ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
லக்ஷ்மணனுடன் பம்பா ஏரிக்கரையை அடைந்த ஸ்ரீ ராமன், அங்கிருந்த இயற்கை அழகைக் கண்டு, ஸீதையின் பிரிவால், அதை அனுபவிக்க முடியாமல் வருந்தினான். மிகவும் புலம்பினான். அந்த ஸமயத்தில் அவர்கள் வரவை ரிஷ்யமுக மலையின் மேலிருந்த ஸுக்ரீவன் கண்டான். ஸுக்ரீவனுக்கும் அவன் அண்ணனான வாலிக்குமான பகையால், ஸுக்ரீவன் இந்த மலையில் மறைந்து வாழ்ந்து வந்தான். அவனுடன் ஜாம்பவான், ஹனுமன் போன்றவர்கள் துணையாக இருந்தனர். ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களைக் கண்ட ஸுக்ரீவன் இவர்கள் வாலியால் அனுப்பப்பட்டவர்களோ என்று பயந்தான். அதைக் கண்ட ஹனுமன் தான் போய் அவர்கள் யார் என்று பார்த்து வரச் சென்றான்.
ஹனுமன் ஒரு அந்தணன் வேடத்தில் அவர்களை அடைந்தான். ஸ்ரீ ராமனை அருகில் சென்று கண்டதும் ஹனுமனுக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. பரம்பொருளான பகவானைக் கண்டுவிட்டதை உணர்ந்தான். அவனுக்கே தான் இனி ஆட்பட்டிருக்க வேண்டும் என்றும் உறுதி பூண்டான். அவர்களிடத்தில் சென்று அவர்கள் யாரென்று கேட்க, லக்ஷ்மணன் நடந்த விஷயங்களை விரிவாகச் சொல்லி, இப்பொழுது ஸுக்ரீவனைக் காண வந்திருப்பதைச் சொன்னான். அதைக் கேட்டு மகிழ்ந்த ஹனுமன் தன் உண்மை உருவத்துக்கு மாறி, அவர்களை வணங்கி, அவர்களை ஸுக்ரீவனிடத்தில் அழைத்துச் சென்றான். அவர்களை ஸுக்ரீவனுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் வந்த நோக்கத்தை அறிவிக்க, ஸுக்ரீவனும் மகிழ்ச்சி அடைந்தான். ஸ்ரீ ராமனும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாக ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதாகச் சபதம் செய்தனர். ஸுக்ரீவனையும் ஸ்ரீ ராமன் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான்.
ஸ்ரீ ராமன், வாலியை வீழ்த்தி ஸுக்ரீவனுக்கு ராஜ்யத்தைப் பெற்றுக் கொடுப்பதாகச் சொன்னான். அதில் ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் ஸ்ரீ ராமன், ஒரே அம்பால் ஏழு மராமரங்களை வீழ்த்தினான். அதற்குப் பிறகே ஸ்ரீ ராமனின் சக்தியில் ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வாலியுடன் ஸுக்ரீவன் சென்று யுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, அவ்வாறே ஸுக்ரீவன் சென்று வாலிக்கு அறைகூவல் விடுத்தான். இருவரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஸ்ரீ ராமன் வாலியைக் கொல்லப் பார்க்க, ஸஹோதரர்கள் இருவரும் ஒரே உடலமைப்புடன் இருந்ததால், அது முடியவில்லை. ஸுக்ரீவன் மீண்டு வந்தான். அடுத்த முறை மீண்டும் யுத்தத்துக்கு அழைத்தான். இந்த முறை, ஸுக்ரீவனுக்கு ஒரு மாலை அணிவித்து அவனை எளிதில் அடையாளப்படுத்தப் பட்டது. இருவருக்கும் கடும் யுத்தம் நடக்க, அப்பொழுது ஸ்ரீ ராமன் தன் அம்பால், மறைந்திருந்து வாலியை அடித்து வீழ்த்தினான்.
வாலி ஸ்ரீ ராமனின் அம்பைக் கண்டு ஸ்ரீ ராமனிடத்தில் அவன் செய்தது சரியா என்று கேட்க, ஸ்ரீ ராமன் வாலிக்கு தர்மத்தை விளக்கி ஸமாதனப்படுத்தி, அவனுக்கு நற்கதி அளித்தான். அதற்குப் பிறகு ஸுக்ரீவனுக்கு ஸ்ரீ ராமனே பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
அதற்குப் பிரகு 4 மாதங்கள் மழைக்காலமும், இலையுதிர் காலமுமாக அமைய, அது முடிந்து ஸ்ரீ ராமனுக்கு உதவுவதாக ஸுக்ரீவன் வாக்களிக்க, ஸ்ரீ ராமனும் பொறுமையாகக் காத்திருந்தான். ஆனால் ஸுக்ரீவனோ உலக இன்பத்தில் திளைத்திருந்து இதை முற்றும் மறந்தான். ஸ்ரீ ராமன் லக்ஷ்மணனை அனுப்பி ஸுக்ரீவனுக்கு அறிவுரை சொல்லித் திருத்தி, ஸீதாப் பிராட்டியைத் தேடும் கார்யத்தைத் தொடங்கினான்.
பல வானரர்களை ஸுக்ரீவன் பல திசைகளில் அனுப்பினான். அப்பொழுது, ஸ்ரீ ராமன், தன் கணையாழியை (மோதிரத்தை) ஹனுமனிடத்தில் கொடுத்து அதை ஸீதாப் பிராட்டியிடத்தில் காட்டுமாறு கூறினான். கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் சென்ற வானரங்கள் தோல்வியோடு திரும்பினார்கள். தெற்கு நோக்கிச் சென்ற ஹனுமன் மற்றும் பலரும் ஜடாயுவின் அண்ணனான ஸம்பாதியைச் சந்திக்க, அவர் ஸீதாப் பிராட்டி, லங்கையில் இருப்பதைத் தன் கூரிய கண்களால் பார்த்து சொன்னார்.
மிகுந்த பலம் பொருந்திய ஹனுமன் தன் பெரிய சக்தியால், கடலைக் கடந்து லங்கையை அடைந்து, அங்கே எல்லா இடங்களிலும் தேடி, ஒரு வழியாக அசோக வனத்தில் மிகவும் தீனமான நிலையில் இருந்த ஸீதாப் பிராட்டியைக் கண்டான். அப்பொழுது ஸீதாப் பிராட்டி தன் கூந்தலிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு தன்னை முடித்துக் கொள்ளும் அளவுக்குத் துணிந்திருந்தாள். அதை ஹனுமன் ஸ்ரீ ராம சரித்ரத்தைச் சொல்லித் தடுத்து, தான் ஸ்ரீ ராம தூதன் என்பதை அவளுக்குத் தெரிவித்து, ஸ்ரீ ராமனின் கணையாழியைக் கொடுத்தான். அதைக் கண்டு ஸீதாப் பிராட்டி மிகவும் ஈடுபட்டாள். ஹனுமன் ஸ்ரீ ராமனுக்கும் ஸீதைக்கும் நடந்த பரிமாற்றங்களை விளக்கி அவளுக்கு இன்னமும் நம்பிக்கை ஏற்படுத்தினான்.
தாத்பர்யங்கள்
- அவதார நிலையிலும் எம்பெருமானால் பிராட்டியைப் பிரிந்து இருக்க முடியாது. அதனால் அவளை எல்லா இடமும் தேடியும், அவள் கிடைக்காததால் மிகவும் வருந்தினான்.
- உண்மையான பக்தனுக்கு பகவானைக் கண்டாலே பேரானந்தம் ஏற்பட்டு விடும். அவன் அந்த க்ஷணமே தன்னை பகவானுக்கு என்றே எழுதிக் கொடுத்து விடுவான். இதை நாம் ஹனுமனின் விஷயத்தில் காணலாம்.
- பகவானே நேரில் வந்திருந்தாலும், அவன் தன் சக்தியை மறைத்து மனித உருவில் இருந்ததால், ஸுக்ரீவன் ஸ்ரீ ராமனைப் பரிசோதித்தே நம்பிக்கை பெறுகிறான். இது இவ்வுலக இயல்பு.
- வாலி வதம் மிகவும் ஆராயப்பட்ட ஒன்று. ஆனால் அக்காலத்திலேயே வாலிக்கே ஸ்ரீ ராமன் விளக்கம் கொடுத்து அவனையே ஸமாதானப்படுத்தி விட்டான். வாலி தன் தம்பிக்கு அநீதி இழைத்தும் தம்பியின் மனைவியைக் கவர்ந்து வைத்திருந்தும், பெரும் குற்றங்கள் செய்தவன். அதனால் தண்டிக்கப்பட்டான். வானரங்கள் மிருகங்களாகையாலே, அவைகளை மறைந்திருந்து கொல்வதும் தவறல்ல.
- ஸுக்ரீவன் ஸ்ரீ ராமனுக்கு உதவுவதை மறந்திருந்த காலத்தில் ஸ்ரீ ராமன் அவனை லக்ஷ்மணனைக் கொண்டு திருத்தினான். அடியார்கள் விஷயத்தில் எம்பெருமான் பல முயற்சிகள் செய்து அவகளைத் திருத்தப் பார்ப்பான்.
- ஸ்ரீ ராமன் ஹனுமனிடத்தில் தன் கணையாழியைக் கொடுத்ததில் இருந்தே அவனே பிராட்டியைக் கண்டுபிடிப்பவன் என்பது உறுதி செய்யப்பட்டது.
- ஹனுமனும் தன்னுடைய அழகிய பேச்சால் மிகவும் விபரீதமான முடிவை எடுத்திருந்த பிராட்டியைக் காப்பாற்றி, அதன் மூலம் ஸ்ரீ ராமனையும் காப்பாற்றினான். இதுவே சிறந்த கைங்க்கர்யம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – கிஷ்கிந்தா காண்டம்”