ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – அயோத்யா காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< பால காண்டம்

ஸ்ரீ அயோத்யாவை அடைந்த அனைவரும் அங்கே மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள். ஸ்ரீ ராமனும் ஸீதாப் பிராட்டியும் 12 ஆண்டுகள் ஆனந்தமாக அனுபவித்தார்கள்.

ஒரு ஸமயம், தசரதச் சக்ரவர்த்திக்குத் தன் புதல்வனான ஸ்ரீ ராமனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது. பெரிய ஸபையைக் கூட்டிப் பொது மக்களிடம் அதைப் பற்றிக் கேட்க, அப்போது அங்கிருந்த மக்கள் பெரும் ஆரவாரத்தை எழுப்பி, அக்கருத்தை ஆமோதித்தார்கள். சக்ரவர்த்தியும் பெரு மகிழ்ச்சியுடன் குலகுருவான வஸிஷ்டரிடம் கேட்டுப் பட்டாபிஷேகத்தை ஏற்பாடு செய்தான். ஊரெல்லாம் நன்றாக அலங்கரிக்கப்பட்டது. ஸ்ரீராமனும் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை எல்லாம் செய்து, அடுத்த நாள் காலை பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு ஸித்தமானான்.

இந்த ஸமயத்தில்தான் கைகேயியின் வேலைக்காரியான மந்தரை என்கிற கூனி, கைகேயியின் மனதைக் கலங்கச்செய்து, பரதனுக்கு ராஜ்யமும் ஸ்ரீராமனுக்கு வனவாஸமும் தசரதனிடத்தில் வரமாகக் கேட்டு வாங்கும்படிச் செய்தாள். தசரதன் கைகேயி கேட்ட வரத்தினால் மிகவும் கலக்கமுற்று முதலில் மயங்கி விழுந்தாலும், பின்பு உணர்வைப்பெற்று அவள் மனதை மாற்ற முயன்று தோற்றுப்போனான். அதன் பிறகு ஸ்ரீராமனை அழைத்து “குலக்குமரா! காடுறையப் போ” என்று ஆணையிட, எம்பெருமானும் அதைக் கேட்டுச் சிறிதும் வருந்தாமல் மகிழ்ச்சியுடன் அவ்வாணையை ஏற்றுக் கொண்டான்.

இந்தப் பெரிய நாடும், ராஜ்யமும் வேண்டாம் என்று சொல்லி, தன்னுடைய தாய்மார்களையும் அங்கேயே விட்டு, தன்னுடைய தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளை விட்டு, திருவாபரணங்களை அணியாதே, அழகான மரவுரி மான் தோலை அணிந்து கொண்டு, அவனுடைய திருமேனி அழகு இன்னும் பெருமை பெறும்படி இருந்தான்.

அப்பொழுது, ஸீதாப் பிராட்டி தானும் ஸ்ரீராமனுடன் காட்டுக்கு வருவதாகச் சொல்ல, அதைக் கேட்டு முதலில் ஸ்ரீராமன் அதற்கு இசையவில்லை. ஆனாலும் ஸ்ரீராமன் இருக்கும் இடமே தனக்கு ஸ்வர்கம் என்றும் ஸ்ரீராமன் இல்லாத இடம் நரகம் என்றும் சொல்லி நிர்பந்திக்க, ஸ்ரீராமனும் இசைந்தான். அதைத் தொடர்ந்து, லக்ஷ்மணன் தானும் காட்டுக்கு வருவேன் என்று சொல்லி ஸ்ரீராமன் திருவடிகளில் பிராட்டியை முன்னிட்டுச் சரணம் புகுந்தான். முதலில் மறுத்த ஸ்ரீராமன், பின்பு அதற்கும் இசைந்தான். இவ்வாறு வில்லேந்திய பெருமாள், பிராட்டி மற்றும் வாளும் வில்லும் ஏந்திய இளையபெருமாள் ஆகியோர் காட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.

முதலில் மந்த்ரியான ஸுமந்த்ரனின் தேரில் ஏறி, அயோத்யாவில் இருந்து நெடுந்தூரம் பயணப்பட்டு, இரவு நேரம் வந்ததால் ஓரிடத்தில் ஓய்வுக்காகத் தங்கினர். அவர்களுடன் அயோத்யா வாஸிகளான பலரும் சென்றனர். அவர்கள் விழிக்கும் முன்பே இவர்கள் எழுந்து, வேகமாக அவர்களைப் பிரிந்து சென்றனர். அதற்குப் பிறகு தமஸா நதிக்கரையை அடைந்தனர். அதைக் கடந்து, மான்கள், யானைகள், குதிரைகள் முதலிய மிருகங்கள் நிறைந்த காடுகளைக் கடந்து, அதற்குப்பின் வேதச்ருதி நதிக்கரையை அடைந்து அந்த நதியைக் கடந்து, கோமதி நதியையும் கடந்து ஸ்யந்திகா நதியையும் கடந்து, ஸ்ரீ அயோத்யா எல்லையைக்கடந்து, கங்கைக்கரையை அடைந்தனர். அங்கே குஹன் தலைமையிலான நிஷாதர்கள் (வேடர்கள்) அவர்களுக்கு உதவ வருகின்றனர். குஹன் ஸ்ரீராமனிடத்தில் மிகவும் அன்பு கொண்டவன். ஸ்ரீராமனும் குஹனை ஆசையோடே அணைத்துத் தன் தம்பியாக ஏற்கிறான். குஹன் சில உணவுப் பதார்த்தங்களைக் கொடுக்க அதை ஸ்ரீராமன் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, குஹனின் ஏற்பாட்டில் அங்கே ஓரிரவு ஓய்வெடுத்து, பின்னர் குஹனின் உதவியைக்கொண்டு கங்கையைக் கடந்தனர். அதற்குப் பிறகு அவர்கள் பரத்வாஜ ஆச்ரமம் சென்று அவரிடத்தில் ஆசி பெற்றுப் பின்னர் சித்ரகூடம் என்கிற அழகிய மலைப்பகுதியை அடைந்தனர். ஸுமந்த்ரன் அவர்களிடத்திலிருந்து விடைபெற்றுச் சென்று ஸ்ரீ அயோத்யாவை அடைந்து இவர்கள் இங்கே நலமாக உள்ளதைத் தெரிவிக்கிறான். தசரதன் இந்த விஷயங்களைக் கேட்டு, மிகவும் வருந்தி, தன்னுயிரை நீத்து வானுலகத்தை அடைந்தான். ஸ்ரீ அயோத்யாவை அடைந்த பரதாழ்வான் நடந்த செய்தியைக் கேள்வியுற்று, தன் தாயான கைகேயியை மிகவும் கடிந்து கொண்டு, தன் தந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தான். பிறகு வஸிஷ்டர் முதலானோர் அவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய முற்பட, அதை மறுத்தவன் அங்கிருந்து அனைவருமாகப் புறப்பட்டு ஸ்ரீராமனிடத்தில் சென்று ப்ரார்த்தித்து அவனை மீண்டும் ஸ்ரீ அயோத்யாவுக்கு அழைத்து வரலாம் என்று சொல்ல, அதை அனைவரும் ஆமோதித்து அங்கிருந்து, அவனும் அவன் தாய்மார்களும், வஸிஷ்டர் முதலான ரிஷிகளும், அனைத்து மக்களும், யானை, குதிரை முதலான படைகளும் சித்ரகூடம் நோக்கிப் புறப்பட்டனர்.

இங்கே காட்டில், லக்ஷ்மணன் ஒரு பர்ணசாலை அமைத்து அங்கே அம்மூவரும் காய் கனிகளை உண்டு, கல்லணையில் படுத்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். பரதன் பெரும்படையுடன் அங்கே வந்து சேர்ந்து, ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி மீண்டும் ஸ்ரீ அயோத்யாவுக்கு வரும்படி ப்ரார்த்தித்தான். ஆனால் ஸ்ரீராமனோ அதை முழுமையாக மறுத்து, பரதனுக்குத் தன் பாதுகைகளைக் கொடுத்தான். அதை எடுத்துக் கொண்டு பரதன் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீ அயோத்யாவுக்குத் திரும்பி, ஊரெல்லையில் ஓர் ஆச்ரமம் அமைத்து அங்கே ஸ்ரீராம பாதுகைகளை வைத்து அவற்றின் தலைமையில் ராஜ்யத்தை நடத்தத் தொடங்கினான்.

அதற்குப் பிறகு, ஸ்ரீராமனும், பிராட்டியுடனும் லக்ஷ்மணனுடனும் சித்ரகூடத்திலிருந்து புறப்பட்டு தண்டகாரண்யத்தை அடைந்தான்.

தாத்பர்யங்கள்

  • ஸ்ரீராமனுடைய நற்குணங்கள் எப்படிப்பட்டவை என்றால் தசரதன் 60000 ஆண்டுகள் மக்களுக்கு எந்தத் துன்பமும் வாராதபடி நல்லாட்சி புரிந்திருந்தாலும் ஸ்ரீராமனின் குணங்களைக் கண்டவர்களுக்கு மற்றவர்களின் பெருமை தெரியாமல் போய்விடுகிறது.
  • பரமபுருஷனான ஸ்ரீராமனிடத்தில் பேரன்பு கொண்டிருந்த கைகேயி மந்தரையின் உபதேசத்தினால், அவ்வன்பை இழந்தாள். இதே போல, எம்பெருமானிடம் எவ்வளவு அன்பு இருந்தாலும், உலக விஷயங்களில் அகப்பட்டோம் என்றால் நாமும் தவறிழைத்து விடுவோம்.
  • தசரதன் தார்மீகனாக இருந்தும், ஸாமான்ய தர்மமான தன்னுடைய ஸத்யத்தைக் காக்க வேண்டும் என்று பார்த்தானே தவிர, பரமபுருஷனான ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பக்கூடாது என்கிற விசேஷ தர்மத்தைப் பற்றி நினைக்கவில்லை. அதனாலே அவனுடைய ஞானம் குறைவுபட்டது என்பதை உணரலாம்.
  • பகவானுடன் இருப்பதே நமக்கு உண்மையான இன்பம் என்றும் அவனைப் பிரிந்து இருப்பதே நமக்குத் துன்பம் என்பதையும் பிராட்டியும் இளைய பெருமாளும் காண்பித்தனர்.
  • குஹனுடைய தாழ்ச்சிகளைப் பாராமல் ஸ்ரீராமன் அவனை ஏற்றுக் கொண்டது எம்பெருமானின் உயர்ந்த குணங்களைக் காட்டுகிறது.
  • பரதன் பகவானுக்கே பரதந்த்ரப்பட்டு இருப்பதை நன்றாக நடத்திக் காட்டினான். பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமான் திருவுள்ளப்படி முழுமையாக நடப்பது.
  • பரதன் எம்பெருமானிடத்தில் பூர்த்தியான சரணாகதி பண்ணி ப்ரார்த்தித்தபோதும், எம்பெருமான் திருவுள்ளம் காட்டுக்குச் செல்லவேண்டும் என்று இருந்ததால், அந்தச் சரணாகதி பலிக்கவில்லை. இதிலிருந்து நாம் பண்ணும் சரணாகதியைவிட எம்பெருமானின் திருவுள்ளமே நம் உஜ்ஜீவனத்துக்குக் காரணம் என்பதை உணரலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment