ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< புராண சரித்ரம்

நம்மாழ்வார் - ஆழ்வார்திருநகரி

திருக்குருகூர் என்னும் ஆதிக்ஷேத்ரம் நம்மாழ்வார் அவதரித்தபின் ஆழ்வார்திருநகரி என்றே ப்ரஸித்தமாக அழைக்கப்படுகிறது. இப்பொழுது நாம் நம்மாழ்வாரின் சரித்ரத்தையும் வைபவத்தையும் சிறிது அனுபவிக்கலாம்.

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு வைகுண்ட ப்ராப்தி கிடைக்க வேண்டும் என்று பல முயற்சிகளைச் செய்கிறான். அழிந்து கிடந்த உலகத்தை மீண்டும் படைப்பது, ஆத்மாக்களுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்களைக் கொடுப்பது, சாஸ்த்ரத்தைக் கொடுப்பது, அதை ரிஷிகளைக் கொண்டு உபதேசிப்பது, தானே அவதாரங்கள் செய்து உபதேசிப்பது என்று பல வழிகளால், ஸம்ஸாரத்தில் கட்டுண்டு இருக்கும் ஆத்மாக்களை உஜ்ஜீவனம் அடையும்படி அருளுகிறான். இம்முயற்சிகளால் திருந்தாதவர்களைத் திருத்துவதற்காக, எப்படி ஒரு வேடன் மானைக் கொண்டு மானைப் பிடிப்பானோ, அதேபோல இவ்வுலகில் இருக்கும் ஆத்மாக்களைக் கொண்டே அனைவருக்கும் உதவலாம் என்ற எண்ணத்துடன், சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அஜ்ஞானத்தைப் போக்கி, எந்தக் கலக்கமும் இல்லாத தெளிவான ஞானத்தை அளித்தான். இப்படி ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். எம்பெருமான் இவர்களைக் கொண்டு, பாசுரங்களைப் பாடவைத்து, அவற்றின் மூலமாக இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் ஞானத்தைப் பிறப்பித்து மோக்ஷம் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்ற ஆசையில் இப்படிச் செய்தான். இப்படி அவதரித்த ஆழ்வார்களுக்குள் நம்மாழ்வார் தலைவராகக் கருதப்படுகிறார்.

இவர் மாறன், மகிழ்மாறன், சடகோபன், நாவீறன், பராங்குசன், வகுளாபரணன், சடஜித், குருகூர் நம்பி என்று பல திருநாமங்களால் போற்றப்படுகிறார்.

கலி பிறந்த சில நாட்களில் வைகாசி மாதம் விசாக நக்ஷத்ரத்தில் இவர் ஆழ்வார்திருநகரிக்கு உட்பட்ட அப்பன்கோயில் என்கிற பகுதியில் காரியாருக்கும் உடையநங்கைக்கும் திருக்குமாரராக அவதரித்தார். காரியார் மற்றும் உடையநங்கை ஆகியோரின் குடும்பங்கள் வழிவழியாக, திருமாலடியார்களாகத் தொண்டு செய்து வந்தவர்கள். இவர்கள் திருக்குறுங்குடி நம்பியைச் சென்று ஸேவித்துப் பிள்ளை வரம் வேண்ட அப்பொழுது நம்பி எம்பெருமான் தானே அவர்களுக்குப் பிள்ளையாக வந்து பிறப்பேன் என்று சொன்னதை நாம் குருபரம்பரை க்ரந்தத்தில் அனுபவிக்கிறோம். இதனாலும், மற்றுமுள்ள இவர் பெருமைகளைப் பார்க்கும்போதும் இவர் எம்பெருமானின் அவதாரமோ!  நித்யஸூரிகளில் ஒருவரின் அவதாரமோ! என்று ஆச்சர்யப்படும்படி இருப்பார் என்று பெரியோர்கள் சொல்லுவர்.

ஒரு குழந்தை இவ்வுலகில் பிறக்கும் நேரத்தில் அஜ்ஞானத்தை ஏற்படுத்தும் சடம் என்ற வாயு வந்து அதைச் சூழ்ந்து கொள்ளும். அதுவே அக்குழந்தைகளின் அறிவைக் கலங்கச்செய்யும். அவ்வாறு இவரையும் சடம் என்ற வாயு சூழ்ந்துகொள்ள, அதை இவர் அப்பொழுதே விரட்டியதால், இவருக்குச் சடகோபன் என்ற திருநாமம் ஏற்பட்டது. மற்ற குழந்தைகள்போல் இல்லாமல் பிறந்தவுடன் இவர் அழாமல், பால் குடிக்காமல் இருந்தார். இவர் தாய் தந்தையர் இவரை திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் ஸந்நிதியில் கொண்டு வந்து ஸமர்ப்பித்து திருப்புளியாழ்வார் என்று சொல்லப்படும் புளிய மரத்தின் அடியில் எம்பெருமானுக்காகவே இவர் இருக்கட்டும் என்று விட்டுச் சென்றனர். இவரும் அங்கேயே பத்மாஸனத்தில்பதினாறு ஆண்டுகள் உண்ணாமல், உறங்காமல், பகவானை த்யானித்துக் கொண்டே தேஜஸ்வியாக வளர்ந்து வந்தார்.

அந்த ஸமயத்தில், திருக்குருகூருக்கு அருகில் இருக்கும் திருக்கோளூரில் நம்மாழ்வாருக்கு முன்பே அவதரித்த ப்ராஹ்மணோத்தமரான மதுரகவி ஆழ்வார் வட நாட்டு யாத்ரையில் இருந்தார். தெய்வ ஸங்கல்பத்தாலே அவர் தெற்கு திக்கிலே ஒரு சோதியைக் கண்டு அதைப் பின்தொடர்ந்து வந்து திருப்புளியாழ்வாருக்கு அடியில் வீற்றிருந்த தேஜஸ்வியான நம்மாழ்வாரை அடைந்தார். நம்மாழ்வாரின் பெருமையை நேரில் கண்டு உணர்ந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே குருவாகவும் தெய்வமாகவும் கொண்டு அவருக்கே கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.

நம்மாழ்வார் நான்கு திவ்யப்ரபந்தங்களைச் சொல்ல, மதுரகவிகள் அவற்றை ஏடுபடுத்தினார்:

  • திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்)
  • திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்)
  • பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்)
  • திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்)

நம்மாழ்வாரின் இந்நான்கு ப்ரபந்தங்களும் நான்கு வேதத்திற்கு ஈடாகும். அதனாலேயே அவர் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றழைக்கப்படுகிறார், அதாவது ஸம்ஸ்க்ருத வேதத்தின் அர்த்தத்தை தமிழில் அருளிச்செய்தவர் என்று. மற்றைய ஆழ்வார்களின் ப்ரபந்தங்களும் வேதத்தின் மற்ற அங்கங்களேயாகும். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துக்கும் திருவாய்மொழியே ஸாரமென்று போற்றப்படுகிறது. நம் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானம், மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் திருவாய்மொழியை ஆதாரமாகக் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்ரீஸுக்திக்கு ஐந்து வ்யாக்யானங்களும் அரும்பதங்களும் எம்பெருமானின் க்ருபையால் இன்று நம்மிடையே கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்பூவுலகில் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்த ஆழ்வார், ஸம்ஸாரத்தில் பற்றில்லாமல் எம்பெருமானையே எப்பொழுதும் த்யாநித்து  வாழ்ந்தார். பல க்ஷேத்ரங்களில் இருக்கும் எம்பெருமான்களுக்கு இவர் தான் இருந்த இடத்தில் இருந்துகொண்டே மங்களாசாஸனம் செய்ய அந்த எம்பெருமான்கள் இவர் இருக்கும் திருப்புளியாழ்வார் அருகில் வந்து மங்களாசாஸனத்தைப் பெற்றுச் சென்றனர். மேலும் தன்னுடைய பரம கருணையினாலே ஸகல சாஸ்த்ரங்களின்  சீரிய அர்த்தங்களையும் தெளிவாகவும் விரிவாகவும் தன்னுடைய ப்ரபந்தங்களில் வெளிட்டருளியுள்ளார். இப்படிப்பட்ட பெருமைகளை உடையவராக இருப்பதால் எப்பொழுதெல்லாம் நாம் குருகூர் என்ற வார்த்தையைக் கேட்கிறோமோ, திருவாய்மொழிப் பாசுரங்களில் பலச்ருதிப் பாசுரம் சேவிக்கும்பொழுது குருகூரை உச்சரிக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் தென்திசையில் உள்ள ஆழ்வார்திருநகரியை நோக்கி அஞ்சலி  செலுத்தவேண்டும் (கைகளைக் கூப்பி வணங்குவது) என்று நம் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

இவ்வாறு இவர் அவதரித்து முப்பத்திரண்டு வருடங்கள் கழிந்த பிறகு பரமபதத்துக்குச் செல்லலாம் என்று ஆசைப்பட்டார். இதை அறிந்த மதுரகவி ஆழ்வார் தன் ஆசார்யனான நம்மாழ்வார் இவ்வுலகை விட்டுச் செல்வதை நினைத்து மிகவும் வருந்தினார். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடத்திலே அவரைத் தொடர்ந்து வணங்கிக் கொண்டிருக்க ஒரு விக்ரஹத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ப்ரார்த்தித்தார். நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரிடத்தில் தாமிரபரணி நதி நீரைக் காய்ச்சினால் ஒரு திருமேனி கிடைக்கும் என்று கூற, மதுரகவி ஆழ்வாரும் அப்படியே செய்தார். அந்தத் தீர்த்தத்தில் இருந்து கூப்பிய கைகளுடன் ஒரு திருமேனி வர, மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் “தேவரீர் அடியேனுக்கு ஆசார்யன் ஆகையால் தேவரீரை உபதேச முத்திரையுடன் ஸேவிக்க ஆசைப்பட்டேன், இப்படிக் கூப்பிய கைகளுடன் வந்துள்ள காரணம் என்ன?” என்று வினவ, அதற்கு நம்மாழ்வார் “இவர் பவிஷ்யதாசார்யர். நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவதரிக்கப்போகும் மஹான்” என்று ராமானுஜரைப் பற்றி உணர்த்தினார். இந்தத் திருமேனிதான் தற்பொழுது நாம், ஆழ்வார்திருநகரியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தில் (எம்பெருமானார்/உடையவர் ஸந்நிதியைச் சுற்றி இருக்கும் நான்கு திருவீதிகள்) எம்பெருமானார் ஸந்நிதியில் ஸேவிக்கும் பவிஷ்யதாசார்யன்/எம்பெருமானார் திருமேனி. பின்பு நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரை மீண்டும் தாமிரபரணி தீர்த்தத்தைக் காய்ச்சுமாறு ஆணையிட, மதுரகவி ஆழ்வாரும் அவ்வாறே செய்ய, அதிலிருந்து நம்மாழ்வாரின் அழகிய திருமேனி கிடைக்க, அதை மதுரகவி ஆழ்வார் மிகவும் உகந்து ஏற்றுக்கொள்கிறார். இதைத்தான் இப்பொழுதும் நாம் தினமும் ஆழ்வார்திருநகரியில் ஸேவிக்கிறோம்.

இதற்குப் பிறகு எம்பெருமானும் நம்மாழ்வாரைத் தானே வந்து பரமபதத்துக்கு அழைத்துச் சென்றான். பிறகு மதுரகவியார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருவுருவத்தை ஆதிநாதப் பெருமாள் கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து, அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார். நாள்தோறும், பலவகை மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து, சூட்டி மகிழ்ந்தார். நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்லாம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார். நம்மாழ்வாரைப் போற்றி பக்திப் பரவசத்துடன் 11 பாசுரங்கள் கொண்ட “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் ப்ரபந்தத்தை  அருளிச்செய்தார். இன்றளவும் மதுரகவி ஆழ்வாரின் திருவம்சத்தவர்கள் “அண்ணாவியார்” என்ற திருநாமத்துடன், ஆழ்வார்திருநகரியில் தொடர்ந்து கைங்கர்யம் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட நம்மாழ்வாரின் வைபவத்தை ஓரளவுக்கு இங்கே அனுபவித்துள்ளோம்.

நம்மாழ்வாரின் தனியன்:

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரநமாமி மூர்த்நா

நம்மாழ்வாரின் வாழி திருநாமம்:

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே
இருக்குமொழி என்னெஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனாய்க் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நம்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment