ஆழ்வார்திருநகரி வைபவம் – நம்மாழ்வார் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< நம்மாழ்வார் சரித்ரமும் வைபவமும்

ஆழ்வார்திருநகரி மற்றும் நம்மாழ்வாரின் வரலாற்றில் நம்மாழ்வாரின் உலா ஒரு மிக முக்யமான விஷயமாக அறியப்படுகிறது. இதைப் பற்றி இங்கே சிறிது அனுபவிக்கலாம்.

சென்ற கட்டுரையில் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு நிகழவிருக்கும் ராமானுஜரின் அவதாரத்தையும் பவிஷ்யதாசார்யர் திருமேனியையும் முன்னமேகாட்டிக்கொடுத்ததை அனுபவித்தோம். நம்மாழ்வாருக்குப் பின்பு ராமானுஜரின் அவதாரத்துக்கு முன்பு நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் இந்நிலவுலகில் அவதரித்து நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை வளர்க்கத் தொடங்கினார்கள். ஸ்ரீமந் நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, நம்மாழ்வாரையும் அவர் பாசுரங்களையும் தேடி ஆழ்வார்திருநகரிக்கு வந்து, நம்மாழ்வாரை ஞானக் கண்ணால் தரிசிக்கும் பாக்யத்தைப் பெற்றார். நேரே அவரிடத்தில் இருந்து அவருடைய நான்கு ப்ரபந்தங்களையும், மற்றைய ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களையும், அர்த்தத்துடன் பெற்றார். ஆசார்ய பரம்பரையில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஸ்தானத்தையும் பெற்றார். நாதமுனிகளின் சிஷ்யர்களுள் ஒருவரான குருகைக் காவலப்பன், இதே ஆழ்வார்திருநகரியில் அவதரித்தவர்.

ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பிறகு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி என்று குரு பரம்பரை நன்றாக வளர்ந்தது. அதற்குப் பிறகு ஆதிசேஷன் அவதாரமாக ஸ்ரீ ராமானுஜர் என்கிற எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து, ஆசையுடையோர்க்கெல்லாம் மோக்ஷம் கிடைக்கும் நல்வழியைக் காட்டினார். எம்பெருமானார் மாறன் அடி பணிந்து உய்ந்தவன் (நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து மேன்மை பெற்றவன்) என்றே தன்னைக் கருதிக் கொண்டார். தன்னிடத்திலே அவருக்கு இருந்த அளவு கடந்த பக்தியைக் கண்ட ஆழ்வார், ஆழ்வார்திருநகரியில் தன் திருவடி நிலையாக இருக்கும் பாக்யத்தை அவருக்கு அருளினார். தன்னுடைய திருவடி நிலைகள் மற்ற இடங்களில் மதுரகவிகள் என்று அழைக்கப்பட்டாலும் ஆழ்வார்திருநகரியில் ‘ஸ்ரீ ராமானுஜம்’ என்றே அழைக்கப்படும் என்று அருளினார்.

எம்பெருமானார் காலத்துக்குப் பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் என்று ஓராண் வழியாக நம் ஸம்ப்ரதாயம் மேன்மேலும் வளர்ந்தது. பிள்ளை லோகாசார்யரின் இறுதிக் காலத்தில் பாரதத்தின் தெற்குப் பகுதிக்கு அந்நியப் படையெடுப்பகளின் மூலம் பேராபத்து ஏற்பட்டது. நம் ஸம்ப்ரதாயத்தின் தலைமைப் பீடமான ஸ்ரீரங்கம் அந்நியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அக்காலத்தில் பிள்ளை லோகாசார்யர் பெரிய பெருமாளுக்கு முன்பு கல் சுவர் எழுப்பி அவரைப் பாதுகத்து, நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தெற்கு நோக்கி, பாதுகாப்பான இடம் தேடிச் சென்றார். பிள்ளை லோகாசர்யர் மதுரைக்கு அருகில் யானைமலையின் பின்புறத்தில் ஜ்யோதிஷ்குடி (கொடிக்குளம்) என்ற இடத்தை அடைந்த பிறகு வயோதிகத்தினால் திருமேனி தளர்ந்தார். திருமலை ஆழ்வார் என்ற தன்னுடைய சிஷ்யர் நம்முடைய ஸம்ப்ரதாயத்தைப் பிற்காலத்தில் தலைமை ஏற்று நடத்துவார் என்று அருளிச்செய்து பின்பு பரமபதத்தை அடைந்தார்.

அதற்குப் பிறகு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கேரளாவில் கோழிக்கோட்டைச் சென்று அடைந்தார். அதே ஸமயத்தில் நம்மாழ்வாரும் ஆழ்வார்திருநகரியில் இருந்து புறப்பட்டு கோழிக்கோட்டை அடைந்தார். இதிலிருந்து பல ஆண்டுகள் ஆழ்வாரும் ஆழ்வார்திருநகரியை விட்டு வெளியில் எழுந்தருளியிருந்தார். ஆழ்வார் கோழிக்கோட்டை அடைந்தவுடன் நம்பெருமாள் அவரை மிகவும் ஆசையுடன் வரவேற்று தன்னுடன் ஏகாஸனத்தில் அமர்த்திக்கொண்டார். அங்கிருந்த போத்திமார்களும் நம்பூதிரிகளும் நம்பெருமாளுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் ஆசையுடன் கைங்கர்யம் செய்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாளும் நம்மாழ்வாரும் திருக்கணாம்பி என்ற க்ஷேத்ரத்தை வந்தடைந்தார்கள். அங்கே சில காலம் இருந்த பின்பு நம்பெருமாள் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார். அங்கிருந்த கைங்கர்யபரர்கள் ஆழ்வாரையும் இன்னும் மேற்கு நோக்கி அழைத்துச் சென்று பாதுகாப்பாக இருத்தலாம் என்று எண்ணி அவ்வாறே செய்ய, ஒரு ஆழமான மலைச்சரிவைக் கண்டு, இங்கேயே ஆழ்வாரைப் பாதுகாப்பாக எழுந்தருளப்பண்ணலாம் என்றெண்ணி ஒரு பேழையில் வைத்து, மலைச்சரிவிலே இறக்கி அங்கே வைத்தார்கள்.

அங்கிருந்து வரும் வழியில் அந்தக் கைங்கர்யபரர்களிடம் இருந்த ஆழ்வாரின் திருவாபரணங்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்தக் கைங்கர்யபரர்களில் ஒருவரான தோழப்பர் என்பவர், மதுரைக்குச் சென்று, அங்கே ராஜாவின் ஸபையில் மூத்த மந்திரியாக இருந்த திருமலை ஆழ்வாரின் உதவியை நாடினார். இவரே பிள்ளை லோகாசார்யரின் பிரியமான சிஷ்யர் மற்றும் பிள்ளை லோகாசார்யராலே நம் ஸம்ப்ரதாயத்துக்கு ஒரு சிறந்த ஆசார்யனாக வருவார் என்று காட்டப்பட்டவர். அவரும் நடந்த விஷயங்களைக் கேட்டு, கேரள நாட்டு ராஜாவுக்கு உதவி கேட்டு ஒரு செய்தி அனுப்பி, அத்துடன் தன்னுடைய அந்தரங்க ஸேவகர்களையும் ஆழ்வாரை மீட்டெடுக்க அனுப்பி வைத்தார். கேரள ராஜாவும் அச்செய்தி கண்டு, தன் படையையும் உடன் அனுப்ப, அனைவரும் தோழப்பர் தலைமையில் பல கைங்கர்யபரர்களுடன், ஆழ்வாரை மீட்டெடுக்கச் சென்றனர். ஆழ்வார் இருந்த இடத்தை ஒரு கருடபக்ஷி அடையாளம் காட்ட, அந்த ஆபத்தான மலைச்சரிவில், தோழப்பர் தாமே ஒரு சங்கிலிப் பலகையில் அமர்ந்து கீழே இறங்கினார். ஆழ்வார் இருந்த பேழையைக் கண்டு அதைப் பலகையில் வைத்து மேலே அனுப்பினார். இரண்டாம் முறை பலகை இறக்கப்பட, தோழப்பர் அதில் ஏறி அமரும்பொழுது தடுமாறிக் கீழே பள்ளத்தில் விழுந்து பரமபதத்தை அடைந்தார். தோழப்பரின் திருக்குமாரர் அதைக் கண்டு கதறி அழ, ஆழ்வார் தாமே அவருக்குத் தந்தையாக இருப்போம் என்று சொல்லித் தேற்றி, அவருக்கு ஆழ்வார் ஸந்நிதியில் அனைத்து மரியாதைகளும் கொடுக்கும்படி ஆணையிட்டார். பிற்பாடு ஆழ்வார் மீண்டும் திருக்கணாம்பியை வந்தடைந்தார். நடந்த ஆச்சர்யமான விஷயங்களைக் கேட்ட திருடர்களும் மனம் திருந்தி ஆழ்வாரின் திருவாபரணங்களை ஆழ்வாரிடமே ஸமர்ப்பித்தனர். திருமலை ஆழ்வாரும் நம்மாழ்வாரைத் திருக்கணாம்பியில் வந்து மிகவும் அன்புடன் தொழுதார்.

ramanujar-srisailesa-mamunigal

மதுரைக்குத் திரும்பிய திருமலை ஆழ்வாரைப் பிள்ளை லோகாசார்யரின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கூரகுலோத்தம தாஸர் சந்தித்து, அவருக்கு ஆசார்ய ஸம்பந்தத்தை நினைவூட்டி, நல்ல உபதேசங்களைச் செய்து, ராஜ்யத்தைத் துறந்து ஆழ்வாருக்கே அடிமை என்னும் நிலைக்குக் கொண்டுவந்தார். திருமலையாழ்வாரும் கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப்பிள்ளை, நாலூராச்சான் பிள்ளை ஆகியோரிடத்திலே நம் ஸம்ப்ரதாயத்தின் ஆழ்பொருள்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, பிள்ளை லோகாசார்யரின் திருவுள்ளப்படி, நம் ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யாக ஆனார். திருமலையாழ்வாரும் ஆழ்வாரை ஆழ்வார்திருநகரியில் மீண்டும் எழுந்தருளப்பண்ண எண்ணி, அங்கே சென்று பார்த்தபோது , அங்கே ஊர் முழுதும் காடுமண்டிக் கிடந்தது. காட்டை வெட்டி, நாடாகச் சீரமைத்து, பின்பு ஆழ்வாரை ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளப்பண்ணி, ஆதிநாதர் ஆழ்வார் கோயிலை புனருத்தாரணம் செய்தார். அக்காலத்தில் திருப்புளியாழ்வார் அடியில் புதைந்து கிடந்த பவிஷ்யதாசார்யன் (எம்பெருமானார்) திருமேனி இவருக்குக் கிடைக்க, அதை ஊரின் மேற்குப் பகுதியில் ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அமைத்து, ஒரு கோயிலைக் கட்டி, அங்கே எழுந்தருளப்பண்ணி, ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும், எம்பெருமானார் கோயிலிலும் கைங்கர்யங்கள் செவ்வனே நடக்கும்படிச் செய்தார். ஆழ்வாரிடத்திலும் திருவாய்மொழியிலும் கொண்ட அதீத பக்தியினால், சடகோப தாஸர் என்றும் திருவாய்மொழிப் பிள்ளை என்றும் சிறப்புத் திருநாமங்களைப் பெற்றார். இன்றளவும் இவர் வம்சத்தவர்கள் இங்கும் இதைச் சுற்றியுள்ள திவ்யதேசங்களிலும் விடாமல் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.

இந்தச் சரித்ரத்தை நாம் “நம்மாழ்வார் உலா” என்று கருதலாம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

ஆழ்வார்திருநகரியில் அவதரித்து பிற்காலத்தில் ஸ்ரீரங்கநாதனுக்கே ஆசார்யனான மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையைத் தனக்கு ஆசார்யனாகக் கொண்டு முதன் முதலில் ஆழ்வார்திருநகரியிலேயே கைங்கர்யம் செய்து வந்தார். இவருடைய சரித்ரத்தையும் வைபவத்தையும் அடுத்த பதிவில் அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org

ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment