ஆழ்வார்திருநகரி வைபவம் – புராண சரித்ரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

ஆழ்வார்திருநகரி என்கிற ஸ்ரீ குருகாபுரி க்ஷேத்ரம் ஆதியில் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய விளையாட்டுக்காக தானே படைத்த ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்ருஷ்டி காலத்தில் அண்டத்தைப் படைத்த பிறகு, நான்முகன் என்று ப்ரஸித்தமாக அழைக்கப்படும் தெய்வமான ப்ரஹ்மாவை முதலில் படைத்து அவனைக் கொண்டு ஸ்ருஷ்டியைச் செய்யலாம் என்று தன் திருவுள்ளத்தில் கொண்டிருந்தான். அந்த ப்ரஹ்மாவோ எம்பெருமானை நேரில் தரிசித்து அவன் அருளால் படைப்பைச் செய்ய வேண்டும் என்ற என்ணத்துடன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவத்தைச் செய்து எம்பெருமானுடைய தரிசனத்தையும் கடாக்ஷத்தையும் பெற்றான். ப்ரஹ்மாவும் எம்பெருமானைப் பலவாறும் துதித்தான். அந்த ஸமயத்தில் எம்பெருமான் ப்ரஹ்மாவிடம் ஒரு ரஹஸ்யத்தை அருளினான். அதாவது, பூலோகத்தில், பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் மலய மலையில் இருந்து உருவாகி ஓடும் தாமிரபரணி நதியின் தென் பகுதியில் ஆதிக்ஷேத்ரத்தில் ஆதிநாதனாக, அழகிய திருமேனியைத் தான் எடுத்துக் கொண்டு, ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாருடன் லீலைகளை மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்து கொண்டு அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், ப்ரஹ்மா அங்கே சென்று தன்னை வணங்கலாம் என்றும் சொன்னான். ப்ரஹ்மாவும் இந்த இடத்தின் பெருமையைக் கேட்டு இன்புற்று இதைக் குருகா க்ஷேத்ரம் என்றும் பெயரிட விரும்புவதாக ப்ரார்த்திக்க, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். பிறகு ப்ரஹ்மாவும் ஆதிக்ஷேத்ரத்தை அடைந்து அங்கிருந்த எம்பெருமானை நன்றாக வணங்கி வந்தான். இங்கே ஓடும் தாமிரபரணி நதியும் இந்த க்ஷேத்ரமும் எம்பெருமானுக்கு மிகவும் உகந்தவைகளாகப் பெரியோர்களால் காட்டப் படுகிறது.

இங்கு நடந்த சில சரித்ரங்களையும் இப்பொழுது சுருக்கமாகப் பார்ப்போம்.

மஹரிஷிகள் சிலர் இங்கு யாத்ரையாக வந்து எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த காலத்திலே ஒரு வேடனும் யானையும் எதிர்த்துப் போர்புரிய, இறுதியில் இருவரும் மாண்டு போக, அக்காலத்தில் விஷ்ணு தூதர்கள் வந்து இரண்டு ஆத்மாக்களையும் விஷ்ணு லோகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்ட மஹரிஷிகள் இது இந்த க்ஷேத்ரத்தின் மஹிமை என்பதை உணர்ந்து அதைக் கொண்டாடினர்.

தாந்தன் என்பவனுடைய வரலாறும் இங்கே நாம் அனுபவிக்கலாம். ஸ்ரீசாளக்ராமம் என்கிற வடநாட்டு திவ்யதேசத்தில் வாழ்ந்த ஒரு ப்ராஹ்மணனிடம் பயின்ற ஒரு சீடன் , தன்னுடைய அறிவின்மையால் ஒழுங்காகப் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தான். அந்த ப்ராஹ்மணன் அந்த சீடனைப் பார்த்து “நீ வேதத்தை ஒழுங்காகக் கற்காததால் அடுத்த பிறவியில் சூத்ரனாகப் பிறப்பாய்” என்று சபித்தான். அவனோ அதற்குப் பயப்படாமல் அங்கிருந்த விஷ்ணு கோயிலின் அருகே இருந்த புல்லை வெட்டி விற்று வாழக்கையை நடத்தினான். எம்பெருமானின் க்ருபைக்கு ஆளான இவன், தன் அடுத்த பிறவியில் ஆதிக்ஷேத்ரத்தில் வந்து ஒரு சூத்ரனாகப் பிறந்தான். எம்பெருமானின் கடாக்ஷத்தினால் பொறுமையாக இருந்து, அதனால் தாந்தன் என்ற பெயரைப் பெற்றான். அவன் எம்பெருமானை அங்கே இருந்து பூஜித்து வந்தான். தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் யுத்தம் நடந்த காலத்திலே, இந்த்ரன் தேவர்களுடன் இங்கே வந்து எம்பெருமானைப் பூஜிக்க வந்த காலத்திலே அவர்கள் தாந்தனிடத்தில் அபசாரப்பட்டுக் கண்களை இழந்தனர். பின்பு அவன் அவர்களை மன்னித்து எம்பெருமானிடத்தில் ப்ரார்த்தித்து அவர்களுக்குக் கண்களை மீட்டுக் கொடுத்தான். பின்பும் தொடர்ந்து அவன் எம்பெருமானை வணங்கி வந்து இறுதியில் முக்தி அடைந்தான்.

முற்காலத்தில் சங்க முனிவன் என்பவன் இந்த்ர பதவியை அடையத் தவம் செய்து வந்தான். அந்த ஸமயத்தில் நாரத முனிவர் அங்கே வர, அவரை வணங்கினான். நாரத முனிவர் அவன் தவத்தைப் பற்றிக் கேட்க அவன் விஷ்ணுவை மற்ற தெய்வங்களுக்குச் சமமாக நினைத்தேன் என்று சொல்ல, நாரதர் “நீ பெரிய தவறு செய்தாய். பரப்ரஹ்மமான விஷ்ணுவை நீ மற்ற தெய்வங்களுக்குச் சமமாக நினைத்ததால் நீ கடலிலே சங்காகப் பிறப்பாய்” என்று சபித்தார். தவறுணர்ந்த அவன் சாபவிமோசனத்தை ப்ரார்த்தித்தபடியால், “நீ ஆதிக்ஷேத்ரத்தில் எம்பெருமானின் கருணையால் முக்தி பெறுவாய்” என்று சொல்ல, அவனும் கடலிலே ஒரு சங்காகப் பிறந்து, பிற்காலத்தில் ஆதிக்ஷேத்ரத்தின் அருகில் தாமிரபரணியை வந்தடைந்து, எம்பெருமானையே த்யானித்துக் கொண்டிருந்தான். அவன் இருந்த துறையே சங்கணித் துறை என்று பெயர் பெற்றது. எம்பெருமானும் சங்கு ஜந்மத்தில் இருந்த சங்க முனிக்கும் மற்றும் பல சங்குகளுக்கும் முக்தி அளித்தான். மேலும் தன் திருமேனியை அனைவரும் காணும்படி இந்த திவ்யதேசத்தில் அருள்பாலித்தான். அது மட்டும் இல்லாமல் ஸ்ரீ தேவி, பூமி தேவி, நீளா தேவி நாச்சியார்கள், வராஹப் பெருமாள், கருடாழ்வார் ஆகியோரையும் ப்ரஹ்மாவின் மூலம் இங்கே எழுந்தருளப் பண்ணினான்.

மேலும் ப்ருகு மார்க்கண்டேய ரிஷிகளும், கார்த்தவீர்யார்ஜுனன் என்கிற அரசனும் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனும் இந்த ஸ்தலத்தில் எம்பெருமானை வணங்கியுள்ளார்கள்.

வேத வ்யாஸர் தன்னுடைய புத்ரரான ஸ்ரீ சுகருக்கும், ப்ரஹ்மா வஸிஷ்டருக்கும் ஆதிக்ஷேத்ரத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுவது குருகாபுரி மாஹாத்ம்யத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இப்படி இந்த ஸ்தலத்தின் வரலாற்றை இங்கே சுருக்கமாக அனுபவித்தோம்.

ஆதாரம் – ஆதிநாதர் ஆழ்வார் தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் குருகாபுரி க்ஷேத்ர வைபவத்தை விளக்கும் புத்தகம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment