ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
சில காலத்துக்குப் பிறகு ஸீதாப் பிராட்டி திருவயிறு வாய்த்தாள் (கர்ப்பம் அடைந்தாள்). அப்பொழுது நாட்டின் ஒரு குடிமகன் அவள் ராவணனின் இடத்தில் இருந்து வந்ததைச் சொல்ல, அதைக் கேட்ட ஸ்ரீ ராமன் பிராட்டியை லக்ஷ்மணனைக் கொண்டு காட்டுக்கு அனுப்பினான். அங்கே வால்மீகி ரிஷியின் ஆச்ரமத்தில் அழகான இரண்டு குழந்தைகளை ஈன்றெடுத்து அவர்களுக்கு குசன் என்றும் லவன் என்றும் பெயர் சூட்டினாள். அவர்கள் வளர்ந்து, வால்மீகியின் அருளால் ஸ்ரீ ராம சரித்ரத்தை நன்றாகக் கற்று அதை நன்றாகப் பாட்டாகப் பாடினார்கள். இதைக் கேள்வியுற்ற ஸ்ரீ ராமன் அவர்களைத் தன் ஸபைக்கு வரவழைத்து, தன் சரித்ரத்தைத் தானே கேட்டு மகிழ்ந்தான். அதன் பின் ஸீதாப் பிராட்டியை வரவழைத்து மீண்டும் ஒரு முறை தன் பாதிவ்ரத்யத்தை (பதிவ்ரதா தர்மம்) அக்னி ப்ரவேசம் மூலம் நிரூபிக்கச் செய்தான். அப்பொழுது, ஸீதாப் பிராட்டி அவன் ஆணைப்படி செய்து உடனே பூமிப் பிராட்டியாலே பூமிக்குள்ளே ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரமபதத்தைச் சென்றடைந்தாள்.
இவ்வாறு ஸீதாப் பிராட்டி மூன்று முறை ஸ்ரீ ராமனைப் பிரிந்தாள். இதன் தாத்பர்யத்தைப் பிள்ளை லோகாசார்யர் தன்னுடைய சிறந்த படைப்பான ஸ்ரீவசன பூஷணத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார். இதை நாம் மணவாள மாமுனிகளின் வ்யாக்யானத்தைக் கொண்டு தெளிவாக அறியலாம். பிராட்டி முதலில் தன்னுடைய க்ருபையை வெளியிடுவதற்காக, தானே வலியச் சென்று லங்கையில் சிறை புகுந்து, ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்து தேவஸ்த்ரீகளை ஸ்ரீ ராமனைக் கொண்டு விடுவித்தாள். இரண்டாம் முறை, தன் பாரதந்த்ர்யத்தால் (அதாவது முழுவதும் எம்பெருமான் திருவள்ளப்படியே இருப்பதால்) காட்டுக்குச் சென்று வாழ்ந்தாள். மூன்றாம் முறை, தன் அநந்யார்ஹ சேஷத்வத்தால் (எம்பெருமானுக்காக மட்டுமே வாழ்வது என்பதால்), பெருமானைப் பிரிந்து பூமிக்குள் சென்று பரமபதத்தை அடைந்தாள். இதனாலே பிராட்டியின் பெருமையை உலகமே நன்றாக அறிந்தது.
ஸ்ரீ ராமன் சம்புகன் என்ற சதுர்த்த வர்ணத்தவனைக் கொன்றதும் பொதுவாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. சம்புகன் தன் தகுதிக்கு மீறிய தவறான ஆசையால், அதாவது ருத்ரனின் ஸ்தானத்தை அடைந்து பார்வதியை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால், அதற்கான தபஸ்ஸைப் பண்ண, அதன் விளைவாக ஒரு வைதிகரின் புத்ரன் இளம் வயதில் இயற்கைக்கு மாறாக மரித்தான். அதனால் ஸ்ரீ ராமன் அவனைத் தேடிச் சென்று, அவனைக் கொன்று, அந்த வைதிக புத்ரனை உயிர் மீட்டுக்கொடுத்தான்.
இவ்வாறு ஸ்ரீ ராமனும் சிறந்த முறையில் மொத்தமாகப் பதினோராயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து பின்பு லக்ஷ்மணனை முதலில் பரமபதத்துக்குப் போகும்படி செய்து, பின்பு தானும் பரமபதத்துப் புறப்பட்டான். அந்த ஸமயத்தில் திருவயோத்தியில் இருக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு பரமபதத்துக்குச் சென்றான். ஹனுமன் மட்டும் ஸ்ரீ ராமனைக் கண்ட கண்களால் பரமபதநாதனையும் காணமாட்டேன் என்று சொல்லி, பூமியிலேயே இருந்தான். அந்த ஹனுமனுக்குத்தான் இந்த ஸ்ரீ ராமாவதாரத்தில் எத்தனை உயர்ந்த பக்தி! இவ்வாறு ஸ்ரீ ராம சரித்ரம் நிறைவுற்றது.
நம்மாழ்வார் “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று ஸ்ரீ ராமாவதாரத்தின் பெருமையைச் சிறப்பாக வெளியிட்டார். க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் கூட ஸ்ரீ ராமனை “மனத்துக்கினியான்” என்று கொண்டாடினாள். இவ்வாறு ஆழ்வார்கள் மிகவும் விரும்பிய அவதாரமாக ஸ்ரீ ராமாவதாரம் விளங்குகிறது. இந்த அவதாரத்தில் எம்பெருமானின் லீலைகளையும் அவற்றின் தாத்பர்யங்களையும் நாம் இங்கே ஓரளவுக்கு அனுபவித்தோம். ஸீதாப் பிராட்டியுடன் கூடியிருக்கும் ஸ்ரீ ராமன் எம்பெருமானை எப்பொழுதும் இதயத்தில் கொண்டிருக்கும் ஸ்ரீ ராம தாஸனான ஹனுமன் மற்றும் நம் ஆழ்வார் ஆசார்யர்கள் திருவடிகளில் எப்பொழுதும் அன்பு பூண்டிருப்பதே நமக்குக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org