ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஆரண்ய காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< அயோத்யா காண்டம்

தண்டகாரண்யத்தை அடைந்தபின் ஸ்ரீ ராமன், ஸீதாப் பிராட்டி மற்றும் லக்ஷ்மணனை அங்கிருந்த ரிஷிகள் வந்து சந்தித்தார்கள். அவர்கள் குறைகளைக் கேட்டறிந்த ஸ்ரீ ராமன், அவர்கள் ராக்ஷஸர்களால் மிகவும் துன்புறுத்தப்படுவதை உணர்ந்தான். அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்தான். பயண கதியில் விராதன் என்னும் அரக்கன் வந்து ஸீதாப் பிராட்டியை கவர்ந்து செல்லப் பார்க்க, ஸ்ரீ ராமன் விராதனை வீழ்த்திப் பிராட்டியை மீட்டான்.

அதற்குப் பிறகு சரபங்க முனியின் ஆச்ரமத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆசி பெற்று, அங்கிருந்த முனிவர்கள் தங்கள் துன்பங்களை அறிவிக்க, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அங்கிருந்து ஸுதீக்ஷ்ணரின் ஆச்ரமத்தை அடைந்து அவரிடத்திலும் ஆசி பெற்று, அங்கிருந்து அகஸ்த்ய முனிவரையும் சந்தித்து அவரிடத்தில் இருந்து ஒரு சிறந்த வில்லைப் பெற்று, அவரின் வழிகாட்டுதலின்படி பஞ்சவடியை நோக்கிச் சென்றனர்.

அங்கே போகும் வழியில், அவர்கள் ஜடாயு மஹாராஜரைச் சந்திக்க, அவரும் தன்னுடைய நெருங்கிய நண்பரான தசரதனின் புத்ரனான ஸ்ரீ ராமனுக்கு உதவ விரும்புவதைத் தெரிவித்தார். ஸ்ரீ ராமனும் ஜடாயுவை மிகவும் மதித்து அவரின் ஆசியைப் பெற்றார்.

பஞ்சவடியை அடைந்த பின்பு லக்ஷ்மணன் ஒரு ஆச்ரமத்தை அமைக்க அதில் மூவரும் ஆனந்தமாக வாழத் தொடங்கினார்கள். அந்த ஸமயத்தில் அங்கே ராவணனின் தங்கையான ஸூர்ப்பணகை வந்து சேர்ந்தாள். ராக்ஷஸியான அவள் ஸ்ரீ ராமனின் அழகான திருமேனியைக் கண்டு அதிலே மிகவும் ஈர்க்கப்பட்டாள். அவள் உடனே ஸ்ரீ ராமனை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவனிடம் சென்று தன் ஆசையைச் சொல்ல அவனோ தான் முன்பே திருமணம் ஆனவன் என்றும் தன் தம்பியான லக்ஷ்மணன் தனியாக உள்ளான் என்றும் சொல்ல, அவள் லக்ஷ்மணனிடத்தில் சென்றாள். அவனும் தான் தன் அண்ணனுக்கு அடிமையாக இருப்பதைச் சொல்லி தன்னால் அவளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னான். இதனால் கோபமுற்ற அவள் நேரே ஸீதாப் பிராட்டியைக் கண்டு அவளே தனக்கு விரோதி என்று எண்ணி அவளைத் தாக்கச் செல்ல, அப்பொழுது ஸ்ரீ ராமனின் ஆணையின் பேரில் லக்ஷ்மணன் அவளுடைய காதுகளையும் மூக்கையும் தன் வாளாலே அறுத்தான். அங்கிருந்து ஓடிச் சென்ற அவள், கரன் மற்றும் தூஷணனிடம் சென்று நடந்ததைச் சொல்ல, அவர்கள் 14000 ராக்ஷஸர்களுடன் போர் தொடுத்து வர, ஸ்ரீ ராமன், தனியாக நின்று அவர்களை அழித்தான். அவளும் உடனே இலங்கைக்குச் சென்று, தன் அண்ணனான ராவணிடம் முறையிட, அவன் நடந்த விஷயங்களைக் கேட்டு, அவளின் யோசனைப்படி, ஸீதாப்பிராட்டியைக் கவர்ந்து வரத் திட்டம் தீட்டினான். தன் மாமாவான மாரீசனிடம் வேண்டிக் கேட்டு, அவனை ஒரு மாய மானாக உருவெடுத்துக் கொண்டு ஸ்ரீ ராமனின் ஆச்ரமத்துக்கு அருகில் செல்லச் சொன்னான். மாரீசனும் முதலில் மறுத்தாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு அவ்வாறே சென்றான். பிராட்டியும் அந்த மாய மானைக் கண்டு மிகவும் ஆசைப்பட்டு ஸ்ரீ ராமனிடம் அந்த மானைப் பிடித்துத் தருமாறு கேட்டாள்.

லக்ஷ்மணன் இந்த மான் ஸந்தேஹப்படும்படி இருக்கிறது என்று தடுத்தும் ஸ்ரீ ராமன் அந்த மானின் பின் போகத் தொடங்கினான். சற்று நேரம் கழித்து ஸ்ரீ ராமன் அந்த மானை அடித்து வீழ்த்த அப்பொழுது மாரீசன் ஸ்ரீ ராமனின் குரலில் “ஸீதே! லக்ஷ்மணா!” என்று கதறி அழைக்க, அதைக்கேட்ட பிராட்டி, லக்ஷ்மணனை உடனே சென்று ஸ்ரீ ராமனுக்கு உதவுமாறு அனுப்ப, லக்ஷ்மணனும் வேறு வழியின்றி ஸ்ரீ ராமனைத் தேடிச் சென்றான். அந்த ஸமயத்தில் ராவணன் ஒரு ஸந்யாஸி வேடத்தில் வந்து, ஸீதையைக் கவர்ந்து சென்றான். ஆகாச மார்கத்தில் போகும்பொழுது ஸீதாப் பிராட்டி தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரலிட, ஜடாயு மஹாராஜர் வந்து ராவணனோடே யுத்தம் செய்தார். ஆனால் ராவணன் தன் வாளால் அவரை வெட்டித் தள்ளினான். ராவணன் ஸீதாப் பிராட்டியை இலங்கையில் அசோக வனத்திலே சிறை வைத்தான்.

இங்கே ஸ்ரீ ராமனும் லக்ஷ்மணனும் ஸந்தித்து, நடந்ததைப் புரிந்து கொண்டு, தங்கள் இருப்பிடம் வந்து பார்த்தால் அங்கே ஸீதாப்பிராட்டி இல்லாததால், அவளைத் தேடத் தொடங்கினார்கள். ஸ்ரீ ராமனோ மிகவும் வருந்தினான். அப்பொழுது அவர்கள் ஜடாயு மஹாரஜரைக் கண்டு மிகவும் துன்புற்றார்கள். ஸ்ரீ ராமன் ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷத்தை அளித்து, அவரின் சரம கைங்கர்யங்களைத் தானே செய்தான்.

வழியில் கபந்தன் என்பவன் ஸ்ரீ ராமனையும் லக்ஷ்மணனையும் பிடிக்க, அவனுக்கும் ஸ்ரீ ராமன் சாப விமோசனத்தை அளித்தான். கபந்தன் ஸ்ரீ ராமனிடம் ஸுக்ரீவனைச் சென்று ஸந்திக்குமாறு கூறினான்.

வழியில் ஸ்ரீ ராமன் மதங்க முனிவரின் ஆச்ரமத்தை அடைந்து, அங்கு தனக்காகக் காத்திருந்த சபரிக்கு அனுக்ரஹத்தை அளித்தான், அவள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கனிகளை உண்டு, அவளுக்கு மோக்ஷத்தையும் அளித்தான். அவள் கூறினபடி பம்பா என்கிற ஏரியை இருவரும் அடைந்தனர்.

தாத்பர்யங்கள்

  • தண்டகாரண்யத்து ரிஷிகளைக் கண்ட ஸ்ரீ ராமன் மிகவும் லஜ்ஜையடைந்தான். அவர்களிடத்தில் தான் மிகவும் கால தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கோரினான். ஸீதாப் பிராட்டியின் தூண்டுதலின் பேரில் ராக்ஷஸர்களை அழித்து விரைவில் அவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தினான்.
  • ஸூர்ப்பணகை ஸ்ரீ ராமனை விரும்பினாள். ஆனால் அவள் பிராட்டியை அழித்து எம்பெருமானை அடைய வேண்டும் என்கிற க்ரூரமான எண்ணத்தைக் கொண்டிருந்தாள். அதனால் அவள் தன் காதுகளையும் மூக்கையும் இழந்தாள்.
  • கர தூஷணாதி 14000 ராக்ஷஸர்களையும் தனி ஒருவனாக ஸ்ரீ ராமன் அழித்தான். ஸீதாப் பிராட்டி அவன் வீரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, அவனை ஆலிங்கனம் செய்து அவன் திருமேனியில் இருந்த யுத்தத்தில் ஏற்பட்ட புண்களைப் போக்கினாள்.
  • மாரீசன் முன்பே ஸ்ரீ ராமனின் அம்பால் அடிபட்டு ஸ்ரீ ராமனை நினைத்தாலே அஞ்சியவன். ஆனாலும் ராவணனுக்கு உதவவில்லை என்றால் ராவணன் கையால் மரணம் என்பதை உணர்ந்து ஸ்ரீ ராமனின் அம்பாலே மரணம் அடைவது சிறந்தது என்று எண்ணி மாயமானாகப் போவதற்கு ஒத்துக்கொண்டான்.
  • ஸீதாப் பிராட்டி ஸ்ரீ ராமன் அருகிலே இருந்தும் மானைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஸ்ரீ ராமனையே இழந்தாள். இது ஒரு லீலை என்றாலும், இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, எம்பெருமான் இருக்க, வேறு விஷயங்களை ஆசைப்படக் கூடாது என்பது. அதே போல அவள் லக்ஷமணனிடத்திலும் கடும் வார்த்தைகளைச் சொன்னாள். அதுவும் அவளுக்கு விபரீதமாக முடிந்தது. இதுவும் லீலையே என்றாலும், பாகவத அபசாரத்தின் க்ரூரமான விளைவைக் காட்டுகிறது.
  • ஸீதாப் பிராட்டியை ராவணன் கவர்ந்து சென்றான் என்று சொல்வது பொருத்தமற்றது. ஆழமாகப் பார்த்தோம் என்றால் ராவணனாலே சிறை வைக்கப்பட்டிருந்த தேவஸ்த்ரீகளை விடுவிக்க, ஸீதாப் பிராட்டி தானே வலியச் சென்று இலங்கையை அடைந்தாள் என்பதே உண்மை. அவள் அங்கே சென்றால்தான் ஸ்ரீ ராமன் வந்து இலங்கையை அழித்து அவர்களை விடுவிப்பான் என்ற எண்ணத்தில் பிராட்டி அவ்வாறு செய்தாள்.
  • ஸீதாப் பிராட்டியைப் பிரிந்து ஸ்ரீ ராமன் துன்பப்பட்டதைப் பார்த்து நாம் அறிய வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஸம்ஸாரம் மிகக் கொடுமையானது. எம்பெருமானே வந்தாலும் இங்கே சில துன்பத்தை அனுபவிக்க நேரும். அதனால் ஸம்ஸாரத்தில் இருந்து எம்பெருமான் மற்றும் ஆசார்யன் அருளால் விரைவில் முக்தி அடைந்து பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது.
  • சபரி தானே தேர்ந்தெடுத்த கனிகளை ஸ்ரீ ராமனுக்கு அளித்ததில், சிலர் அவள் அதைத் தான் சுவைத்துப் பார்த்துக் கொடுத்ததாகச் சொல்லுவர்கள் உயர்ந்த பக்தியாலே அப்படிச் செய்வதை எம்பெருமான் உகந்து ஏற்றுக்கொள்வான் என்பதால் அப்படிச் சொல்வதில் தவறில்லை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment