ஸ்ரீ ராமானுஜ வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே ஶடகோபாய நம:   ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முன்னுரை

மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் “நம்பெருமாள் தானே நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் தரிஶனம் என்று பெயரிட்டு, இந்த ஸம்ப்ரதாயத்துக்கு எம்பெருமானார் செய்த பேருபகாரத்தை எப்பொழுதும் நினைத்திருக்கும்படி செய்தார்” என்று அருளிச்செய்துள்ளார். எம்பெருமானார் இந்த ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தொடங்கியவரோ அல்லது ஸம்ப்ரதாயத்தின் ஓரே ஆசார்யரோ அன்று. ஆனால் இந்த ஸம்ப்ரதாயம் காலத்துக்கும் நிற்கும் படி அவர் நிலை நாட்டி வைத்ததால் மிகவும் கொண்டாடப்படுகிறார். ஒருவர் முயன்றால் எம்பெருமானின் பெருமையை உணர்ந்தும் பேசியும் விடலாம்.ஆனால் எம்பெருமானாரின் பெருமையோ எல்லையில்லாததால், ஒருவராலும் உணர்ந்தோ பேசியோ முடிக்கக் கூடியது அல்ல. ஆனால் நாமோ நம்முடைய பெருமை பெற்ற குரு பரம்பரையின் மூலம் எம்பெருமானாரின் ஸம்பந்தத்தைப் பெற்றுள்ளோம். அந்த பலத்தைக் கொண்டு எம்பெருமானாரின் பெருமைகளைச் சிறிது சிறிதாக அனுபவிப்போம்.

பிறப்பும் சிறு பிராயமும்

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி”, என்கிற ப்ரஸித்தமான ஶ்லோகத்தில் ஆதி ஶேஷன் யுகம்தோறும் அவதரிக்கும் க்ரமமும் கலி யுகத்தில் வரவிருக்கும் அவதாரமும் காட்டப்பட்டுளது. சரமோபாய நிர்ணயம் என்னும் க்ரந்தத்தில் ஸ்ரீ ராமானுஜரே ஆதி ஶேஷனின் கலியுக அவதாரம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் எம்பெருமானாரின் அவதாரம் எம்பெருமானின் அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது என்று “மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கிற பாசுரத்தில் கூறுகிறார். மாமுநிகள் இத்தை “எங்கள் நாதனான ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகில் பல அவதாரங்கள் செய்தாலும், உலகோர்கள் அவனை ஸ்வாமியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எம்பெருமானார் இவ்வுலகில் பிறந்தவுடன் (மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவைகளைக் கொண்டு விளக்கியவுடன்), உலகத்தார்கள் உண்மை அறிவு பெற்று எம்பெருமானுக்கு அடிமை என்று உணர்ந்தார்கள்” என்று விளக்கியுள்ளார்.

மாமுனிகள் தானும் எம்பெருமானாரின் அவதாரத்தை கொண்டாடும் வகையில் ஆர்த்தி ப்ரபந்தத்தில் “எனைப்போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ, உனைப்போல் பொறுக்க வல்லார் உண்டோ, அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா, ஏழைக்கு இரங்காய் இனி” என்கிறார். இதன் பொருள் “என்னைப் போன்று தவறுகள் செய்பவர் யாரேனும் உண்டோ? உன்னைப் போன்று அத்தவறுகளைப் பொறுப்பவர் தான் உண்டோ? யதிகளுக்கு தலைவரான, அனைத்து உலகத்தில் இருப்பவரையும் உஜ்ஜீவிப்பிக்கப் பிறந்த ராமானுஜரே! எனக்கு உதவி செய்யும்” என்று ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளது.

இவற்றிலிருந்து, பகவத் ராமானுஜர் எல்லா உலகத்தவருக்கும் உள்ள துன்பத்தைப் போக்கி, அவர்களைப் பரமபதத்தில் எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்யும் நிலைக்கு உயர்த்தவே அவதரித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

கேஶவ ஸோமயாஜியார் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் மாமாவான பெரிய திருமலை நம்பி, இவருக்கு “இளையாழ்வார்” என்ற திருநாமமிட்டு, தாப ஸம்ஸ்காரம் செய்து வைத்து இவரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.

இளமையில், இவர் பேதாபேதம் (ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றுமை மற்றும் வேற்றுமை உள்ளது என்று கூறுவது) என்னும் வேற்று ஸித்தாந்தத்தில் சிறந்து விளங்கிய யாதவப்ரகாஶர் என்கிற வித்வானிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார். ஒரு கேள்வி எழலாம் – ஏன் இவர் வேற்று ஸித்தாந்த வித்வானிடத்தில் பயில வேண்டும்? பெரியோர்கள் இவ்வாறு ஸமாதானம் அளிப்பர் – ஒரு ஸித்தாந்தத்தை வாதில் வெல்வதற்கு முதலில் அதை முழுமையாகக் கற்றறிய வேண்டும். இவரும் அவ்வாறே, பூர்வபக்ஷத்தை நன்றாகக் கற்றறிந்து, பின்பு விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இந்தக் கொள்கையைப் பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையைப் பெரிய திருமொழி 5.8.7 பாசுர வ்யாக்யானத்தில் “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்குமிடத்தில் கொண்டாடும் விதத்தைக் கொண்டு அறியலாம். அவர் கூறுவது “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது” (முதலில் த்வயத்தை ஆசார்யன் மூலம் அறிந்து கொண்டு, பின்பு இதிஹாஸ புராணங்களை அறிந்து, ப்ரதிவாதிகளை வாதில் ஜயிக்க ந்யாயம் மீமாம்ஸை போன்றவற்றைக் கற்று, பின்பு ஆழ்வார்களின் அருளிச்செயலிலேயே பொழுதைப் போக்கும் நம்பிள்ளையே சிறந்த ‘ஒருவன்’ என்று கொண்டாடப்படுபவர்). இதிலிருந்து தங்களுடைய ஸித்தாந்த்தை நிலை நாட்டுவதற்கு, பூர்வபக்ஷத்தை (எதிராளிகளின் வாதத்தை) அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாஶரிடம் கல்வி பயிலும்பொழுது, இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீ ராமானுஜரின் சிறந்த ஞானத்தாலும், பிறருக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையாலும், அவரின் புகழ் வளரத் தொடங்கியது. இது கண்டு பொறுக்க முடியாத யாதவப்ரகாஶரின் ஶிஷ்யர்கள் அவரைக் காசி யாத்ரைக்கு அழைத்துச் சென்று அச்சமயத்தில் கொல்ல நினைத்தனர். ஆனால், (பிற்காலத்தில் எம்பார் என்று கொண்டாடப்பட இருக்கும்) கோவிந்தரின் ஸமயோஜித புத்தியால், அவர்களிடமிருந்து தப்பி, ஒரு வேடுவ தம்பதியின் உருவில் வந்த காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார் பேரருளளான் எம்பெருமானின் துணையால் காட்டில் இருந்து தப்பி காஞ்சீபுரம் வந்தடைகிறார் ராமானுஜர்.

பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்

அங்கு வந்த பிறகு, ராமானுஜர் தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் (விசிறி) கைங்கர்யம் செய்யும் அந்தரங்கரான பூவிருந்தவல்லியைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யர்.தேவப் பெருமாள் நம்பியிடம் அவ்வப்பொழுது உரையாடும் அளவுக்கு மிகவும் அன்பு கொண்டவர். ராமானுஜர் நம்பியின் மேற்பார்வையில் தேவப் பெருமாளுக்குத் தினமும் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து வருகிறார். அச்சமயத்தில், ராமானுஜர் தஞ்சம்மாளை மணம்புரிந்து காஞ்சீபுரத்திலேயே வசித்து வருகிறார். அவருக்குச் சில சந்தேகங்கள் எழ, தேவப் பெருமாளிடம் அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்துமாறு நம்பியிடம் (என்ன சந்தேகங்கள் என்று கூறாமல்) ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ராமானுஜரின் நிலையைத் தேவப் பெருமாளுக்கு உரைக்க, தேவப் பெருமாள் நம்பி மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளுகிறார். அவையாவன:

  • நானே பர தெய்வம்
  • ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றல்ல வேறுபட்டவை
  • ப்ரபத்தியே என்னை அடைவதற்குத் தகுந்த வழி
  • அப்படிச் சரணடைந்தவர்கள் கடைசிக் காலத்தில் என்னை நினைக்க வேண்டாம் (நான் அவர்களை அப்பொழுது நினைப்பேன்)
  • அப்படிச் சரணடைந்தவர்கள் இந்த உடம்பின் முடிவிலேயே முக்தி அடைவர்கள்
  • பெரிய நம்பியை ஆசார்யனாகப் பற்று

இந்த நிகழ்ச்சி ராமானுஜரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

திருக்கச்சி நம்பி தேவப் பெருமாள் அளித்த ஆறு வார்த்தைகளை ராமானுஜரிடம் உரைத்து அவரின் எண்ணத்துடன் பொருந்தியுள்ளதா என்று வினவுகிறார். ராமானுஜரும் நம்பியை வணங்கி, அவை பொருந்தியுள்ளதாக ஆமோதிக்கிறார். நம்பி எம்பெருமான் மற்றும் ராமானுஜரின் திருவுள்ளங்கள் பொருந்தி உள்ளதைக்கண்டு மிகவும் ஆநந்திக்கிறார். ராமானுஜரும், உடனே பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீரங்கத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

பெரிய நம்பி நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். முன்னதாக, ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யான ஆளவந்தார், காஞ்சீபுரத்திற்கு வந்தபோது,  ராமானுஜர் ஒரு சிறந்த ஆசாரியராவார் என்று கடாக்ஷித்தார். ராமானுஜரும் ஆளவந்தாரின் பெருமையை அறிந்திருந்ததால் அவரின் சீடராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் ராமானுஜர் சென்ற முறை ஆளவந்தாரைச் சந்திக்கச் ஸ்ரீரங்கம் சென்றபோது, காவிரிக்கரையை அடையும் சமயத்திலேயே ஆளவந்தார் திருநாடு எழுந்தருளிவிட்டார். ஆளவந்தார் அச்சமயத்தில் மூன்று குறைகளோடு இருந்தார் – அவை 1) வ்யாஸ பராஸர ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும், 2) நம்மாழ்வாருக்கு நன்றி செலுத்த வேண்டும் 3) ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு விளக்கம் எழுத வேண்டும். மடங்கிய மூன்று விரல்களுடன் கூடிய ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவித்த ராமானுஜர், தான் அந்த மூன்று குறைகளையும் போக்குவதாக சபதம் செய்ய, மூன்று விரல்களும் உடனே விரிந்தன. பின்பு ராமானுஜர் வருத்தத்துடன் காஞ்சீபுரம் திரும்பி தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பின், ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பியிடம் ராமானுஜரை பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, தர்சன ப்ரவர்த்தகராக ஆக்குமாறு ப்ரார்த்தித்தனர். பெரிய நம்பியும் ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கும் எண்ணத்துடன் காஞ்சீபுரத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

இருவரும், காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்தனர்.ராமானுஜர் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வந்தவுடன், பெரிய நம்பியை அவருடைய குடும்பத்துடன் சந்திக்கிறார். அவரை வணங்கி, தன்னை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பெரிய நம்பி காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்கே வைத்து பஞ்சஸம்ஸ்காரம் செய்யலாம் என்கிறார். ராமானுஜரோ “இவ்வுலகம் மிகவும் அநித்யம், முன்பே ஆளவந்தாரிடம் சீடராகும் வாய்ப்பை இழந்தேன், அதே போல மீண்டும் நடக்கக் கூடாது” என்கிறார். எனவே, நம்பியை அப்போதே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளுமாறு ப்ரார்த்திக்க நம்பியும் அவ்வாறே செய்தார். இவ்வாறு, ராமானுஜர் ஶாஸ்த்ரத்தில் கூறியபடி ஒரு ஆசார்யனிடத்தில் க்ரமமாக சரணடைய வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தானே அனுஷ்டித்துக் காட்டினார். பின்பு, அங்கிருந்து அனைவரும் காஞ்சீபுரம் சென்றடைய, பெரிய நம்பி தன்னுடைய குடும்பத்துடன் சில காலம் அங்கு தங்குவதாகத் தீர்மானிக்கிறார்.

காஞ்சீபுரத்தில் பெரிய நம்பி திருக்கச்சி நம்பியால் வரவேற்கப்பெற்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு, ராமானுஜர் பெரிய நம்பிக்குத் தன் திருமாளிகையின் ஒரு பகுதியைத் தங்குவதற்குக் கொடுத்தார். நம்பியும் தன் குடும்பத்துடன் அங்கே ஆறு மாதங்கள் தங்கி இருந்து ராமானுஜருக்கு திவ்ய ப்ரபந்தம் ரஹஸ்யார்த்தங்கள் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம்

ஒரு முறை, ராமானுஜரின் திருமாளிகைக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பசியுடன் வர, ராமானுஜர் தன் மனைவியிடம் அவருக்கு உணவு அளிக்கும்படிக் கூற, அவரின் மனைவியோ உணவு இல்லை என்று மறுக்கிறார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் வருத்தத்துடன் செல்ல, ராமானுஜர் மடப்பள்ளி உள்ளே சென்று ப்ரஸாதம் இருப்பதைக் காண்கின்றார். மிகவும் கோபம் கொண்ட அவர், அக்கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்தினார். முன்பு கூட, ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் திருக்கச்சி நம்பியிடம் முறை தவறி நடந்தார். ஒரு முறை திருக்கச்சி நம்பியை தன் திருமாளிகைக்கு அழைத்து, உணவிட்டு அவ்வுணவின் மிச்சத்தை தான் உண்ணவேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர். ஆனால் அவர் மனைவியோ, நம்பியின் பெருமை மற்றும் ராமானுஜரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் நம்பி வந்தவுடன் அவருக்கு உணவிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து விடுகிறார். இறுதியான ஒரு நிகழ்வு – ஒரு முறை ராமனுஜரின் மனைவிக்கும் பெரிய நம்பியின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. மிகவும் வருத்தமுற்ற பெரிய நம்பி, ராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த ராமானுஜர் மிகவும் உடைந்து போனார்.

அவர் பகவத் விஷயத்திலேயே தன் பொழுதை முழுமையாகப் போக்க நினைத்து, முற்றும் துறந்த நிலையான ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம் செய்வதாக முடிவெடுத்தார். அவர் உடனே காஞ்சீபுரம் தேவப் பெருமாள் ஸன்னிதியில் உள்ள அனந்த ஸரஸ்ஸில் சென்று தீர்த்தமாடி தேவப் பெருமாள் முன்பு சென்று அவரையே ஆசார்யனாகக் கொண்டு தனக்கு ஸந்யாஸிகளுக்கு ஏற்றதான த்ரிதண்ட காஷாயங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்தார். தேவப் பெருமாளும் ராமானுஜரின் திருவுள்ளத்தை ஆமோதித்து அவருக்கு ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரத்தைச் செய்து வைத்து, “ராமானுஜ முனி” என்ற பெயரையும் அளித்து அவருக்கு ஒரு மடத்தையும் அளித்தார். இதைக் கேள்வியுற்ற முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் உடனே காஞ்சீபுரம் வந்தடைந்து அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டு அவருக்கு இடை விடாது கைங்கர்யம் செய்யத் தொடங்கினர். யாதவப்ரகாஶரும் அவரின் தாயாரின் அறிவுரையை ஏற்று ராமானுஜரின் ஶிஷ்யரானார். இவ்வாறு ராமானுஜர் ராமானுஜ முனியாகி ஸந்யாஸ ஆஶ்ரமத்தை சிறந்த முறையில் நடத்திப் போனார்.

ராமானுஜர் யதிராஜர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்பட்டார்; மிகுந்த பெருந்தன்மையுடன் யாதவப்ரகாஶரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு, அவரை ஸந்யாஸ ஆஶ்ரமத்தில் ஈடுபடுத்தி, கோவிந்த ஜீயர் என்று அவருக்குப் பெயரிடுகிறார்.  மேலும், அவரைக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாஸிகளின் நடத்தையை விளக்கும் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற ப்ராமாணிகமான மற்றும் விரிவான க்ரந்தத்தை எழுதச் செய்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் ராமானுஜர் தன்னை முன்பு கொல்லவே முயன்ற யாதவப்ரகாஶரைத் தான் ஏற்றுக்கொண்டதோடு அவரைச் சிறந்த கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு, கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் ஶாஸ்த்ர உபதேஶம் செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கம் வருதல்

ஸ்ரீரங்கநாதர் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்கும் பொருட்டு ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர விரும்பி  தேவப்பெருமாளுக்கு ஸ்ரீமுகம் அனுப்புகிறார். தேவப்பெருமாளோ அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸமயோஜிதமாக திருவரங்கப் பெருமாள் அரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி, அவரின் திவ்ய கானத்தைக் கொண்டு தேவப்பெருமாளைக் கவர்ந்து ராமானுஜரைப் பரிசாகப் பெற்று வருமாறு நியமிக்கிறார். அரையர் காஞ்சிபுரம் அடைந்து, திருக்கச்சி நம்பி புருஷகாரத்துடன் தேவப்பெருமாளை அணுகி, அவரின் திருமுன்பே பண்ணிசைத்துப் பாட, எம்பெருமான் அந்த கானத்தில் மிகவும் மயங்கி “நீர் விரும்பியதைக் கேட்டு பெற்றுப் போம்” என்கிறார். உடனே, அரையர் எம்பெருமானிடம் ராமானுஜரைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புமாறு ப்ரார்த்திக்கிறார். அது கேட்டு ராமானுஜரின் பிரிவை உணர்ந்த தேவப்பெருமாள் மிகவும் வருந்தினார் – ஆயினும் தான் கொடுத்த வார்த்தைக்காக ராமானுஜரை அரையருடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினார்.

ஸ்ரீரங்கம் அடைந்தவுடன், அரையரும் யதிராஜரும் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இருவரும் பெரிய பெருமாள் ஸந்நிதிக்குச் செல்ல, பெரிய பெருமாளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். அவர், ராமானுஜருக்கு “உடையவர்” (பெருமானின் நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்கு ஸ்வாமி) என்கிற பட்டத்தை அளித்து, அவர் தங்குவதற்கு ஒரு மடத்தையும் அளித்து, அவருக்குக் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்யும்படி ஆணையும் பிறப்பித்தார். மேலும், அவர், ராமானுஜருடன் தொடர்புள்ள அனைவருக்கும் மோக்ஷம் உறுதி என்று அறுதியிட்டார். உடையவரும், பெரிய நம்பியிடம் தன்னுடைய உபகார ஸ்ம்ருதியை வெளியிட்டார். பெரிய நம்பியும் ஸம்ப்ரதாயத்திற்கு நன்மை விளைவதைக் கண்டு பேரின்பம் அடைந்தார். உடையவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து கோயில் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நேர்படுத்தத் தொடங்கினார்.

ஸ்ரீ ராமானுஜர் இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்தவாறு கோயில் காரியங்களைச் சீர் செய்து வந்தார். ஶிவ பக்தராய் மாறி காளஹஸ்தியில் இருந்த தன்னுடைய சிறிய தாயார் குமாரரான கோவிந்தரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்டு, திருமலை நம்பியிடம் அவருக்கு நல்லுபதேஶம் செய்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஆக்கும்படி ப்ரார்த்தித்தார் [இந்த கோவிந்தரே யாதவ ப்ரகாஶருடன் யாத்ரை சென்றபோது ராமானுஜரின் உயிரைக் காத்தவர்). பெரிய திருமலை நம்பி காளஹஸ்தி சென்று சிறந்த ஶிவ பக்தராக மாறி சேவை செய்து வந்த கோவிந்தரை வழி மறித்தார். அவர் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு ஸ்ரீமந்நாராயணின் பரத்வத்தை கோவிந்தருக்கு விளக்கினார். சில முறை அந்த உபதேஶங்களைக் கேட்டு, கோவிந்தரின் மனம் தெளிவு பெற்று, ருத்ரனிடத்தில் இருந்த பிடிப்பு நீங்கி, பெரிய திருமலை நம்பியின் திருவடியில் வந்து ஆதரத்துடன் விழுந்தார். நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார்.  கோவிந்தரும் நம்பியுடன் திருமலையில் தங்கி இருந்து, அறிய வேண்டிய அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்து, நம்பிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இறுதியில், எம்பெருமானாருடன் நிரந்தரமாக வாழ ஸ்ரீரங்கத்துக்கே வந்து சேர்கிறார் (மேல் வரும் சரித்திரங்களில் அதைக் காண்போம்).

இவர் ஆசார்யர்கள்

ராமானுஜர் பின்பு பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் ஸாரார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ஆனந்தத்துடன், மிகச் சிறந்ததான த்வய மஹா மந்த்ரத்தின் திவ்யமான அர்த்தங்களை ராமானுஜருக்கு விளக்குகிறார்.  மேலும் அவர் ராமானுஜரிடம் “இதில் அறிய வேண்டுவது மேலும் உள்ளது; ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அவற்றைக் கற்று வரவும்” என்று ஆணை இடுகிறார்.

ராமானுஜர் உடனே திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டார். ஊர் எல்லையை அடைந்ததும், அங்கிருக்கும் சிலரிடம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை எங்கு உள்ளது என்று வினவினார். அங்கிருந்தவர்கள் நம்பியின் திருமாளிகை இருக்கும் திசையைக் காட்ட, தண்டனிட்டுக்கொண்டே அவர் திருமாளிகையைச் சென்று அடைந்தார். இதைக் கண்ட ஊர் மக்களும் நம்பியின் பெருமைகளை அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ராமானுஜரும் நம்பியைக் கண்டவுடன் அவர் திருவடியில் விழுந்து ரஹஸ்யார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். ஆனால் நம்பியோ அவருக்குக் கற்றுக் கொடுப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டாமல் இருக்க, ராமானுஜர் வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் கேட்க மிகவும் பாரிப்புடன் இருக்கிறார். நம்பி ஒருமுறை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி இருந்து, பின் திருக்கோஷ்டியூர் திரும்பும் பொழுது, நம்பெருமாள் ராமானுஜருக்கு ரஹஸ்யார்த்தங்கள் கற்றுக் கொடுக்குமாறு நம்பிக்கு ஆணையிடுகிறார். நம்பி நம்பெருமாளிடம் ஶாஸ்த்ரத்தில் முயன்று சேவை செய்யாதவர்களுக்கு இவ்வர்த்தங்களை உபதேஶிக்கக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பெருமாளோ ராமானுஜரிடம் ஶிஷ்ய லக்ஷணப் பூர்த்தி உள்ளதால் அவருக்குக் கற்றுக் கொடுப்பது பொருந்தும் என்று ஸமாதானம் சொல்கிறார். நம்பியும் அதற்கு இசைந்து ராமானுஜரைத் திருக்கோஷ்டியூருக்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ராமானுஜரும் திருக்கோஷ்டியூருக்குச் செல்ல, நம்பியோ மற்றொரு ஸமயம் வந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு பதினெட்டு முறை நடக்கிறது. ராமானுஜர், இந்த நிலை பொறுக்காமல், நம்பியின் ஶிஷ்யர் ஒருவர் மூலமாக தன்னுடைய ஆர்த்தியை நம்பிக்கு வெளியிடுகிறார். இறுதியாக நம்பியின் இசைவினோடு, ராமானுஜர் கீதா சரம ஶ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டு அறிகிறார். நம்பி ராமானுஜரிடம் இவ்வர்த்தங்களை தகுதியற்றவருக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால் ராமானுஜரோ ஆசையுடையோர்க்கெல்லாம் அவ்வர்த்தங்களை அறிவிக்கிறார்.  அதைக் கேட்ட நம்பி கோபமடைந்து ராமானுஜரை வருமாறு ஆணை இடுகிறார். ராமானுஜர் நம்பியிடம் இவ்வர்த்தங்களை அறிந்தவர்கள் உண்மை ஞானம் பெற்று உஜ்ஜீவனம் அடைவர்கள் என்பதை விளக்குகிறார்.  ராமானுஜரின் பரந்த உள்ளத்தை உணர்ந்த நம்பி, அவரை “எம்பெருமானார்” (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிலும் மேம்பட்டவர்) என்று கொண்டாடுகிறார். பின்பு, நம் ஸம்ப்ரதாயமும் “எம்பெருமானார் தரிஶனம்” என்றே பேர் பெற்று விளங்கியது. பின்பு, எம்பெருமானார் இந்த ரஹஸ்ய அர்த்தங்களை கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் அவர்கள் ப்ராத்தனைக்கு இணங்க விளக்குகிறார்.

பின்பு, திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருமாலை ஆண்டானிடம் பணித்தார். எம்பெருமானாரும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்தங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சில சமயங்களில் ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் சில பாசுர அர்த்தங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. திருவாய்மொழி 2.3.3. “அறியாக் காலத்துள்ளே” பாசுர விளக்கத்தின் போது, எம்பெருமானார் மாற்றுக் கருத்தைச் சொல்ல, ஆண்டான் கோபித்துக் கொண்டு காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி இது பற்றிக் கேள்விப்பட்டு உடனே திருவரங்கத்துக்குச் செல்கிறார். அவர் ஆண்டானிடம் எம்பெருமானாரின் பெருமைகளை எடுத்துரைத்து எந்த நிலைமையிலும் காலக்ஷேபத்தை நிறுத்தாமல் நடத்துமாறு கூறுகிறார். ஆண்டானும் அதற்கு இசைந்து காலக்ஷேபத்தைத் தொடருகிறார். ஆனால், மீண்டும் ஒரு முறை கருத்து வேறுபாடு வர, எம்பெருமானார் “ஆளவந்தார் இவ்வாறு இதை விளக்க மாட்டார்” என்று கூற, ஆண்டானும் “நீரோ ஆளவந்தாரைச் சந்தித்ததே இல்லை. இவ்வாறு இருக்க இது எப்படி உமக்குத் தெரியும்” என்று வினவ, எம்பெருமானார் “அடியேன் ஆளவந்தாருக்கு ஏகலவ்யனைப் போலே” என்றார். அது கேட்ட ஆண்டான் எம்பெருமானாரைப் பற்றி திருக்கோஷ்டியூர் நம்பி விளக்கியது பொருத்தமாக இருக்கவே, எம்பெருமானார் ஒரு அவதார விஶேஷம் என்று உணர்ந்து, ஆளவந்தாரிடம் கேட்காமல் விட்டுப் போன அர்த்தங்களை எம்பெருமானாரிடம் இருந்து கேட்டு அறியலாம் என்ற எண்ணத்துடன், அவரை மிகவும் ஆதரித்துப் போந்தார்.

இவ்வாறு திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின், எம்பெருமானார் பெரிய நம்பியிடம் செல்ல, நம்பியும், எம்பெருமானாரைத் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் சென்று சில ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறியுமாறு பணிக்கிறார். எம்பெருமானாரும் அரையரிடம் சென்று, 6 மாதங்கள் அவருக்குப் பாலமுது செய்தல் மற்றும் மஞ்சள் காப்பு செய்து தருதல் ஆகிய கைங்கர்யங்களைப் பணிவுடன் செய்கிறார். ஒரு முறை எம்பெருமானாரால் ஸமர்ப்பிக்கப்பட்ட மஞ்சள் காப்பு தரமாக இல்லாததால் அரையர் தன் திருமுகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கிறார். உடனே எம்பெருமானார் மீண்டும் ஒரு முறை மஞ்சள் காப்பு புதிதாகத் தயார் செய்து அரையரின் ஆனந்தத்திற்காக ஸமர்ப்பிக்கிறார். மிகவும் ஆனந்தித்த அரையர், ரஹஸ்யார்த்தமான “சரமோபாயம்” (இறுதியான வழி) – ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உபதேஶிக்கிறார்.

எதற்காக எம்பெருமானார் பல ஆசார்யர்களிடம் பயில வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஒரு ராஜா தன்னுடைய பல மந்திரிகளைக் கொண்டு ஒரு இளவரசனைத் தயார் செய்வது போல், ஆளவந்தார் மிகச் சிறந்த ஞானச் செல்வத்தை தன்னுடைய ஶிஷ்யர்களிடம் அளித்து அவற்றைத் தக்க சமயத்தில் எம்பெருமானாருக்கு கற்றுக் கொடுக்குமாறு ஆணையிட்டார். ஆளவந்தார் ராமானுஜரிடம் கொண்டிருந்த அன்பைக் கண்ட ஆளவந்தாரின் ஶிஷ்யர்களும், ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் கொண்டிருந்தனர். இதனாலேயே எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தாலும் பின்புள்ளவர்கள் அவர் திருவடி சம்பந்தத்தாலும் மிக்க பெருமையை அடைந்தார்கள். எப்படி ஒரு ஹாரத்தின் நடு நாயகமான மாணிக்கக் கல் அந்த ஹாரத்தின் இரண்டு பக்கத்துக்கும் அழகு சேர்க்குமோ, அப்படியே எம்பெருமானாரும் தனக்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கும் பின்பிருந்த ஆசார்யர்களுக்கும் பெருமை சேர்க்கிறார்.

கத்ய த்ரயம் சேவித்தல்

பின்பு, ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருமுன்பே கத்ய த்ரயத்தை அருளிச்செய்தார். அதன் பிறகு எம்பெருமானை க்ருஹங்களில் திருவாராதனம் செய்யும் முறையை விளக்கும் நித்ய க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.

இச்சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் ஏழகம் (ஏழு வீடுகளில்) மாதுகரம் (பிக்ஷை) கொண்டு அமுது செய்து வந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் செய்யும் சீர்திருத்தங்களை விரும்பாத சிலர், ஒரு பெண்ணின் மூலம் விஷமிட்ட அன்னத்தைக் கொடுக்குமாறு செய்தனர். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லாவிடினும், வேறு வழியின்றி, மிகுந்த மன வருத்தத்துடன் எம்பெருமானாருக்கு பிக்ஷை இட்டாள். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த எம்பெருமானார், அந்த அன்னத்தைக் காவிரியில் கரைத்து உபவாஸம் இருக்க ஆரம்பித்தார். விஷயம் அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி உடன் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்தார். கடும் வெயிலில் எம்பெருமானார் அவரை வரவேற்கக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பியைக் கண்டவுடன், வெயிலையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து தண்டன் ஸமர்ப்பித்து நம்பி எழுந்திருக்கச் சொல்லும் வரை அப்படியே இருந்தார். நம்பி சிறிது நேரம் தாமதிக்க, எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சான் எம்பெருமானாரை உடனே எடுத்து நிறுத்தி, நம்பியிடம் “இப்படிப்பட்ட ஆசார்யனை இந்த வெப்பத்தில் எப்படித் தவிக்கவிட விடுகிறீர்” என்று கடிந்து கொண்டார். நம்பியும் ஆச்சானிடம் “எம்பெருமானாரிடம் பரிவுள்ள ஒருவரைக் கண்டு கொண்டேன். என்னையும் மீறி அவரை எடுத்து நிறுத்தினீரே. இனி, நீரே அவருக்குத் தினமும் ப்ரஸாதம் செய்து கொடுக்கவும்” என்று கூறினார். இவ்வாறு, அனைவரும் எம்பெருமானாரிடம் தங்கள் அன்பையும் பரிவையும் காட்டினர்.

யஞ்ய மூர்த்தியை ஜயித்தல்

யஞ்ய மூர்த்தி என்னும் வித்வான், காசிக்குச் சென்று பல வித்வான்களை வாதத்தில் வென்று, ஸந்யாஸியாகி, பல விருதுகளுடனும் ஶிஷ்யர்களுடனும் இருந்தபோது ராமானுஜரின் பெருமை அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு வந்து ராமானுஜரை வாதப் போருக்கு அழைத்தார். ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டார். யஞ்ய மூர்த்தி தான் தோற்றால் ராமானுஜரின் பாதுகைகளைத் தலை மேல் தாங்கி, அவருடைய திருநாமத்தைத் தான் சூட்டிக்கொண்டு அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்பதாகக் கூறினார். உடையவரோ தான் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் (க்ரந்தங்கள் எழுதுவது, விளக்குவது முதலியவை செய்யாமல் இருத்தல்) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். பதினேழு நாட்களுக்கு இருவரும் மிகவும் தீவிரமாக வாதம் செய்தனர். பதினேழாவது நாளன்று யஞ்ய மூர்த்தியின் வாதம் ஓங்கி இருக்க, அவர் மிகுந்த மிடுக்குடன் சபையை விட்டுச் சென்றார். ராமானுஜர் மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் “மஹநீயர்களான ஆழ்வார் தொடக்கமாக ஆளவந்தார் வரை வளர்த்த இந்தத் தலை சிறந்த ஸம்ப்ரதாயம் இன்று என்னால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; ஒரு மாயாவாதி இன்று இதை அழிக்கப் பார்க்கிறான்; இதுவே உன் திருவுள்ளமாகில், அப்படியே ஆகுக” என்று கூறி ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் சென்றார். இரவில், பெருமாள் அவரின் கனவில் தோன்றி ஆளவந்தாரின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு யஞ்ய மூர்த்தியை ஜெயிக்குமாறு உணர்த்தினார். விழித்தெழுந்த ராமானுஜர் வருத்தம் தீர்ந்து, தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மடம் திருவாராதனப் பெருமாளிடம் விடை கொண்டார். ராமானுஜரின் கம்பீரமான வரவைக்கண்ட யஞ்ய மூர்த்தி, வித்வானாகையாலே, ஒரு தெய்வீகச் செயல் நடந்திருப்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளிலே விழுந்து “நான் வாதில் தோற்றேன்” என்றார். ஆச்சர்யமடைந்த ராமானுஜர் “மேலே வாதம் செய்ய வேண்டாமோ” என்று வினவ, யஞ்ய மூர்த்தி “தேவரீரிடம் பெரிய பெருமாளே பேசின பின்பு, தேவரீர் பெரிய பெருமாளிடம் இருந்து வேறு பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் வாய் திறப்பதற்குப் ப்ராப்தி இல்லை. ராமானுஜரோ ப்ரஹ்மத்தின் குணங்களை விளக்கிக் கூறி மாயாவாத ஸித்தாந்தக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார். யஞ்ய மூர்த்தி உண்மையை உணர்ந்தவராய் தன்னுடைய (மாயாவாத ஸந்யாஸிகள் வைத்துக் கொள்ளும்) ஏகதண்டத்தை உடைத்தெறிந்து, ராமானுஜரைத் தனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய த்ரிதண்ட ஸந்யாஸம் தருமாறு வேண்டுகிறார். பேரருளாளப் பெருமாளின் நினைவாகவும், யஞ்ய மூர்த்தியின் ஶபதமான “தோற்றால் ராமானுஜரின் திருநாமத்தை வைத்துக் கொள்வேன்” என்றதையும் நினைவில் கொண்டு ராமானுஜர் அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ராமானுஜரே அவருக்கு அருளிச்செயலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிகுந்த ஈடுபாட்டுடன் எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தார்.

உடையவர் ஆழ்வான் ஆண்டான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மற்றும் பலருக்கு ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து உபதேஶங்களைச் செய்து வந்தார். பல வித்வான்களும் அவர் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்தடைந்து அவரை ஆஶ்ரயித்தனர். அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி மற்றும் மருதூர் நம்பி ஆகியோர் உடையவரை ஆஶ்ரயிக்க வர, அவர் அவர்களை அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடம் ஆஶ்ரயிக்கும்படி ஆணையிடுகிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, அருளாளாப் பெருமாள் எம்பெருமானார் அவர்களை “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றிருக்குமாறு கூறுகிறார்.

திருமலை யாத்ரையும் கைங்கர்யங்களும்

பின்பு ஒரு ஸமயம், உடையவர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து வந்தார். திருவேங்கடமுடையான் விஷயமான “ஒழிவில் காலம்” பதிகத்தை விளாக்கும்போது “இங்கு எவரேனும் திருமலைக்குச் சென்று ஒரு நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய முடியுமா” என்று கேட்க, அநந்தாழ்வான் உடனே எழுந்து தான் அதைச் செய்வதாகக் கூறினார். எம்பெருமானாரும் அவருக்கு க்ருபை பண்ண, அவர் திருமலைக்குச் சென்று, ஒரு நந்தவனத்தையும், குளத்தையும் செய்து, அந்த நந்தவனத்துக்கு “இராமானுசன்” என்று பெயரிட்டு, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.

உடையவரும் ஒரு திவ்யதேச யாத்ரை செய்யத் திருவுள்ளமாகி, நம்பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தவுடன், திருக்கோவலூர் மற்றும் காஞ்சீபுரம் திவ்ய தேச எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்து பின்பு திருமலையை நோக்கிச் சென்றார்.

உடையவர் திருமலை திருப்பதி நோக்கித் தன் ஶிஷ்யர்களுடன் செல்லத் தொடங்கினார். ஒரு சமயத்தில் வழி தெரியாமல் திகைத்து அங்கே இருந்த ஒரு விவசாயியிடம் வழி கேட்டார். அவனும் தெளிவாக வழி காட்ட, உடையவர் உணர்ச்சிப் பெருக்கினால் அவனைப் பரமபதத்திற்கு வழிகாட்டும் அமாநவனாக எண்ணி நன்றியுடன் தண்டனிட்டார். சில நாட்களில் திருப்பதியை அடைந்து திருமலை அடிவாரத்தில் ஆழ்வார்களைத் தொழுதார். அவர் அங்கேயே சில காலம் எழுந்தருளியிருந்து, அந்த நாட்டு ராஜாவை ஶிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களையும் அங்கே குடியேற்றினார். இந்த விஷயங்களைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மற்றும் பலரும் வந்து அவரை வரவேற்று, அவரைத் திருமலை ஏறி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்யுமாறு வேண்டினர். அவரோ ஆழ்வார்கள் திருமலையைப் புனிதமாகக் கருதியதால் அதில் ஏறியதில்லை, ஆதலால் தானும் ஏற மாட்டேன் என்று முதலில் மறுத்தாலும், ஶிஷ்யர்களின் ப்ரார்த்தனையால், திருமலை அடிவாரம் சென்று, தீர்த்தமாடி, மிகவும் பக்தியுடன், எம்பெருமானின் ஸிம்மாஸனத்தில் ஏறுவது போலத் திருமலையில் ஏறினார்.

உடையவர் திருமலை சென்று அடைந்தவுடன், திருமலை நம்பி, திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களோடு வந்து வரவேற்றார். தன்னுடைய ஆசார்யர்களில் ஒருவரான திருமலை நம்பியே எதிர் கொண்டு அழைத்ததைக் கண்ட உடையவர் அவரிடம் “யாரேனும் சிறியவரை விட்டு அடியேனை வரவேற்றிருக்கலாமே” என்று கூற, நம்பியோ, “நான்கு வீதியிலும் சுற்றிப் பார்த்தும், என்னை விடத் தாழ்ந்தவர் தென்படவில்லை” என்று விடை அளித்தார். இதைக் கேட்ட உடையவரும் அவர் ஶிஷ்யர்களும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். பின்பு, ஜீயர்கள், ஏகாங்கிகள் கோயில் கைங்கர்யபரர்கள் என்று அனைவரும் வந்து உடையவரை வரவேற்றனர். பின்பு, உடையவர் கோயிலைப் ப்ரதக்ஷிணமாக வந்து ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி த்வாதஶ ஊர்த்வ புண்ட்ரங்கள் அணிந்து கொண்டு வராஹப் பெருமாளை வணங்கி  ப்ரதான ஸந்நிதியை அடைந்து ஸேனை முதலியாரை வணங்கி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு இது நித்யஸூரிகள் வாழும் இடம் ஆதலால் இரவில் தங்கக் கூடாது என்று கூறி, திருமலை அடிவாரத்துக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் நம்பியும் மற்றவர்களும் திவ்ய தேசமாதலால் அவரை மூன்று நாட்கள் தங்குமாறு வேண்ட, அவரும் அதற்கு இசைந்து ப்ரஸாதம் ஸ்வீகரிக்காமல் திருவேங்கடமுடையானை அனுபவித்தே மூன்று நாட்களைக் கழித்தார். பின்பு திருவேங்கடமுடையானிடம் விடை பெற்றுக்கொள்ளப் ப்ரார்த்திக்க, அப்பொழுது எம்பெருமானும் அவரை நித்ய விபூதிக்கும் லீலா விபுதிக்கும் உடையவர் என்று முன்பு சொன்னதை வழி மொழிந்து அவரை வழி அனுப்புகிறார்.

பின்பு அவர் திருமலையில் இருந்து இறங்கி, திருப்பதியில் ஒரு வருட காலம் தங்கி இருந்தார். திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலமும் ஸ்ரீ ராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்று அறிகிறார்.

அதன் முடிவில் நம்பியிடம் ஸ்ரீரங்கம் திரும்ப நியமனம் கேட்கிறார். நம்பி உடையவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்ப, உடையவர் நம்பியிடம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் கோவிந்தப் பெருமாளைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்து நம் ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு உதவுமாறு கேட்கிறார். நம்பியும் மகிழ்ச்சியுடன் கோவிந்தப் பெருமாளை உடையவருடன் அனுப்பி வைக்க, உடையவரும் ஸ்ரீரங்கத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.

உடையவர் கோவிந்தப் பெருமாளுடன் கடிகாசலத்தை (சோளிங்கர்) அடைந்து அக்காரக் கனி எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருப்புட்குழி அடைந்து ஜடாயு மஹாராஜர், மரகதவல்லித் தாயார் மற்றும் விஜயராகவன் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு கச்சியைச் சுற்றியுள்ள பல திவ்ய தேசங்களைச் சேவித்து திருக்கச்சி நம்பி ஸந்நிதியை அடைந்தார். இது நடுவே, கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்ததால் வருத்தமுற்று உடல் வெளுத்தார். இதை உணர்ந்த உடையவர் அவரைத் திருப்பதி சென்று ஆசார்யரைச் சேவித்து வருமாறு கூறி சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் உடன் அனுப்புகிறார். தானோ திருக்கச்சி நம்பியுடன் கச்சியில் இருந்து தேவாதிராஜனைச் சேவித்து வருகிறார். கோவிந்தப் பெருமாள் திருமலை நம்பி திருமாளிகையை அடைந்து, அங்கே கதவுகள் சாற்றியிருந்ததால் வாயிலில் காத்திருந்தார். அங்கே இருந்தவர்கள் திருமலை நம்பியிடம் இவரின் வரவை அறிவிக்க, அவர் கதவைத் திறக்க மறுத்து உடையவரிடமே சென்று அவரையே தஞ்சமாகக் கொண்டிருக்கும்படி கூறினார். தன்னுடைய ஆசார்யரினின் திருவுள்ளத்தை முழுதுமாக அறிந்த கோவிந்தப் பெருமாள் உடையவரிடம் வந்தடைந்தார். உடன் சென்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் அங்கே நடந்ததை விவரிக்கத் திருமலை நம்பியின் உபதேசத்தை அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தார்.

ஸ்ரீரங்கம் திரும்புதல்

பின்பு, அவர்கள் அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க, உடையவர் ஸேவா க்ரமத்தில் பெரிய பெருமாளைச் சென்றடைந்தார். பெரிய பெருமாள் அவரைப் பேரன்புடன் வரவேற்று, யாத்ரையைப் பற்றி விசாரித்து, தீர்த்தம் ஸ்ரீசடகோப மரியாதைகளை அளிக்கிறார். இதன் பின்பு, ஸ்ரீரங்கத்தில் உடையவர் கருணையுடன் தன்னுடைய அனுஷ்டானங்களுடன் இந்த உயர்ந்த ஸித்தாந்தத்தைக் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.

கோவிந்தப் பெருமாளும் ஆனந்தத்துடன் காலக்ஷேபங்களிலும் கைங்கர்யங்களிலும் பங்கு பெற்று வந்தார். ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் கோவிந்தப் பெருமாளைக் கொண்டாட அவரும் அதை ஆனந்தத்துடன் ஆமோதித்தார். இதைக் கண்ட உடையவர் அவரிடம் “நம்மை ஒருவர் கொண்டாடும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. நாம் அவர்களிடம் அதற்குத் தகுதி அற்றவர் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்ள வேண்டும்” என்றார். அதைக் கேட்ட கோவிந்தப் பெருமாள் “நான் காளஹஸ்தியில் நீசனாக இருந்தேன். இன்று என்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் அது தேவரீருடைய பெரிய கருணையால் என்னைத் திருத்திப் பணி கொண்டு இந்நிலைக்கு உயர்த்தியதாலேயே. ஆகையால் எல்லாப் பெருமைகளும் தேவரீருக்கே” என்றார். இதைக் கேட்ட எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளின் சிறந்த நிஷ்டையை அங்கீகரித்தார். அவர் உடனே கோவிந்தப் பெருமாளிடம் “இப்படிப்பட்ட நற்குணங்களை எமக்கும் தந்தால் ஆகாதோ” என்று கூறி அவரை அணைத்துக் கொண்டார். கோவிந்தப் பெருமாளும் உலக இன்பங்களில் ஈடுபாடு அற்று இருந்ததால் எம்பெருமானார் அவரை ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிடுகிறார். கோவிந்தப் பெருமாளும் ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ள, எம்பெருமானாரும் அவருக்கு எம்பார் என்று பெயரிட்டார்.

பின்பு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரமான அர்த்தங்களைக் காட்டும் ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் அருளிச் செய்கிறார்.

காஷ்மீர யாத்ரையும் ஸ்ரீ பாஷ்யமும்

வேதாந்தக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் நோக்குடன், எம்பெருமானார் ஆழ்வான் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களோடு ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குப் பொருள் விரிக்கும் க்ரந்தமான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெற காஷ்மீர் செல்லத் தொடங்கினார். அந்த க்ரந்தத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார். வரும் வழியில், காஷ்மீரத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை அபஹரித்துச் சென்றார்கள். எம்பெருமானார் முழுதும் அந்த ஸ்ரீ கோஶத்தைப் படிக்காததால் மிகவும் வருந்த, ஆழ்வான் அவரைத் தேற்றி, தாம் அதை எம்பெருமானார் ஓய்வெடுக்கும்போது முழுவதுமாகப்  படித்து விட்டதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் திரும்பியவுடன் எம்பெருமானார் தாம் சொல்லச் சொல்ல ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒரு வ்யாக்யானம் எழுதுமாறு ஆழ்வானை நியமிக்கிறார். அவர் ஆழ்வானிடம் “நமக்கும் உமக்கும் கருத்து பேதங்கள் இருந்தால் நீர் எழுதுவதை அப்போதே நிறுத்தலாம்” என்றார். இவ்வாறு ஒரு முறை ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, உடையவர் ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சொல்ல ஆழ்வானோ ஶேஷத்வமே முக்கியம் என்றிருப்பவராதலால் எழுதுவதை நிறுத்தி விடுகிறார். எம்பெருமானார் கோபமுற்று ஆழ்வானைத் தாம் சொல்லுவதை எழுதும்படி ஆணையிட, ஆழ்வான் பின்பும் எழுத மறுக்க எம்பெருமானார் மிகுந்த கோபத்தை அடைந்தார். அருகில் இருந்தவர்கள் “எம்பெருமானாரின் இந்தச் செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்” என்று வினவ, ஆழ்வானோ “அவர் சொத்தை உடையவர், நாமோ சொத்து. அவர் என்னை எவ்வாறு வேண்டுமானாலும் நடத்தலாம்” என்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எம்பெருமானார் யோஜித்துத் தன்னுடைய தவறை உணர்ந்து ஆழ்வானிடம் மன்னிப்புக் கோரி, ஸ்ரீ பாஷ்யத்தை மீண்டும் தொடருகிறார். இவ்வாறே எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதா பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.

திவ்ய தேஶ யாத்ரை

ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் சென்று “தேவரீர் பிற மதங்களை ஜயித்து நம் ஸித்தாந்தத்தை நன்றாக நிலை நிறுத்திவிட்டீர். இனி திவ்ய தேஶங்களுக்கு திக்விஜயம் செய்து மங்களாஶாஸனம் செய்யவும்” என்று ப்ரார்த்தித்தனர். அதை ஆமோதித்த உடையவர் அவர்களுடன் நம்பெருமாளிடம் சென்று யாத்திரைக்கு அனுமதி கேட்டு நின்றார். நம்பெருமாளும் அதற்கு இசைந்தார்.

உடையவரும் பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தன்னுடைய யாத்திரையைத் தொடங்கி, பாரத தேஶத்தில் உள்ள பல திவ்ய தேஶங்களையும் க்ஷேத்ரங்களையும் தரிசித்தார். முதலில் சோழ நாட்டு திவ்ய தேஶங்களில் தொடங்கி, திருக்குடந்தை மற்றும் பல திவ்ய தேஶங்களை மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருமாலிருஞ்சோலைக்கும் அதன் அருகில் இருக்கும் கோயில்களுக்கும் சென்று, திருப்புல்லாணியை அடைந்து ஸேது தர்ஶநமும் செய்து, ஆழ்வார்திருநகரி சென்றடைந்தார். அங்கே நம்மாழ்வாருக்கும் பொலிந்து நின்ற பிரானுக்கும் மங்களாஶாஸனம் செய்து நிற்க, நம்மாழ்வார் இவரைக் கண்டு மிகவும் உகந்து அனைத்து மரியாதைகளும் அளித்தார். பின்பு நவ திருப்பதிகளையும் மங்களாஶாஸனம் செய்தார். வழி நெடுகிலும் பிற மத வித்வான்களை ஜயித்து நம் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

அவர் அங்கிருந்து திருக்குறுங்குடியை வந்தடைந்தார். நம்பியும் உடையவரை வரவேற்று அர்ச்சகர் மூலம் “நான் எத்தனையோ அவதாரங்கள் செய்தும் ஒரு சில ஶிஷ்யர்களே தேற, நீர் எவ்வாறு இத்தனை ஶிஷ்யர்களை உருவாக்கியுள்ளீர்” என்று கேட்டான். உடையவரோ அதற்கு “கேட்கும் க்ரமத்தில் கேட்டாலே சொல்ல முடியும்” என்றார். நம்பியும் அவருக்கு ஒரு ஆஸனத்தை அளித்து, தான் தன்னிடத்தை விட்டு இரங்கிப்  பணிவுடன் நின்றான். உடையவர் அந்த ஆஸனத்தில் தன் ஆசார்யனான பெரிய நம்பி இருப்பதாகப்  பாவித்து அதன்  அருகில் தான் அமர்ந்து, த்வய மஹா மந்த்ரத்தின் பெருமையை எடுத்துரைத்து, அதனாலேயே இந்த வழியில் பலரை ஈடுபடுத்துவதாக விளக்கினார். நம்பியும் அகமகிழ்ந்து ராமானுஜரை ஆசார்யனாக  ஏற்க, ராமானுஜரும் அவனுக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தைச் சாற்றினார்.

பின்பு, உடையவர் திருவண்பரிஸாரம், திருவாட்டாறு மற்றும் திருவனந்தபுரம் திவ்ய தேஶங்களுக்குச் சென்றார். திருவனந்தபுரத்தில் ஒரு மடத்தை ஏற்படுத்தி, அங்கிருந்த இதர மத வித்வான்களையும் ஜயித்தார். மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் செய்து மேற்குக் கடற்கரை மார்க்கமாகச் சென்று உத்தர பாரத தேஶத்தை அடைந்தார். அங்கு மதுரா, சாளக்ராமம், த்வாரகா, அயோத்யா, பத்ரிகாஶ்ரமம், நைமிசாரண்யம், புஷ்கரம் போன்ற ஸ்தலங்களில் மங்களாஶாஸனம் செய்து, கோகுலம், கோவர்தனம், வ்ருந்தாவனம் போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் சென்று, பல இதர மத வித்வான்களை வாதிட்டு வென்றார்.

அங்கிருந்து அவர் காஷ்மீர தேஶத்தை அடைந்து ஸரஸ்வதீ தேவியின் தலைமையில் இருந்த ஸரஸ்வதீ பண்டாரத்தை அடைந்தார். ஸரஸ்வதீ தேவி தானே உடையவரை எதிர் கொண்டு வரவேற்று சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் “தஸ்ய யதா கப்யாஸம்” ஶ்ருதியின் அர்த்தத்தை விளக்குமாறு வேண்டினாள் (முன்பு இந்த ஶ்லோகமே ராமானுஜருக்கும் யாதவ ப்ரகாஶருக்கும் வேற்றுமை வளரக் காரணமாயிருந்தது). உடையவரும் அதன் அர்த்தத்தை உள்ளபடி எடுத்துரைக்க, அவள் பெரிதும் மகிழ்ந்து, உடையவரின் ப்ரஹ்ம ஸூத்ர உரையான ஸ்ரீபாஷ்யத்தைத் தன் தலை மேல் தாங்கி, அவரைக் கொண்டாடினாள். அவள் உடையவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்ற விருதத்தை அளித்து ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் அளித்தாள். உடையவர் அவளிடம் “ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று வினவ, அவளும், முன்பு ஶங்கரர் வந்த பொழுது, இதே ஶ்ருதிக்கு விளக்கம் கேட்ட பொழுது, அவர் சரியாக விளக்காதாதை, இப்பொழுது தேவரீர் விளக்கியதால் தான் ஆனந்தப் படுவதாகக் கூறினாள். இது கண்டு அங்கிருந்த வித்வான்கள் வாதப் போருக்கு வர, அவர்கள் அனைவரையும் வாதில் வென்று, ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இது கண்ட அவ்வூர் ராஜா மிகவும் ஆச்சர்யப்பட்டு, உடையவர் ஶிஷ்யனானான். தோற்ற வித்வான்கள் மிகவும் ஆத்திரப்பட்டு, ஸூந்யம் வைத்து உடையவரைக் கொல்ல முயல, அது அவர்களையே கெடுக்கத் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். ராஜா உடையவரிடம் அவர்களைக் காக்குமாறு ப்ரார்த்திக்க, அவர்கள் அனைவரும் கோபம் தணிந்து, பின்பு உடையவர் ஶிஷ்யர்களாகவும் ஆயினர்.

பின்பு, புருஷோத்தம க்ஷேத்ரத்தை (ஜகந்நாத புரியின் இருப்பிடம்) அடைந்து, ஜகந்நாதனுக்கு மங்களாஶாஸனம் செய்தார். மாயாவாதிகளை ஜயித்து, ஒரு மடத்தையும் நிறுவினார். அங்கிருந்து ஸ்ரீ கூர்மம், ஸிம்ஹாத்ரி, அஹோபிலம் திவ்ய தேஶங்களுக்குச் சென்ரார்.

இறுதியாக அவர் திருவேங்கடத்தை அடைந்தார். அச்சமயத்தில் ஒரு சில ஶைவர்கள் திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாஸன் எம்பெருமான்) ருத்ரன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது உடையவர் “நீங்கள் உங்கள் தேவதையின் ஆயுதங்களை வைத்துச் செல்லுங்கள், நாமும் நம் தேவதையின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தை வைத்துச் செல்லுவோம். எந்த தேவதையோ அதன் ஆயுதங்களைத் தானே எடுக்கும். இங்கிருக்கும் தெய்வமே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி, அனைவரையும் கர்ப்ப க்ருஹத்தில் இருந்து வெளியேற்றித் திருக்காப்பு சேர்த்தனர்.எம்பெருமான் ஶங்க சக்கரங்களோடு சேவை ஸாதித்தான். அதன் பிறகு உடையவர் மலை இறங்கி அங்கிருந்து தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.

பிறகு, உடையவர் காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் அங்கிருக்கும் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று மங்களாஶாஸனம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகத்தை அடைந்து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பல மாயாவாத வித்வான்களை வாதிட்டு வென்றார். பின்பு திருவஹிந்த்ரபுரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கும் சென்றார்.

இவ்வாறு, உடையவர் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் பெரிய பெருமாளிடம் சென்று அமலனாதிபிரான் ஸேவித்து மங்களாஶாஸனம் செய்ய, பெரிய பெருமாள் அவர் சௌகர்யத்தை விசாரித்தார். உடையவரும் “எங்கிருந்தாலும் தேவரீரையே நினைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு என்ன வருத்தம் வந்துவிடும்?” என்றார். அதன் பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு, தன் நித்யானுஷ்டானங்களைச் செய்து போனார்.

பட்டர்களின் பிறப்பு

இச்சமயத்தில், ஸ்ரீரங்கத்தில், மழை காரணமாக கூரத்தாழ்வான் தன்னுடைய உஞ்சவ்ருத்திக்குச் செல்ல முடியவில்லை. தன்னுடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரஸாதம் உட்கொள்ளாமல் இருந்தார். இரவில், நம்பெருமாள் அரவணை அமுது செய்யும் காலத்தை உணர்த்தும் கோயில் மணியோசை கேட்டது. அதைக் கேட்ட ஆழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள், தன்னுடைய கணவரின் நிலையை நினைந்து மனம் வருந்தி, நம்பெருமாளிடம் “உம்முடைய பக்தர் இங்கே உணவில்லாமல் இருக்க, நீர் மட்டும் நன்றாக அமுது செய்வதென்?” என்று வினவ, அவளின் நிலை உணர்ந்த நம்பெருமாள், தன்னுடைய கைங்கர்யபரர்கள் மூலம் ஆழ்வான் திருமாளிகைக்கு உடனே ப்ரஸாதம் கொடுத்து விடுகிறார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆழ்வான் ஆண்டாளைப் பார்க்க, அவள் நடந்ததைச் சொன்னாள். எம்பெருமானிடம் இப்படி ப்ரார்த்தித்துப் பெறுவதை ஆழ்வான் விரும்பவில்லை. இருந்தாலும், இரண்டு திரள்களைக் கையில் வாங்கி, தான் சிறிது உண்டு, ஆண்டாளுக்கும் அந்தப் ப்ரஸாதத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு ப்ரஸாதத் திரள்களே ஆண்டாளுக்கு இரண்டு அழகிய குழந்தைகளை அளித்தன. பதினோறு நாட்கள் தீட்டுக் கழிந்து, பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் எம்பார் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன், ஆழ்வான் திருமாளிகைக்குக் குழந்தைகளைக் கடாக்ஷிக்க ஆர்வத்துடன் எழுந்தருளினார். எம்பெருமானார் எம்பாரைக் குழந்தைகளைத் தன்னிடம் கொண்டு வருமாறு கூற, எம்பார் பட்டரைத் தன் கையில் கொண்டு வருகிறார். அப்பொழுது எம்பெருமானார் எம்பாரிடம் “இந்தக் குழந்தையிடம் தேஜஸ் நன்றாக விளங்குகிறது, ஒரு அழகிய பரிமளமும் தெரிகிறது. என்ன செய்தீர்?” என்ன, எம்பாரும் “த்வய மந்த்ரத்தை ரக்ஷையாக ஓதினேன்” என்றார். எம்பெருமானார் எம்பாரிடம் “என்னை முந்திக் கொண்டு விட்டீரே, சரி நீரே இக்குழந்தைக்கு ஆசார்யனாக இரும்” என்றார்.   எம்பெருமானார் அக்குழந்தைக்குப் பராஶர முனியின் நினைவாக “பராஶர பட்டர்” என்று பெயரிட்டு, ஆளவந்தாரிடம் செய்த இரண்டாவது ஶபதத்தை நிறைவேற்றினார். பின்பு, இவர் தலைமையில் எம்பார் அக்குழந்தைக்குச் ஸமாஶ்ரயணம் செய்தார். பின்பு, எம்பெருமானார் ஆழ்வானிடம் அக்குழந்தையை பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டிக்கு தத்துக் கொடுக்கச் சொல்ல, ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் சிறு குழந்தையாக இருந்தபோது, பெரிய பிராட்டியாரே அவருக்குத் தாலாட்டுப் பாடி வளர்த்தார். மேலும் பெரிய பெருமாள் முன்பு போகம் வைக்கப் பட்டால், பட்டர் தவழ்ந்து சென்று அதிலிருந்து உண்டபின்னேயே எம்பெருமான் அதை ஆனந்தத்துடன் அமுது செய்வான். இவ்வாறு பட்டர் சிறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கி, எம்பெருமானார் மற்றும் எம்பாருக்குப் பின்பு ஸம்ப்ரதாயத் தலைவர் ஆனார்.

எம்பாரின் பூர்வாஶ்ரமத் தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளின் தர்மபத்தினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, நம்மாழ்வாரின் நினைவாக, அக்குழந்தைக்கு “ஸ்ரீ பராங்குஶ நம்பி” என்று திருநாமமிட்டு, ஆளவந்தாரின் மூன்றாவது குறையையும் போக்கினார்.

முதலியாண்டான் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் எம்பெருமானாரும் அவரிடம் பேரன்புடனும் இருந்தார். ஒரு முறை எம்பெருமானார் பெரிய நம்பி திருக்குமாரத்தி அத்துழாய்க்கு வேலையாளாகச் செல்லும்படி ஆணையிட, உகந்து அவ்வாணையை ஏற்றார் ஆண்டான்.

ஆளவந்தாரின் சிறந்த ஶிஷ்யரான மாறனேர் நம்பியின் இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பி செய்ய, உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பி ப்ராஹ்மணராகையாலும் மாறனேர் நம்பி பஞ்சமராகையாலும், அச்செயலை ஏற்கவில்லை. எம்பெருமானார் பெரிய நம்பியை வரவழைத்து விளக்கம் கேட்க, அவரும் மாறனேர் நம்பியின் பெருமையை எடுத்துரைத்துத் தன் செயல் சரியே என்பதை உணர்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், பெரிய நம்பியின் செயல் சரி என்பது தெரிந்தும், அவரிடமே அதற்கு விளக்கம் அறிய விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

திருநாராயணபுரம் யாத்ரை

இவ்வாறு அனைவரும் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் வாக்குப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர, கொடியவனான சோழ ராஜா சைவ மதத்தில் ஈடுபட்டு, சிவனைப் பரதெய்வமாக நிலை நாட்ட விரும்பினான். அவன் அனைத்து வித்வான்களையும் வரவழைத்து சிவ பரத்வத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டான். அச்சபையில் இருந்த ஆழ்வானின் ஶிஷ்யனான நாலூரான் “பலர் ஏற்று என்ன பயன்? எம்பெருமானாரும் ஆழ்வானும் ஏற்றுக் கொண்டாலே அது உண்மையாக நிலைநிற்கும்” என்று கூற, அதை கேட்ட ராஜா தன் சேவகர்களை ராமானுஜரின் மடத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான். அச்சமயம் எம்பெருமானார் தீர்த்தமாடச் சென்றிருக்க, அங்கிருந்த ஆழ்வான், ராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தானே எம்பெருமானாரின் த்ரிதண்ட காஷாயங்களை சாற்றிக் கொண்டு, ராஜாவின் சேவகர்களுடன் சென்றார். மடத்துக்குத் திரும்பிய எம்பெருமானார் இவ்விஷயம் கேள்விப்பட்டு, ஆபத்தை உணர்ந்து, ஆழ்வானின் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். இதை அறிந்த சில சேவகர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, எம்பெருமானார் மணலைக் கையில் எடுத்து மந்திரித்துத் தன் ஶிஷ்யர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை வழியில் தூவிச் சென்றனர். அந்த மணலை மிதித்த சேவகர்கள் கடும் வலிக்கு உள்ளாகி, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

எம்பெருமானார் மேற்கே பாதுகாப்பான இடமாகக் கருதப் பட்ட திருநாராயணபுரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டு வழியில், அவரின் ஶிஷ்யரான நல்லான் சக்ரவர்த்தியால் திருத்தப்பட்ட சில வேடர்களைச் சந்தித்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்ததால் மிகவும் களைப்புற்றிருந்ததால் மிகவும் பசியுடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை அவ்வேடர்கள் வரவேற்று, எம்பெருமானாரின் க்ஷேமத்தை வினவினர். எம்பெருமானாரை ஸ்ரீவைஷ்ணவர்கள் வேடர்களுக்குக் காட்டிக் கொடுக்க, அவ்வேடர்கள் மிகவும் ஆநந்தப்பட்டு, தேனும் தினை மாவும் ஸமர்ப்பிக்க, எம்பெருமானார் தவிர மற்ற அனைவரும் அதை ஏற்று உண்டனர். வேடர்கள் அருகில் இருந்த க்ராமத்தில் சென்று அவர்களை ஒரு ப்ராஹ்மண இல்லத்தில் விட்டு, சமைப்பதற்குத் தேவையான பதார்த்தங்களையும் கொடுத்தனர்.

அந்த இல்லத்தில் ப்ராஹ்மணரின் (கொங்கிலாச்சான்) தர்ம பத்தினி, எல்லோரையும் வணங்கி, தான் தயார் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்களோ, தாங்கள் எல்லோரிடமும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்க, அவளும் உடனே தானும் எம்பெருமானாரின் ஶிஷ்யை என்றும், ஸ்ரீரங்கத்தில் சில காலம் முன்பு வசித்த போது எம்பெருமானார் தன்னைச் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவள் கூறியது – முன்பு ஒரு காலத்தில், நன் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ராஜாக்களும் மந்திரிகளும் எம்பெருமானாரிடம் வந்து ஆசி வாங்கிச் செல்வர். ஆனல் அவரோ தினமும் பிக்ஷைக்கு வருவார். ஒரு நாள் அவரிடம் “ஏன் இந்த நிலை?” என்று கேட்க அவரும் “நான் அவர்களுக்கு பகவானைப் பற்றிய விஷயங்களை உணர்த்துவதால் அவர்கள் என்னிடம் வருகின்றனர்” என்றார்.நான் அவரிடம் எனக்கும் அதே விஷயங்களை உபதேசிக்குமாறு கேட்க, அவர் என்னைத் தன் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உபதேசித்தார். நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பும் காலத்தில் அவர் ஆசிகளைக் கேட்க, அவரும் தன் திருப்பாதுகைகளை எனக்கு அளித்தார். பின்பு நாங்கள் இங்கே வந்து விட்டோம். இதைக் கேட்ட எம்பெருமானார் தான் யார் என்பதை கூறாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை அவள் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு முன், ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவள் செய்வதைப் பார்க்குமாறு கூறினார். அவள் தளிகை சமைத்து முடித்து, தன் பூஜை அறைக்குச் சென்று, அங்கிருந்த ஸன்னிதிக்கு முன்பு இருந்து த்யானித்தாள். அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒரு விக்ரஹம் போன்று இருந்த ஒரு வஸ்து இருப்பதைக் கண்டார். அவர் எம்பெருமானாரிடம் அவர் கண்டதைக் கூறினார். எம்பெருமானார் அவளிடம் “நீ உள்ளே என்ன செய்தாய்” என்று கேட்க அவள் “எம்பெருமானார் அளித்த திருப்பாதுகைகளை வணங்கி உணவை அவற்றுக்கு நைவேத்யம் செய்தேன்” என்றாள்.அவர் அவளிடம் அவற்றை வெளியே எடுத்து வரச் சொல்ல அவளும் அவ்வாறே செய்தாள். அவர் அது தன்னுடையது என்பதை உடனே உணர்ந்து கொண்டார். அவளிடம் “இங்கு எம்பெருமானார் இருப்பது உனக்குத் தெரிகிறதா” என்று கேட்க, அவளும் விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து எல்லோருடைய திருவடிகளையும் கண்டாள். எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு ஆநந்தத்துடன் “இவை எம்பெருமானாரின் திருவடிகள் போல உள்ளன, ஆனால் நீரோ வெள்ளை சாற்றிக் கொண்டிருப்பதால், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை” என்றாள். எம்பெருமானார் தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளுக்குத் தான் செய்த உபதேசங்களைக் கூறுமாறு கூறினார். அவளும் அவற்றை மகிழ்ச்சியுடன் சொல்ல, எம்பெருமானார் அனைவரையும் ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். ஒரு பகவத் விக்ரஹத்துக்கு நைவேத்யம் செய்யப்படாததால் தான் அந்த ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அவள் பழங்கள், பால் மற்றும் சர்க்கரையை அவரிடம் ஸமர்ப்பிக்க அவரும் தன் பெருமாளுக்கு அவற்றைப் படைத்து, பின்பு தானும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் ஶேஷப்ரஸாதத்தைத் தன் கணவருக்குக் கொடுத்துத் தான் மட்டும் உண்ணாமல் இருக்கிறாள். அதைக் கண்டு ஏன் என்று அவர் வினவ, “நீர் முன்பு எம்பெருமானாரை ஆசார்யனாக ஏற்கவில்லை. இன்று அவரே நம் இல்லம் தேடி வந்துள்ளார். நீர் அவரை ஆசார்யனாக ஏற்பேன் என்று சம்மதித்தால் மட்டுமே நான் உண்பேன்” என்ன அவரும் அதை ஏற்க, அவளும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்கிறாள். காலையில், அவர் எம்பெருமானாரிடம் சென்று சரணடைய எம்பெருமானாரும் அவருக்கு உபதேசங்கள் செய்து அவரைச் ஶிஷ்யராக ஏற்கிறார். பின்பு, எம்பெருமானார் காஷாய த்ரிதண்டத்தைச் ஸம்பாதித்து, சில நாட்கள் அங்கேயே இருந்து, மீண்டும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

அங்கிருந்து பௌத்த ஜைனர்கள் நிறைந்த ஸாளக்ராமம் வந்தடைந்தார். அவர்கள் இவரை கணிசியாமல் இருக்க, முதலியாண்டானை அவரின் திருவடிகளை ஊரில் உள்ள கேணியில் விளக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, புனிதமான அந்த தீர்த்தத்தை உட்கொண்ட அனைவரும் எம்பெருமானாரிடம் ஈடுபாடு கொண்டனர். அதே ஸமயத்தில் அந்த ஊரில் இருந்த வடுக நம்பி எம்பெருமானாரை எல்லாமாக ஏற்றுக் கொண்டு, ஆசார்ய பக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். எம்பெருமானார் அங்கிருந்து தொண்டனூர் சென்றடைந்து, விடல தேவ ராயன் என்கிற ராஜாவின் பேய் பிடித்த மகளை குணமாக்குகிறார். ராஜாவும் அவனின் குடும்பமும் எம்பெருமானார் ஶிஷ்யர்களாக, எம்பெருமானார் அந்த ராஜாவுக்கு விஷ்ணு வர்தந ராயன் என்று பெயரிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட 12000 ஜைன வித்வான்கள் எம்பெருமானாரிடம் வாதிட வர, எம்பெருமானார் தனக்கும் அவர்களுக்கும் நடுவே திரையிட்டு தான் திரைக்குப் பின்னிருந்து ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் வாதிடுகிறார். திரைக்குப் பின்னால், தன்னுடை நிஜ ரூபமான ஆயிரம் தலை கொண்ட ஆதிஶேஷ வடிவை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஒரே ஸமயத்தில் விடை கொடுக்கிறார். அவரிடம் தோற்ற பலரும் அவரின் ஶிஷ்யர்களாக தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு வெளியிடுகிறார். ராஜாவும் எம்பெருமானாரைக் கொண்டாடுகிறான்.

இவ்வாறு தொண்டனூரில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரிடம் இருந்த திருமண் முடிந்து போக, அவர் வருத்தமுடன் இருந்தார். திருநாராயணபுரத்து எம்பெருமான் அவர் கனவில் வந்து “நாம் உமக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், திருமண்ணும் இங்கேயே உள்ளது” என்று கூற, ராஜாவின் உதவியுடன் திருநாராயணபுரம் அடைந்து, திருநாராயணபுரத்து எம்பெருமானைச் சேவிக்க முற்பட, அங்கே கோயில் இல்லாமல் இருப்பது கண்டு மிகவும் வருத்தமுற்றார். பின்பு திருமேனி சோர்வுற்று சிறிது கண்ணயர, கனவில் எம்பெருமான் தான் இருக்கும் இடைத்தைக் காட்டிக் கொடுக்க, எம்பெருமானார் எம்பெருமானை பூமியில் இருந்து வெளிக்கொணர்ந்தார். நம்மாழ்வார் பேரன்புடன் திருநாரணனைக் கொண்டாடியதால் திருவாய்மொழியில் “ஒரு நாயகமாய்” பதிகத்தை இந்த எம்பெருமானுக்கு என்று எம்பெருமானார் ஆக்கினார். திருமண் கிடைக்கப் பெற்று, பன்னிரு திருநாமங்கள் சாற்றிக்கொண்டார். பின்பு, ஊரைத் திருத்தி, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து பல கைங்கர்யபரர்களையும் நியமித்தார்.

உத்ஸவ விக்ரஹம் இல்லாததால் உத்ஸவங்கள் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இது கண்டு வருத்தமுற்ற எம்பெருமானாரின் கனவில் மீண்டும் எம்பெருமான் தோன்றி, ராம ப்ரியன் என்கிற உத்ஸவர் தற்பொழுது தில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதைக் காட்டிக்கொடுக்க, எம்பெருமானாரும் தில்லி சென்று, ராஜாவிடம் இவ்விஷயத்தைக் கூற, ராஜாவும் தன் மகளின் அந்தப்புரத்துக்கு எம்பெருமானாரை அழைத்துச் சென்று காண்பித்தான். அந்தப்புரத்தில் ராமப்ரியன் விக்ரஹத்தை அதீத ப்ரீதியுடன் ராஜாவின் குமாரத்தி பேணிக்கொண்டிருந்தாள். எம்பெருமானார் அந்த விக்ரஹத்தைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தித்து “செல்லப்பிள்ளை இங்கே வாராய்” என்று கூற, எம்பெருமானும் உடனே துள்ளிக் குதித்து எம்பெருமானார் மடியில் வந்தமர்ந்தான். இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ராஜா எம்பெருமானுக்கு பல திருவாபரணங்களைச் சமர்ப்பித்து எம்பெருமானாருடன் அனுப்பி வைத்தான். ராஜாவின் குமாரத்தியோ ராமப்ரியன் பிரிவு தாங்காமல் எம்பெருமானார் கோஷ்டியைத் தொடர்ந்து வர, திருநாராயணபுரத்து எல்லையில், எம்பெருமான் அவளைத் தன்னுள் (ஆண்டாளைச் செய்தது போல) அந்தர்கதம் ஆக்கிக்கொண்டான். எம்பெருமானாரும் அவளைத் துலுக்க நாச்சியார் என்று பெயரிட்டு எம்பெருமான் திருவடியிலேயே ப்ரதிஷ்டை செய்தார். பின்னர், உத்ஸவரை ஸந்நிதியில் புனர் ப்ரதிஷ்டை செய்து அனேக உத்ஸவங்களை நடத்திப் போனார்.

ஸ்ரீரங்கம் திரும்புதல்

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டு காலம் திருநாராயணபுரத்தில் இருந்து கொண்டு பல கைங்கர்யங்கள் செய்தும் பல ஸ்ரீவைஷ்ணவர்களை உருவாக்கியும் தன் காலத்தை ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு ஏற்றவாறு கழித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மாருதி சிறியாண்டான் மூலமாக ஶைவ ராஜா மாண்டான் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆனந்தித்து ஸ்ரீரங்கம் புறப்பட முற்பட்டார். அங்கிருந்த அவரின் ஶிஷ்யர்கள் இவ்விஷயம் கேட்டு எம்பெருமானாரைப் பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கவலைக்கடலில் மூழ்கினர். எம்பெருமானார் அவர்களைத் தேற்றி, அவர்கள் விருப்பத்துக்கு இணங்க தனக்கு ஒரு திருமேனியை ஏற்படுத்த ஒப்புக் கொண்டார். இத்திருமேனியே “தமருகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு பயண கதியில் ஸ்ரீரங்கம் வந்தடைந்து பெரிய பெருமாளுக்கும் பெரிய பிராட்டிக்கும் மங்களாஶாஸனம் செய்துகொண்டு நம் ஸம்ப்ரதாயத்தையும் செவ்வனே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.

ஸ்ரீரங்கம் எழுந்தருளிய உடையவர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து, ஸன்னிதி ப்ரதக்ஷிணம் செய்து புத்துணர்வு பெற்று, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் சென்றார். ஆழ்வான் பக்திப் பெருக்குடன் உடையவர் திருவடிகளில் விழுந்து அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடக்க, உடையவர் அவரை ஆதரத்துடன் எடுத்து அணைத்துக் கொண்டு, ஆழ்வானின் கண்ணில்லாத கோலத்தைக் கண்டு மாளாத துன்பத்துடன் பேசாதிருந்தார். பின்பு கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஆழ்வானிடம் “நம்முடைய தரிஶனத்துக்காக (ஸம்ப்ரதாயத்துக்காக) உம்முடைய தரிஶனத்தையே (கண்களையே) இழந்தீரே” என்று கூற, ஆழ்வானும் “இது என்னுடைய அபசாரத்தினாலேயே நடந்தது” என்று கூறினார். உடையவர் “அன்று! நீர் அபசாரப்படுவீரோ? இது என்னுடைய அபசாரமாகவே இருக்க வேண்டும்” என்று தேற்றினார். ஒருவாறு எல்லோரும் தேறி நிற்க, உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திரும்புகிறார்.

இச்சமயத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் (தற்பொழுது சிதம்பரம் என்று அழைக்கப்படும்) திருச்சித்ரகூடம் ஶைவ ஸமயத்தைச் சேர்ந்த தீயவர்களால் அழிக்கப்பட்டது என்று கூறினர். உடையவரும், அந்த திவ்ய தேசத்து எம்பெருமானின் உத்ஸவ விக்ரஹம் திருப்பதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருளுப்பட்டது என்று அறிந்து உடனே திருப்பதி நோக்கி விரைந்தார். அங்கே திருச்சித்ரகூடத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு புதிதாக ஒரு மூல மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வித்தார் (தற்காலத்தில் கீழ் திருப்பதியில் நாம் ஸேவிக்கும் கோவிந்தராஜப் பெருமாள் இவரே). பின்பு உடையவர் திருமலை மேல் சென்று திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்து, அங்கிருந்து காஞ்சீபுரம் சென்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்து, ஸ்ரீரங்கம் வந்தடைந்து தொடர்ந்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்.

பின்பு, உடையவர் ஆழ்வானை அழைத்து “தேவப் பெருமாளைப் ஸ்தோத்ரம் செய்தால் அவர் வேண்டியது அருள்வார் என்று கூறி”, அவரை ஸ்தோத்ரம் செய்து அவருடைய கண் பார்வை திரும்பப் பெறப் ப்ரார்த்திக்குமாறு ஆணையிடுகிறார். ஆழ்வான் முதலில் தயங்கினாலும், உடையவரின் ஆணையை மீற முடியாமல் ஏற்றுக் கொண்டு, ஶ்ரீவரதராஜ ஸ்தவத்தை அருளிச்செய்து, அதன் இறுதியில் தன் உட்கண்களால் எம்பெருமானைக் காணும்படி ஆக வேண்டும் என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் ஆனந்தத்துடன் அதை நிறைவேற்ற, இதை ஆழ்வான் உடையவரிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு த்ருப்தி அடையாத உடையவர் ஆழ்வானையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்தடைந்து, தேவப் பெருமாள் திருமுன்பே ஆழ்வானை ஶ்ரீவரதராஜ ஸ்த்வம் ஸேவிக்குமாறு கூறுகிறார். அவ்வாறு ஸேவித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேறு காரியமாக வெளியே செல்ல, ஆழ்வான் ஸ்த்வத்தைச் ஸேவித்து முடிக்கிறார். தேவப் பெருமாளும் ஆழ்வானுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆழ்வானும் “நாம் பெற்ற பலன் நாலூரானும் பெற வேண்டும்” என்று கேட்க தேவப் பெருமாளும் அதை ஏற்றுக்கொள்கிறார். அங்கே மீண்டும் எழுந்தருளிய உடையவர் நடந்த விஷயம் கேட்டுப் பெருமாளையும் ஆழ்வானையும் வெறுத்து, தன்னுடைய ஆசையை நிறைவேற்றாததற்காகக் கடிந்து கொண்டார். தேவப் பெருமாள் உடனே ஆழ்வானுக்குப் பெருமாளும் உடையவரும் தெரியும்படி அருளினார். அவ்வாறு அருளப்பட்ட ஆழ்வான், தேவப் பெருமாளின் அழகை அனுபவித்து உடையவரிடம் விண்ணப்பிக்க, உடையவரும் த்ருப்தி அடைந்தார்.

கோயில் அண்ணர்

ஒருமுறை உடையவர் நாச்சியார் திருமொழிக்குப் பொருள் விளக்கிக் கொண்டிருக்க, “நாறு நறும் பொழில்” பாசுரம் வர, அதில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் ஸமர்ப்பிக்க ஆசைப் படுவது கண்டு, உடனே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை வந்தடைந்து, எம்பெருமானுக்கு ஆண்டாள் விருப்பப்படி அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஸமர்ப்பித்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு மங்களாஶாஸனம் செய்தார். ஒரு அண்ணன் தன் தங்கைக்குப் பரிவுடன் செய்வது போன்ற உடையவரின் இந்தச் செயலால் மிகவும் மகிழ்வுற்ற ஆண்டாள், உடையவரை “நம் கோயில் அண்ணர்” (ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அண்ணன்) என்று அழைத்தார். அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி சென்றடைந்து ஆழ்வார் மற்றும் ஆதிநாதருக்கு மங்களாஶாஸனம், பின்பு ஸ்ரீரங்கம் வந்தடைந்து தன்னுடைய காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.

இவர் ஶிஷ்யர்கள்

அவருக்குப் பல ஶிஷ்யர்கள் இருந்தனர். மேலும் அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளையும் ஆசார்யர்களாக நம் ஸம்ப்ரதாய வளர்ச்சிக்காகவும், கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கவும், நியமித்தார். இந்தச் சமயத்தில், பல ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.

  • கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான், பட்டர் போன்றோர் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரசாரம் செய்ய உதவினர்.
  • அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாரின் எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார்.
  • கிடாம்பிப் பெருமாளும் கிடாம்பி ஆச்சானும் திருமடைப்பள்ளியை நிர்வஹித்தனர்.
  • வடுக நம்பி உடையவருக்கு எண்ணெய்க்காப்பு ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தார்.
  • கோமடத்துச் சிறியாழ்வான் கலசப் பானையும் திருவடிஜோடுகளையும் எடுப்பார்.
  • பிள்ளை உறங்கா வில்லி தாஸர் கருவூலத்தை நோக்கினார்.
  • அம்மங்கி பால் காய்ச்சுவார்; உக்கலாழ்வான் ப்ரஸாதம் எடுப்பார்.
  • உக்கலம்மாள் திருவாலவட்டக் கைங்கர்யம் செய்வார்.
  • மாருதிப் பெரியாண்டான் உடையவரின் திருக்கைச் செம்பு பிடிப்பார்.
  • மாருதிச் சிறியாண்டான் மடத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் ஏற்பாடு செய்வார்.
  • தூய முனி வேழம் தீர்த்த கைங்கர்யம் செய்வார்.
  • திருவரங்கமாளிகையார் ஶ்ரீபண்டாரம் நிர்வஹிப்பார்.
  • பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மருமக்களான வண்டரும் செண்டரும் ராஜ சேவை செய்து ஆயிரம் பொன் சம்பாதித்து மடத்துக்குச் சமர்ப்பிப்பர்.
  • இராமானுஜ வேளைக்காரர் உடையவருக்கு மெய்க்காவலாக இருப்பார்.
  • அகளங்க நாட்டாழ்வான் பிற மத வித்வான்களுடன் தர்க்கிப்பார்.

பலரால் வெளியிடப்பட்ட இவர் பெருமைகள்

உடையவரின் பெருமை பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், பேரருளாளன், திருநாராயணப் பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, நம்மாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், உடையவருடைய பல  ஶிஷ்யர்கள், ப்ரஹ்ம ராக்ஷஸு மற்றும் ஊமை முதலானோர்களால் வெளியிடப்பட்டது.

அவற்றைச் சிறிது இங்கே பார்ப்போம்.

  • பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கம்) தன்னுடைய நித்ய விபூதியையும் லீலா விபுதியையும் உடையவருக்கு அளித்து உடையவரின் ஸம்பந்திகளுக்கும் அவற்றை அவர் இஷ்டப்படி வினியோகம் செய்யும்படி அருளினார்.
  • திருவேங்கடமுடையான் (திருமலா திருப்பதி)பெரிய பெருமள் எம்பெருமானாருக்கு அளித்த “உடையவர்” என்ற விருதை அங்கீகரித்தார். மேலும் அவர் உடையவரின் விருப்பத்தின் பேரில், தும்பையூர்க் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கு மோக்ஷம் அளித்தார்.
  • பேரருளாளன் (காஞ்சீபுரம்) உடையவர் யஞ்ய மூர்த்தியை வாதத்தில் ஜயிப்பதற்கு உதவினார். மேலும் முன்பு வேறு ஸித்தாந்த்தத்தைச் சேர்ந்திருந்து சிறு வயதில் உடையவருக்கு ஸாமான்ய ஶாஸ்த்ரம் கற்றுக் கொடுத்த யாதவ ப்ரகாஶனை உடையவருக்கு ஶிஷ்யராகி அவரிடமே ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.
  • திருநாராயணன் (மேலக்கோட்டை) உடையவரைக் கொண்டு தன்னுடைய திவ்ய க்ஷேத்ரத்தைப் புனர் நிர்மாணம் செய்யச்செய்து உடையவரின் செல்லப் பிள்ளையாகி, உடையவர் தன்னை எடுத்து அணைக்கும்படி அமைத்துக் கொண்டார்.
  • அழகர் (திருமாலிருஞ்சோலை) உடையவரின் பெருமையை இரண்டு முறை வெளியிட்டார் – பெரிய நம்பி திருவம்ஶத்தார் உடையவர் உடையாருக்குப் பெருமாள் அருளப்பாடிட்டு அழைக்க, தாங்கள் உடையவருக்கு ஆசார்ய வர்க்கம் என்றெண்ணி ஒதுங்கி நிற்க, அழகர், நீங்களும் உடையவர் உடையார் கோஷ்டியில் சேர்தலே நன்று என்றார். மேலும், கிடாம்பி ஆச்சானிடம் உடையவரின் ஶிஷ்யர்கள் அகதி இல்லை என்று நிர்ணயித்துக் காட்டினார்.
  • திருக்குறுங்குடி நம்பி உடையவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு ப்ரஸித்தமாக ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
  • நம்மாழ்வார் ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஆத்மாக்களைக் கண்டு வருந்தி பின்பு எம்பெருமானாரின் அவதாரத்தை உணர்ந்து ஆனந்தத்துடன் “பொலிக! பொலிக! பொலிக!” என்று பாடினார்.
  • ஸ்ரீமந் நாதமுனிகள் “நாம் உபதேசித்தால் சில ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைவர் ஆனால் எம்பெருமானார் உபதேசித்தால் அனைவரும் உஜ்ஜீவனம் அடைவர், எப்படி வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அது போல” என்றார்.
  • ஆளவந்தார் உடையவரைக் கண்டு “ஆம் முதல்வன்” என்று மொழிந்தார்.
  • பெரிய நம்பி எம்பெருமானாருக்கு ஆசார்யராக இருந்தும் அவரின் பெருமைகளைக் கண்டு அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்தார்
  • திருக்கோஷ்டியூர் நம்பி ஆசை உடையோர்க்கெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்த உடையவரின் பெரும் கருணையைக் கண்டு உடையவருக்கு “எம்பெருமானார்” (எம்பெருமானையும் விடப் பெரியவர்) என்ற விருதை அளித்தார்
  • திருமாலை ஆண்டான் உடையவருடன் சில கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தார். ஆயினும், உடையவரின் பெருமைகளை உணர்ந்தபின் அவரை மிகவும் கொண்டாடி, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.
  • திருவரங்கப் பெருமாள் அரையர் மிகவும் ரஹஸ்யார்த்தமான “ஆசார்ய அபிமானம்” என்பதை உடையவருக்கு உபதேஶித்து, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.
  • உடையவரின் ஶிஷ்யர்கள் அவரின் திருவடித் தாமரைகளில் மிகுந்த விஶ்வாஸத்துடன் இருந்து, அவற்றையே தங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டிருந்தனர்.
  • அமுதனார் உடையவர் விஷயமாக இராமானுச நூற்றந்தாதியை ஸமர்ப்பிக்க, அது 4000 திவ்ய ப்ரபந்தத்திலும் சேர்க்கப்பட்டது.
  • ராஜகுமாரியின் உடம்பில் புகுந்திருந்த ப்ரஹ்ம ராக்ஷஸு யாதவ ப்ரகாஶனைக் கணிசியாமல் எம்பெருமானாரை நித்யஸூரிகளின் தலைவர் என்று காட்டிக் கொடுத்தது.
  • உடையவரால் அருளப்பட்ட ஒரு ஊமை சில வருடங்கள் காணாமல் போய்த் திரும்பி வந்து “உடையவர் விஷ்வக்ஸேனரே” என்று கூறி மறைந்தார்.
  • இவ்வாறு பல பெரியோர்கள் உடையவரின் பெருமையை வெளியிட்டனர்.

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாகப் பல ஆசார்யர்கள் இருக்க உடையவருக்கு என்ன தனிச் சிறப்பு எனில் எம்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரமும் க்ருஷ்ணாவதரமும் அவர்களின் மற்றவர்களுக்குச் சரண் அளித்ததாலும் கீதோபதேஶம் செய்ததாலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.

  • பல திவ்ய தேஶங்கள் இருந்தாலும், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை ஆசர்யர்களுடன் இருந்த விசேஷ ஸம்பந்தத்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.
  • பல ரிஷிகள் இருந்தாலும், வேத வ்யாஸ பகவான், பராஶர பகவான், சௌனக பகவான், ஶுக பகவான், நாரத பகவான் ஆகியோர் அவர்களின் வேத வேதாந்த புராண இதிஹாஸ வெளியீடுகளால் சிறந்தவர்களாக் கருதப்படுகின்றனர்.
  • பல ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வார் அறிய வேண்டிய அர்த்தங்களையும், ஸித்தாந்த்தையும் தெளிவாக அறிவித்ததால் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார்.
  • இதே போல, உடையவர் இங்கே கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் பங்கு பெற்றதாலும், நம் ஸித்தாந்தத்துக்கும் ஸம்ப்ரதாயத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்ததாலும் அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டதாலும் மிகவும் கொண்டாடப்படுகிறார்.

சரம காலம்

உடையவரின் ஶிஷ்யர்கள் அவர்களின் ஆசார்ய ப்ரதிபத்தியாலும், எம்பெருமானார் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக இருந்ததாலும், ஆழ்வார் “பொலிக பொலிக பொலிக” என்று இவர் திருவவதாரத்தை முன்பே அறிவித்ததாலும் “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றே எப்பொழுதும் இருந்தனர். மேலும், உடையவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்ததால், ஆழ்வாரின் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார். ஆளவந்தாரும் இவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லையாயினும், ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்திருந்ததாலும் அவரின் ஆசைகளைத் தாம் பூர்த்தி செய்ததாலும், ஆளவந்தாருக்கும் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார்.

உடையவர் ஸ்ரீராமாயணத்தில் வரும் விபீஷண ஶரணாகதி சரித்ரத்தைக் கொண்டு ஶரணாகதி தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் மிகவும் உள்ளம் கலங்கினார். அதைக் கண்ட உடையவர் தாஸரை “ஏன் வருந்துகிறீர்” என்று கேட்க தாஸரும் “அனைத்தையும் விட்டு ஸ்ரீ ராமனே ஶரணம் என்று வந்த விபீஷணனையே இவ்வளவு காக்க வைத்தால் நம் நிலை என்ன? நமக்கு மோக்ஷம் கிடைக்குமா?” என்று வினவினார். இதை கேட்ட உடையவர் தாஸரிடம் “கேளீர் பிள்ளாய்! எனக்கு மோக்ஷம் கிடைத்தால், உமக்கும் கிடைக்கும்; பெரிய நம்பிக்குக் கிடைத்தால், எனக்குக் கிடைக்கும்; ஆளவந்தாருக்குக் கிடைத்தால் பெரிய நம்பிக்குக் கிடைக்கும் …. இவ்வாறு நம்மாழ்வார் வரை சென்றால் அவர் திருவாய்மொழியின் இறுதியில் தான் மோக்ஷம் பெற்றதாக அறிவித்துள்ளதால், உமக்கும் கட்டாயம் கிடைக்கும்” என்று கூறி அவரைத் தேற்றினார்.

இராமானுச நூற்றந்தாதி ப்ரபந்தம் மூலம் அமுதனார் எம்பெருமானாரே மோக்ஷத்துக்கு உபாயம் என்றும் அவருக்கும் அவர் அடியவர்களுக்கும் சேவை செய்வதே நம் குறிக்கோள் என்றும் நிர்ணயித்துள்ளார்.

முதலியாண்டானின் திருக்குமாரர் கந்தாடையாண்டான் இப்படிப்பட்ட எம்பெருமானாரிடம் அவரின் ஒரு விக்ரஹத்தைப் நிர்மாணித்து அதை ஸ்ரீபெரும்பூதூரில் ப்ரதிஷ்டை செய்து அனைவரும் அவரைப் பிற்காலத்தில் சேவிக்குமாறு ஏற்பாடு செய்ய உத்தரவு கேட்க எம்பெருமானாரும் அனுமதி அளித்தார். ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு ஒரு அழகிய விக்ரஹம் செய்யப்பட்டது. அந்த விக்ரஹம் எம்பெருமானாரின் திருவுள்ளத்துக்கு  மிகவும் ஏற்புடையதாக இருந்ததால் எம்பெருமானாரும் அதைத் தழுவிக் கொண்டார். அந்த விக்ரஹம் ஸ்ரீபெரும்பூதூரில் தை புஷ்யத்தன்று ப்ரதிஷ்டை செய்யப் பட்டது.

இவ்வாறு உடையவர் 120 வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யஸூரிகளுடன் சேர்ந்திருக்க மிகுந்த ஆர்த்தி தலை எடுக்க, பெரிய பிராட்டி புருஷகாரத்துடன் பெரிய பெருமாளிடம் சென்று கத்ய த்ரயம் ஸேவித்துத் தன்னை இங்கிருந்து அங்கு அழைத்துக் கொள்ளுமாறு ப்ரார்த்தித்தார். பெரிய பெருமாளும் எம்பெருமானாருக்கு அன்றிலிருந்து ஏழாம் நாள் மோக்ஷம் கொடுப்பதாக வாக்களித்தார். எம்பெருமானார் பெருமாளிடம் “என்னுடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் எனக்குக் கிடைத்த பேறு கிடைக்க வேண்டும் ப்ரார்த்திக்க”, எம்பெருமானும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். உடையவர் பெரிய பெருமாளிடம் இருந்து விடை பெற்று, ராஜ நடையுடன் தன் மடத்தைச் சென்றடைந்தார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் ஶிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவிக்க, அவர்கள் அதைக் கண்டு ஆச்சர்யப் பட, மேலும் மறைக்க முடியாது என்று உணர்ந்த உடையவர் “இன்றிலிருந்து நான்காம் நாள் பெரிய பெருமாள் அனுமதியின் பேரில் நாம் பரமபதத்துக்குச் செல்கிறோம்” என்று அருளிச்செய்ய, அங்கிருந்த ஶிஷ்யர்கள் கடல் கலங்கினாப் போலே திடித்து “நாமும் ப்ராணத் த்யாகம் செய்வோம்” என்று கூற, உடையவர் “அவ்வாறு செய்தால் உமக்கும் எனக்கும் இனி ஸம்பந்தம் இல்லை” என்று அருளித் தேற்றினார்.

இவ்வாறு மேலும் பல அரிய உபதேஶங்களைச் செய்து, தன்னுடைய ஶிஷ்யர்கள் பலருக்கும் ஓரோர் பொறுப்பை அளித்தார். அனைவரையும் கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டருக்கு அனுகூலமாக இருக்கும்படி ஆணையிட்டார். அனைவரிடமும் அபராத க்ஷாமணம் செய்து கொண்டு மீண்டும் தன் சரம உபதேஶங்களை அருளினார். முக்கியமாக மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் குணங்களைக் கொண்டாடும்படியும், ஸஹோதரர்கள் போலே கூடி உழைக்குமாறும் ஆணையிட்டார். உபாயாந்தரங்களில் கண் வையாமல், அனைத்துப் பொறுப்பகளையும் கைங்கர்யமாகச் செய்யுமாறு கூறினார். மேலும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் த்வேஷம் பாராட்டமலும் ஸம்ஸாரிகளைக் கொண்டாடாமல் இருக்கவும் ஆணையிட்டார்.

பின்பு, பட்டரைப் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, தீர்த்த மரியாதைகளை வாங்கிக் கொடுத்து, அனைவரிடமும் பட்டரே தர்ஶன நிர்வாஹம் செய்வார் என்றும், பட்டரிடம் “மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்தும் என்றும் ஆணையிட்டார். எம்பார் பெரியவராக இருந்ததால், தன்னுடைய ஶிஷ்யரான பட்டரை வழி நடத்திச் சென்றார்.

பரமபதம் செல்ல வேண்டிய நாள் அன்று, எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாஸுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிஶேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார். இதைக் கண்ட ஶிஷ்யர்கள் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து  கதறினர். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டனர். பெரிய பெருமாள் தன்னுடைய இழப்பையும் பரமபதநாதனின் லாபத்தையும் நினைத்து வருந்தி, சுருளமுதை விலக்கினான். பின்பு உத்தம நம்பி மூலம் தன்னுடைய அனைத்து பரிகரங்களையும் எம்பெருமானாருக்குக் கொடுத்து விடுகிறான். மடத்தில், எம்பெருமானாரின் விமல சரம திருமேனிக்கு ஸ்நாநம், பன்னிரு திருநாமம் சாற்றுதல், தீபம் தூபம் போன்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்பட்டன. அபிமான புத்ரரான பிள்ளான், சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்தார்.திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகவும் உத்ஸாககத்துடன் வேதம், உபநிஷத், திவ்ய ப்ரபந்தம், வாத்யம், அரையர் ஸேவை போன்றவைகளை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் எம்பெருமானார் சரம திருமேனியை எழுந்தருளிக் கொண்டு போகையில், பூவும் பொரியும் தூவிக்கொண்டு சென்றனர். பெரிய பெருமாளின் ஆணைப்படி, எம்பெருமானார் யதி ஸம்ஸ்கார விதியின் படி பூமிக்கடியில் பெருமாளின் வஸந்த மண்டபத்திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பட்டார். பெரிய பெருமாள் ஆணைப்படி, திருப்பள்ளிப்படுத்திய இடத்தின் மேலேயே முதலியாண்டான் எம்பெருமானாருக்கு ஒரு திருமேனியைப் ப்ரதிஷ்டை செய்தார்.

பின்பு, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினர். சிலர் எம்பெருமானாரின் பிரிவைத் தரிக்க முடியாமல் உயிரையும் விட்டனர். ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர்களோ பட்டர் அங்கு தர்ஶன நிர்வாஹம் செய்வது கண்டு தங்களைத் தேற்றிக் கொண்டனர்.

இவ்வாறு எம்பெருமானார் அனைவரின் உஜ்ஜீவனத்துக்காகவே இருந்த ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஒருவர் எம்பெருமானின் பெருமைகளைச் சொன்னாலும் சொல்லலாம் எம்பெருமானாரின் பெருமைகளைச் சொல்லி முடிக்க முடியாது. எம்பெருமானாரின் வாழ்வையும் பெருமைகளையும் அவரின் ஆயிரமாவாது ஆண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனுபவித்தோம். இந்த அனுபவம் நம் நெஞ்சில் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். நாமும் நம் ஆழ்வார் ஆசார்யர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் ஒரு விஶ்வாஸமுள்ள ராமானுஜ தாஸராக வாழலாம்.

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஶவ யஜ்வன: |
காந்திமத்யாம்
ப்ரஸூதாய யதிராஜாய மங்களம் ||

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே | 
ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீ ராமானுஜ வைபவம்”

Leave a Comment