க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 41 – பௌண்ட்ரக வாஸுதேவன் மற்றும் சீமாலிகன் வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< பாணாஸுர வதம்

வாஸுதேவனான கண்ணனுடைய பெருமைகளைக் கண்ட பௌண்ட்ரகன் என்பவன் தன்னையே உண்மையான வாஸுதேவன் என்றும் பரதெய்வம் என்றும் கருதிக் கொண்டு, கண்ணனைப் போலே சங்கம் சக்ரம் இவைகளை வைத்துக் கொண்டு திரிந்து வந்தான். இவன் கரூஷ தேசத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு முறை த்வாரகைக்கு ஒரு தூதன் மூலமாக “கண்ணா! நானே உண்மையான வாஸுதேவன். எல்லாருக்கும் தஞ்சமாக இருக்கத் தகுந்தவன். ஆகையால் நீ உன்னுடைய இந்த வாஸுதேவன் என்கிற பெயரையும் சங்க சக்ர வாள் கதை ஆகியவைகளையும் துறந்து விடு. அல்லது, என்னிடத்தில் யுத்தத்துக்கு வா” என்று செய்தி அனுப்பினான். இதைக் கேட்ட உக்ரஸேனர் முதலானவர்கள் கைகொட்டிச் சிரித்தனர். இதைக் கேட்ட கண்ணன் “முட்டாளே! நான் உன்னை விரைவில் வீழ்த்துகிறேன்” என்று அந்த தூதன் மூலமாகச் செய்தி அனுப்பினான்.

கண்ணன் தன்னுடைய தேரில் ஏறிக் கொண்டு காசிக்கு அருகிலே சென்றான். காசிராஜன் பௌண்ட்ரகனுக்கு நண்பன் ஆகையாலே, பௌண்ட்ரகன் முதலிலும், காசிராஜன் பின்பும் பெரிய படையோடு வந்தார்கள். பௌண்ட்ரகன் கண்ணனைப் போலே நடை, உடை, பாவனை, எல்லா ஆயுதங்கள், ஆபரணங்களை ஏந்திக்கொண்டு வந்தான். அவைகளைக் கண்டு நன்றாகச் சிரித்தான் கண்ணன். அதற்குப் பிறகு பெரிய யுத்தம் தொடங்கியது. எதிரிகள் கண்ணனைப் பல விதத்தில் தாக்கினார்கள். கண்ணனோ தன் சக்ராயுதத்தைக் கொண்டும் மற்றும் பல ஆயுதங்களைக் கொண்டும் எதிரிகளை அழித்தான். பிறகு பௌண்ட்ரகனின் தலையைச் சக்ராயுதத்தைக் கொண்டு அழித்தான். பிறகு அம்புகளால் காசிராஜனின் தலையை அறுத்து வீழ்த்தினான். பிறகு த்வாரகையை வந்தடைந்தான். பௌண்ட்ரகன் கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் நற்கதியை அடைந்தான்.

அதற்குப் பிறகு, காசிராஜனின் புத்ரனான ஸுதக்ஷிணன் கண்ணனைப் பழிவாங்குவதற்கு ருத்ரனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தை மெச்சிய ருத்ரன் அவனை தக்ஷிணாக்னியைக் குறித்து அபிசார விதியைப் (மற்றவர்களைக் கொல்லும் ப்ரயோகம்) பண்ணச் சொல்ல, அவனும் அவ்வாறே செய்தான். அதிலிருந்து ஒரு பெரிய அக்னி உருவம் தோன்றி, அது த்வாரகையை நோக்கிச் சென்றது. அதன் வரவைக் கண்ட த்வாராகாவாஸிகள் கண்ணனிடம் சென்று தஞ்சம் புக, கண்ணன் தன் சக்கரத்தாழ்வாரைக் கொண்டு அந்த அக்னியை விரட்ட, அது மீண்டும் காசிக்கே சென்று, அதை அனுப்பிய ஸுதக்ஷிணனையும் காசி நகரத்தையும் அழித்து அதுவும் அழிந்தது.

ஆழ்வார்கள் பாசுரங்களில் ஓரிரண்டு இடங்களில் இந்தச் சரித்ரம் காட்டப்பட்டுள்ளது.

  • திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்தவிருத்தத்தில் “காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்” என்று காட்டியுள்ளார்.
  • நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் “ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்” என்பதின் வ்யாக்யானத்தில் நம்பிள்ளை “பௌண்ட்ரக வாஸுதேவன் போன்ற ராஜாக்கள்” என்று விளக்குகிறார்.
  • திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி பாசுரம் “புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து” என்பதை விளக்கும் இடத்தில் பெரியவாச்சான் பிள்ளை தன் வ்யாக்யானத்தில் இது பௌண்ட்ரகனையோ ஹிரண்யாக்ஷனையோ குறிக்கலாம் என்று காட்டுகிறார்.

சீமாலிகன் சரித்ரத்தை பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்” என்று காட்டியுள்ளார்.

இதற்கு வ்யாக்யானம் அருளிய மணவாள மாமுனிகள், சீமாலிகன் சரித்ரத்தை அழகாகக் காட்டியுள்ளார். இது இதிஹாஸம் முதலியவைகளில் உள்ளது என்றும் அருளுகிறார். மாலிகன் என்பவன் அஸுரனாக இருந்தாலும் க்ருஷ்ணனாலே நண்பனாகக் கொள்ளப்பட்டான். அவன் எம்பெருமானிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றான். அதைக் கொண்டு ஸாதுக்களை ஹிம்ஸித்து வந்தான். தன் நண்பனாக இருப்பதால் எப்படி அவனை அழிப்பது என்று எம்பெருமான் யோசித்தான். அப்பொழுது மாலிகனே கண்ணனிடத்தில் “எனக்கு சக்ராயுதத்தை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக்கொடு” என்று கேட்க, கண்ணன் “அது முடியாது” என்று மறுக்க, மாலிகன் அவனிடத்தில் கோபமாகப் பேசினான். இதைக் காரணமாகக் கொண்டு கண்ணன் மாலிகனைக் கொன்று விடலாம் என்று முடிவு செய்தான். எப்படி சக்கரத்தை விடுவது என்று சொல்லிக் கொடுத்தான். ஆனால் விட்ட சக்கரத்தை எப்படி வாங்குவது என்பதை சொல்லிக் கொடுக்கவில்லை. மாலிகன் கண்ணனின் கையிலிருந்து சக்கரத்தை வாங்கி விட்டான். அது திரும்பி வரும்போது ஒழுங்காக வாங்காததால் அவனுடைய தலையை அறுத்து, அதற்குப் பிறகு கண்ணனிடம் திரும்பியது. இவன் க்ருஷ்ணனுக்கே நண்பனாக இருந்ததால், இவனுக்கு ஸ்ரீமாலிகன் அல்லது சீமாலிகன் என்ற பெயர் நிலைத்து நின்றது.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • உண்மையில் அனைத்து ஆத்மாக்களும் எம்பெருமானுக்கு அடிமைகளே. சிலர் தங்களையே பகவான், ஈச்வரன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இப்படிச் சொல்பவர்களை நம்பினால், அவர்களோடு சேர்ந்து அவர்களை நம்பியவர்களும் அழிந்து போவார்கள்.
  • எம்பெருமானைப் போலே தோற்றம் அளித்தாலும், எம்பெருமானுக்கு நண்பனாக இருந்தாலும், எம்பெருமானிடத்தில் உண்மையான அன்பில்லாதவர்களை எம்பெருமான் எளிதில் அழித்து விடுகிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment