அந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 2

 

இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :- “இருள்தருமாஞாலத்தே இன்பமுற்றுவாழும் தெருள்தருமா தேசிகனைச் சேர்ந்து”, “குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”, “வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”, “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”, “வேறொன்றும் நானறியேன்”, “தேவு மற்றறியேன்”, “ஶத்ருக்நோ நித்யஶத்ருக்ந”, “வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்”,“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”, “இராமானுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”, “பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றச்சரணன்றி”, “நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப்புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்”, “இராமானுசனையடைந்தபின் என்வாக்குரையாது என்மனம் நினையாதினி மற்றொன்றையே”, “இராமானுசன் நிற்க வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”, “கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”, “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்று தொடங்கி “இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”, “நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப்பூமன்னவே”…

 

“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர் தேடுமுயர்வீடும் செந்நெறியும் பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகைகண்டீர் விதி”, “வேதமொருநான்கு” என்று தொடங்கித் “தீதில் சரணாகதிதந்ததன்னிறைவன்தாளே அரணாகுமென்னுமது”, “வில்லார் மணிகொழிக்கும்” என்று தொடங்கி, “எந்நாளும் மாலுக்கிடம்”, “தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன்தாளிணையை உன்னுவதே சாலவுறும்”. “ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையும்”, “ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக்கண்டாப்போலேயும்”, “இப்படி ஸர்வப்ரகராத்தாலும் நாஶஹேதுவான அஹங்காரத்துக்கும் அதினுடைய கார்யமான விஷயப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே” என்று தொடங்கி, “இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன். வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும். பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும். ஆசார்யகைங்கர்யமறிவது ஶாஸ்த்ரமுகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும். இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம், அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம், ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம் அஶக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம். ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுஶ்ரூஷையும், ஆர்த்தியும், ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”. “மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும்” – என்று தொடங்கி – எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன். ‘மாதாபிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ்வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச்செய்தார். ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன். ஶிஷ்யன் உகப்பிலே ஊன்றிப்போரும். ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகையொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை. ஶிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன். இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்யவிஷயத்தில் “என்னைத் தீமனங்கெடுத்தாய், மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும். பாட்டுக்கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக்கடவன். இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

பவிஷ்யதாசார்யன் (எம்பெருமானார்), திருவாய்மொழிப் பிள்ளை, மாமுனிகள்

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹயாத்ரையே தனக்கு ஆத்மயாத்ரையாக நினைத்திருக்கவேணும். ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும், ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும் ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்கவடுக்கும். ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ்ஜ்ஞாநம் கைவந்ததென்னவொண்ணாது. நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும். ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள்தோறும் அநுஸந்தித்திலனாகில் இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும். ஆசார்யன்திறத்தில் செய்த அடிமையை மறந்தும் செய்யப்பெறாத அடிமைக்கு இழவுபட்டிருப்பான். ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும். “சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண்முன்னே நிற்க அவனைவிட்டுத் தன்னுடைய ஆசார்யர்களுடைய பாதஸேவை பண்ணப்போகிறேனென்று போனாளிறே தான் சதிரியாயிருக்கச்செய்தேயும் எல்லைச்சதுரையாகையாலே ஶ்ரீஶபரி. ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்தக்கால் – என்று தொடங்கி. திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும். உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி – கையிலங்கு நெல்லிக்கனி. தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி – ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு. ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி – ஆசையுடன் நோக்குமவன். பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர். ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாதநந்யஶரணோ பவதீதி மத்வா என்று நம்முடைய ஜீயர், தாம் அந்திமோபாயநிஷ்டாக்ரேஸரர் என்னுமிடத்தை ஸ்வப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும், யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித் தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்தருளுகிற தனியனிலும் – மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம், முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம், பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம், பிறர்மினுக்கம் பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே – என்று தம்முடைய நிஷ்டையை மதித்துக்கொண்டு மிகவும்  ஹ்ருஷ்டரானாரிறே.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment