அநத்யயன காலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யானுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஓத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஓதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் . மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல. த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது. த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.

அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் தொடங்கப்படும். பொதுவாக, கோயில்களில் அத்யயன உத்ஸவத்துக்கு அடுத்த நாள் முடிந்து விடும். இல்லங்களில் தை ஹஸ்தம் அன்று மீண்டும் பாசுரங்களைத் தொடங்குவது என்ற க்ரமத்தைப் பொதுவாகப் பலரும் கடைபிடிக்கிறார்கள்.

முதன் முதலில் இந்த அத்யயன உத்ஸவத்தை நம்மாழ்வார் பரமபதம் அடைவதைக் கொண்டாடும் வகையில் திருமங்கை ஆழ்வார் திருவாய்மொழி ஸேவாகாலத்துடன் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி ஸமயத்தில் நடத்தினார். ஸ்ரீமந் நாதமுனிகள் அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையும் ஸேவிப்பதைத் தொடங்கினார். எம்பெருமானார் இது எல்லா திவ்யதேசங்களிலும் கொண்டாடப்படும்படிச் செய்தார். பிற்பட்ட ஆசார்யர்கள் இதைச் சிறந்த முறையில் நடத்தும்படிச் செய்தனர்..

அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?

சில உபயோகமான குறிப்புகள்:

  • பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில்,
    திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கப்படும்.
  • மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.
  • கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
  • க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை (மார்கழி மாதத்தில் கோயில்களைப் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).
  • கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது),ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம் (இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும். கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.
  • திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை
    சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக்கொள்ளவும்.
  • பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.
  • பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும். தொடர்ந்து “ஸர்வ தேச தசா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.
  • பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம். மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
  • ரஹஸ்ய க்ரந்தங்களைக் கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment