரையை உடையவனாய், பீதகவாடை உடையானாய், வநமாலையால் அலங்கரிக்கப் பெற்றவனாய், ஸாக்ஷாந் மந்மதனுக்கும் மன்மதனாயுள்ள க்ருஷ்ணன் அந்த கோபிகளுக்கிடையில் தோன்றினான்’ [தாஸாமாவிரபூ4ச்சௌ2ரி: ஸ்மயமானமுகா2ம்பு4ஜ: பீதாம்ப3ரத4ர ஸ்ரக்3வீ ஸாக்ஷாந் மந்மத2 மந்மத2: ஶ்ரீமத்பாகவதம் 10-32-2] என்கிறபடியே ‘பீதகவாடை உடைதாழ ப்ருந்தாவனத்தே கண்டோமே’ [நாச் திரு. 14-5] என்றும், ‘செய்யவுடையும் திருமுகமும் செங்கனிவாயும் குழலும் கண்டு’ என்றும் [பெருமாள் திரு 6-7] பெண்கள் வாய்வெருவும்படியன்றோ உடையழகிருப்பது! இதுமட்டுமன்று. ‘உடுத்துக் களைந்த நின்பீதகவாடை உடுத்து’ [திருப்பல்லாண்டு-9] என்று பெரியாழ்வார் போலும் ஸ்வரூபஞானமுடையவர்களும் ஆசைப்படுவதும், ‘ பெருமான் அரையில் பீதகவண்ணவாடை கொண்டென்னை வாட்டந்தணிய வீசீரே’ [நாச். திரு 13-1] என்று ஆண்டாளைப் போலே போகத்தை விரும்பும் நாயகிகள் ஆசைப்படுவதும் திருவரையில் சாற்றிய வஸ்திரத்தையே ஆகும்.

ஆக, இராமபிரான் உண்மை உரைப்பதாலே உலகோரை வசப்படுத்துகிறான். எளியோரை தானத்தாலே தோற்பித்துக் கொள்கிறான். பெரியோர்களைக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறான். எதிரிகளை வில்லாலே வெற்றி கொள்கிறான் [ஸத்யேன லோகான் ஜயதி. தீ3நான் தா3நேன ராக4வ: । கு3ரூன் ஶுஶ்ரூஷயா வீரோ த4நுஷா யுதி4 ஶாத்ரவாந்।। அயோ.கா. 12-29] என்கிறபடியே ‘தருணௌ ஸுகுமாரௌ ரூபஸம்பந்நௌ’ என்னும் அழகாலே அபலைகளான பெண்களை வெற்றி கொண்டும், எதிரிகளை, ‘மஹாபலௌ’ என்கிற பதத்தாலே ஜெயித்தும், கதியற்றவர்களை ‘புண்டரீகவிஶாலாக்ஷௌ’ என்கிற கண்களிலிருந்து பொழியும் அருளாலே ரக்ஷித்தும், இம்மாதிரியாக அவரவர்களை வெற்றிக் கொள்ளத் தகுந்த அழகு. ஆகையால், ‘நான் மூக்கறுப்புண்டது போலே, நீயும் தலையறுப்புண்டு போவாயேயொழிய அவர்களோடு சண்டை செய்யப்புகுந்தால் பலிக்காது காண்’ என்று கரனை அவமதித்துச் சொல்கிறாள்.

ஆரண்ய காண்டம்

ஸர்க்கம்-30; ஶ்லோகம்-39

தம் த்3ருஷ்ட்வா ஶத்ரு ஹந்தாரம் மஹர்ஷீநாம் ஸுகா2வஹம் |

3பூ4வா ஹ்ருஷ்டா வைதே3ஹீ 4ர்த்தாரம் பரிஷஸ்வஜே ||

तं दृष्ट्वा शत्रुहंतारं महर्षीणां सुखावहम् ।

बभूव हृष्टा वैदेही भर्तारं परिषस्वजे।।

பொழிப்புரை: எதிரிகளை அழித்தவரும் மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரும் அவ்விராமபிரானைப் பார்த்து, ஸீதாப்பிராட்டி ஸத்தைப் பெற்றாள். ப்ரீதியடைந்தாள்; கணவனான அவரை ஆரத்தழுவினாள்.

பதினான்காயிரம் அஸுரர்களைக் கொன்ற வீரனான இராமபிரான் [சதுர்த3ஶஸஹஶ்ராணி ரக்ஷஸாம் பீ4மகர்மணாம் ஹதாக்யேகேந ராமேண மாநுஷேண பதா3தி3நா; ஆர.கா. 26-35] என்கிறபடியே ராக்ஷஸ வேட்டையாடி நின்ற ராமபிரானுடைய, யுத்தத்தால் வேர்த்திருந்து களைப்படைந்திருக்கும் திருமேனியில் ராக்ஷஸர்களின் அம்புக்கூட்டத்தால் ஏற்பட்ட புண்களுக்கு அருமருந்தாயிருக்கும் தன்கா3டா4லிங்கனத்தைச்  (இறுக அணைத்தலான செயலை) செய்து பிராட்டி ஸத்தை பெற்றாள் என்கிறது இந்த ஶ்லோகம்.

‘ஆணுருக்கொண்ட பெண்ணாகிற உம்மை மாப்பிள்ளையாகப் பெற்ற தந்தையார் என்ன நினைப்பார்?’ [ஸ்த்ரியம் புருஷவிக்3ரஹம்; ஆர.கா. 30-3] என்று பிராட்டி விண்ணப்பம் செய்யவேண்டும்படி ‘அரக்கர்கள் நிறைந்த தேஶத்தில் உன்னை அழைத்துபோக அஞ்சுகிறேன்’ என்றவரை, ‘ஆணுருக்கொண்ட பெண்’ என்று உள்ளத்தில் நினையாவிடிலும், வாயாலே சொன்ன அன்றுமுதல் தன்நெஞ்சிலே வைத்திருந்து பதினாலாயிரம் ராக்ஷஸர்களையும் தலைவேறு உடல்வேறாகச் செய்து, பிராட்டியைக் கையைப்பிடித்து அழைத்துச்சென்று, ‘ஆணுருக்கொண்ட பெண்ணின் செயலைக் கண்டாயோ?’ என சொல்லாமல் சொல்லிக் காட்டினான் இராமபிரான்.

ஸூர்யனைப்போலே தேஜஸ்ஸையுடைய இராமபிரான் [ஆதி3த்ய இவ தேஜஸ்வீ; ஸு.கா.34-28] என்ற ஶ்லோகத்தில் சொன்னபடியே வீரர்களில் முதலில் எண்ணத்தகுந்தவராக அவதரித்தவன் இராமபிரான். பள்ளியறையின் மேற்கட்டியிலிருக்கும் பூவிதழ்கள் பட்டுக் கன்றிச்சிவக்கும் மென்மை உடையவன்; கண்களால் உற்றுப்பார்க்கின் அதனால் கன்றும் திருமேனி உடையவன்; ‘உற்றார் உறவினரோடு இராவணனை அழித்து உங்களைக் காக்கிறேன்’ என்று வசனபத்34னாக இருந்து இன்று பதினாலாயிரம் ராக்ஷஸர்களை வத4ம்செய்து எதிரிகளின் அம்புக்கூட்டங்களால் உண்டான பண்களைத் தாங்கிய திருமேனியை  உடையவாராய் இருந்தவரை தன் பார்வை (த்ருஷ்ட்வா) என்னும் பன்னீரால் நீராட்டினாள் ஸீதை.

(ஶத்ருஹந்தாரம்) ‘நான் எல்லா ஜீவராஶிகளிடத்திலும் ஒருபடியாய் இருப்பவன்’ [ஸமோஹம் ஸர்வ பூ4தேஷு; ப43.கீ3தை: 9-29] என்றிருப்பார்க்கு எதிரிகள் உண்டோ? என்னில், தன்னுடைய அடியார்களுக்கு விரோதிகள் ஆஶ்ரித விரோதிகள், தனக்கும் விரோதிகள் என்றிருப்பவன் எம்பெருமான் அல்லனோ?

(மஹர்ஷீணாம் ஸுகா2வஹம்) மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரை; சண்டை ஆரம்பித்ததுமுதல், ‘என்ன நிகழுமோ?’ என்று வயிறு கலங்கியிருக்கும் மஹரிஷிகளுடைய பயம் தீரும்படி எல்லா எதிரிகளையும் அழைத்து அவர்களுக்கு ஸுகம் அளிப்பவரை; ‘உம் தேஶத்திலே உம்மை அண்டி வஸிக்கும் நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கப்படவேண்டியவர்கள்’ [தே வயம் ப4வதா ரக்ஷ்யா ப4வத்3 விஷய வாஸிந: ஆர.கா. 1-26] என்கிறபடியே தம்மால் போஷிக்கப்படவேண்டியவர்களான மஹரிஷிகளுக்கு ஸுகமளித்துத் தம்முடைய ஸ்வரூபத்தை உண்டாக்கிக் கொண்டவரை

(3பூ4) பூ4 ஸத்தாயாம் என்கிற தா4துவின் படி ஸீதை ஸத்தை பெற்றாள் என்று நிர்வாஹம். ஸௌகுமார்யாதி ஸ்வபா4வங்களையுடைய இராமபிரான் முரட்டு மேனியும் தன்மையுமுடைய அரக்கர்களோடு யுத்தம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அன்பின் மிகுதியாலே ஸத்தை அழிந்துகிடந்த பிராட்டி திருமேனியிலே ஒருதீங்குமின்றியிருந்த பிரானைக்கண்டு ஸத்தை பெற்றாள் என்கிறது.

(ஹ்ருஷ்டா) உகந்தாள்: தர்மிக்கு ஸத்தை உண்டானால், தர்மம் தானாகவே ஸத்தை பெறும் என்னுமாப்போலே, இராமனுடைய பூர்ணமான வடிவழகைப் பார்த்து ஸத்தை பெற்றபின்பு, தர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.

(வைதேஹீ) பிராட்டியானவள் இந்த ஸமயத்தில் தன் நற்குடிப்பிறப்பை அநுஸந்திப்பதால், வால்மீகி பகவான் ‘வைதேஹீ’ என்று அறுதியிடுகிறார். விதேஹராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்திருக்கவில்லை என்றால், இப்பேறு எனக்கு இல்லாமலன்றோ போயிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறாள். விதேஹராஜனுக்குப் பிறந்திருக்கவில்லை என்றால், இக்ஷ்வாகு வம்ஶத்தில் தொன்றிய இராமனைக் கைப்பற்றியிருக்க முடியாது. வேறு ஒரு நாட்டில் அரசிளங்குமரியாகப் பிறந்திருந்தாலும், ஶிவதநுஸ்ஸுடன் ஸம்பந்தமிருந்திருக்காது; வில்லை முறித்த வீர்யத்திற்குப் பரிசாக ஏற்பட்ட ராமவிவாஹமும் நடந்திருக்காதன்றோ? வில்லை ஒடித்ததற்கு விதேஹவம்ஶத்தையே அடிமையாக எழுதிக்கொடுத்தும், என்னையும் கொடுத்த தந்தை இப்படி பதினாலாயிரம் அரக்கரை ஒருவராய்க்கொன்று நிற்கும் இந்த நிலையைக்கண்டால் என்ன பாடுபடுவர்? ‘ஆண்களையும் வஶீகரிக்கும் அழகும், வண்மையும் பொருந்தியவன் இராமன்’ [பும்ஸாம் சித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29] என்கிறபடியே ஆண், பெண் வாசியில்லாமல் எல்லோரையும் ஈடுபடுத்தும் இவருடைய இந்நிலமையை நான் மட்டும் எவ்வாறு அநுபவிப்பது, என் தந்தையும் காணவேண்டாவோ? என்று தந்தையையும் நினைவு கொள்கிறாள் இங்கே.

(4ர்த்தாரம்) இராமபிரானைக் கைப்பிடித்ததிலிருந்தே, இவன் என் கணவன் என்று நினைத்திருந்தவள் பிராட்டி. ஆயினும், இப்போது, ‘ப்4ரூ ப4ரணே’ என்ற தா4துவின் படி, ப4ர்த்தா-ப4ரிப்பவன் -ரக்ஷிப்பவன் என்பது பொருளுடைத்தாயிற்று.

(பரிஷஸ்வஜே) நன்றாக ஆலிங்கனம் செய்தாள். ‘பர்யாப்தம் யதா24வதி ததா2 ஸஸ்வஜே’ போதுமென்று சொல்லும்படி தழுவினாள். அம்புபட்ட புண்ணுக்கு ஆலிங்கனமே கைகண்ட மருந்து என்று பிராட்டியே பல ஸமயங்களில் அநுபவித்தறிந்த விஷயமாயிற்றே. ‘கோல்தேடி ஓடும் கொழுந்து’ [இர.திரு.27] என்கிறபடியே ஒரு கொடியாய் இருப்பது ஒருகொள்கொம்பைத் தழுவினாலல்லது நிலைநிற்காதே. கணவனைப்பற்றி நிற்கும் தன்மையே மனைவிக்கு ஸ்வரூபம் எனப்படுகிறது.

தம்–(அவரை) என்னும் சொல் இராமபிரானுடைய சௌர்யம், வீர்யம் முதலிய எல்லாத் தன்மைகளையும் காட்டுகிறது.

த்ருஷ்ட்வா–(பார்த்து) என்கிற பதத்தாலே, ‘ராமபிரானுடைய எல்லாத்தன்மைகளையும் நன்றாகக் காணலாம்படியான கண்களையுடையவள் பிராட்டியே’ என்று உணர்த்தப்படுகிறது.

ஶத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்–(ஶத்ருக்களை அழித்தவரை, மஹர்ஷிகளுக்கு ஸுகம் அளித்தவரை) என்கிற பதங்களாலே ‘தங்கள்  பிள்ளைகளான சேதநருடைய துன்பங்களைத் துடைப்பதும், இன்பத்தைப் பெருக்குவதும் செய்யாத போது, பிராட்டி இராமபிரானைக் காண விரும்பமாட்டாள்’ என்று சொல்லப்படுகிறது.

பபூவ–(ஸத்தை பெற்றாள்) தன் பார்வையாகிற பன்னீரால் குளிப்பாட்டுவதன் மூலம், இராமபிரானுக்குச் சிறப்பை விளைவிக்கையாலே, தன் ஶேஷத்வஸ்வரூபம் பெற்றாள் என்கிறது.

ஹ்ருஷ்டா–(உகந்தாள்) ‘த4ர்மி ஸித்3தி4த்தபிறகே த4ர்மங்கள் ஆராயப்படுகின்றன’ என்கிற ந்யாயத்தாலே, த4ர்மியான தான் ஸத்தைப்  பெற்ற பின்பு த4ர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.

வைதேஹீ–தந்தை விஷயமாக நெஞ்சாலே நன்றி செலுத்துகிறாள்.

4ர்த்தாரம்–(4ர்த்தாவை) குடும்பத்தைக் காப்பவன்; பிள்ளையை ரக்ஷிப்பதைத் தன்னுடைய பொறுப்பாகக் கருதுபவள் தாய் அல்லவா? எனவே தன்னுடைய கடமையைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு நடத்திக் கொடுத்ததால், அதாவது மஹர்ஷிகளை ரக்ஷணம் பண்ணியபோது, ‘என் காரியத்தை தனது பொறுப்பாகச் சுமந்து நடத்தினார்’ என்று அநுஸந்திக்கிறாள்.

பரிஷஸ்வஜே–(நன்றாகத் தழுவினாள்) பிராட்டி பிரானைத் தழுவியதைப் பார்த்தால், உடம்பு நோவநின்று எதிரிகளை அழித்ததற்கு, இவ்வாலிங்கனத்தையே இராமபிரானும் ப்ரயோஜனமாகக் கருதுகிறார் போலும்.

கிஷ்கிந்தா காண்டம்

ஸர்க்கம்-24; ஶ்லோகம்-31

த்வம்ப்ரமேயஶ்ச து3ராஸத3ஶ்ச ஜிதே3ந்த்ரியஶ் சோத்தமதா4ர்மிகஶ்ச|

அக்ஷய்யகீர்த்திஶ்ச விசக்ஷணஶ்ச க்ஷிதிக்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ ||

त्वं अप्रमेयश्च दुरासदश्च जितेन्द्रियश्चोत्तमधार्मिकश्च।

अक्षय्यकीर्तिश्च विचक्षणश्च क्षितिक्षमावान् क्षतजोपमाक्ष।।

பொழிப்புரை: ரத்தம்போல் சிவந்த கண்களையுடய ஶ்ரீராமபிரானே! நீர் அளவிடவொண்ணாதவராயும், கிட்டவொண்ணாதவராயும், ஜயிக்கப்பட்ட இந்திரியங்களை உடையவராயும், சிறந்த தர்மத்தை உடையவராயும், அழிவற்ற புகழை உடையவராயும், அதிஸம்ர்த்தராகவும், பூமியைப்போன்ற  பொறுமை மிக்கவராயும் இருக்கிறீர்.

வாலி வதம் ஆனபின், வாலியின் மனைவியான தாரை இராமபிரானைக் கண்டு இவ்வாறு கூறும் செய்தியாக அமைந்துள்ள ஶ்லோகம் இது. கணவனைக் கொன்றவன் என்ற கோபத்துடன் வந்தவள், ‘நீ’ [த்வம்] என்று ஒருமையுள் விளிக்கத் தொடங்கி, மேலே பேசும்பொழுது, ராமபிரானின்  ஸாந்நித்யவிஶேஷத்தால், ராமனது கல்யாண குணங்களைப் போற்றிப்பரவத் தொடங்குகிறாள்.

அறிதற்கரியவன் [அப்ரமேய:] 1. உம்முடைய பெருமையையும் அறியாமல், என்னுடைய சிறுமையையும் அறியாமல் இந்திரியங்களாலே உம்மை அநுபவித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்படி அநுபவிக்கமுடியாததாக இருந்தது. 2. இதை நான் மட்டுமன்று, வேதங்களும் சொல்கின்றன. ‘நான் அறிவேன்’ [வேதா3ஹம்; பு.ஸூ] என்று தொடங்கிய வேதமும், படிப்படியாக ‘பெரியவனை’ [மஹாந்தம்; பு.ஸூ]  என்றும், ‘அவனை இவ்வளவென்று அறிபவன் யார்?’ [க இத்தா2 வேத3?] என்றும் அறியமாட்டாமல் மீளும்படியன்றோ உமது மேன்மை இருக்கிறது. 3. ப்ரமைக்கு விஷயமானவன் ப்ரமேயன். ப்ரமையாவது-உண்மையான அநுபவம். ப்ரத்யக்ஷம், அநுமானம், ஆகமம் என்ற மூன்று வகைப்பட்ட பிரமாணங்களால் பிறப்பது அறிவு. இவை மூன்றுக்கும் அப்பாற்பட்ட விஷயமாக நீர் இருக்கிறீர், எனவே அப்ரமேயன். எங்ஙனேயென்னில், கண்ணுக்குப் புலப்படாதவன், கட்கிலீ [திருவாய் 7-2-3] என்றும், உவமை சொல்லி அநுமானிக்கலாமென்னில், ஒத்தார் மிக்காரிலையாய மாமாயா [திருவாய் 2-3-2] என்றும், ஸாமாந்யமாகவோ, விஶேஷமாகவோ உவமை சொல்லமுடியாது மேம்பட்டிருப்பவனாகையாலும், ‘எந்தப் பரம்பொருளிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அறியமுடியாமல் திரும்புகின்றனவோ’ [யதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ; தை.ஆ.9], ‘பரம்பொருள் இப்படிபட்டது மாத்திரமன்று; இதைப்போல் வேறில்லை’ [நேதி, நேதி; ப்ருஹ.1-3-6], ‘ஞானிகள் மனத்தோடுகூடிய மற்ற இந்திரியங்களால் இவனை அறியமாட்டாராகையால், இவனைப் பற்றி நினைக்கும்போது மௌனத்தையே அடைகிறார்கள்’ [யதோ ந வேத3 மநஸா ஸஹைநமநுப்ரவிஶந்தி ததை2வ மௌநம்] என்று வேத3ங்களும் அளவிட்டறிய மாட்டாமையாலே, ஆகமத்தாலும் அறிய முடியாதவராயிருக்கிறீர். 4. உனக்கே நீ அறியவெண்ணாதவன். ‘அப்பரமன் தன்னைத் தானே அறிவனோ மாட்டானோ அறியோம்’ [ஸோ அங்க3 வேதி3 யதி3 வா ந வேத3; தைத். ஸம் 2-8-9] என்றும், ‘தனக்கும் தன் தன்மை அறிவரியானை’ [திருவாய் 8-4-6] என்றும் இயற்கையையாகவே எல்லாம் அறிந்த நீர் உம்மாலே அளவிட்டு அறியப்படுவீரோ? 5. காலத்தாலளவு, தேஶத்தாலளவு, வஸ்துவாலளவு என்னும் மூவகை அளவுகளும் இன்மையாலே அளவிடவெண்ணாதவன். நித்யனாகையினால் காலத்தால் அளவில்லை; ஸர்வவ்யாபியாகையாலே தேஶத்தால் அளவில்லை; எல்லாப் பொருளோடும் ஒரே வேற்றுமையில் சொல்லத்தக்க ப்ரகாரி இல்லாமையாலே வஸ்துவால் அளவும் இல்லை. ஆக இப்படி மூவகை அளவுகளாலும், பத்தர், முக்தர், நித்யர் என்கிற மூவகைச்சேதனருக்கும் மனம், வாக்கு, காயம் என்னும் மூவகைக் கரணங்களாலும், முக்காலங்களிலும் அளவிடவொண்ணாதவன். 6. ‘எய்தா நின்கழல்’ [திருவாய் 2-9-2] என்கிறபடியே, என் முன் நிற்பினும் அடையற்கரியவர் நீர். ‘கண்ணால் காண்பரியன்; ஸுத்தமான மனத்தாலே காணத்தக்கவன்’ [ந சக்ஷுஷா க்3ருஹ்யதே மநஸா து விஸுத்3தே4ந; வ்யாஸ ஸ்ம்ருதி] என்ற ப்ரமாணமும் நிரங்குஶ ஸ்வதந்த்ரரான உம் விஷயத்தில் பொய்யாயிற்று. 7. கையும் வில்லுமாய் காட்சியளிக்கையால் எளிமை தோற்ற நின்றாலும், [அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம் த33ர்ஶ த4நுர்ஜிதம்; கிஷ்.கா. 19-25] மூலப்ரகிருதிக்கும் மேம்பட்டவராய், எல்லாவற்றுக்கும் ஆதாரராய், சங்குசக்கரகதைகளை தரிப்பவராய் இருக்கும் விஷ்ணுவே நீர்[தமஸ: பரமோ தா4தா சங்க2 சக்ரக3தா34ர: யுத்.கா.114-115]. 8. நீர் அறிதற்கரியவர். பரத்வத்தைத்தான் அறியமுடியாதென்று நினைத்திருந்தோம்; மனிதனாக அவதரித்து நிற்கும் உம்முடைய ஸௌலப்யமும் அறியவொண்ணாததாயிற்று. 9. ஸேனை முதலான அரசர்க்குரிய பரிகரங்கள் இல்லாமையால் தனிமைப்பட்டவர் போலிருக்கும் நீர் ‘தேஜோ விஶேஷத்தாலே ஸேனைகளால்  சூழப்பட்டவர்கள்போல் இருந்தனர் அவ்விருவரும்’ [அநுபா4வ விஶேஷாத் து ஸேநாபரிவ்ருதாவிவ; ரகுவம்ஶம் 1-37] என்கிறபடியே அளவற்ற படைபலத்தை உடையவரைப்போலே அறியமுடியாதவராயிருந்தீர். 10. தந்தையின் கட்டளையால் காட்டில் வாழவந்தீர். ஆயினும் கரதூஷணாதிகள், கபந்தன் வாலி இத்யாதிகளைக் கொன்று குவித்தீர். உம்முடைய நோக்கம் அறிதற்கரியது.

கிட்டவொண்ணாதவன் (துராஸத:) தர்மாநுஷ்டானங்களைச் செய்பவருக்கே பரமபுருஷன் ஆராதிக்கத்தகுந்தவன் என்றிருக்கு, வழிதடுமாறி வந்தோர்க்கு என் செய்ய? ஜ்ஞாநஶக்த்யாதி குணங்கள் நிறைந்தவனே! அடியவரைக் கைவிடாதவனே! விவேகமில்லாமையாகிற மேகங்களாலே இருளடைந்த திசைகளை உடையதும், பலவிதமாக இடைவிடாமல் துன்பங்களைப் பொழிகின்றதுமான ஸம்ஸாரமாகிய மழைக்கால இருளிலே நல்வழியிலிருந்து தவறின அடியேனை நோக்கியருள்வாயாக [அவிவேக . . . பத: ஸ்கலிதம் மாமவலோகயாச்யுத; ஸ்தோ.ரத். 49] என்றும், ‘பாவியேன் பலகாலும் வழி திகைத்து அலமருகின்றேன்’ [திருவாய் 3-2-9]. இங்கு, துராஸத என்னும் பதத்தில், ஆஸத என்றால்-‘நெருங்குதல்’ ; தா4து பாட2த்தில் (ஷத்3 –ஆஸத்3) என்பதற்கு, பொடியாக்குதல், தொலைவு தூரம் தள்ளிவிடுதல், முடித்துவிடுதல் ஆகிய மூன்று பொருட்கள் உள்ளன. தன் கணவனைக் கொன்றவனை எதிர்த்து வந்தவளான தாரை, இராமபிரானை முதலாவதாக ‘பொடித்துவிடலாம்’ என்று எண்ணினால், இவனோ மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பதனால் [முண்டக உப. 1-1-6; ஸஸூக்ஷ்மம்] ஸ்தூலவஸ்துக்களை பொடியாக்குவதுபோல் இவனைப் பொடியாக்க முடியாது; இரண்டாவதாக, இவனைத் தொலைதூரம் தள்ளிவிடலாம் என்றாலோ, இவனோ ஸர்வவியாபியாக இருப்பதால் [முண்டக உப.1-1-6; விபு4ம்] உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் என்பதால் இவனைத் தூரத்தில் தள்ளவும் முடியாது; மூன்றாவதாக, ஒருவழியாக முடித்து விடலாமென்றாலோ, என்றுமிருப்பவனை, எக்காலத்திலும் அழியாமல் இருப்பவனை [முண்டக உப.1-1-6; நித்யம்] ஒருகாலத்திலும் அழிக்கமுடியாது என்று அறிந்தாள் தாரை.

புலன்களை வென்றவர் [ஜிதேந்த்ரிய:] இப்படி மேலே சொல்லப்பட்ட அறியமுடியாமை, அடையமுடியாமை என்னும் பெருமைகளாலே கர்வம் கொண்டவராய் பரதாரமாகிய என்னையும், என்கணவரைக் கொன்று ராஜ்ஜியத்தையும் பிடுங்கி ஆளவந்தீர் என்று அபவாதம் சொல்லவரினும், ராஜ்ஜியத்தை ஸுக்ரீவனுக்குக் கொடுத்து, புலன்களை வென்றவராகவ அல்லவோ இருக்கிறீர்! ‘ராமன் பிறர் மனைவியரைக் கண்ணால்கூடக் காண்பதில்லை’ [அயோ.கா. 72-49; ந ராம: பரதாராம்ச்ச சக்ஷுர்ப்4யாமபி பஶ்யதி] என்கிறபடியே இத்தனை நேரம் நான் நிற்கும்போதும் என்னை முகம் நிமிர்த்திப் பாராமல் நிற்பதே! என்ன வைராக்யமுடையவரோ இவர்? என்கிறாள். ‘மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்’ [திருவாய் 1-1-2] என்று சொல்லுகிறபடியே உலகத்தாருடைய உள்ளிந்திரியமான மனத்துக்கும், வெளியிந்திரியங்களான மெய்,வாய், கண், மூக்கு, செவி இவை அனைத்துக்கும் அடையமுடியாதபடி அவற்றை வென்றிருப்பவன். ராஜ்ஜியத்தையும், மனைவியையும் இழந்திருக்கும் நீர் பிறருடைய ராஜ்ஜியத்திலும், மனைவியிடமும் ஆசை கொண்டு வந்தீர் என்று நினைத்தோம், நீங்களோ புலன்களை வென்று அவற்றில் ஆசையின்று இருக்கிறீர்.

உயர்ந்த தர்மமிக்கவன் [உத்தம தா4ர்மிக:] இப்படி வைராக்யத்தோடு இருக்கிறவர் நம்மை துன்புறுத்துவானேன்? பிறரைக் காரணமில்லாமல் இம்ஸிக்கும் அதார்மிகரோ? என்னில், வாலியைக் கொன்றது பிறருக்கு செய்யும் உபகாரமல்லவோ இருக்கிறது! தன் நன்மையைக் கருதி தர்மம் செய்பவன் அத4மன். தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடுபவன் மத்4யமன். பிறர் நலனில் மட்டும் கருத்துடன் செயல் படுபவன் உத்தம தா4ர்மிகன். ஸாமாந்ய த4ர்மத்தில் ஊன்றி நிற்பவர் தா4ர்மிகர். விஶேஷ த4ர்மத்தில் ஊன்றியிருப்பவர் சிறந்த தா4ர்மிகராகிறார். ‘இரக்கமே மேலான த4ர்மம்’ [ஆந்ருஶம்ஸயம் பரோ த4ர்ம: ஸு.கா. 38-14] என்று துன்புற்றவரைக் கண்டால்’ ஐயோ’ என்று நினைத்திருக்கும் இரக்கம் ஸாமாந்ய த4ர்மமாகும். தன்னையடைந்தவர்களுக்கு ஓர் ஆபத்து உண்டானால், அவர்கள் விஷயத்தில் ஆபத்தை விளைவித்தவரிடம் ஸாமாந்ய த4ர்மமான இரக்கத்தை விட்டு, அவர் மார்பிலே அம்பை எய்தி ஆபத்தை நீக்கிக் கொடுக்கை விஶேஷ த4ர்மமாகும்.  மேலும் தம்பியின் தாரத்தை அடைந்தவனுக்கே வதமே தண்டனை [தஸ்ய த3ண்டோ3 வத4: ஸ்ம்ருத: கிஷ். கா 18-23 ] என்று தண்டனை அளித்துப் பரிஶுத்தப்படுத்துவதால் விஶேஷ தர்மமாகிறது.

அழியாப்புகழாளர் (அக்ஷய்ய கீர்த்தி:) சிறப்புக்கு ஸாதநமான த4ர்மம் மாத்திரம் இவரிடம் உள்ளது, த4ர்மப2லமான புகழ் இல்லயோ? என்று ஐயப்பட்டிருந்தேன், [தஸ்ய நாம மஹத்3யஶ:] என்ற உபநிஷத வாக்கியத்தாலும், ‘நிகரில் புகழாய்’ [திருவாய் 6-10-10 ] என்றும் சொல்கிறபடியும் ‘மன்னுபெரும்புகழ்’ [நாச். திரு 5-1] உடையவராய் இருக்கிறீர். மறைந்து நின்று கொன்றீர், தோ3ஷமற்ற மிருகத்தைக் கொன்றீர், பலனற்ற கொலையைச் செய்தீர் என்று பழிகளைச் சொல்லி உங்கள் புகழுக்கு அபவாதம் செய்யலாமென்றாலோ ‘அரசர்களுக்கு மிருகவேட்டையும் மறைந்து நின்று கொல்வதும் நியாயம்’ என்றும், ‘நல்ல நெஞ்சையுடைய தம்பியாய் ஶரணமடைந்தவனான ஸுக்கிரீவனுக்குத் தீங்கிழைக்கையாலே பாவியைக் கொன்றேன்’ என்றும் ‘குடிகளின் நன்மைக்காக து3ஷ்ட மிருகத்தைக் கொன்று பலனுள்ள வதத்தைச் செய்தேன்’ என்றும் எதிரி பதிலுரைக்க முடியாத வண்ணம், பழிசேராத வகையில் காரியம் செய்தீர் ஆகையால், அழியாப் புகழாளர் ஆவீர்.

இப்படி மாறாத புகழ்பெறக் காரணம் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால், புகழைக் கொடுக்கும் காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆராய்ந்து செய்யும் ஆராய்ச்சியாளராக அதிஸமர்த்தராக  (விசக்ஷணச்ச) இருந்தீர். எந்தப் பரமபுருஷன் எல்லாப் பொருள்களின் ஸ்வரூபஸ்வபாவங்களை அறிவனோ [யஸ் ஸர்வஞ: ஸர்வவித்; முண்.உப 1-1-10], பரமபுருஷனுக்கு இயற்கையான அறிவு, பலம், செயல் ஆகியவை இருப்பதாகக் கேட்கப்படுகிறது [ஸ்வபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச;  ஶ்வே.உப.6] என்கிறபடியே எல்லாமறிந்த உமக்கு பழிசேராத வகையில் எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில்கள் சொல்வது பெரிய அதிஶயமே கிடையாது. வாலி-ஸுக்ரீவ யுத்தத்தின் போது, அடையாளம் காண்பதற்கு ஸுக்ரீவன் கழுத்தில் மாலையணிவித்து இவ்விருவரினிடையே வேறுபாடு தெரியும் வண்ணம் செய்தமை நீர் அதிஸமர்த்தர் என்பதற்கு நல்ல உதாரணம்.

இப்படி அதிஸமர்த்தரானால், ‘ஶத்ருகுலத்தைச் சிறிதளவும் விட்டு வைக்கக்கூடாது’ [ஶத்ரோ: ஶேஷம் ந ஶேஷயேத்; ]என்றும், ‘புத்திர, பௌத்திர, மந்திரி, தாயாதிகளோடு ராவணனைக் கொல்வேன்’ [ஸபுத்ர பௌத்ரம் ஸமாத்யம் ஸமித்ரம்ஜ்ஞாதி ஸபா4ந்தவம் ஹத்வா; பால.கா.15-27] என்ற வசனங்களின்படி வாலியைக்கொன்று, அங்கதனையும் அழிப்பீரோ என்று பயந்தோம். நீங்களோ பொறுமையில் பூமியையும் விஞ்சும் வகையாகவல்லவோ புவிப்பொறையாளராக (க்ஷிதிக்ஷமாவாந் ) இருக்கிறீர்!

‘என்னிடத்தில் இப்படிப்  பொறுமை காட்டுவதற்கு காரணம் என்ன?’ என்று ஆலோசித்தேன். ‘உயிக்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன்’ [பெரிய திரு. 7-2-9] என்று எல்லோரையும் காக்க வந்த ஐஶ்வர்யத்தைக் காட்டும் இந்தக் கண்களின் பெருமை இருந்தபடி என்ன ஆச்சர்யம்! வாலியைக் கொன்றபோது கோபத்தால் கண்ணில் ரத்தம் ஏறிய சிவப்பு (க்ஷதஜோபமக்ஷ) [ராம: ரக்தாந்த லோசன: யுத்.கா. 21-13] இன்னும் மறையாமலிருக்க, என்பால் பொறுமையைக் காட்டியது என்ன வியப்பு! ஓரம்பால் வாலியைக் கொன்றீர் என்கிற விஷயமறிந்து இங்கு வந்து பார்த்தால், ஓரம்பால் அன்று, சிவந்த இந்த கண்களே வாலியைக் கொன்றன என்னுமாபோலே இருக்கிறதே! அந்த பரமபுருஷனுக்கு ஸூரியனால் மலர்ந்த வெண்டாமரைக் கண்கள் [யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ; சாந்.உப. 1-7] என்று மிகமலர்ந்த  உம்முடைய கண்களுக்கு சிவப்பு இயற்கையானது; கோபத்தால் வந்தேறியிருப்பதன்று. இந்தக் கண்கள் ஸீதாப்பிராட்டியாரின் பிரிவுத்துன்பத்தால் விளைந்த துன்பக்கண்ணீரால் சிவந்தனவோ? வாலியிடம் கொண்ட கோபத்தால் சிவந்தனவோ? ஸுக்ரீவனிடம் அன்பாலே சிவந்தனவோ? என்று அறியமுடியவில்லை.

விஷ்ணு புராணத்திலே ‘ஞானம், ஶக்தி, பலம், ஐஶ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் பகவான் என்னும் ஶப்தத்தால் சொல்லப்படுகின்றன’ [ஞானஶக்தி ப3லைஶ்வர்ய வீர்யதேஜாம்ஸ்யஶேஷத:  வி.புரா.6-5-79] இவற்றை முறையே அயோத்யா காண்டத்தில், ‘பிறரை ஹிம்ஸிக்காமை, இரக்கம், ஆர்த்தநாதம் கேட்கை, ஸௌஶீல்யம், வெளியிந்திரியங்களை அடக்குகை, மனதையடக்குகை’ என்று காட்டி, இவை  இராமபிரானை அலங்கரிக்கின்றன [ஆந்ருஶம்ஸ்யம்நுக்ரோஶ: த்4ருதம் ஶீலம் த3ம: ஶம:। ராம: ஶோப4யந்த்யேதே ஷட்3கு3ணா புருஷோத்தமம்।। அயோ.கா. 33-12] என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோல, இங்கே சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட எட்டு குணங்களின் ‘பாபமற்றவன், கிழத்தனமற்றவன், சாவற்றவன், துன்பமற்றவன், பசியற்றவன், தாகமற்றவன், வீணாகாத விருப்பங்களை உடையவன், வீணாகாத ஸங்கல்பங்களை உடையவன்’ [அபஹதபாப்மா, விஜரோ, விம்ருத்யு:, விஶோக:, விஜிக4த்ஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப: சாந்தோ. 8-7-1] என்பனவற்றின் ஒருசேர பூர்த்திக்கு அப்ரமேயம் முதலான எண்குணங்களைச் சொல்லுகிறார்.

ஸுந்தர காண்டம்

ஸர்க்கம்-15; ஶ்லோகம்-53

து3ஷ்கரம் க்ருதவாந் ராமம் ஹீநோ யத3நயா ப்ரபு4: |

தா4ரயத்யாத்மநோ தே3ஹம் ஶோகேநாவஸீத3தி ||

दुष्करं कृतवान् रामं हीनो यदनया प्रभु:

धारयत्यात्मनो देहं न शोकेनावसीदति।।

பொழிப்புரை: ஶ்ரீராமபிரான் செயற்கரிய செயலைச் செய்தார். இந்த ஸீதாதேவியைப் பிரிந்திருந்த போதிலும், (பிறர் வருத்தமறியாத பிரபுவாய்) தன் திருமேனியைத் த4ரிக்கிறார் என்பதுவும், துன்பத்தால் நஶிக்கவில்லை என்பதுவும் (செயற்கரிய செயல்கள்).

அஶோக வனத்தில் பிராட்டியின் பெருமையைக் கண்டும், அவள் எழுந்தருளியிருந்த நிலைமையைக் கண்டும் அநுமான் இப்படி எண்ணிச் சொல்கிறார். நான் பெரிய கடலைக் கடந்து அரிய பெரிய செயலைச் செய்துமுடித்துவிட்டதாக நினைத்திருந்தேன். ஆயின், இராமபிரான் என்னிலும் அரிய காரியத்தைச் செய்தாரென்று இப்போது தெரிகிறது. ஏகதா4ரவிரதன் என்று பிரஸித்3தி4 பெற்ற ராமனுக்கு இவளைப் பிரிந்திருப்பது அரிய செயல். செய்யவரியதை (துஷ்கரம்) இதுக்கு முன்பு இவருக்கும் இக்காரியம் செய்யமுடியாது. அதனாலன்றோ காட்டுக்குப் போகும்போது இவளைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு போனார். இந்த ஸாஹஸமான காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார் (க்ருதவாந்).

இவர் இப்படி செய்ததுதான் ஏதென்னில் ராமனாக (அழகனாக) இருந்ததே முதல் குற்றம். பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஒரு சிறிதும் மாறுபடவில்லை. பிராட்டியைப் பிரிந்து ஒளியிழந்து, அழகு குறைந்து, முகம் வெளுத்து, உடல் இளைத்து ‘இட்டகால் இட்டகையளாய்’ [திருவாய் 7-2-4] என்கிறபடியே கை, கால்களை அசைக்கமுடியாமல் இருக்க வேண்டாவோ? அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமலிருந்தாரே! நிறத்தை இழக்காமல் குணத்தை இழந்தாரே. இத்தை நினைத்தன்றோ பிராட்டியும், அவருடைய ‘திருமுகம் பொன்போல் ஒளிவீசுவதாய், தாமரைபோல் மணம் கமழ்வதாயுமுள்ளதா?’ [கச்சிந்ந தத்3தே4மஸமாந வர்ணம் தஸ்யாநநம் பத்3ம ஸமாந க3ந்தி4; ஸு.கா. 36-28] என்று முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே இருந்ததோ என்று கேட்டது! ராமன் அழகில் அழகியவராயிருந்தாரே ஒழிய நெஞ்சில் ஈரமில்லை. நீறு பூத்த நெருப்பாயிருந்தார். வடிவழகைக் காட்டி ஈடுபடுத்திக் கொண்டு போய் நடுக்காட்டில் தள்ளிவிடுவதே!

‘என்னுடைய பெரிதான பாபம் ஒன்று இருக்கிறது. இதில் ஸந்தேஹமே இல்லை’ [மமைவ து3ஷ்கரம் கிஞ்சித் மஹத3ஸ்தி ந ஸம்ஶய: ஸு.கா 38-48] என்று பிராட்டி அருளிச் செய்தபடி, தன் கர்மபலனாய் அபஹரிக்கப்படாளேயன்றி இவரால் தள்ளிவிடப்படவில்லை; ‘இறையும் அகலகில்லேன்’ [திருவாய் 6-10-10] என்ற இவளையா பிரிந்து செல்வது? ‘ஶ்ரீமந்நாராயண’ [த்வயம்] என்கிற ததத்தின் ‘மதுப்’ ப்ரத்யயத்தினால் சொல்லப்படும் நித்யயோகத்தையும் (பிரியாதிருக்கும் தன்மை) அழித்து விட்டாரே! ‘வேறொன்றையும் நினையாதவளும், உம்மிடமே ஈடுபட்டவளும், உம்மைப் பிரிந்தால் இறப்பதென்று உறுதி பூண்டவளுமான என்னை உம்முடன் காட்டுக்கு அழைத்துச் செல்வீர்’ [அநந்ய பா4வாமநுரக்தசேதஸம் த்வயா வியுக்தாம் மரணாய நிஶ்சிதாம்; அயோ.கா. 27-22] என்று சொன்ன இவளையன்றோ பிரிந்து விட்டார்! ‘ஶ்ரத்தை எனப்படும் ஶ்ரீதேவியாலே தேவனான நாராயணன் தேவனாயிருக்கும் தன்மையை அடைகிறான்’ [ஶ்ரத்34யா தே3வோ தே3வத்மஶ்நுதே; யஜு.காட 3-3] என்றும், ‘ஜனகராஜன் திருமகளைத் தன்னுடையவளாகக் கொண்ட தத்துவத்தின் தேஜஸ் அளவிடவெண்ணாதது’ [அப்ரமேயம்ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா; ஆர.கா. 37-18] என்றும், ‘ஸூரியனைவிட்டுப் பிரியாத ஒளிபோல் ராமனைவிட்டுப் பிரியாதவள் நான்’ [அநந்யா ராக4வேணாஹம் பா4ஸ்கரேண ப்ரபா4யதா2; ஸு.கா.21-16 ] என்றும் எல்லா விதத்திலும் தனக்குப் பெருமை தருகிற இவளையன்றோ விடுவது!

பிறர் காரியம் ஒன்றும் அறியாத பிரபுவாக இருந்தார் (ப்ரபு:) பிரபுக்களாயிருப்பவர் பிறர் வருத்தமறியாதவர்களாயிருப்பதையே உலகில் காண்கிறோம். பிரபுவாக இருப்பவரின் மேன்மை இருந்ததேவொழிய நீர்மை இருக்கவில்லை. அரசர்க்குரிய காரியங்களிலே ஈடுபட்டாரேயன்றி, ப்ரணயித்துவத்திலே ‘பெண்ணின் வருத்தமறியாத பெருமான்’ [நாச்.திரு.13-1] என்ற பெருமையுடனே இருந்தார்.  ‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ [திருவாய் 2-9-5] என்றபடி பல அவதாரங்களைச் செய்திருப்பினும், ஒரு பெண்பிறவியாகிலும் எடுத்திருப்பானேயாகில் பெண்பிறந்த வருத்தம் அறிவான்!

இப்படிப் பிரபுவாய் இருந்துகொண்டு இவர் செய்தது என்னவெனில், தனது தேஹத்தைத் த4ரித்துக் கொண்டதே [தா4ரயதாத்மனோ தே3ஹம்; ] ஆகும். பிராட்டியைப் பிரிந்த ராமன் கடலிலே புக்கு இறந்தார் என்ற பெருமையன்றி இன்னமும் தனது தே3ஹத்தைத் த4ரித்து நிற்கிறாரே! நித்யமான ஸ்வரூபமும் அல்லதே இந்த அவதாரம். ராமபிரான் தன் தே3ஹத்தை ப்ரகிருதி தே3ஶத்தின் ஸம்பந்தமற்ற பரமபத3த்திலே வைத்து, [ஆதியஞ்சோதி உருவை அங்குவைத்து இங்குப்பிறந்த; திருவாய்: 3-5-5] என்கிறபடியே இங்குப் பிறந்தவனன்றோ! ‘மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே’ [திருவாய்: 5-4-3] என்று பரத்3ரவ்யமாய் நினைத்திருக்கிறாரோ? அவர்தான் ஸ்வதந்த்ரராயிற்றே! ஒருவேளை தம்முடம்பு தம்மதோ, பக்தர்களுடையதன்றோ! [ந தே ரூபம்  ப4க்தாநாம்; ஜிதந்தே; 1-5] என்ற ஸந்தேஹம் வந்திருக்குமோ? அப்படியானால் பிராட்டியான ப4க்தைக்காகவன்றோ? அவளுக்காகாதபின், இன்னும் ஏன் தம்முடம்பைத் த4ரித்துக் கொண்டிருக்கிறார்? உடம்பைப் போக்கிக்கொள்ள வழிதெரியாமல் இருக்கிறாரோ? ஶோகம் என்னும் நெருப்பு சுட்டெரிக்க [ஶோகாக்3நி: . . . ப்ரத4க்ஷ்யதி; அயோ.கா.24-8] இருக்கும்போது, இன்னும் ஶரீரத்தைவிட வேறு ஸாத4நம் வேண்டுமோ?

ஸுந்தர காண்டம்

ஸர்க்கம்-21; ஶ்லோகம்-3

த்ருணமந்தரத:க்ருத்வா ப்ரத்யுவாச ஶுசிஸ்மிதா |

நிவர்த்தய மநோ மத்த: ஸ்வஜநே ப்ரீயதாம் மந:||

तृणमन्तरत: कृत्वा प्रत्युवाच शुचिस्मिता।

निवर्तय मनोमत्त: स्वजने प्रीयतां मन:।।

பொழிப்புரை: தனக்கும் ராவணனுக்கும் இடையில் புல்லை இட்டு, பரிஶுத்தமான புன்சிரிப்புடையவளாய் பிராட்டி பதில் சொன்னாள், ‘என்னிடத்திலிருந்து மனத்தைத் திருப்பிக்கொள். உன் மனைவியரிடத்தில் உன் மனம் ப்ரீதி கொள்ளட்டும்’

காமம் தலைக்கேறி பிராட்டியிடம் தகாத வார்த்தைகளைச் சொன்ன ராவணனிடம், மேற்சொன்ன அறிவுரையைப்  பிராட்டி சொல்வதாக அமைந்துள்ளது இந்த  ஶ்லோகம்.

பதில் வார்த்தை சொல்லுவதற்கு முன் தனக்கும் ராவணனுக்கும் நடுவே ஒரு புல்லைப் போட்டுவிட்டுச் சொன்னாள் (த்ருண மந்தரத: க்ருத்வா). இதற்குக் காரணமென்? பெரியவாச்சான் பிள்ளை இதற்கு 28 வகையான காரணங்கள் எடுத்துரைக்கிறார்.

  1. ஆபஸ்தம்ப ஸூத்திரத்தின்படி ‘அரசர்களுக்கு ஆஸனமும், அன்னமும், நீரும் அளிக்க வேண்டும்’ [ஆ.ஸூ.2-4-1]. இவை இல்லாத பக்ஷத்தில் பூமியையோ, நீரையோ, புல்லையோ கொடுக்கலாம்’ [ஆ.ஸூ.2-4-14] என்றபடி, புல்லை ஆஸனமாக இட்டாள்.
  2. அவன் நெஞ்சிலிருக்கிற ஆசைக்கு ஒவ்வாதபடி, பரபுருஷனை உபசரிப்பதுபோல புல்லையிட்டால், ‘இவள் நம்மிடம் ஆசையில்லாதவள்’ என்று அவனும் விலகிப்போவான் என்ற நம்பிக்கையுடன் புல்லை ஆஸனமாக இட்டாள்.
  3. ராவணனை அணுகவிடாமல் தடுப்பதற்காக புல்லை இட்டாள். புல்லினாலோ, நீரினாலோ கோஷ்டி வேறுபாடு உண்டாகிறது [ஸ்தம்பே3ந ஸலிலேந வா பங்க்திபே4தோ3பி4ऽஜாயதே] என்கிற நியாயத்தின்படி செய்தாள் என்றும் கொள்ளலாம்.
  4. ‘பெண்களுக்குப் பரபுருஷனை உற்றுப்பார்ப்பது, பேசுவது செய்யத்தகாதவை’ என்ற காரணத்தாலே, புல்லை முன்னே போட்டு அதை ஒருவியாஜமாக வைத்துப் புல்லோடு பேசுவதுபோல், பேசத் தொடங்கினாள்.
  5. நல்வார்த்தைகளை அஸுரர்கள் கேட்பதில்லை. அகம்பனன், மாரீசன், மால்யவான் போன்றோர் சொன்ன அறிவுரைகளையும் நீங்கள் கேட்கவில்லை. இப்போது இந்தத் துரும்பு கேட்டாலன்றோ நீ கேட்கப்போகிறாய் என்று ராவணனைப் புல்லுக்கு உபமானமாகக் கொண்டு பேசினாள்.
  6. நான் சொல்லப்போகும் அருமருந்தான என் வார்த்தைகளைக் கேட்பதற்கு, தன்னால் கடாக்ஷிக்கப்பட்ட அசேதநப்பொருளாயினும், புத்தியுடையவை ஆகுமாலே, [ஸ குலின: ஸ பு3த்3தி4மான்; விஷ்ணு புரா. 1-9-131] ராவணனைப்போலன்றிக்கே ஒரு தீங்கும் செய்யாத புல்லொன்றினை இட்டாள்.
  7. புல்லைத் தன் ஶக்தியினாலே அறிவுடையதாக்கி, இந்த ஶக்தி பெருமையைக் கண்டு ராவணன் பயந்து மீள்வனோ என்று என்கிற நினைவாலே புல்லை இட்டதாகவும் கொள்ளலாம்.
  8. அறிவற்றவனாக இருக்கிற உன்னை இந்தப் புல்லைப் போலே [த்ருணமிவ லகு4 மேநே] தாழ்ந்த பொருளாக நினைத்திருந்தாள் என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள் என்றும் கூறலாம்.
  9. ‘அந்தர’ என்னும் ஶப்33ம் நெஞ்சைக் குறிக்குமாதலால், ‘அந்தரக்ருத்வா’ என்பதற்கு, ‘நெஞ்சில் கொண்டு’ தீங்கு செய்யாத காரணத்தினால் இந்தப்புல் மேன்மை பெற்றது என்று நெஞ்சிலே நினைத்து, தீயவனான உன்னை புல்லாகக் கூட மதிக்கவில்லை என்னும்படி புல்லை இட்டாள் என்றும் சொல்லலாம்.
  10. ‘அறிவற்றவன் மிருகத்திற்கு ஒப்பானவன்’ [ஜ்ஞாநேந ஹீந: பஶுபி4: ஸமாந: நரஸிம்ஹ 16-13 ] என்றபடி, ‘நீ இந்தப் புல்லைத்தின்பாயாக’ என்று சுட்டிக் காட்டுவதுபோல், புல்லை இட்டாள்.
  11. ‘நீசனே, நீ முயலைப் போன்றவன்’ [த்வம் நீச ஶஶவத்ஸ்ம்ருத: ஸு.கா. 22-16] என்றும், ‘காட்டிலுள்ள சிங்கத்துக்கும் நரிக்கும் உள்ள வேறுபாடு இராமபிரானுக்கும் உனக்கும் உண்டு’ [யத3ந்தரம் ஸிம்ஹஸ்ருகா3லயோர் வநே; ஆர.கா.47-45] என்றும் மிருகஜாதியைச் சேர்ந்த நீ இந்தப் புல்லை உணவாகக் கொண்டு இன்புறலாம். ‘பிறன் மனைவியாயிருக்கும் நான் உனக்கேற்றவள் அல்லள்’ [நாஹமௌபயிகீ பா4ர்யா பரபா4ர்யா ஸதீ தவ; ஸு.கா 2-16 ] என்று புல்லை இட்டாள்.
  12. ‘விசித்திரமான மாலைகள், சந்தனக் கட்டைகள், அகிற்கட்டைகள், விதவிதமான வஸ்திரங்கள், தேவலோகத்தைச் சேர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை அடைவாயாக’ [விசித்ராணி ச மால்யானி சந்தனாந்யக3ரூணி ச விவிதா4நி ச வாஸாம்ஸி தி3வ்யாந்யாப4ரணானி ச; ஸு.கா 20-33 ] என்றும், ‘அழகிய புருவமுடையவளே! குபேரனிடமுள்ள ரத்தினங்களையும், தனங்களையும் நீ அடைவாயாக’ [யாநி வைஶ்ரவணே ஸுப்4ரூ ரத்நாநி த4நாநி ச; ஸு.கா. 20-33 ] என்றும், நீ வாயாலே அடுக்கினவைகளை இந்தப் புல்லுக்கு ஸமமாகவன்றோ நினைக்கிறது என்று புல்லை இட்டாள்.
  13. ‘இராமபிரானை விரும்பித் தன் தேஹத்தைத் த4ரிக்கிறாள்’ [தா4ரயத்யாத்மனோ தே3ஹம் தத் ஸமாக3ம காங்க்ஷிணீ; ஸு.கா.16-24 ] என்று இராமபிரான் வருவாரோ என்ற எதிர்பார்ப்பில் உயிர் த4ரித்திருந்தேன். ‘மயிர்முடியைக் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு விரைவில் யமனுலகு செல்லப்போகிறேன்’ [உத்33த்4ய வேண்யுத்3க்3ரத2நேந ஶீக்4ரமஹம் க3மிஷ்யாமி யமஸ்ய மூலம்; ஸு.கா. 28-17] என்றும், ஶூரனுக்கு உயிரும் புல்லுக்கு ஸமமாகும் [த்ருணம் ஶூரஸ்ய ஜீவிதம்] என்றபடி புல்லை இட்டாள்.
  14. ‘ரத்னங்களின் கூட்டங்கள் நிறைந்த இந்த இலங்கை, உன் ஒருவனுடைய தவறாலே விரைவில் அழியப் போகிறது’ [லங்கா ரத்னௌக4ஸங்குலா அபராதா4த் தவைகஸ்ய நசிராத்3 விநஶிஷ்யதி; ஸு.கா. 21-12 ] என்று உன் குற்றத்தாலே இலங்கை அழியப்போகிறது. இந்தப் புல்லைக் கொண்டு ஒரு குடிசையைக்கட்டிகொள் என்று பரிஹாஸ பு4த்3தி4யினால் சொல்வதுபோல் புல்லை இட்டாள்.
  15. ஒரு த்ருணமாகத்தோன்றும் இந்தச் சிறு தாவரம், கப்பும் கிளையுமுள்ள ‘உலபம்’ என்கிற கொடியாகப் படரும் நியாயத்தாலே, [த்ருணோலப] த்ருணத்திற்கு இடமான இந்த ஶ்லோகத்தாலே ‘உன் மனதை உன் மனைவிமாரிடம் திருப்பு’ என்று சுருக்கமாகச் சொல்லி, உலபத்திற்கு ஒப்பாக மேல்வரும் ஶ்லோகங்களில் உனக்கு மேன்மேலும் உபதேஶிக்கப்போகிறேன் என்று பொருள் படுமாறு புல்லை இட்டாள்.
  16. ‘ராமனோடு நட்பு கொள்ளவேண்டும் என்று நீ எனக்கு உபதேஶிக்கிறாயே, ஒருவேளை இராமன் என்னை ஏற்றுக்கொள்வானோ?’ என்கிற ஸந்தேஹம் ராவணன் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் என்று எண்ணி, ‘கடலிலே இந்தத் துரும்பைப் போட்டால், எவ்வாறு அது கரையிலே ஒதுக்கப்படுமோ, அவ்வாறு குணக்கடலான இராமனிடத்தில் உன் குற்றம் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கிவிடும் என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.
  17. அந்தரத: க்ருத்வா என்பதை ‘நடுவுலிருந்து எடுத்து வெளியே போட்டு’ என்று பொருள் கொண்டால், எனக்கும் உனக்கும் நடுவே கிடந்த துரும்பை எடுத்துப்போட்டதுபோல், பொறாமையையும், கோபத்தையும் வெளித்தள்ளி [ஈர்ஷ்யா ரோஷௌ ப3ஹிஷ்க்ருத்ய; அயோ.கா. 27-7] தாய் தந்தையர் போலுள்ள எங்களிடம் சேரவொட்டாமல் செய்கின்ற காமம், வெகுளி இவற்றைத் தள்ளி இராமபிரானின் திருவடியை அடைவாயாக என்று சொல்லும் வண்ணம் புல்லை இட்டாள்.
  18. ‘குடியிருப்பை விரும்பினாயாகில், கோரமான முடிவை விரும்பாதிருந்தாயாகில், நீ இராமபிரானை நண்பனாகக் கொள்வது தக்கது’ [மித்ரமௌபயிகம் கர்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா। வத4ஞ்சா நிச்ச2தா கோ4ரம்; ஸு.கா. 21-19 ] என்று சொல்லி, இந்தப் புல்லைக் கவ்வி, அதாவது கீழே விழுந்து இராமபிரானின் திருவடிகளில் ஶரணாகதி செய்து, வாழ்ந்து போ என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.
  19. துரும்பிலும் இருப்பானாய், தூணிலும் இருப்பானான ஒருவன் ஆகையினாலே, துரும்பைத் தூணாக்கி, அதனின்று ராகவஸிம்ஹத்தை வரச்செய்து, அன்று இரணியன் மார்வத்தைக் கீண்ட ஆளரியாய் தீங்கு நினைத்த நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சொல்வதுபோலே புல்லை இட்டாள்.
  20. புல், மண்ணாங்கட்டி முதலியவற்றை முன்னே எறிந்து ப்ரதிஜ்ஞை செய்வது உலக வழக்கம். அதுபோலவே, துரும்பை எறிந்து, ‘நீரை வற்றச்செய்யும் ஸூரியனைபோலே, லக்ஷ்மணனுடன் கூடிய இராமன் உன் உயிரை வற்றச்செய்வான்'[க்ஷிப்ரம் தவ ஸ நாதோ2 மே ராம: ஸௌமித்ரிணா ஸஹ। தோயமல்பமிவாதி4த்ய: ப்ராணாநாதா3ஸ்யே ஶரை: ஸு.கா. 21-83] என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள்.
  21. க்ருதி சே22நே என்ற தா4துவின்படி, ‘க்ருத்வா’ என்பதற்கு ‘கிள்ளி’ என்று பொருள் கொண்டு, எப்படி இந்தப் புல்லை கிள்ளினேனோ அதேபோல், உன் தலையையும் கிள்ளி, எதிரிகளை அடக்கும் என் கணவர் [அபநேஷ்யதி மாம் ப4ர்த்தா த்வத்த: ஶீக்4ரமரிந்த3ம: ஸு.கா. 21-28] உன்னிடமிருந்து விரைவிலேயே மீட்டுச் செல்வார் என்கிறபடி, புல்லை இட்டாள்.
  22. உயர்ந்தவனைத் துன்புறுத்தும் தாழ்ந்தவனுடைய அங்கம் அழிக்கத்தக்கது என்று ஶாஸ்திரம் சொல்லுகையாலே, வாமனாவதாரத்தில் ஶுக்ரனின் கண்ணைப் புல்லால் கீண்டியதுபோல், [சுக்கிரன் கண்ணால் துரும்பால் கிளறிய; பெரியாழ்வார் திரு.1-8-7], ஸீதையைப் பார்த்து, ‘உன் திருமேனியில் எந்தெந்த அவயங்களைக் காண்கிறேனோ அங்கெல்லாம் என் கண் ஈடுபடுகின்றது’ [யத்3யத் பஶ்யாமி தே கா3த்ரம் ஶீதாம்ஶுஸத்3ருஶாநநே। தஸ்மிந் தஸ்மிந் ப்ருது2ஶ்ரோணி சக்ஷுர் மம நிப3த்4யதே।। ஸு.கா. 20-15] என்று சொன்ன உன் கண்ணை இந்தத் துரும்பால் கலக்குகிறேன் என்னும் கருத்தாலே புல்லை இட்டாள்.
  23. காகாஸுரன் என்னைத் துன்புறுத்தியபோது, இராமபிரான் ஒரு புல்லை எடுத்து ப்ரும்மாஸ்திரத்தை உச்சரித்தார் [ஸ த3ர்ப4ம் ஸம்ஸ்தராத்3க்3ருஹ்ய ப்3ராஹ்மேணாஸ்த்ரேண யோஜயத்; ஸு.கா. 38-30]. அந்தத் துரும்பு அக்காக்கையின் வலது கண்ணை வாங்கியது [ஹினஸ்தி ஸ்ம ஸ த3க்ஷிணம்; ஸு.கா. 38-37]. அதுபோலே, இத்துரும்பை இட்டு உன் கண்ணை இராமபிரான் கலக்கும்படி செய்கிறேன் என்று புல்லை இட்டாள்.
  24. நர நாராயண அவதாரத்தின் போது, நாராயணன் டம்போத்பவன் என்ற அஸுரனை ஒரு துரும்பால் கொன்றான். இந்தவிருத்தாந்தத்தைச் சுட்டிக்காட்டி, புல்லை இட்டாள்.
  25. என் கற்பு என்கிற நெருப்பிலே இந்தத் துரும்பைப் போட்டு மூட்டி எழுகின்ற கனலிலே உன்னைச் சுட்டெரிக்கிறேன் என்று சொல்லுமாபோலே, புல்லை இட்டாள். ‘ஸீதையின் பாதிவ்ரத தேஜஸ்ஸாலே எரிந்துபோன இந்த இலங்கையைப் பார்’ [ஸீதாயாஸ் தேஜஸாம் த3க்3தா4ம்; ஸு.கா. 51-36 ] என்று பின்வரப்போகிற நிகழ்வுகளை முன்னமேயே உணர்த்தும் வகையாக அமைந்த விளக்கம் இது. மேலும், ‘சாம்பலாக்கத் தக்க பத்துத்தலையனே! இராமபிரானின் ஆஜ்ஞை இல்லாததால், என் பாதிவ்ரதாக்நியால், உன்னைச் சுட்டெரிக்கமால் இருக்கிறேன்’ [ந த்வா குர்மி த3ஶக்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ தேஜஸா; ஸு.கா.22-20] என்று சொல்லி, நான் நினைத்தால், இப்பொழுதே உன்னை எரித்துவிடுவேன் என்று புல்லை இட்டாள்.
  26. ‘க்ருதி சே23நே’ என்கிற தா4துவிலுருந்து ‘க்ருத்வா’ என்ற பத3ம் வந்ததாகக் கொண்டால், புல்லை நடுவே கிள்ளி என்று பொருளாகிறது. இந்தத் துரும்பை எப்படி விரல்நுனியால் கிள்ளிப் போடுகிறேனோ [அங்கு3ள்யக்3ரேண தாந் ஹந்யாம்; யுத்.கா.18-24]அவ்விதமே, உன் தலையையும் கிள்ளி எறிவேன் [பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து; திருப்பாவை 13] .

பதிலுரைத்தாள் (ப்ரத்யுவாச) என்று சொல்வதில், ப்ரதி என்னும் பதத்திற்கு, பதில் (உத்தரம்) சொல்லுதல், மறுவார்த்தை சொன்னாள் (மறுத்துரைத்தாள்) என்றும், ப்ரதி என்பதை ப்ரதிகூலம் என்று கொண்டு, பதிலுரைத்தாள் என்றும் சொல்லலாம். வச-பரிபா4ஷணே என்ற தா4துவின்படி, உவாச என்பதை பரக்க பரிபா4ஷணம் செய்தாள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை மட்டும் சொல்லாமல், விஸ்தாரமாக ஸாம, தா4ந, பே34, த3ண்ட என்கிற நால்வகை உபாயங்களையும் முயன்று அறிவுரை சொன்னாள். ‘நல்லோர்களின் தருமத்தைக் கவனிப்பாயாக. நல்விரதங்களை நன்றாக அநுஷ்டிப்பாயாக. அரக்கனே, உன் மனைவியைப்போலவே மற்றவரின் மனைவியரும் ரக்ஷிக்கத்தக்கவரன்றோ?’ [யதா2 தவ ததா2ந்யேஷாம் தா3ரா ரக்ஷ்யா நிஶாசர; ஸு.கா.21-7] என்று ‘ஸாமம்’ என்னும் உபாயத்தைப் பற்றி நின்றும், ‘உன்னால் வஞ்சிக்கப்பட்ட ஜனங்கள் தெய்வச்செயலாலே இக்கொடியவன் இந்தத் துன்பத்தை அடைந்தான் என்று ஆனந்தம் அடைந்து, உன்னைப் பாவி என்று சொல்லப்போகிறார்கள்’ [ஏவம் த்வாம் பாபகர்மாணம் வக்ஷ்யந்தி நிக்ருதா ஜநா: । தி3ஷ்ட்யைதத் வ்யஸநம் ப்ராப்தோ ரௌத்3ர இத்யேவ ஹர்ஷிதா:।। ஸு.கா 21-14] என மனமாறுபாடு பிறக்கும்படி பே4த வார்த்தைகளைச் சொல்லியும், ‘இந்திரியங்களை அடக்கியவனாய், என்னை இராமபிரானிடம் சேர்க்கக் கடவாய்; அந்த இராமபிரான் தருமமறிந்தவர்; ஶரணாகதரிடம் வாத்ஸல்யமுடையவர்; அவரோடு நட்பு உண்டாகட்டும்’ [மாஞ்சாஸ்மை ப்ரயதோ பூ4த்வா நிர்யாதயிநுமர்ஹஸி; ஸு.கா. 21-22, விதி3த: த4ர்மஜ்ஞ: ஶரணாக3த வத்ஸல: தேந மைத்ரீ ப4வது; ஸு.கா.21-20] என்று ஞானதா4நம் செய்தும், ‘வேறுவிதமாகச் செய்தால் மரணமடைவாய்’ [அந்யதா2 த்வம் ஹி குர்வாணோ வத4ம் ப்ராப்ஸ்யஸி; ஸு.கா. 21-23] என்றும், ‘உன் உயிரை அம்புகளால் எடுக்கப்போகிறார்’ [ப்ராணாநாதா3ஸ்யதே ஶரை: ஸு.கா. 21-33] என்றும் தண்டம் சொல்லியும், இம்மாதிரி ஸாம, தா4ந, பே4த த3ண்டமெனும் நாலு உபாயங்களையும் பின்பற்றி வார்த்தை சொன்னாள்.

இத்தோடல்லாமல், இதைச் சொல்லுகிறபோது இருந்த முகமலர்ச்சி என்னே! பரிஶுத்தப் புன்னகை உடையாள் (ஶுசிஸ்மிதா).

1) எதிரி தருமம், வீரியம், பலம் இவற்றுள் கனத்தவனாக இருந்தாலன்றோ கோபத்தைக் காட்டுவது? தன் அநியாயத்தாலே தானே அழியப்போகிற க்ஷுத்3ரன் என்று நினைத்து சிரித்தாள்.

2) அரசர்களும் சிரித்துக்கொண்டே தண்டனை வழங்குவதுபோல், ராஜ த4ர்மம் அறிந்தவளாகையால் [அபி4ஜ்ஞா ராஜத4ர்மாணாம்; ]  ஜநகராஜ புத்ரியும், ராஜமஹிஷியுமாயிருப்பவள் ஆதலால், சிரித்துக்கொண்டே சொன்னாள்.

3) ராவணன் தருகிறேன் என்ற த4நம், தா4ந்யம், ரத்தினம் முதலியவற்றை எண்ணி அவற்றிலுள்ள பிரியத்தால், ஆசையுடன் சிரித்தாளோவென்னில், இந்தப் புன்னகை பொருளாசையால் ஏற்பட்டதன்று. வைராக்கியத்தால் ஏற்பட்ட பரிசுத்தப் புன்னகை.

4) ‘தவத்தாலும், பலத்தாலும், வீரத்தாலும், த4நத்தாலும் இராமன் என்னையொத்தவன் அல்லன்’ [ந ராமஸ்தபஸா தே3வி ந ப3லேன ந விக்ரமை: । ந த4நேன மயா துல்ய: ஸு.கா. 21-30] என்று சொல்லுகின்ற நீயோ அவர்கள் இருவரும் இல்லாத நேரத்திலன்றோ என்னைக் கவர்ந்தது? இந்தச் செயல் நீ எவ்வளவு பலமற்றவன் என்பதைக் காட்டவில்லையோ என்றவாறு புன்னகை புரிந்தாள்.

5) இன்னும் சில நாட்களில் காக்கையும், கழுகும் கவ்வும்படி கிடக்கப்போகும் நீ இன்று, ‘ராமன் உயிரோடு இருக்கிறானோ இல்லையோ’ [ஶங்கே ஜீவதி வா ந வா; ஸு.கா. 20-26] என்று கேட்பது மிகவும் சிரிப்பிற்கிடமாய் இருக்கிறது என்று தோற்றச் சிரித்தாள்.

6) இந்த இலங்கையையும், அரசுப்பதவியையும் விபீஷணருக்குத் தந்து முடிசூட்டினான் இராமன். இதனை அறியாமல், இந்தச் செல்வங்கள் அனைத்தும் உன்னுடையதென்று [ருத்3தி4ம் மமாநுபஶ்ய த்வம் ஶ்ரியம் ப4த்3ரே; ஸு.கா.20-25 ] என்கிற ப்4ரமையில் இருக்கிறாய் போலும் என்று தோற்றச் சிரித்தாள்.

7) ஸர்வலோக நாயகனான அவருடைய தோள்களில் சாய்ந்திருக்கும் என்னைப் பார்த்து, ‘என்னையும் அநுபவித்துக்கொள்’ [மாம் ச பு4ங்க்ஷ்வ; ஸு.கா 20-33] என்று நீ பிதற்றுவது சிரிப்பிற்கிடமாயிருக்கிறது.

8) காகுத்தன் க்ஷேமமாக இருந்தாராகில், இந்த உலகத்திக் கோபத்தால் ஏன் இன்னும் எரிக்காமலும், என்னை மீட்காமலும் இருக்கிறார் என்று வருந்தியிருந்த ஸீதையிடம், அநுமன் இராமபிரானின் க்ஷேமத்தைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியால் சிரித்தாள்.

இப்படிப் புன்சிரிப்பு சிரித்துச் சொன்ன வார்த்தை என்ன? செய்யத்தகாததைக் கைவிட்டு, செய்யவேண்டியதைச் செய் என்பதாம். ‘உன் மனத்தை என்னிடமிருந்து திருப்பு. உன் மனைவியரிடம் உன் நெஞ்சு ப்ரீதி அடையட்டும்.’ நெஞ்சை அங்கும் இங்கும் அலைக்கழிக்கவிடாமல் மீட்பாயாக [மநோ நிவர்த்தய]. மனமாகிய குதிரையை அடக்கம் என்கிற கடிவாளமிட்டு மீட்பாயாக. ‘அநுகூலமான நெஞ்சே ஆத்மாவுக்கு உறவினன். ப்ரதிகூலமான நெஞ்சு ஆத்மாவுக்கு எதிரி’ என்கிற [ஆத்மைவ ஹ்யாத்மநோ ப3ந்து4ராத்மைவ ரிபுராத்மந: கீதை 6-3] கீதா வாக்கியத்தின்படி, என்றும் சத்துருவாய் இருக்கும் உன் நெஞ்சை ஜயிக்கப்பார். ஐந்துதலை நாகம் [பஞ்சாஸ்யாமிவ பந்நகீ3ம்; ஸு.கா.51-23] போன்று உன் அழிவுக்குக் காரணமான என்னிடமிருந்து உன் நெஞ்சைத் திருப்பு. ‘அறிவுகெட்டவனை அயலார் மனைவியர் அவமானம் செய்துவிடுகின்றனர்’ [நயந்தி நிக்ருதிப்ரஜ்ஞம் பரதா3ரா: பராப4வம்; ஸு.கா. 21-9] என்கிறபடி என்னிடம் பாயும் உன் மநப்ரவாஹத்தை மடையடைத்துவிடு.

(ப்ரீயதாம்) ப்ரீதியடையட்டும் என்கிற சொல் உன் மனைவியருடன் (ஸ்வஜநே) என்ற பத3த்துடன் இணைந்தும், அல்லது மனம் (மந: ) என்ற பத3த்துடன் இணைந்தும் இரண்டு விதமாகப் பொருள் கொள்ள ஹேதுவாக இருக்கிறது. ‘உன்னைப் பார்த்தபின்பு, என் மனைவியரிடம் ப்ரீதி கொள்ளவில்லை’  [ஸ்வேஷு தா3ரேஷு ரதிம் நோபலபா4ம்யஹம்; ஸு.கா. 20-30] என்கிற நிலையை மாற்றிக்கொண்டு, ‘உன் மனைவியரிடமே இன்புறுவாயாக’ [ஸ்வேஷு தா3ரேஷு ரம்யதாம்; ஸு.கா. 21-8] என்று ஒரு பொருளைக் கொள்ளலாம். ‘நான் ப்ரீதியடைந்தாலும் என் நெஞ்சம் ப்ரீதியடைகிறதில்லை’ என்றால், நீ ப்ரீதி அடைந்தால் உன் நெஞ்சமும் ப்ரீதியடையட்டும் என்று அநுக்ரஹிக்கிறாள்.

ஆக, இந்த ஶ்லோகத்தால், தனக்குத் துன்பமிருக்கும்போதும் பிறர்துன்பம் பொறுக்கமாட்டாத பிரட்டியுடைய ஸௌலப்யமும் கருணையையும் சொல்லுகிறது.

ஸுந்தர காண்டம்

ஸர்க்கம்-21; ஶ்லோகம்-19

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா|

வத4ம் சாநிச்ச2தா கோ4ரம் த்வயாஸௌ புருஷர்ஷப4: ||

मित्रमौपयिकं कर्तुं राम: स़थानं परीप्सता।

वधं चानिच्छता घोरं त्वयासौ पुरुषर्षभ:।।

பொழிப்புரை:  குடியிருப்பை விரும்புகிறவனாயும், பயங்கர சாவையும் விரும்பாதவனாயிருக்கிற உன்னாலே இந்த புருஷஶ்ரேஷ்டரான இராமபிரான் நண்பராகச் செய்து கொள்ளத் தக்கவர்.

கீழ்ப்பாட்டில் ஹித வர்த்தைகளைச் சொல்லப்புகுந்த பிராட்டியார்  மேன்மேலும் ராவணனுக்கு நல்வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினார்.

‘ராமபிரானிடம் நட்பு செய்தலை உபாயமாக்  கொள்’ (மித்ரமௌபயிகம் கர்தும்)

1.ராமபிரானிடம் நீ விரோதம் செய்து கொண்டு உனக்கு ஒரு நன்மையும்  ஆகப்போவது இல்லை. அவரோடு உறவு செய்து கொள்வதே உனக்கு நன்மை தரக்கூடியது.

  1. பரிபூர்ணமாக அபசாரப்பட்ட நீ அவரது திருவடிகளிலே ஶரணாகதி செய்வதே உசிதம். ‘மித்ரம் கர்தும்’ என்று நண்பணாகச் செய்து கொள்ளச் சொல்லியிருக்க ஶரணம் புகுதலைச் சொல்வானென்? அடுத்த ஶ்லோகத்தில், ‘அவர் தருமமறிந்தவராகவும், தன்னை ஶரணமடைந்தாரிடம் அன்புடையவராகவும் பெருமை பெற்றவர். அவரோடு உனக்கு நட்பு உண்டாகட்டும்’ [விதி3த: ஸஹி த4ர்மஜ்ஞ: ஶரணாக3த வத்ஸல:। தேந மைத்ரீ ப4வது தே ஸு.கா. 21-20 ] என்று அப்பெருமான் ஶரணாகதரிடம் வாத்ஸல்யமுடையவர். நீயும் அவரை ஶரணமடைவாயாக என்று பொருள் பட ‘மைத்ரீ’ என்கிற ஶப்3தத்தைப் ப்ரயோகிக்கிறாள்.
  2. [அர்ச்சநம், வந்த3நம், தா3ஸ்யம், ஸக்2யம், ஆத்மநிவேத3நம் [பா43வதம் 7-5-23] என்று நட்பை பக்தியின் வகையாகச் சொல்லியதாலே, ஸாத்3ய ப4க்தியாகிற ப்ரபத்தியிலும் அடங்குமன்றோ நட்பு? ஶரணமடை என்று நேரிடையாகச் சொல்லாமல், நட்புகொள் என்று பிராட்டி மட்டுமல்லாமல், ராமபிரானும் நட்பினை உயர்வாகச் சொல்லியிருக்கிறான். விபீ4ஷண ஶரணாக3தியின் போது, நண்பணாக வந்தவனை ஒருபோதும் கைவிடேன் [மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3 ] என்றும், ஸுக்ரீவனை [ஸகா2 ச மே ]என்றும், குஹன் என்னும் ஓடக்காரனை [ஆத்மஸம: ஸகா2; யுத்.கா. 128-4] என்றும் அருளிச் செய்தாரன்றோ?
  3. வணங்காமுடியாய் [ந நமேயம்; யுத். கா. 36-13 ] என்றிருக்கிற அரக்கனை ஶரணம் புகு என்றால், இணங்கமாட்டான் என்பதனால், ‘நட்பு கொள்வாய்’ என்று அறிவுரை சொன்னாள்.
  4. ஆபத்திலிருந்து ரக்ஷிக்கிறவன் நண்பன் [மிதாத் த்ராயத இதி மித்ரம் என்பது மித்ர ஶப்தத்தின் வ்யுத்பத்தி ] ஆகையால், இவரை நண்பராகக் கொள்வது உனக்கு உசிதம் என்றாள்.
  5. உபாயமாக (ஔபயிகம்) அதாவது உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதே உனக்கு உபாயம். ஒருவேளை நான் நட்பு பாராட்டியும், அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையானால் என்செய்வது என்ற ஸந்தேஹம் உன் மனத்தில் எழுந்தால், ரமிக்கச் செய்பவன் ராமன் [ரமயதீதி ராம:] என்பதை மறந்துவிடாதே. வரம்பில்லாமல் ஜனங்களுடன் ஒருவனாய்க் கலந்து பரிமாறும் ஸௌஶீல்ய குணத்தாலே, ஓர் ஓடக்காரன், குரங்கு, காக்கை என்று வாசியில்லாமல் ரமித்து நட்புறவு கொள்பவர். பிரமனின் பேரனாகவும், வேதமோதியவனாகவும் இருக்கக்கூடிய உன்னைக் கைவிடமாட்டார்.
  6. ராவணாயிருந்தாலும் அழைத்து வா [யதி3 வா ராவண: ஸ்வயம் ஆநயைநம்; யுத்.கா. 18-35 ] என்று சொல்லக்கூடியவர்; எல்லா ஜீவராஶிகளுக்கும் நன்மை செய்பவன் என்று தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவர் [ஸுஹ்ருத3ம் ஸர்வ பூ4தாநாம்; கீதை 5-29 ]; ராமனை விரோதித்துக் கொண்டால், நீ இறப்பது நிச்சயம், ‘இந்த லங்கையும், ராக்ஷஸர்களும், நீயும் அழிந்துவிட்டீர்கள்’ [நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண: ஸு.கா. 43-25] ஆகவே இந்த ஊரும், உறவினரும், உன் உயிரும் உன்னிடமே தங்கியிருக்கச் செய்து ரமிக்கவல்லவர் அவர்.[ரமயதீதி ராம:] என்று முன்னமே சொன்னபடி.

குடியிருப்பை விரும்புவாயானால் (ஸ்தா2நம் பரீப்ஸதா)

  • அதாவது, இங்கே ஸ்தா2நம் என்பது இருப்பிடமான லங்கா ராஜ்யத்தைக் குறித்தது. உன் தம்பி விபீ4ஷணனுக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுக்கப்போகிறார். [அபி4ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம்  விபீ4ஷணம்; பா3.கா 1-85 ] அப்படி செய்யவிடாமல், நீயே லங்கா ராஜ்யத்தை அநுபவிக்க ஆசையுடையவனாய் இருந்தால், என்ற பொருளில் சொல்லப்பட்டது.
  • ஸ்தா2நம் என்ற சொல்லை நிலைத்து நிற்பது என்கிறபடி பொருள் கொண்டால், இப்படி நீ நின்ற இடத்திலிருந்தே இராமனை ஶரணடைவாயாக. மூன்று உலகும் சுற்றித் திரிந்து [த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய; ஸு.கா. 38-33 ] இறுதியில் வேறு போக்கிடமின்றி இராமன் திருவடிகளில் வீழ்ந்த காகம் போலல்லாமல் (ஸ்தா2நம்) நின்ற இடத்திலிருந்தே ஶரணடைவாயாக.
  • ஸ்தா2நம் என்பது ஸம்ஸ்தா2நத்தையும் (கட்டுக்கோப்பு) குறிக்கும். தேர், யானை, குதிரை, காலாள் என்கிற சதுரங்க ஸேனையுடன் கூடிய நீ இந்தநிலை மாறாமல் கட்டுக்கோப்பு குலையாமல் இருக்க வேண்டின், என்றொரு பொருள்படும்.
  • ஸ்தாநம் என்பது அதி4ஷ்டா2நத்தையும் (ஆஶ்ரயம்) குறிக்கும். அரசன், மந்திரி, நண்பர்கள், அரண்மணை, பொக்கிஷம், ஸேனை முதலியவை உனக்கு ஆஶ்ரயமான ராஜ்யத்தின் அங்கங்கள். இவை அழியாமல் இருக்க வேண்டின், என்றொரு பொருளும் கொள்ளலாம்.
  • ஒருவருமறியாமல் ஓடி ஒளிந்துவாழ ஆசைப்பட்டாலும், உன்னை உயிரோடு விட்டாலன்றோ ஒளிந்து கொள்வது? உயிர்வாழ வேண்டின், என்றொரு பொருளும் கொள்ளலாம்.

உன்னை உயிரோடு விட்டாலன்றோ மற்றைச் செயல்களைச் செய்வது? நீ கோ4ரமான முடிவை எதிர்கொள்வாய் (வத4ஞ்சாநிச்ச2தா கோ4ரம்). கோ4ரமான சாவை நீக்கி உலகத்தாரைப்போலே இயற்கையாகச் சாகும் காலத்தில் சாகவேண்டியிருப்பாயாகில், அவரை ஶரணம் பற்ற வேண்டும். அப்படியில்லை எனில், தன் தூதனை இலங்கைக்கு அனுப்பி, அஶோகவநத்தை அழித்து, அரக்கர்களைக் கொன்று, லங்காபுரிக்குத் தீயிட்டு, போரில் ஸேனை முழுவதையும் வென்று, உன் தலைகளை உதிர்த்து, உன் மனைவியரிடம் சென்று ரத்தம் தோய்ந்த உன் உடலைக் காட்டு என்று உன்னைத் திருப்பி அனுப்பி, இம்மாதிரி சித்திரவதை செய்து உன்னைக் கொல்லப்போகிறார். இப்படிப்பட்ட கோ4ரமான வத4த்தைத் தவிர்க்க நீ ஆசைப்பட்டால் அவரை ஶரணமடைவாயாக.

ஶரணமடைவாயாக என்று சொல்லுகிறீர்களே, அவர்தான் இங்கு இல்லையே என்று கேட்பாயாகில், இதோ இங்கிருக்கிறார்; இவரை (அஸௌ) ஶரணடை என்கிறாள். ராமனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் பிராட்டி  [ராமமே வாநுபஶ்யதி; ஸு.கா. 16-25] ‘ராம, ராம என்று புத்தியாலே எப்போதும் நினைத்து’ [ ராமேதி ராமேதி ஸதை3வ பு3த்3த்4யா விசிந்த்ய; ஸு.கா. 32-11 ] என்று எப்போதும் ராமனையே தியானித்திருக்கையாலே உருவெளித்தோற்றமுண்டாகித் தனக்கு எப்போதும் அருகிலேயே இருப்பதாலே ‘இவர்’ என்கிறாள். இந்த தேவியின் மனம் அவரிடமும், அவருடைய மனம் இவளிடமும் நிலைத்து நிற்கிறது’ [அஸ்யா தே3வ்யா மநஸ்தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டி2தம்; ஸு.கா. 15-52 ] என்றும், ‘உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்; உன்னையும் என்னிலிட்டேன்’ [பெரியாழ்வார் திரு.5-4-8]என்றும் சொல்லுகிறபடியே இருவர் திருவுள்ளமும் மற்றவர் பக்கம் மாறிக்கிடக்கையாலே பிராட்டி ஏகபோகமாக காணக் குறைவில்லையன்றோ!

புருஷர் தலைவர் (புருஷர்ஷப4: ) தான் செய்த குற்றங்களைக் கண்டும் இராமன் தன்னை மன்னித்தருள்வானோ என்று ராவணன் நினைத்திருந்தால், அதற்கும் ஸமாதா4நம் சொல்வதுபோல் மேற்கொண்டு சொல்லுகிறாள். தீங்கு புரிந்தர்வர்களின் தீங்குகளை எண்ணியிருக்கும் ஸாதா4ரண புருஷன் அல்லன்; பிழையறியாத பெருமாளாகையாலே, குற்றங்களை அறியாதவர் [அவிஜ்ஞாதா; விஷ்ணு ஸஹஶ்ர நாமம்]  எனவே புருஷர் தலைவன் ஆவான். பிழைகளை அறியாதது மட்டுமன்று. அவனுக்கு தோஷமிருந்தாலும் மிக நன்று [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா. 18-3] என்றும்,  குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும் [முதல் திரு. 11] என்றும், செய்த குற்றம் நற்றவமாகவே கொள்ளும் ஞாலநாதனே [திருச்சந்த-111] என்றும் அவர் புருஷோத்தமராகிறார். பிழையை அறிபவன் அத4மன். பிழையை அறியாதவன் மத்4யமன். பிழையை நன்மையாகக் கொள்பவன் உத்தமன் ஆகிறான்.

இந்த ஶ்லோகத்தால் இவனுக்கு உபதே3ஶம் பண்ணும்படியான பிராட்டியினுடைய நீர்மையும், கருணைப்பெருமையும், இப்படிப்பட்ட இக்கருணையாலும் கரையேறமுடியாதபடி கைதவறிப்போம்படியான ராவணனுடைய பாவமிகுதியும்  சொல்லப்பட்டது.

யுத்த காண்டம்

ஸர்க்கம்-18; ஶ்லோகம்-33

ஸக்ருதே3 ப்ரபந்நாய தவாஸ்மீதி யாசதே|

அப4யம் ஸர்வ பூ4தேப்யோ 3தா3ம்யேதத்3 வ்ரதம் மம ||

सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते।

अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद्व्रतं मम।।

பொழிப்புரை: ஒரு முறையே ப்ரபத்தி பண்ணினவன் பொருட்டும்,  உனக்கு (அடியேனாய்) ஆகிறேன் என்று யாசிக்கிறவன் பொருட்டும் எல்லா பிராணிகளிடத்திலிருந்தும்  பயமின்மையைப் பண்ணிக்கொடுக்கிறேன். இது எனக்குவிடமுடியாத ஸங்கல்பம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு வந்த ஸமயம், ஸுக்3ரீவன் அந்த ஶரணாக3தியை ஏற்கக்கூடாது என்று பேசி வந்த நிலையில், பெருமாள் தன் தன்மைக்குத் தகுந்தபடி ஶரணாக3திரக்ஷண ப்ரதிஜ்ஞையைச் செய்தருளுகிறார்.  ‘நண்பனின் பா4வத்தோடு வந்த இவனை (விபீ4ஷணனை) தோஷமிருந்தாலும் கைவிடேன்’ [மித்ர பா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேத3தக3ர்ஹிதம்।। யுத்.கா. 18-3 ] என்று முன்னம் தன் தன்மையைத் தெரிவித்தார். இங்கு அதைத் தொடர்ந்து, அத்தன்மைக்கேற்ற பிரதிஜ்ஞை செய்வதால், இவ்விரண்டு ஶ்லோகங்களும் ராம சரம ஶ்லோகங்கள் எனப்படுகின்றன.

ஸஹஸா (சடக்கென) என்கிற ஶப்33த்துக்கு ‘ஸக்ருதேவ’ என்கிற ஶப்33ம் வருகையாலே, ஸக்ருதேவ ப்ரபந்நாய என்பதற்கு, ஒரு தரம் ஶரணம் புகுந்தவனுக்கு, அல்லது சடக்கென ஶரணம் புகுந்தவனுக்கு என்று இருவிதமாகவும் பொருள் கொள்ளலாம். தனது அயோக்யதையை எண்ணித் தயங்கி நிற்காமல், ஸ்வாமியினுடைய குணங்களையே முன்வைத்து சடக்கென ஶரணம் புகுதல் என்பது கூரத்தாழ்வான் நிர்வாஹம். ஒரு தரம் என்று பொருள் கொண்டால், அதற்கு எம்பார் என்னும் ஆசாரியர் விளக்கம் கூறுகிறார். இதுவரை ஸம்ஸார ஸாக3ரத்தில் மூழ்கியிருந்தவன் ஶரணாக3தி செய்த பிறகு முடிவிலாக்காலம் ப43வத3நுப4வமாகிற ப2லத்தைப் பெறப்போகிறான் என்பதாலே, ஆயுளுள்ளவரை பலமுறை ஶரணம் புகுந்தாலும், முதல்முறை ஶரணாக3தி செய்தவுடன் ப43வத3நுப4வம் பெறுவதாலே ஒரு தரம் என்று பொருள் கொள்வதில் குறையில்லை. அடுத்து, கீழ்ச்சொன்ன இரு பொருட்களையும் ஒருசேர அநுபவிக்க பராஶர பட்டரின் நிர்வாஹம் காணலாம். ஒரு தடவை என்பது ஸர்வேஶ்வரன் இவனை ஸ்வீகரிப்பதற்கு ஒரு முறையே போதுமானது என்பதைக் காட்டுகிறது. எவ்வாறு த்வயத்தை ஆயுளுள்ளவரை அதன் இனிமையின் பொருட்டு ப்ரபந்நர்கள் பலமுறை அநுஸந்தா4நம் செய்கிறார்களோ அதுபோலே இங்கேயும், ஒருதரம் ப்ரபத்தி செய்தால் போதாது என்கிற நினைவாலேயல்லாமல் இனிமை கருதிப் பலமுறை செய்யலாம் என்றும் நிர்வாஹம் செய்யலாம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு முன்பாக, இராமபிரான் அருகே இருந்த அநுமன், ஜாம்ப4வான், ஸுக்3ரீவன், லக்ஷ்மணன் முதலானோர் அவரவர் உள்ளத்தில் நினைத்திருந்ததை இராமபிரானிடம் தெரிவித்தனர். அவர் ஒவ்வொருக்கும் தக்கவாறு ஸமாதா4நம் சொல்கிறார் இராமபிரான்.

‘அவன் ஶரணமடைந்தது தாழ்ந்த பலனைக் கருதியன்றோ? அரசை வேண்டி புத்தி பூர்வமாகவே இங்கு வந்தான்’ [ராஜ்யம் ப்ராத்த2யமாநஶ்ச பு3த்3தி4பூர்வமிஹாக3த: யுத்.கா. 17-65] என்று அநுமன் சொன்னான்.

இதற்கு ஸமாதா4நமாக இராமன் சொன்னவை.

1) உனக்கேயாவேன் (தவாஸ்மீதி யாசதே) என்னைத் தவிர வேறு பலனைக் கருதாதவனாகவே வந்தான் என்கிறார். தூதனைக் கொல்லலாகாது என்று எடுத்துக்கூறித் தன்னை அன்று ராவணன் ஸபையிலே காத்துக்கொடுத்த விபீ4ஷணனுக்குக் கைம்மாறாக ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும் என்ற கருத்திலே ‘ராஜ்யத்தை வேண்டி வந்தான்’ என்று அநுமன் சொன்னானேவொழிய, விபீ4ஷணன் தன் வாயாலே ராஜ்யம் வேண்டும் என்று சொன்னானொ? ‘உன்னாலல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ [திருவாய் 5-8-3] என்று நம் ஶடகோபன் சொன்னாற்போலே ‘பெண்டு பிள்ளைகளை விட்டு’ [த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச; யுத்.கா.17-14 ] என்றும், ‘என்னால் லங்கையும், செல்வங்களும், நண்பர்களும் விடப்பட்டனர். என் உயிரும் அரசும் செல்வமும் தேவரீரிடத்திலேயே உள்ளது’  [பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த4நாநி ச । ப4வத் க3தம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகா2நி வை।। யுத். கா. 19-5] என்றும் மற்ற பலன்கள் அனைத்தையும் விட்டு, ‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத்தாய் தந்தையும்’ [திருவாய் 5-1-8]ஆகிய எல்லாம் இராம்பிரானே என்று நினைத்து வந்தவனன்றோ விபீ4ஷணன் என்கிறார்.

2) ‘உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ [திருப்பாவை 29] என்று கைங்கர்யத்தையன்றி வேறு பலனை அறியாதவனாய் வந்தான்.

3) உனக்கேயாவேன் என்று சொல்லி வந்தது, ‘எனக்காக ஆகேன், ராவணனுக்கும் ஆகேன்’ என்று பொருள்படும்படி, ஸ்வாதந்த்ரியமும், பிறருக்கு பாரதந்த்ரியமும் இல்லாமல், எனக்குப் பரதந்திரனாயிருப்பதை மட்டுமே நினைத்து வந்தவன்.

4) விபீ4ஷணன் உனக்கேயாவேன் என்றான். அதற்கு நாமும், ‘போகம் நீ எய்திப் பின்னும்  நம்மிடைக்கே போதுவாய்’ [பெரிய திருமொழி 5-8-5] என்றும், ‘இலங்கை முடிசூடும் அரசும், அடிசூடும் அரசும் உனக்கே ஆகக்கடவது’ என்போம்.

5) ஆத்மாவிடம் ஶேஷத்வம் இயற்கையாகவே உள்ளது. ஆத்மாவிடம் உடைமையாயிருக்கும் தன்மையும் இயற்கையிலே உள்ளது. இப்படி ஆத்மஞாநம் வந்த அளவிலே ஶரணாக3திக்குப் பாத்திரமானவன்.

6) உபாயமாக மட்டும் என்னை வரித்தது மட்டுமின்றி, பரமப2லமாகிற கைங்கர்யத்தையும் சேர்த்து அபேக்ஷித்தான்.

7) ‘நாலுவகைப்பட்ட ஜனங்கள் என்னிடம் பக்தி செய்கிறார்கள்’ [சதுர்விதா44ஜந்தே மாம் ஜநா: கீதை 7-16] என்கிறபடி, நாலு ப2லத்துக்கும்  உபாயமான என்னைப் பற்றும்போது, உபேயங்களில் மற்ற மூன்றையும் விரும்பாமல், பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையன்றோ விரும்புகிறான்.

8) ரிஷிகளைப்போலே ஶரீர ரக்ஷணத்திற்காக மட்டும் [பரிபாலய நோ ராஜந் வத்4யமாநாந் நிஶாசரை: ஆர.கா. 6-19] என்று கேட்காமல், ‘மூன்று உலகும் சுற்றிவிட்டுக் காப்பார் வேறு எவருமிலர் என்று அறிந்து என்னிடம் ஶரண் புகுந்த காகாஸுரன்’ [த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶ்ரணம் க3த: ஸு.கா. 38-34 ] போலன்றியும் ஸ்வரூபத்துக்குத் தக்கப2லனான என்னையன்றோ ஶரண் புகுந்தது?

9) ‘தவாஸ்மீதி ச’ என்னுமிடத்தில், ‘ச-காரம்’ இருப்பதால், பிராட்டியையும் சேர்த்து மிதுன விஷயத்திலேயே கைங்கர்ய ப்ரார்த்தனை இருக்கிறது என்கிறார்.

10) ‘உங்களைப் போலே மரத்துக்கு மரம் தாவும் குரங்கு ஜாதியில் இல்லாமல், வேதமறிந்த ப்ராம்மணனாக அல்லவோ இருக்கிறான்’. ‘ஶ்ரத்தை எனப்படும் பிராட்டியின் சேர்த்தியால் பெருமான் தேவனாகிறான்’ [ஶ்ரத்34யா தே3வோ தே,வத்மஶ்நுதே; யஜுர். காடகம் 3-3-9-12 ], ‘ஜகந்மாதா என்றும் இருப்பவள்; பிரானை ஒருகணமும் பிரியாள்’ [நித்யைவேஷா அநபாயிநீ; வி.புரா. 1-8-17] என்றபடி சகாரத்துக்குள்ளே பிராட்டியின் ஸம்பந்தமும் உண்டு என்று அறிந்து சொன்னான் என்றும் கொள்ளலாம்.

இவ்வளவு பக்ஷபாதம் அவனிடமிருந்தால் அவனுக்கு என்ன செய்யப் போகிறீர்? எனில், ‘அப4யம் அளிக்கப் போகிறேன்’ (அப4யம் 3தா3மி) என்கிறார். அதற்குப்பின் அவன் ப4யமற்றவனாகிறான் [அத2 ஸோப4யங்க3தோ ப4வதி; தைத். ஆ.7 ] ந-ப4யம் என்பது அப4யம் என்று வ்யுத்பத்தி சொல்லியிருப்பதால், ‘நஞ்’ என்கிற உபஸர்க3த்துக்கு வேறுபாடு, இல்லாமை, விரோதி4 என்கிற மூன்றுவிதமான பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன. 1. ப4யத்தினின்றும் வேறுபட்ட மங்களங்களைக் கொடுப்பேன். 2. ப4யமே இல்லாமையாகிற ப4யமின்மையைக் கொடுப்பேன். 3. விரோதி4களால் எதிர்காலத்தில் ஏற்படும் ஆப4த்தின் நினைவே நிகழ்காலத்தில் ப4யமாக இருப்பதால், எதிரிகளால் செய்யப்படும் உபகாரத்தினால் உண்டாகும் த்ருப்தியாக ஆகும்படி செய்வேன். அதாவது, இனிவரும் காலமெல்லாம் ஒரு துன்பம் வராதபடி பண்ணுவேன் என்று கொள்ளலாம்.

யாரால் வரும் ப4யத்தைப் போக்குவது? எனில், எல்லா பூ4தங்களினின்றும் (ஸர்வ பூ4தேப்4:) ப4யமளிப்பது எதுவாயினும், வரக்கூடிய ப4யத்தைப் போக்குவேன். அசேதநங்களோடு தேவர், விலங்கு, மநுஷ்யர், ஸ்தா2வரம் முதலான நான்கு வகை பூ4தங்களினின்றும் வரும் துன்பங்களைப் போக்குவேன்.  பஞ்ச பூ4தங்களாலான தே3ஹத்தால், பஞ்ச பூ4தங்களால் போஷிக்கப்படுகிற இந்திரியங்களால் வரும் துன்பங்களைப் போக்குவேன்.

இதுவரை பூ4தேப்4ய: என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பொருள் சொல்லப்பட்டது. இதேபோல், பூ4தேப்4ய: என்பதை நான்காம் வேற்றுமையாகக் கொண்டால், வேறு விதமாகவும் பொருள் சொல்லலாம்.

அப4யம் உனக்கு ஒருவனுக்கு மட்டுமின்றி உன்னுடன் வந்த நால்வருக்கும் [சதுர்பி4ஸ் ஸஹ ராக்ஷஸை: யுத்.கா. 17-5] என்று ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம். மேலும், ஶரணாக3தன் மட்டுமின்றி, பக்திநிஷ்டர், ஆசார்யநிஷ்டர் மற்றும் ப்ரஹ்ம ஞாநிகள் என்று அனைவருக்கும் என்றும் ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம். ‘புற்பாமுதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்குய்த்தவன்’ [திருவாய் 7-5-1] என்று

அப4யம் உனக்கு ஒருவனுக்கு மட்டுமின்றி உன்னுடன் வந்த நால்வருக்கும் [சதுர்பி4ஸ் ஸஹ ராக்ஷஸை: யுத்.கா. 17-5] என்று ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம். மேலும், ஶரணாக3தன் மட்டுமின்றி, பக்திநிஷ்டர், ஆசார்யநிஷ்டர் மற்றும் ப்ரஹ்ம ஞாநிகள் என்று அனைவருக்கும் என்றும் ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம். ‘புற்பாமுதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்குய்த்தவன்’ [திருவாய் 7-5-1] என்று ப்ரஹ்மா முதல் எறும்பு வரை எல்லா ஜீவராஶிகளுக்கும் அப4யமளிப்பவன்.

இவர்களுக்குச் செய்தருளுவதென்? தியாகமுமன்று, ஔதா3ர்யமுமன்று (வண்மை); உபகாரமுமன்று. தா3நமாகவே (3தா3மி) செய்கிறான். புகழைக்கருதி, தக்கவிடத்தில் தகுந்ததை நன்றாகக் கொடுப்பது தியாகம். அனைவருக்கும் வரையாது கொடுப்பது ஔதா3ர்யம் (வண்மை) அதாவது, அபேக்ஷிப்பாரின் ஏற்றத்தாழ்வு பாராது தன் காரியமாகக் கொடுப்பது வண்மை. மேலும், கைம்மாறு கருதி உறவினர் செய்வது உபகாரமாகும். ஆக இம்மூன்றிலும், புகழ், ஆற்றாமை தீருதல், கைம்மாறு என்று மூவகை இம்மைப்பயன் கருதி செய்யப்படும். ஆனால், தா3நம் என்பது மறுமைப்பயன் கருதி தக்கவருக்குத் தக்கதைக் கொடுப்பதாகும். இராமபிரானுக்கு மறுமைப்பயன் யாதெனில், ஒருசேதனனை அடையப்பெறும் பெரும்பேறு. ஆகவே மிகச்சிறந்த தா3நமாகவே கொடுக்கிறான் என்றபடி.  மோக்ஷயிஷ்யாமி என்று எதிர்காலத்தில் சொல்லாமல், நிகழ்காலத்தில் த3தா3மி இப்பொழுதே கொடுக்கிறேன் என்கிறான். தவங்களுக்குள் ஶரணாக3தி மிகச்சிறந்த தவமாகக் கருதப்படுகிறது [தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப: ஶ்ருதம்; 37-36] என்று அஹிர்புத்3ய ஸம்ஹிதையில் சொன்னபடி, ஶரணாக3தனுக்கே இப்படித் தா3நம் செய்கிறான்.

‘இப்படிக் கொடுக்கிறேன்’ என்றது கட்டாயம் கொடுக்கிறேன் என்று திருவுள்ளமா? ‘கொடுத்தால் கொடுப்பேன் இல்லாவிட்டால் கிடையாது’ என்கிற திருவுள்ளமா எனில், ‘இது எனக்கு விரதம்’ (ஏதத் வ்ரதம் மம) அதாவது,  இது எனக்குக் கட்டாயம் அநுஷ்டிக்க வேண்டியதொன்றாகும். ‘இதைச் செய்து முடிக்க வேண்டும்’ என்று ஸங்கல்பித்துத் தொடங்கினால், கடைசி வரையில் விடாமல் நிறைவேற்றப் படுவதன்றோ விரதம் எனப்படுகிறது. ஶரணாக3தனுக்கு அப4யமளிப்பது அப்படிப்பட்ட விரதம். ‘ஒரு ப்ரதிஜ்ஞையைச் செய்தபின், அதிலும் ப்ராம்மணர்களுக்குச் செய்தபின், அதைக் கைவிடமாட்டேன்’ [ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஶ்ருத்ய ப்3ராம்ஹணேப்4யோ விஶேஷத:  ஆர. கா. 10-19] என்று முதலிலேயே சொல்லிவைத்திருக்கிறேனே என் ப்ரதிஜ்ஞையையின் தன்மையை. பரித்ராணாய ஸாதூநாம் . . .ஸம்ப4வாமி என்றும், ‘காக்குமியல்வினன்’ [திருவாய் 2-2-9] என்றும் இந்த விரதம் நமக்கு இயற்கையிலேயே உள்ளதொன்று.

இவ்விரதம் யாருக்கு அநுஷ்டிக்கத் தக்கது எனில், எனக்கு (மம). 1. ‘தேவர்களால் வேண்டப்பட்டு மனிதருலகில் பிறந்தான்’ [அர்த்தி2தோ மாநுஷே லோகே; அயோ.கா. 1-7] என்றும், ‘வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்’ [திருவாய் 6-4-5 ] என்றும் பிறரால் வேண்டப்பட்டு அவர்கள் குறைதீரவே வந்து பிறந்ததால், எமக்கு இது விரதமாகும். 2. ஶ்ருஷ்டிக்கும் பிரமனுக்கும் இது காரியமன்று; ஸம்ஹரிக்கும் ருத்திரனுக்கும் இது காரியமன்று. ‘ஸர்வேஶ்வரனான ஹரியைத் தவிர வேறு எவருக்கும் ரக்ஷிக்கும் வல்லமையில்லை’ [நஹி பாலனஸாமர்த்2யம் ருதே ஸர்வேஶ்வராத் ஹரே: வி.பு. 1-22-21 ] என்றும், எல்லா உலகங்களையும் ரக்ஷிப்பதற்காக விஷ்ணுவாகிய தன்மையை நாராயணனாகிய நீ அடைந்தாய்’ [ ரக்ஷார்த்த2ம் ஸர்வலோகானாம் விஷ்ணுத்வமுபஜக்3மிவாந்; ராமா. உத்.கா. 104-9] என்றும், ரக்ஷிப்பது எனக்கொருவனுக்கேயான காரியமாகும். 3. இயற்கையிலேயே செய்ய வேண்டிய காரியம் இது. இச்செயலுக்குத் தனியே ஒருபயனுமில்லை. இதைச் செய்யாதபோது, ஶரணாகதரக்ஷணம் தவறியதாகும். ஶரணாகதரக்ஷணம் செய்த புறா, வானரம், விஶ்வாமித்ரன் முதலானோர் ‘எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்’ [திருப்பல்லாண்டு-4] என்று விலக்கித் தள்ளிவிடமாட்டார்களா? அப்படிச் செய்யாமல், ‘ஸாது கோஷ்டியுள் கொள்ளப்படுவாரே’ [பெரியாழ். திரு. 3-6-11] என்கிற பயனைப் பெறுவதற்கு இது நம்மால் அநுஷ்டிக்கத்தக்கது.

இப்படி இராமபிரான் ஸுக்ரீவனைப் பார்த்து, ‘அபயப்ரதானம் செய்து ஶரணாகதனான விபீஷணனை ரக்ஷிக்கவேண்டும்’ என்று இந்த ஶ்லோகத்தில் ஸகலஶாஸ்த்ரங்களின் தாத்பர்யார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

யுத்த  காண்டம்

ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|

கார்யம் கருணமார்யேண  கஶ்சிந் நாபராத்4யதி ||

पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम।

कार्यं करुणमार्येण न कश्चिन्नापराध्यति।।

பொழிப்புரை: வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும் நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’ [கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான். தேவியும் பதிலிறுத்தாள் ‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள், ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள். இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்   பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன். முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன். இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார். இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும் (பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி, நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே. பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய். பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன். ‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள். ‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே, அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால், கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும். ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும். பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள். தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும். இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ, அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’. ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’ [தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’. ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி. இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள். பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன். வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ. கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று. காட்டில் கிளைக்குக்கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது! அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்? பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில், அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள், இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக ‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை. ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார். நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண). இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க. இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை. இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும். நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே! நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்! நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே ( கஶ்சிந் நாபராத்4யதி) இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்? அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ? அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால், கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ? குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக் கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா? நான்தான் குற்றம் செய்யாதவளா? நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில், அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார். இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார். ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை? இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா? என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல், அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன். தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால், முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்! ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய். ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்? அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு. நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன். நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள் கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

அடியேன் ஸௌந்தரராஜ ராமானுஜ தாஸன்

பயிற்சி வினாக்கள்.

பால காண்டம்

  1. பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசார்யரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
  2. ஶ்ரீராமாயணத்திலிருந்து எத்தனை ஶ்லோகங்களுக்கு வியாக்கியாநம் ஸாதித்துள்ளார்? அவற்றுள் 12 ஶ்லோகங்களை எழுதுக.
  3. ‘அஹம் வேத்மி’ (நானறிவேன்) என்று விஶ்வாமித்திரர் சொன்னதற்கு, பெரியவாச்சான் பிள்ளை அளித்த பல்வேறு அர்த்தங்களுள், குறைந்த பக்ஷம் 4 அர்த்தவிளக்கங்கள் எழுதுக.
  4. ராமன் இளவயதினனாக இருப்பினும், அவன் பராக்கிரம் மிகுந்தவன் என்று பிள்ளை அளித்த பல்வேறு விவரங்களுள், குறைந்த பக்ஷம் 3 அர்த்த விளக்கங்கள் எழுதுக.
  5. வஸிஷ்டரும் அறிவார்; இங்கிருக்கும் மற்ற ரிஷிகளும் அறிவார் என்று விஶ்வாமித்திரர் ஏன் சொன்னார்? இதற்கு பெரியவாச்சான்பிள்ளை அளிக்கும் விளக்கம் என்ன?
  6. இவள் என் பெண் (மம ஸுதா), உனது தர்மத்துக்குத் துணை செல்பவள் (ஸஹ தர்ம சரீதவ) என்று ஜநகர் சொன்னதற்கு, பெரியவாச்சான்பிள்ளை கொடுத்த விவரங்களை எழுதுக.
  7. ஸீதா திருமண நாளில், ‘கையால் கையைப்பிடி என்னாதே, கையைக் கையால் பிடி (பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா) என்று சொல்வதன் தாத்பர்யம் என்ன?
  8. புருஷகாரத்துக்கும் புருஷகாரானாகும் ஜநகரின் நிலையைப் பற்றி சில வரிகள் எழுதுக.

அயோத்யா காண்டம்

  1. ராமனுக்கு முடி சூட்ட விழைந்த தசரதனிடம் நகர மக்கள் என்ன கூறினர்?
  2. ‘இச்சாம:’ விரும்புகிறோம் என்று நகர மக்கள் சொல்வதில் பெரியவாச்சான்பிள்ளை காட்டும் 5 பா4வங்கள் யாவை?
  3. நகரத்தார் ராமனின் தோள்வலிமையை எங்ஙனம் விவரித்தார்கள்?
  4. ராமன் தோள்வலியால் மட்டுமின்றி இரக்கம் முதலான குணங்களால் வெல்பவன் என்பதை விவரிக்கவும்.
  5. ‘மஹாபலம்’ என்ற பதம் மனோபலத்தைக் குறிக்கும் என்பதை உரையாசிரியர் எவ்வாறு விளக்குகிறார்?
  6. ராமன் பட்டத்து யானை மீதேறி வருவதைக் காண்பதற்கு நகரமக்கள் கூறும் காரணங்கள் யாவை?
  7. ராமனுக்கும் பிராட்டிக்கும் எல்லாவிதமான கைங்கர்யங்களும் செய்வேன் என்று இளையபெருமாள் கூறும் கைங்கர்யங்கள் யாவை?
  8. ஸூர்ப்பணகை ராமலக்ஷ்மணர்களை இருமையில் விவரித்தது ஏன்?
  9. ஸூர்ப்பணகை விருத்தாந்தத்தில், ராமனின் வடிவழகை பெரியவாச்சான்பிள்ளை எவ்வாறு விளக்குகிறார்?
  10. ஸூர்ப்பணகை விருத்தாந்தத்தில்,மஹாபலௌ என்பது தேஹபலத்தை மட்டுமல்லாமல், மனோபலத்தையும் குறிக்கும் என்பதை பெரியவாச்சான்பிள்ளை எவ்வாறு விளக்குகிறார்?
  11. ஸூர்ப்பணகை விருத்தாந்தத்தில், மரவுரியை எவ்வாறு பீதகவாடையுடன் ஒப்பிட்டுகிறார் பெரியவாச்சான்பிள்ளை?
  12. 4ர்மியான தான் ஸத்தைப் பெற்ற பின்பு த4ர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று என்பதை விளக்கி எழுதுக.

கிஷ்கிந்தா காண்டம்

  1. வாலி வதத்தைத் தொடர்ந்து, தாரை இராமபிரானை ‘அப்ரமேயரே’ (த்வம் அப்ரமேய:) என்று விளித்துச் சொல்லும் பதத்திற்கு பெரியவாச்சான்பிள்ளை காட்டும் வியக்கியானங்களில் மூன்று பற்றிய குறிப்பு எழுதுக.
  2. வாலி வதத்தைத் தொடர்ந்து, இராமபிரானிடம் வாது செய்ய வந்த தாரை எவ்வாறு மனமாற்றம் அடைந்து, இராமபிரானின் பெருமைகளை எவ்வாறு எடுத்துரைத்தாள்?

ஸுந்தர காண்டம்

  1. ஸீதையின் நிலைமையைக் கண்டு அநுமான் இராமன் ஒரு பெரிய காரியம் ஸாதித்துள்ளார் என்பதை எவ்வாறு தம்மனத்தில் நினைத்துப் பார்க்கிறார்?
  2. புல்லைக் கிள்ளி நடுவே போட்டு ராவணநுக்கு அறிவுரை சொல்ல முற்பட்டபோது, பெரியவாச்சான்பிள்ளை கூறும் விளக்கங்களில் ஏதேனும் நான்கு விளக்கங்களை எழுதுக.
  3. அஶோக வநத்தில் ராவணனைப் பார்த்து ஸீதை புன்னகை செய்தாள் என்பதற்கு பெரியவாச்சான்பிள்ளை கூறும் விளக்கங்களில் ஏதானும் நான்கு விளக்கங்கள் எழுதுக.
  4. அஶோக வநத்தில் ராவணனைப் பார்த்து ஸீதை புன்னகை செய்து என்ன சொல்வதாக வியாக்கியாநம் கூறுகிறது?
  5. ‘ராமபிரானிடம் நட்பு செய்தலை உபாயமாக் கொள்’ (மித்ர மௌபயிகம் கர்தும்) என்று ஸீதாப் பிராட்டி கூறும் அறிவுரையின் வியாக்கியானங்களில் ஏதேனும் மூன்று விளக்கங்கள் எழுதுக.
  6. குடியிருப்பை விரும்புவாயானால் (ஸ்தா2நம் பரீப்ஸதா) என்று ஸீதாப் பிராட்டி கூறும் அறிவுரையின் வியாக்கியானங்களில் ஏதேனும் மூன்று விளக்கங்கள் எழுதுக.
  7. ‘இதோ இங்கிருக்கிறார்; இவரை (அஸௌ) ஶரணடை’ என்று பிராட்டி அஶோகவனத்தில் சொல்லும்பொழுது, இதற்குப் பின்னணியாக பெரியவாச்சான்பிள்ளை கூறுவது என்ன?

யுத்த காண்டம்

  1. உனக்கேயாவேன் (தவாஸ்மீதி யாசதே) என்று தொடங்கி இராமபிரான் விபீஷணனை ஏற்றுக்கொள்வதற்கு எடுத்துக்கூறிய ஸமாதாநங்களில் ஏதேனும் நான்கினை எழுதுக.
  2. ‘இது எனக்கு விரதம்’ (ஏதத் வ்ரதம் மம) என்று சொல்லி, இந்த விரதம் எனக்கு மட்டுமே அநுஷ்டிக்கத்தக்கது என்பதை இராமபிரான் எப்படி ஸ்தாபிக்கிறார்?
  3. எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது என்கிற செய்தியை ஸாமான்ய, விஶேஷ தர்மங்களைக் கொண்டு பிராட்டி எப்படி எடுத்துரைக்கிறாள்?
  4. குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே ( கஶ்சிந் நாபராத்4யதி) என்று பிராட்டி அநுமனிடம் சொல்லி, எவ்வாறு தானும், அநுமனும், இராமபிரானும் ஒருவிதத்தில் குற்றம் செய்தவர்களே என்பதை எப்படி விளக்குகிறாள்?

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment