திருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வாரின் ப்ரத2ம ப்ரப3ந்த4ம் , முதல் நூல் திருவிருத்தம். அவரது தி3வ்ய ப்ரப3ந்த4ங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன. அவை அந்தா4தித் தொடையிலேயே அமைந்துள்ளன.

திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும், அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்:

“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விடவேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும்,

“இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று ப்ராப்யத்தையும்,

“இமையோர் தலைவா!” என்று தமது ஸ்வாமியின் அப்ராக்ருத ஸ்வபா4வத்தையும்,

“மெய் நின்று கேட்டருளாய்!” என்று அவனது   ஸௌலப்4யத்தையும்,

“அடியேன் செய்யும் விண்ணப்பம்!” என்று தமது பிரார்த்த2னையையும்,

“இனி யாம் உறாமை” என்று தமது உலகியல் வாழ்வில் வைராக்3யத்தையும் புலப்படுத்தினார்.

அடுத்த பாசுரம் முதலே அவர் தமிழில் ஒப்பற்ற அகத்துறை இலக்கிய ரீதியில் நாயக நாயகி பாவனையில் அத்யாஸ்ச்சர்யமான உபதே3ஶ க்3ரந்தம் ஸாதி4த்தருளினார்.

காஞ்சி மஹா வித்வான் அண்ணங்க3ராசார்ய ஸ்வாமி தம் திருவிருத்த வ்யாக்2யானத்தின் முன்னுரையில் இத்தகு நூல்களுள் திருக்கோவையார் ப்ரப3ந்த4த்துடன் இதைக் குறித்துள்ளார்   என்பது நோக்கத்தக்கது.

ஆகவே இதில் ஆசார்யர்கள் ஈடுபாடும், அதனால் அவர்களின் இன்சுவையே வடிவெடுத்த நிர்வாஹங்களும் அமைந்ததில் வியப்பில்லை.

பாசுரம் 1:

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்  அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.

ஆழ்வார், த3ண்ட3காரண்யத்தில் ரிஷிகள் “ஏஹி பஶ்ய  ஶரீராணி” (एहि पश्य शरीराणि) என்று பெருமாளிடம் தம்மை அரக்கர்கள் அடித்தும் பொடித்தும் துன்புறுத்தியத்தைத் தங்கள் ஶரீரங்களில் இருந்த காயங்களையும் தழும்புகளையும் காட்டிக் குறை இரந்தாப்போல்  இப்பாசுரத்தில் ஞான ஸ்வரூபனும், ஞான கு3ணகனுமான ஆத்மாவை ப்ரக்ருதி (அநாதி3 ஜன்ம, கர்ம, அவித்3யா, பாபம்  முதலியன) தின்றிருப்பதை எம்பெருமானிடம் காட்டுகிறார் என்று ஆளவந்தார் நிர்வாகம். அம்மங்கி அம்மாள் எனும் ஆசார்யர், “உதிரக் கூறை காட்டுகிறார்” என்றார். அதாவது, பெருமாளுக்கு ரிஷிகள் உடம்பைக் காட்டினாப் போல் தம் குருதிக் கறை படிந்த நிலை (அஞ்ஞானாதிகள்) காட்டுகிறார்.

“பிறந்தாய்!”: என்பதற்கு ப4ட்டர் ஒரு சுவையான விளக்கம் தந்ததாக ஸ்ரீவத்ஸாங்க தா3ஸர் கூறியதாக நஞ்சீயர் ஸாதி4ப்பார்: அதாவது: எம்பெருமான் பல பிறவிகளில் அவதரித்திருந்தாலும், அவனால் உலகினரைத்திருத்திப் பரமபதம் கொண்டு செல்ல முடியவில்லை, உடுத்த துணியோடு பரமபதம் திரும்பிச் சென்றான்; அதையும் பிடுங்கிக் கொள்ளாமல் அவனை அதோடு விட்டது விஶேஷம். ஆனால் ஆழ்வார் அவதரித்தபின் அவனது திருவுள்ளம் நிறைவேறப் போகிறது என்பதால், இனி அவன் பிறக்க வேண்டிய தேவை இல்லை என்று ப4ட்டர் ரஸமாகக் கூறுவார் என்பது நஞ்சீயர் குறிப்பு.

பாசுரம் 3

பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து பேசும் நிலையில் உள்ளது.

குழற்கோ வலர்மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ? தண்ணந்துழாய்
அழற்போல் அடுஞ்சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

முதல் பாட்டில் இமையோர் தலைவா என்று வியந்த தலைவியின் இயல்பில் மாறுபாடு கண்டாள்  தோழி.  இப்பாசுரத்தில், தலைவி, சக்கரக்கையன், ஸ்ரீ பூ4 நீளாதே3விமார் நாதன் ஆகிய எம்பெருமானை ஒருக்கணமும் பிரியாதிருக்கும் க3ருட3னின் பா4க்கியம்தான் என்னே எனத் தன்னைக் கண்டுவிட்டுச் சென்ற பெருமாளை நினைத்து, அவன் அவர்களோடுள்ள சேர்த்தி கண்ட என் நெஞ்சு மீளுமோ மீளாதோ எனப் பராங்குஶ நாயகி நினைப்பது.

திருமலை நம்பி இதை, உண்மையிலேயே தமக்கு எம்பெருமானை அனுபவிக்க இயலுமா என ஆழ்வார் நினைப்பதாகக் கூறுவார் என பிள்ளை திருநறையூர் அரையர் விளக்குவார்.

நஞ்சீயரோ, ப4ட்டர் “உலகியலில் தமக்குள்ள ஸம்பந்தத்தை அறுக்க வேண்டுமென எம்பெருமானை முதல் பாட்டில் வேண்டிய ஆழ்வார், அவனை முதலில் கண்டபோது தம்மால் அந்த ஆனந்தத்தைத் தாங்க முடியுமா என ஐயுற்றார்” என்று விளக்குவார் என்கிறார்.

தமது நெஞ்சைத் தூது விடுவது ஆழ்வாரின் பல பாசுரங்களில் உள்ள விஶேஷம் என்பதை முனைவர் ஸ்ரீ உ வே வி வி ராமாநுஜம் ஸ்வாமி “என் நெஞ்சினார் ” எனும் கட்டுரையில் அத்புதமாக விளக்கியுள்ளார்.

பாசுரம் 8:

காண்கின்றனைகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன  இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்துள் உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே 

இது தலைவன் பொருள்வயின் (பொருள் தேடி) பிரிவது பற்றிக் குறிப்புத்தர, தலைவி வருந்தும் நிலை.

இதை விளக்க நம் பூர்வர்கள் எம்பெருமானார், அவர் ஆசார்யர் திருமலை நம்பி, திருக்கச்சி நம்பிகள் பற்றியொரு விருத்தாந்தம் தெரிவிக்கிறார்கள்.

திருமலையில் இருந்த எம்பெருமானார், யாராவது காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகள் எவ்வாறு உள்ளார் என்று கண்டு வரமுடியுமா என்று கேட்க ஒருவரும் இசையவில்லை. திருமலை நம்பி தாமே சென்று திருக்கச்சி நம்பிகளை சந்தித்து, உடனே கிளம்பவும், நம்பிகள் அவரை “எதற்கு தேவரீர் வந்தது? இவ்வளவு அவசரம் ஏன் ? தேவப்பெருமாள் திருநாள் கண்டு போகலாமே ” என்றார். திருமலை நம்பி, உடையவர் விருப்பம் தெரிவித்து, அவர் திருவுளம் பற்றி வந்ததாகச் சொல்லிக் கிளம்பினார். இதில் இரு சுவையான விஷயங்கள்: 1. தம் ஆசார்யர் காஞ்சியில் எப்படி உள்ளாரோ என்று எம்பெருமானார்க்கு ஓர் அஸ்தானே (காரணமற்ற ) பயம், அவர் மீது இருந்த அன்பினால். இந்தத் தலைவி போன்ற நிலை. 2. ஆசார்யர்கள் எவ்வளவு நைச்சியம் , பணிவு காட்டினார்கள் என்பது.

தலைவன் தலைவி விஷயம் சொல்லும் பாசுரத்துக்கு எம்பெருமானார்/திருக்கச்சி நம்பிகள் அன்புப் பிணைப்பைப் பேசியது நினைக்கத்தக்கது.

பாசுரம் 9:

இதில் தலைவன் தலைவியைத் தன்னால் நீங்கி இருக்க இயலாமையைத் தெரிவிப்பதாக ஆழ்வார் தமக்கும் எம்பெருமானுக்கு உள்ள அப்ருத2க் ஸ்திதி2யைப் பாடுகிறார்:

திண்பூஞ்சுடர்நுதி, நேமி அஞ்செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணி வல்லீயை ஆரே பிரிபவர்தாம்?……

எம்பெருமானார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை, பிள்ளை உறங்கா வில்லி தாஸரிடம் சென்று   தமக்கு வேண்டிய நெல் வாங்கிக்கொள்ள அனுப்பினார். அவர், தாஸரிடம் சென்று உடனே நெல் பெறாமல் திரும்பிவிட, உடையவர் துணுக்குற்று என்ன ஆயிற்று நெல் என் பெறவில்லை? என்ன, அவர், “அடியேன் சென்றபோது தாஸர்  கண்ணும் கண்ணீருமாக அழுதுகொண்டிருந்தார்” என்றார் . உடையவர் யாதோ ஒரு வருத்தம்பற்றி, திருவரங்கத்திலிருந்து திருமலை செல்ல   நினைத்திருந்ததால் தாஸர்  இந்நிலையில் இருந்தார் என்று எம்பெருமானார் புரிந்துகொண்டார்.

மணிவல்லி என்பது சம்பிரதாயத்தில் நெறி வழுவாது அநந்யார்ஹ ஶேஷத்வம் பேணும் ஆத்மாவைக் குறிக்கும்.

இங்கு எம்பெருமானாரின் ஆருயிர்ச் சீடரான பிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு இது இயல்வாகப் பொருந்துகிறது.

பாசுரம் 10:

இப்பாசுரத்தில் ஆழ்வாரின் அவயவ அழகிலும் இனிய சொல் திறனிலும்  ஈடுபட்ட அடியார்கள் அவரைப் பற்றிப் பிரிவு தாங்காது சொல்வது போல, நாயகன் நாயகியைப் புகழும் வகையில் பொருள் வருகிறது.

உமது வாயோ? அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ! இதறிவரிதே

எனும் பின் அடிகளில், இந்த இதழ்கள் என்ன வாயா, அல்லது கிளியும் நாணும் அவயவமா, அல்லது (சிவப்புப் பொருந்திய) கொவ்வைப் பழமா என்று அழகை வியந்து சொல்வது.  நம் ஆசார்யர்கள் தமது பூர்வர்களின் திருமேனியிலும் மிக ஈடுபாடும் பக்தி பாரவச்யமும் கொண்டிருந்தமைக்கு இதைக் காட்டி, எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி தொடர்பான ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுகிறது. அதாவது, எப்போதும் நம்பிகள் திருவரங்கம் வந்து திரும்பத் திருக்கோட்டியூர் புறப்படுகையில் எம்பெருமானார் மரியாதை நிமித்தமாக அவரை சிறிது தூரம் வரை பின் தொடர்வார். அப்போது ஒருமுறை, “அடியேனுக்கு உய்வு பெற எப்போதும் தியானிக்க ஒன்று அருளிச் செய்ய வேண்டும்” என்கிறார். ஏற்கெனவே அவரிடம் ரஹஸ்ய உபதே3ஶம் பெற்றவர் இப்படி வேண்ட, நம்பிகளும், “அடியேன் ஆற்றில் இறங்கி நீராடும்போது ஆமை முதுகு (கூர்மாசனம்) போல் தெரியும் அடியேன் ஆசார்யர் ஆளவந்தார் முதுகுத் தோற்றத்தையே அவர் திருநாடு எய்தியபின் நினைத்திருப்பேன். நீரும் அப்படியே இரும்” என்றார். இதனால் ஆசார்யர்களின் திருமேனியில் ஶிஷ்யர்களின் ஈடுபாடு அவர்களின் உபதே3ஶத்திற்போன்றே  அவசியம் என்றதாயிற்று.

ஆசார்யர்கள் தம் ஶிஷ்யர்களின் ஆத்ம க்ஷேமத்தைப் பாதுகாப்பார்கள்; ஶிஷ்யர்கள் அவர்தம் திருமேனி நலத்தைப் பேணுவார்கள்.

ஆசார்யர் ஶிஷ்யர் உறவு பற்றி, மணவாள மாமுனிகள், தம் உபதே3ஶ ரத்தின மாலையில்:

ஆசார்யன் சிச்சன்  ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன்” என்று அருளினார்.

திருவிருத்தம் ஜீவ/பர நாயக/நாயகி பாவத்தில் அமைந்திருந்தாலும், பகவத் ஶேஷத்வத்தைவிட பாகவத ஶேஷத்வமே இறுதி நிலை என்பதை ஆழ்வாரின் இப்பாசுரங்களில் நம் பூர்வாசார்யர்கள் கண்டு அநுபவித்து நமக்குக் காட்டியுள்ளனர்.

பாசுரம் 11

அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே.

தலைவியுடன் இருக்கும் தலைமகன்  தான் பொருள் ஈட்டுவதற்காக அவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்பதை நேர்படச் சொல்லாமல் எல்லாரும் பொருள் சம்பாதிப்பதற்கு அவ்வப்போது தத்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதுண்டு என்றான். இவன் தான் பிரிந்து செல்லப்போவதையே இப்படிக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று அவள் நினைத்தாள்.

கூடி இருக்கும் வேளையில் பிரிவை நினைப்பதோ அல்லது நினைப்பூட்டுவதோ மிகவும் துன்பம் விளைவிப்பது.

இதை ப4ட்டர் சுவைபடக் கூறி விளங்க வைத்தது ஓர் ஐதிஹ்யம். அவர் திரு அத்4யயனத் திருநாளில் எல்லாரும் திருவாய்மொழி அநுப4வத்திலும் நம்பெருமாள் அழகிலும் ஆழ்ந்துள்ளனர்; இவ்வேளையில் இந்த ஏகாத3ஶி எனும் (பட்டினி கிடப்பதாகிய) உடல் வலிமை குறைந்து ப4க3வத3நுப4வத்துக்கு இடையூறாக ஏற்படுத்தியது யார் என்று வெறுத்துச் சொன்னதாகக் கூறுவர்.

பாசுரம் 16:

பலபல ஊழிகளாயிடும்  அன்றி ஒர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும்  யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே.

தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் இருளை வியந்து சொல்வதாக இப்பாட்டு உள்ளது. அவனோடு இருந்து, பின் பிரிந்துள்ளபோது நேரம் ஊழி போல் நீளுவதாக அவள் வருத்தம். அந்த இருளும் கண்ணன் போல் நிறம் கொண்டுள்ளது. ஆழ்வார் தம் பாசுரங்களில் எம்பெருமானை நினைவுறுத்தும் அசேதனங்களால் பராங்குஶ நாயகி படும் துயரைக் குறித்துள்ளார்.

இதை விளக்கும் நஞ்சீயர், ஸ்ரீராமாயணத்தில் பெருமாளைக் காட்டில் விட்டபின் குகனோடு மூன்று நாட்கள் இருந்து பின் அயோத்தி செல்லும் ஸுமந்திரனை நினைவு கூர்ந்தார்.

“கு3ஹேன ஸார்த4ம் தத்ரைவ ஸ்தி2தோऽஸ்மி திவஸான் ப3ஹூன்” [गुहेन सार्धं तत्रैव स्थितो ऽस्मि दिवसान् बहून् ।] எனும் ஶ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.  ஶிஷ்யர் நம்பிள்ளை, “ஸுமந்திரன் குகனோடு மூன்று நாள்களே இருந்தான். ஆனால் பலநாள்கள் எனப் பொருள்பட ‘திவஶான் பஹூன்’ என்பானேன்” என்று வினவ, ஆசார்யர், அதற்கு, “ஒன்றைப் பிரிந்திருக்கும்போது, அதை நினைவூட்டுபவர் முன் இருந்தால் பிரிவு நெடிதாகத் தோன்றுமே.  குகனோடு இருந்ததால் பெருமாளை நெடு நாள் பிரிந்த மாதிரி ஸுமந்திரனுக்குத் தோற்றியது”  என்றார்.

காதலர்க்குப் பிரிவின் போது காலம் நீளுவது போல் எம்பெருமானைப் பிரிந்த ஆழ்வார்க்கும், அவரைப் பிரிந்த அடியார்க்கும் தோற்றும். பா4க3வத விஶ்லேஷமும் (பிரிவும்) ப4க3வத் விஶ்லேஷம் போன்றே உள்ளது. ஆழ்வார் பாசுரங்களில் பா4க3வத ஸமாக3மம் (சேர்த்தி) பகவத் ஸமாக3மம் போன்றே வலியுறுத்தப்படுகிறது.

நெடுமாற்கடிமை, பயிலும் சுடரொளி என இரு திருவாய்மொழிகள் பா4க3வத ஶேஷத்வத்தை வியந்து பேசும். பொலிக பொலிக திருவாய்மொழி அடியார்களால் கலியும் கெடும் என்பதை அவர்கள் வரவை முன் கூட்டி இயம்பும்.

பாசுரம் 30:

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் சொல்லீரோ? இதுவோ தகவு என்று இசைமின்களே!

எம்பெருமான் மற்ற தேவர்களைப்போல் அன்றி சரணடையவும், உபாஸிக்கவும் எளியன் என்பதை ஆழ்வார் பல வகைகளிலும் காட்டுவார். அத்துடன், அவன் தன்னிடம் வந்தவரிடம் அல்லது தானே சென்றடைந்தவரிடமும் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்பதையும் பலப்படச் சொல்வார். ஆழ்வார்கள் அனைவருமே ஒரு மிடறாகக் காட்டும் அரும்பொருள் இது. இப்பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும்போது கிடாம்பி ஆச்சான் ஓர் அத்புதமான விளக்கம் அருளினார்:

அதாவது, தன் நாயகனைக் காணச் சென்ற தன்னால் அனுப்பப்பட்ட தன் நெஞ்சு தான் தூது செல்வதை மறந்து பெருமானோடே நின்று தங்கிவிட அந்த நெஞ்சுக்குப் பறவைகளைப் பராங்குஶ நாயகி தூது அனுப்புகிற சூழல் இப்பாசுரத்தில் வருகிறது.  இதில் ” தொழுது இரந்தேன்”  என்கிறார் ஆழ்வார். தொழுதால் போதாதோ இரங்கவும் வேண்டுமோ?

எம்பெருமான் சரணாக3தனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்பதை விளக்க, கிடாம்பி ஆச்சான் இவ்விடத்துக்குச்சேர

“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பா4த் அந்யத் பாத3வநே ஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரஶ்நாத் ந ச இச்ச2தி ஜநார்த3ந:” [अन्यत् पूर्णात् अपां कुम्भात् अन्यत् पादवने जनात् । अन्यत् कुशल संप्रश्नात् न च इच्छति जनार्दन: ।।] என்கிற அழகான ஶ்லோகத்தை எடுத்தார்.

கிருஷ்ணன் ஒரு பூர்ண கும்ப4ம், திருவடி விளக்குவது, நலமா என்று அன்புடன் விசாரிப்பது இது தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க மாட்டான் என இந்த மஹாபா4ரத ஶ்லோகம் க்ருஷ்ணனின் எளிமையை விளக்குகிறது.

இதுகூட ஒருக்கால் ( ஒரே ஒரு முறை) செய்தால் போதுமா என்று ஶிஷ்யர்கள் கேட்டபோது, ஆச்சான் “ஒருக்கால் என்ன அரைக்கால் போதும்” என்றார்!

அதாவது உபசாரம் செய்யவே வேண்டா மனத்தால் செய்ய நினைத்தாலே போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துவிடுகிறான்.

இவ்வாறு கிடாம்பி ஆச்சான் இறைவனின் எளிமையை விளக்கினார் என்பர்.

பாசுரம் 38

கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் பலநாள்
நடமாயின புக்கு நீர்நிலை நின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.

இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.

ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.

நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” [शरीरं यत् अवाप्नोति] என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து.

பாசுரம் 43

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ  அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே.

தலைவி பராங்குஶ நாயகி தலைவன் கண்ணனின் உருவ  எழிலை  உரைக்கும் பாசுரம் இது. இதில் ஆழ்வார், எம்பெருமானின் திருக்கண் அழகை முதலில் வியக்கிறார்; பின்பு தம்மை அணைக்கும் கையும் தாமரை போன்றது என்கிறார்; இவ்வாறு வியந்து அனுபவித்துப் போற்றியவர் திருவடிகளையும் தாமரை என்று நினைத்துப் போற்றுகிறார். திருமேனியோ கருமுகில் போலாகி அவன் வள்ளன்மையும் குளிர்த்தியும் தெரிவது என்கிறார்.

இதை விவரித்தபோது ஒரு சீடர், கண்கள், கைகள், திருமேனி  இவற்றை எல்லாம் விவரித்து எதற்காகத் திருவடியைப் பேசுகிறார் என்று ஐயம் எழுப்பினார். இதற்குப் பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் மிகவும் சுவைபட, “குழந்தைக்குத் தாயின் முலை போல அடியார்க்கு எம்பெருமானின் திருவடிகள் ; அது தாயின் பால் உண்டு பின் தாயின் முகம் நோக்கும். அதேபோல் இவர்களும் எம்பெருமானின் ஸர்வ அவயவ ஸௌந்த3ர்யங்களையும் கண்டு பருகினாலும் அவனது திருவடிகளிலேயே நோக்காய் இருப்பர்” என்று விளக்கினார்.

பாசுரம் 44

நிறமுயர் கோலமும் பேரும்  உருவும் இவை இவை என்று
அறமுயர் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையே.

இப்பாசுரம் தலைவி தலைவன் பெருமையை உணர்த்துவதாக அமைந்தது.

எம்பெருமான்பால் மிக்கிருக்கும் கணக்கற்ற மிகு நலன்களை எண்ணுவதோ முழுமையாக விரித்துரைப்பதோ இயலாது. அவனது ஈடற்ற தோற்றப் பொலிவு இது என்றவாறு சிலர் சில சொல்லலாகும். அல்லது அவன் திருநாமங்கள் சிறப்பு என்று சில சொல்லக்கூடும். அவனது திவ்ய அவயவ ஸௌந்த3ர்ய லாவண்யாதிகளை ஒரு சிலர் சொல்ல முயற்சி செய்யலாம். ஆயினும் ஒவ்வோரிடத்திலும் அவன் திவ்ய ஞான ஒளி விளக்காய் அவர்களுக்குத் தோற்றியதன்றி இன்னது, இவ்வளவு இவன் படி என்று சொல்ல முடிவதில்லை. “சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ” என்பதற்கேற்ப எப்போதும் சொல்லையும் அதனால் பெறப்படும் பொருளையும் கடந்து நிற்கிறான். அப்ராப்ய மனஸா ஸ:. [अप्राप्य मनसा स: ]

இப்படிப்பட்ட எம்பெருமானின் திருநாம மஹிமை அதன் இனிமை இவற்றை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் வாய் வெருவிய படியே இருப்பர். இந்தப் பாசுர விளக்கத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஓர் அழகிய ஐதிஹ்யத்தைக் காட்டியருளுகிறார்.

எம்பெருமானாரின் மாதுலரும் ஆசார்யருமான திருமலை நம்பி தமது அந்திம த3ஶையில் இருந்தபோது கணியனூர்

சிறியாத்தான் அவரைக் காணச் சென்றார். நம்பிகள், அவரை, ப4ட்டரைக் குறித்து, தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் திருநாமம் எது எனச்சொல்ல வேண்டும் என்று வேண்டினார். கேட்பவர் எம்பெருமானார்க்கே ஆசார்யர். ஆகவே, என்ன சொல்வது என்று வெட்கமும் திகைப்பும்  அடைந்த சிறியாத்தான் மௌனமாய் இருந்தார். நம்பிகள் விடாமல், “தா3ஶரதீ2 இது மௌனம் ஸாதி4க்கும் விஷயமன்று – சொல்லவேணும்” என்றார். சிறியாத்தான் , “நாராயணன் போன்ற திருநாமங்களும் சொல்வார்; ஆனால் விரும்பியிருப்பது அழகிய மணவாளப் பெருமாள் என்பதையே” என்றார் .

“இது கணவன் பேரைச் சொல்வதுபோல் உள்ளது; ஆயினும் ப4ட்டர் நினைத்து சொல்வதைத் தவிர வேறு சிறப்பான தஞ்சம் (உபாயம்) இல்லை” என்று அருளிச் செய்த திருமலை நம்பிகள் “அழகிய மணவாளப் பெருமாளே ஶரணம்” என்று கூறியவாறே திருநாடு அடைந்துவிட்டார்.

தமக்குப்பின் ப4ட்டரையே ஆசார்யராகக் கருதும்படி எம்பெருமானார் கட்டளை இருந்ததால் அவர்தம் சீடர்கள் அனைவரும் அப்படியே ஒழுகினர். ஆதலால், மூத்தவராய் எழுந்தருளியிருந்த நம்பிகளும் ப4ட்டர் திருவாக்கை ஶிரஸா வகித்து அனுஷ்டித்தார் என்பதில் அவர் பெருமையும், ஆசார்யர்க்கு உண்டான தனித்துவமும், திருநாமத்துக்குள்ள ஏற்றமும் தெளிவாகிறது.

இப்பாசுரத்தில் எம்பெருமான் திருக்கோலம், திருநாமம், திருவுருவம் ஆகிய மூன்றும் குறிக்கப் பெறுகின்றன. ஆழ்வார் எப்போதும் எம்பெருமானை ஸ்வரூப, ரூப , கு3ண வைப4வங்களைச் சிந்தித்தும் சொல்லியுமே போது போக்குபவர். இந்த அநுப4வத்தை அடியொற்றியே ஆசார்யர்களும் கு3ண அநுபவமும் நாம ஸங்கீர்த்தனமும் தம் வாழ்வில் முக்கிய அம்ஶங்களாகவும் இவற்றையே பகவத் கைங்கர்ய வெளிப்பாடுகளாகவும் அமைத்துக்கொண்டனர்.

இப்பாசுர வ்யாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை திருமலை நம்பிக்கு எம்பெருமான் திருநாமத்தில் இருந்த ஆத3ரத்தை விளக்கினார். அவரே இந்த “பேரும் ” என்பதை விளக்க இன்னோர் ஐதிஹ்யமும் காட்டுகிறார்.

ஆச்சி மகன் எனும் ஆசார்யர் தமது இறுதி நிலையில் உணர்வற்று இருந்தார். ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶர ப4ட்டர் அவரைக் காண எழுந்தருளினார். அவர் அருகே சென்று அவர் செவியில் மிக மென்மையாக “அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம்” என்று கூறினார். இதை ப4ட்டர் தம் திருவாக்கால் ஸாதி4த்த மாத்திரத்தில் ஆச்சி மகன் தம் பூர்வ வாசனையால் ப்ரக்ஜ்ஞை வர பெற்று அவர் தாமும் அத்திருநாமத்தை உச்சரித்தவாறே உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினாரென்று வரலாறு. எம்பெருமான் திருநாமம் உய்திக்கு வழி என்பதை ஆசார்யர்கள் இவ்வாறு காட்டுகிறார்கள்.

பாசுரம் 44:

“பேரும் …”

எம்பெருமான் திருநாம மஹிமையைத் திருவிருத்தப் பாசுர வ்யாக்யானத்தில் காட்டியருளிய பெரியவாச்சான் பிள்ளை இதற்கு மற்றுமொரு நிகழ்வாக ஆளவந்தார் திருமகனார் ஆகிய சொட்டை நம்பி வைபவமும் கூறுகிறார். நம்பிகள்  தாம் இறுதி நிலை அடையும் தருவாயில் ஆசார்யர்கள் அனைவரும் அவர் திருமாளிகை சென்று, வணங்கி, “தேவரீர் இப்போது திருவுள்ளத்தில் விரும்புவது என்ன?” என்று வினவினர். அவர், “அடியேன் ஸ்ரீ வைகுண்டம் சென்றால் அங்கே  ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போலே குளிர்ந்து இராமல் போனால், வானைக் கிழித்துக்கொண்டு மீளவும் இங்கேயே வந்து விடுவேன் என்று எண்ணி இருக்கின்றேன்” என்றாராம்!

ஆசார்யர்கள் நம்பெருமாள் எனும் திருநாமத்தின் மீதும், அவரது திருமேனி அழகிலும் எவ்வளவு ஈடுபாடும் ஆழ்ந்த அழகுணர்வும் கொண்டிருந்தனர் என்பது வியக்கத்தக்கது.

பாசுரம் 51:

மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டுகொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத்
துலை  கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.

கடற்கரையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கடல் அலை ஓசைக்கு ஆற்றாமல் வருந்திச் சொல்லுகிற இப்பாசுரத்தில் ஆழ்வார் எம்பெருமானின் கருணையைக் காட்டுவதாக நம் முதலிகள் நிர்வஹிப்பர்.

எம்பெருமான் மந்தர மலையை மத்தாக்கி, வாஸுகிப் பாம்பை நாணாக்கி ஸமுத்3ர மந்த2னம்  செய்து அமுதம் எடுத்தான். அந்த மாயன் இராமபிரானாக வந்தபோது கடல் கடந்து சென்று பிராட்டியை மீட்க, கடலைக் கடக்கவேண்டி வந்தது. விபீ4ஷணன் சொன்னபடி பெருமாள் ஸமுத்திர ஶரணாக3தி செய்து கேட்டும் கடல் அரசன் வராது தாழ்த்தியதால் சினம் கொண்ட பெருமாள் ஒரே அம்பினால் இக்கடலை வற்றச் செய்வேன் என்று சூளுரைக்க, அப்போது கடல் அரசன் வணங்கி வந்து நின்றான்.

இந்த சந்தர்ப்பத்தை விளக்கிய ப4ட்டர் அதற்குத் தக்க வால்மீகி ராமாயணம் யுத்த காண்ட ஶ்லோகம் ஒன்றைச் சொன்னார்:

ரக்த மால்யாம்ப3ரத4ர: பத்3மபத்ர நிபே4க்ஷண: ஸர்வபுஷ்ப மயீம் தி3வ்யாம் ஶிரஸா தா4ரயன் ஸ்ரஜம்।  ஜாத ரூப மயைஶ்சைவ தபநீய விபூ4ஷிதை: ஆத்மஜாநாம் ரத்னானாம் பூ4ஷிதௌ பூ4ஷணோத்தமை:।। [रक्तमाल्याम्बरधर: पद्मपत्र निभेक्षण: सर्वपुष्पमयीं दिव्यां शिरसाधारयन् स्रजम्  । जातरूपमयैश्चैव तपनीय विभूषितै: आत्मजानां रत्नानां भूषितौ भूषणोत्तमै: ।।  ] [श्रीमद्रामायणम् 6-22-20] என்கிற அழகிய ஶ்லோகத்தைச் சொல்லி விளக்கினார். இந்த ஶ்லோகத்தில் வால்மீகி, கடல் அரசன் பெருமாளைக் காண வந்து வணங்கியபோது சிவந்த மாலைகளைச் சூடி, அழகிய மணிகள் ஒளிரும் ஆப4ரணங்களை அணிந்து வந்தான் என்றுள்ளதைச் சுட்டி ஶிஷ்யர் ஒருவர், “பெருமாள் மிக்க சினத்தோடு வில்லையும் அம்பையும் ஏந்தி  கடலை வற்றடிப்பேன் என்று நிற்கையில் அவன் இவ்வளவு அலங்கரித்து வந்தது என்ன துணிவில்?” என்று வினவினார். அதற்கு ப4ட்டர், “கிணற்று நீர் சூடாகி , கிணற்றைச் சுடுமோ? அதன் தன்மை குளிர்ந்து இருப்பதன்றோ? எம்பெருமான் தன்னிடம் கார்யம் கொள்ள ஓர் அச்சுறுத்தலாக வில்லை வளைத்தானே அல்லாமல் தன்னை ஒருபோதும் தண்டிக்கமாட்டான் என்ற உணர்வு இருந்ததால் கடல் அரசன் இவ்வாறு வந்தான்” என்று சாதுர்யமாக ஸமாதா4னம் கூறியருளினார்.

எம்பெருமான் எப்போதும் எவரையும் ஒறுப்பவனல்லன். அவன் ஶாஸ்த்ர விதி4 மீறுபவரையும் இறுதி வரை ஏதாவது ஒரு சாக்கில் மன்னிப்பதையே விரும்புபவன். இராவணன், ஶிஶுபாலன் போன்றோரிடத்தும் மித்ர பா4வநை இருந்தாலே போதும் என்றவன். உபாய நைரபேக்ஷ்யம்  (ஓர் உபாயத்தை எதிர்பாராமை) போன்றே அபராத4 ஸஹத்வமும் அவனது விஶேஷ இயல்பு என்பதை ஆழ்வார் பல இடங்களிலும் பலவாறாகக் காட்டியருளுகிறார்.

எம்பெருமானுக்கு எவர் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது பாரபக்ஷமும் இல்லை என்பது ஶாஸ்த்ர ஸித்3த4ம். அதையே ப4ட்டர் விளக்கினார்.

பாசுரம் 53:

வாராயின முலையாள் இவள் வானோர் தலை மகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே.

இது கட்டுவிச்சி பேச்சாக வரும் பாசுரம். சிறிய திருமடலிலும் திருமங்கை ஆழ்வாரின் கட்டுவிச்சி தலைமகளின் நோய் திருமால் மீதான காதல் நோய் என்பதைப் பரக்கச் சொல்லி அதற்கு மருந்து எம்பெருமான் தொடர்பானவற்றையே ஸ்மரிப்பதும், ஸ்மரிப்பிப்பதும் என்று அவனது பல விப4வ அவதார சேஷ்டிதங்களை விவரிப்பாள்.

இக்கட்டுவிச்சி, தாயரிடம் உங்கள் மகளைப் பிடித்திருப்பது தெய்வ நன்னோய் ; இதைத் தணிக்க எம்பெருமானின் திருத்துழாய் மாலையோ, தழையோ, அல்லது துளசிக் கொம்பு கிளையோ, அல்லது அடி  வேரோ கொண்டு வீசினால் அவள் துன்பம் தணியும் என்கிறாள்.

இப்பாசுரத்தை மிக அழகாக ப4ட்டர் விரித்துரைத்தார். அது கேட்டு மிகவும் மூத்த ஆசார்யர்களும் பட்டரின் பேரறிவாண்மையையும் பாசுரங்களை விளங்கும் பான்மையையும் பாராட்டினார்கள். இதைப்போல் பல நிகழ்வுகளும் கு3ருபரம்பரா ப்ரபா4வம் முதலிய நூல்களில் காணக் கிடைக்கும். அடியார்களைக் கொண்டாடுவது எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவும் உவப்பானது என்பதை இது காட்டும்.

பெரியவாச்சான் பிள்ளை தம் திருவிருத்த வியாக்கியானத்தில் இப்பாசுரத்தை விளக்குகையில் எம்பெருமானார் தொடர்பான ஒரு ஐதிஹ்யத்தைக் கூறுகிறார்:

நம்பெருமாள் ஒரு திருவிழாவின்போது திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்தார். அப்போது சற்று தொலைவில் எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, பெருமாளை வணங்க வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானரையும் சேவித்தார்கள். இதுகண்ட உடையார் ஸுப்3ரமணிய ப4ட்டர் எனும் அரசு அதிகாரி, சுவாமியிடம், “ஸ்வாமி ஓர் ஐயம் அடியேனுக்கு: பெருமாள் ஸந்நிதி3யிலேயே சிலர் உம்மை வணங்குகிறார்கள்; தேவரீரும் அவர்களைத் தடுப்பதில்லை; இது ஏன் ?” என்றார். அதற்கு சுவாமி, “நீர் அரசு வேலை செய்பவர். ஒரு வேலையாக அரசரிடம் வருபவர் அரசரின் காலணிகளைத் தம் தலையில் வைத்துக் கொண்டால் நீர் தடுப்பீரோ? அல்லது அக்காலணிகள் தம்மைக் கொண்டாட வேண்டாம் என்று கூறுமோ?  அவர் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறார்? அவற்றைத் தலையில் அவர் சுமந்தால் மகிழ்ச்சி அரசனுக்கே அன்றி, அக்காலணிகளுக்கு அன்றே! அடியாரைத் துதிப்பதால் சிறப்பு அடியாருக்கன்று, மகிழ்ச்சியும் பெருமாளுக்கே” என்று கூறினர்.

இதில் எம்பெருமானாரின் பணிவும், எல்லாப் பெருமைகளும் எம்பெருமானுக்கே எனும் கைங்கர்ய மனோபா4வமும், பாகவதருக்குத் தரும் சிறப்பு ப4க3வானுக்கே சேரும் என்பதும் தெளிவாகிறது.

பாசுரம் 56:

வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! ஓர் தண் தென்றல் வந்து
அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன்  தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன்களே .

தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தோழி தலைவிக்கு உரைத்தல் எனும் வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

அகன்ற இடத்தை உடையவளான பூமி பிராட்டி எம்பெருமானிடம் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிலள்; ஆகிலும் அருள் உணர்வுள்ள எம்பெருமான் அவளை ப்ரளய நீரிலிருந்து மீட்டெடுத்தான். அதே போல் அவன் பராங்குஶ நாயகிக்கும் உதவுவான்.

இதை விளக்கும்போது வங்கிபுரத்து நம்பி “நாம் உய்தி பெறத் தஞ்சமாக நினைக்கத் தக்கது எது” என்று கேட்ட சீடர்களுக்கு, விஷ்ணு த4ர்மத்தில் க்ஷத்ர ப3ந்து3 சொல்வதாக அமைந்துள்ள ஶ்லோகத்தைக் கூறி, எவ்வகையிலும் தகுதி அற்ற, அல்ப அறிவினன் ஆகிய என்னைக் காக்க வேணும் எனும் ப்ரார்த்தனை தகும் என்கிறார். எம்பெருமானார், அது அங்கனமன்று; காளியன் செய்த ப்ரார்த்தனை தகும் என்கிறார்..

எம்பெருமானார்,”க்ஷத்ரப3ந்து3 ப்ரார்த்தனையில் நான் உன்னை வணங்குகிறேன் ஆகவே அருள் புரி என்றுள்ளது.  அவன் அருளை பெற க்ஷத்ரப3ந்து3 தான் வணங்கியதைக் காரணமாக் கூறுகிறான். ஆனால், மடுவில் கிருஷ்ணனை முற்றாக வளைத்துத் துன்புறுத்திய காளியனோ, தனது தகுதி எதையும் காட்டாமல், அதற்காக எம்பெருமான் தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்னாத, உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் நான் ஆற்றல் இல்லாதவன், க்ருபா மாத்ரை மனோ வ்ருத்தி: ப்ரஸீத மே [प्रसीद मे]= உன்னுடைய க்ருபை ஒன்றையே நீ காட்டி என்னை ரக்ஷித்தருள்வாய் என்றான். தான் வணங்கியதையோ, ப்ரார்த்தித்ததையோ ஒரு சாதனமாகக் காட்டாமல் எம்பெருமான் க்ருபை ஒன்றையே நினைத்த காளியனின் நினைவே நமக்குத் தஞ்சம்” என்று விளக்கினார்.

ஒரு பயனை எதிர்பாராமல், எம்பெருமானை வணங்குவது நம் ஸ்வரூபம் என்பதால் மட்டுமே அநன்ய ப்ரயோஜனராய் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஸ்வாமி இதில் நல்ல உதாரணத்தோடு நம் மனதில் பதியும்படி அருளிச் செய்தார்.

ஐதிஹ்யங்கள்

இவ்வாறு நடந்தது இவ்வாறு நடந்தது என்பதை இதிஹ இதிஹ என்று விவரிப்பதால், விவரண நூல்கள் இதிஹாஸங்கள் எனப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு வாழ்வுக்கு உய்தி தரும் பல விஷயங்கள் கேள்வி ஞானமாக வருகின்றன. ஸநாதன த4ர்மத்தில் கேள்வி, கேட்டு அறிவது மிக முக்கியமானது. ஶ்ருதி என்று இத்தர்மத்தின் அடிப்படையான வேதத்துக்கே கேட்டுப் பெறப்பட்டது என்ற பெயர் புகழோடு திகழ்கிறது.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கேட்டு அறிவதே ப்ரதா4நம் . ஓராண் வழியாய் உபதே3ஶித்தார் முன்னோர் என மாமுனிகள் இதைப் போற்றிப் புகழ்ந்து ரஹஸ்யங்கள் எனப்படும் செம்பொருளை ஆசார்யர் ஒருவர் ஶிஷ்யர் ஒருவருக்கு மட்டுமே சொல்லித் தந்த மரபை சமுதா3ய நலமும் அனைத்து மானிட ஸமூகமும் உய்தி பெற வேண்டும் எனும் கருணையும் கொண்டு இராமானுஜர் ஆசை உடையோர்க்கெல்லாம் அறிவியுங்கோள் என்று பேசி வரம்பு அறுத்தார் என்று இதை மாமுனிகள் சாதிக்கிறார்.

அருளிச்செயல், அவற்றின் விரிவுரைகள், இதிஹாஸங்கள் அவற்றின் விரிவுரைகள், ஸ்ரீவசன பூ4ஷணம் முதலிய செம்பொருள் நூல்கள் யாவும் செவி வழியாகவே வந்துள்ளன. ஓரோர் ஆசார்யர் தத்தம் சீடர்களுக்கு இவற்றை விளக்கும் பொழுது சுவை சேர்த்து சில நிகழ்வுகளையும் சொன்னார்கள். இவை குருபரம்பரா ப்ரபா4வத்தில் பதிவாகியுள்ளன. ஈடு போன்ற வ்யாக்யான நூல்களிலும் இவை உள்ளன.

இவற்றைத் திரட்டி வார்த்தா மாலை என்றும் நம் ஆசார்யர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். வார்த்தாமாலை போன்றே பூர்வாசர்யர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்த அருளிச்செயல்/இதிஹாச தொடர்புள்ள சுவையான தகவல்களை ஸ்ரீ உ வே புத்தூர் ஸ்வாமி ஆசார்ய வைபவ மஞ்சரி என்று அத்புதமாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.

அருளிச்செயல் முழுமைக்கும் திருப்பல்லாண்டு முதல் திருவாய்மொழி ஈறாக அனைத்துப் பாசுரங்களுக்கும் தொடர்புள்ள ஐதிஹ்யங்களை முதுமுனைவர் ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி மிகச் சுவைபட, மிகப் பயனுள்ள ஒரு முன்னுரையோடு வழங்கியுள்ளார். காஞ்சி ஸ்வாமியின் பல நூல்களில் ஐதிஹ்யங்கள் விரவிக் கிடக்கின்றன. இவை நமக்கு அருளிச்செயல்களுக்கு விளக்கமாயும், நம் ஆசார்யர்கள் எப்படி அந்நெறியில் நிலை நின்றார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டும். இவை வைணவ சமயத்துக்குள்ள தனிச் சிறப்பு எனில் மிகை ஆகாது.

நாம் இப்பெரியோர்களின் இந்த மகத்தான பணிக்கு கடமைப்பட்டுள்ளோம். வாழி அவர்கள் திருவடிகள் என்று எம்பெருமானைப் போற்றுவதே இவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றிக் கடன்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் – எம்பெருமானார் திருவடிகளே சரணம் – ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment