ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – பால காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எல்லையில்லாத இன்பத்தை உடைய ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளும் முக்தர்களும் தொண்டு செய்யும்படி வீற்றிருந்தான். அந்த எம்பெருமான் அங்கே எவ்வளவு பெரிய ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய திருவுள்ளமோ நாம் இருக்கும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் கட்டுப்பட்ட ஆத்மாக்களை நினைத்து வருந்தியே இருந்தது. இவர்களுக்கும் உதவ வேண்டும், உஜ்ஜீவனத்தை அளிக்க வேண்டும், உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, ஸம்ஸாரத்தில் ப்ரளயத்துக்குப் பிறகு எல்லாம் அழிந்திருந்த காலத்தில், பல பல அண்டங்களைப் படைத்து, ஒவ்வொரு அண்டத்திலும் ப்ரஹ்மாவாக ஒவ்வொரு சிறந்த ஆத்மாவை நியமித்து, மேலும் அண்டத்துக்குள் இருக்கும் தேவர்கள், மனுஷ்யர்கள், விலங்குகள், பக்ஷிகள், தாவரங்கள் போன்றவற்றை ப்ரஹ்மா மற்றும் ப்ரஜாபதிகள் மூலமாகப் படைக்கிறான். இப்படி இவர்களைப் படைத்த பின்பு தானே ஒவ்வொரு அண்டத்திலும் க்ஷீராப்தி நாதனாகத் திருப்பாற்கடலில் இருந்து கொண்டு அனைவரையும் ரக்ஷிக்கிறான். ப்ரஹ்மா முதலான தேவர்களுக்குக் கஷ்டம் வரும்போது, அவர்கள் திருப்பாற்கடலின் வாயிலுக்கு வந்து எம்பெருமானை ப்ரார்த்தித்துத் தங்கள் துன்பங்களைப் போக்கிக்கொள்கிறார்கள்.

அப்படி ஒரு முறை ராவணன் என்ற ராக்ஷஸனால் இவ்வுலகில் இருந்த பலரும் துன்புறுத்தப்பட்டதனால், ப்ரஹ்மா முதலான தேவர்கள் பேரலை கொண்ட கடலில் தடுமாறும் கப்பலைப் போலே, தங்களுக்கு யார் துணையாக இருப்பார்கள் என்று தேடி வந்து, தங்கள் துன்பத்தை எம்பெருமானுக்கு அறிவித்தார்கள்.

எம்பெருமானும் ராவணன் முதலான பலம் பொருந்திய பல அரக்கர்கள் நிறைந்த இலங்கையை
அழிக்க எண்ணினான். அதை நிறைவேற்றி, அதற்கு மேலே இந்த மண்ணுலகத்தவர்களைத் தன்னுடைய அவதாரத்தால் உஜ்ஜீவனம் அடைவிக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டு, திருவயோத்யை என்கிற அழகிய நகரத்தில் ஸூர்ய குலத்துக்கு ஒரு விளக்காக கௌஸல்யா தேவிக்கும் தசரத சக்ரவர்த்திக்கும் பிள்ளையாக, ஸ்ரீ ராமனாக வந்து அவதரித்தான். நம் ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீ ராமனே பெருமாள் என்று அழைக்கப்படுகிறான். அந்த ஸமயத்தில் எம்பெருமானுடன் பரதாழ்வான், இளைய பெருமாள் என்கிற லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்நாழ்வானும் அவதரித்தார்கள்.

குல குருவான வஸிஷ்டர் ஒவ்வொரு குழந்தைக்கும் பொருத்தமான திருநாமத்தைச் சூட்டினார். கண்டவர்கள் மனம் கவரும் அழகை உடையவனாக இருந்ததால் ராமன் என்றும், கைங்கர்யச் செல்வத்தை நிறைவாகப் பெற்றிருந்ததால் லக்ஷ்மணன் என்றும், பிற்காலத்தில் ராஜ்ய பாரத்தைச் சுமப்பவன் என்று அறிந்ததால் பரதன் என்றும், பகவத் பக்தி என்கிற சத்ருவை ஜயித்து எப்போதும் அடியவனான பரதன் விஷயத்திலேயே பக்தி கொண்டிருந்ததால் சத்ருக்நன் என்றும் திருநாமங்களைச் சூட்டினார்.

ஸ்ரீ ராமன் அனைத்து நற்குணங்களும் திகழ்பவனாக விளங்கினான். நால்வருக்கும் உபநயன ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு, வஸிஷ்டரிடத்தில் குருகுல வாஸம் பண்ணி அஸ்த்ர சஸ்த்ர விஷயங்களில் நல்ல தேர்ச்சி பெற்றார்கள். ஒரு முறை சிறந்த முனிவரான விச்வாமித்ரர் தசரத சக்ரவர்த்தியைச் சந்திக்க வந்தார். சக்ரவர்த்தியும் அவரை நன்கு வரவேற்று வணங்கினார். மறை முனிவரான விச்வாமித்ரர் தான் யாகம் செய்யப் போவதாகவும், அந்த யாகத்தை ராக்ஷஸர்கள் அழிக்கப் பார்ப்பதாகவும், அவர்களிடத்தில் இருந்து அந்த யாகத்தைக் காக்க ராம லக்ஷ்மணர்களைக் காட்டுக்கு அனுப்புமாறும் வேண்டினார். அதைக் கேட்டு முதலில் அஞ்சிய சக்ரவர்த்தி, மயங்கி விழுந்தார். பின்பு உணர்வைப் பெற்று, தன் புதல்வர்கள் இருவரும் மிகவும் சிறியவர்கள் என்றும் அவர்களைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்றும் அதனால் அவர்களை அனுப்ப முடியாது என்றும் கூறினார். ஆனால் விச்வாமித்ரர் ஸ்ரீ ராமனின் பெருமையை எடுத்துக் கூறி வஸிஷ்டரின் ஆதரவோடே சக்ரவர்த்தியை ஒத்துக்கொள்ள வைத்தார்.

ராம லக்ஷ்மணர்கள் முனிவரைத் தொடர்ந்து சென்றார்கள். காட்டுக்குள் சென்ற பிறகு, முதலில் தாடகை என்கிற கொடிய அரக்கி எதிரில் வந்தாள். முனிவரின் ஆணையின் பேரில், ஸ்ரீ ராமன் அவளை அம்பால் அடித்து வீழ்த்தினான். பின்பு அவள் பிள்ளைகளான மாரீசனும் ஸுபாஹுவும் எதிரிட்டு வந்தார்கள். அவர்களில் ஸுபாஹு ஸ்ரீ ராமனால் கொல்லப்பட்டான். மாரீசனை ஸ்ரீ ராமன் அம்பால் அடித்து மிகத் தொலைவில் சென்று விழும்படிச் செய்தான். மற்றும் பல பலம் பொருந்திய அரக்கர்களைக் கொன்றான். அதற்குப் பிறகு விச்வாமித்ரர் யாகத்தை இவர்கள் துணைகொண்டு நன்கு செய்து முடித்தார்.

அதற்குப் பிறகு விச்வாமித்ரர் அவர்களை அழைத்துக் கொண்டு மிதிலா தேசத்தை நோக்கிச் சென்றார். போகும் வழியில் கௌதம முனிவரின் ஆச்ரமத்தில் அந்த முனிவரால் சபிக்கப்பட்டு அங்கே கல்லாய் இருந்த அவருடைய தர்மபத்னியான அஹல்யா, ஸ்ரீ ராமனின் திருவடி ஸ்பர்சம் பெற்று சாப விமோசனம் பெற்றாள். பின்பு முனிவரும் ராம லக்ஷ்மணர்களும் மிதிலையை அடைந்தார்கள். அங்கே மிதிலா மஹாராஜரான ஜனகர், தன் பெண்ணான ஸீதைக்கு தக்க கணவனைப் பெற்றுக்கொடுப்பதற்காக, சிவ தனுஸ்ஸை நாணேற்றுபவர்களுக்கே தன் பெண்ணை மணம் செய்து குடுப்பதாக அறிவித்திருந்தார். பல ராஜ குமாரர்கள் வந்து முயற்சி செய்தும் அந்த சிவ தனுஸ்ஸை யாராலும் தூக்கவும் முடியவில்லை. இதை அறிந்த விச்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களை அந்தப் போட்டி நடக்கும் அரங்குக்கு அழைத்துச் சென்று ஜனக மஹாராஜரிடத்தில் அறிமுகம் செய்து வைத்து, ஸ்ரீ ராமனைப் பார்த்து, வில்லில் நாணேற்றுமாறு பணித்தார். ஸ்ரீ ராமனும் அநாயாஸமாக வில்லை எடுத்து நாணேற்ற ஜனக மஹாராஜரும் ஸீதாப் பிராட்டியும் மிகவும் மகிழ்ந்தனர். உடனே திருமணத்து நாள் குறிக்கப் பட்டு, திருவயோத்யையில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்து, ஸ்ரீ ராமனுக்கும் ஸீதாப் பிராட்டிக்கும், பரதனுக்கும் மாண்டவிக்கும், லக்ஷ்மணனுக்கும் ஊர்மிளைக்கும், சத்ருக்நனுக்கும் ச்ருதகீர்த்திக்கும், திருமணம் இனிதே நடந்தேறியது.

அந்த ஸமயத்தில் அங்கே பரசுராமர் வந்து சேர்ந்தார். இவரும் எம்பெருமானுடைய ஆவேச அவதாரமே. இவர் இருபத்தோறு தலைமுறைகளைச் சேர்ந்த துஷ்ட க்ஷத்ரியர்களைத் தன்னுடைய மழு என்கிற ஆயுதத்தைக்கொண்டு கொன்று குவித்தவர். ஸ்ரீ ராமனால் நாணேற்றப்பட்ட சிவ தனுஸ்ஸுக்கு ஒரு பூர்வ கதை உண்டு. முற்காலத்தில் இரண்டு தனுஸ்ஸுகளை விச்வகர்மா செய்தான். இந்த விற்களைக்கொண்டு விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் ஜயிப்பவர் சிறந்த தெய்வமாக ஒத்துக்கொள்ளப்படுவார் என்று சொல்லப்பட்டது. விஷ்ணு ஒரு வில்லை எடுத்துக்கொள்ள அது விஷ்ணு தனுஸ்ஸாகிறது. சிவன் ஒரு வில்லை எடுத்துக்கொள்ள அது சிவ தனுஸ்ஸாகிறது. அப்போது விஷ்ணு ஒரு ஹூங்காரம் (உறுமுதல்) செய்ய சிவன் கையில் இருந்த தனுஸ்ஸு லேசாக முறிந்துவிடுகிறது. அப்போது அனைவரும் விஷ்ணுவே ஜயித்ததாக, அந்த எம்பெருமானே பெரிய தெய்வம் என்று ஒத்துக்கொண்டார்கள். அந்த விஷ்ணு தனுஸு பரசுராமரை வந்தடைந்தது. சிவ தனுஸ்ஸு ஜனகரை வந்தடைந்தது. இப்படி இருக்க, அங்கு வந்த பரசுராமர், ஸ்ரீ ராமனிடத்திலும் கோபம் கொண்டு உன்னைக் கொல்லப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கண்ட தசரதர் பரசுராமரிடத்தில் அவ்வாறு செய்யவேண்டாம் என்று மன்றாடினார். ஆனாலும் பரசுராம கோபத்துடனேயே இருந்தார். ஸ்ரீ ராமன் அவரிடத்தில் தன்னுடைய திறமையை எவ்வாறு நிரூபிப்பது என்று கேட்க, பரசுராமர் “நீர் முறிந்த சிவ தனுஸ்ஸைத் தான் இப்போது நாணேற்றினீர். என்னிடத்தில் இருக்கும் விஷ்ணு தனுஸ்ஸை நாணேற்றினால் ஒத்துக் கொள்கிறேன்” என்று சொல்ல. அப்போது ஸ்ரீ ராமன் பரசுராமரிடத்தில் இருந்து அந்த வில்லையும் அவருடைய தபஸ்ஸையும் சேர்த்து வாங்கி, அந்த வில்லையும் நாணேற்றி பரசுராமரின் சக்தியை அவரிடத்தில் இருந்து நீக்கி அவரை மீண்டும் தவம் செய்ய அனுப்பி வைத்தான்.

அதற்குப் பிறகு அனைவரும் திருவயோத்யைக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.

தாத்பர்யங்கள்

  • எம்பெருமான் தன்னுடைய கருணையினாலே உலகத்தைப் படைக்கிறான். இவ்வுலகில் இருக்கும் ஆத்மாக்களை உஜ்ஜீவனம் அடைவிப்பதற்கு அவனே பெருமுயற்சி செய்கிறான்.
  • ஸ்ரீராமாவதார சரித்ரத்தில், ஸ்ரீராமன் பெரியோர்களின் சொற்படி நடக்கவேண்டும் என்கிற ஸாமான்ய தர்மத்தை நடத்திக்காட்டினான். லக்ஷ்மணன் பகவானுக்கே அடிமைப்பட்டிருக்கும் தன்மையான சேஷத்வத்தை நடத்திக் காட்டினான். பரதாழ்வான் பகவான் சொற்படி நடக்கும் தன்மையான பாரதந்த்ர்யத்தை நடத்திக் காட்டினான். சத்ருக்நாழ்வான் பகவத் பக்தனான பரதாழ்வானுக்கே அடிமைப்பட்டிருக்கும் பாகவத சேஷத்வத்தை நடத்திக்காட்டினான். ஸீதாப்பிராட்டி பரமபுருஷனான எம்பெருமானுக்கு முழுவதும் ஆட்பட்டிருப்பதை நடத்திக்காட்டினாள். திருவடி (ஹனுமன்) எம்பெருமானிடத்தில் எப்படி பக்தி கொண்டிருக்கவேண்டும் என்பதை நடத்திக்காட்டினான். விபீஷணாழ்வன் எம்பெருமானிடத்தில் எப்படி சரணாகதி பண்ணவேண்டும் என்பதை நடத்திக்காட்டினான். இப்படி இன்னும் பல முக்யமான தாத்பர்யங்கள் இதில அமைந்துள்ளன.
  • பரம காருணிகனான எம்பெருமான் ஏன் பெண் வடிவில் இருந்த தாடகையைக் கொன்றான் என்றால், உருவத்தை விட உள்ளத்தையே எம்பெருமான் காண்கிறான் என்பதைப் புரிய வைக்கவே.
  • எம்பெருமானின் திருவடி ஸ்பர்சம் எப்படிப்பட்ட துன்பத்தையும் போக்கும் என்பதற்கு அஹல்யா சாப விமோசனம் சிறந்த எடுத்துக்காட்டு.
  • எம்பெருமானுடைய அவதாரங்கள் முக்யாவதாரங்கள் என்றும் ஆவேசாவதாரங்கள் என்றும் இரண்டு வகைப்படும். முக்யாவதாரங்களில் தானே முழுமையாகவும் பரமபதத்தில் இருக்கும் எல்லாத் தன்மைகளோடும் இங்கு வந்து அவதரிக்கிறான். ஆவேசாவதாரங்களில் தன்னுடைய சக்தியையோ ஸ்வரூபத்தையோ இன்னொரு ஆத்மாவிடத்தில் ஏறிடுகிறான். மோக்ஷத்தை விரும்பும் ஸ்ரீவைஷ்ணவ அடியவர்களுக்கு ஆவேசாவதாரங்கள் வணங்கத்தக்கவை அன்று.
  • முக்யாவதாரத்தின் முன்பு ஆவேசாவதாரம் சக்தி இழந்துவிடும் என்பதை ஸ்ரீ ராம பரசுராமர்களின் சந்திப்பில் புரிந்து கொள்ளலாம்.
  • எம்பெருமானும் பிராட்டியும் எப்போதும் பிரியாமல் இருந்தாலும் லீலைக்காக இவ்வுலகில் தோன்றி, சில காலம் பிரிந்து இருந்து பிற்பாடு திருக்கல்யாணம் மூலம் கூடுகிறார்கள். ஆயினும் எம்பெருமானின் திருமார்பிலேயே பிராட்டி எப்போதும் உள்ளாள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment