வரதன் வந்த கதை 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

ஸத்ய லோகம் !

நான்முகனின் உறைவிடம். கலைமகளின் கனிவான பார்வை நாற்புறமும் விழுந்திருந்தது !

ஒரு புறம் தேவ மாதர்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். பாட வல்லவர்களும் பரவலாகப் பாடிக் கொண்டிருந்தனர்.

வெண் தாமரையினில், கணவனும் மனைவியுமாகப் பிரமனும் ஸரஸ்வதியும் கொலு வீற்றிருந்தனர்.

பிரமன் – நான்முகக் கடவுள் என்று போற்றப்படுமவன் ! ஹிரண்ய கர்ப்பன் என்று வேத வேதாந்தங்களாலே சொல்லப்படுகின்றவன். திருமால் உந்தியில் இருந்து தோன்றிய பெருமைக்குரியவன்.. நாராயணனிடமிருந்து எழுதாக் கிளவியான வேதங்களை அதிகரித்தவன்.

அறிவிற் சிறந்தவனாகக் கொண்டாடப் படுகின்றவன். ஆம். நான்கு சிரங்கள். வேத வேதாங்க வேதாந்தங்களில் தேர்ச்சி. எனவே அறிவிற்குக் கேட்க வேண்டுமா ?!

போதாக்குறைக்கு கல்விக் கடவுளாக அறியப்படுகிற ஸரஸ்வதியைக் கரம் பிடித்த பெருமை வேறு அ(வ)(ய)னுக்கு ! அவனுக்கு /அயனுக்கு !

“நிறை நான்முகன்” {(இறைவனாலே அருளப்பட்ட) ஜ்ஞாந சக்திகள் நிறைந்தவன்} என்று ஆழ்வாரும் பாடுகின்றாரே!

ஆம் ! திசைமுகனுக்கு எத்திசையிலும் ஏற்றம் தான். எனவே தான் தேவர்கள் தங்களுக்கு ஸந்தேஹமோ, கஷ்டமோ ஏற்படும் போதெல்லாம், முதலில் பிரமனை நாடுவர்கள்..

அவ்வப்பொழுது தேவர்கள், தம் துயர் தீர உருத்திரனை நாடுவதும் உண்டு! அச்சமயங்களில் முக்கண்ணனார் அத்தேவர்களை பிரமனிடமே அழைத்துச் செல்வராம் !

தான் தீர்க்கக் கூடிய பிரச்சினையெனின் பிரமன் தயங்காது உதவிடுவர்! தன்னால் முடியாது; எம்பெருமான் தான் ஒரே தீர்வு என்று இருப்பின்  அத்தேவர்களைத் தன் தலைமையில் “பாற்கடலுள் பையத்துயின்ற பரமனிடம்” அழைத்துச் செல்வராம்.

ஆக தேவர்கள் பரமசிவனை அண்டியிருப்பர்கள். பரமசிவன் தன் தமப்பனான தாமரை மேல் அயனை நாடியிருப்பன். பிரமனோ தன் தமப்பனான தாமரையுந்தித் தனிப்பெரும் நாயகனை அடிபணிந்திருப்பன்.

பேரருளாளனைப் பணிந்து, (பிற) தேவர் துயர் தீர்ப்பவனாதலால், மேலுலகத்தில் என்றுமே பிரமனுக்கும் அவர் கூறும் உபதேசங்களுக்கும் தனி மதிப்பு உண்டு !

சத்திய லோகத்தில் வாழ்பவராதலால் சத்திய வாக்கே சொல்லுவர் என்று பிரமனுக்குப் பிற தேவர்கள் புகழாரம் சூட்டுவர்கள் !

நான்முகனுக்கும் தேவர்கள் தன்னை மதிப்பதில் அலாதி இன்பம் !

ஒரு சமயம், தேவர்களுக்குள்ளே ஒரு சர்ச்சை!! பெண்களுக்குள்ளே சிறந்தவர் யார் என்பது தான் அது ! பலரிடம் கேட்டுப் பார்த்தும் கிடைத்த பதில்கள் த்ருப்திகரமாக இல்லாமையால் , தேவர்கள் அனைவரும் பிரமனை நாடினர் !

தன்னை மதித்து வானுலகினர் வந்தமை கண்டு, வழக்கம் போல் பிரமனுக்குப் பூரிப்பு !!

பெண்களிற் சிறந்தவர் யார் என்பது தானே கேள்வி?! பட்டென்று பதில் சொன்னார் பிரமன்.

ஸரஸ்வதி என்று தன் பெயரே சொல்லுவர் என்று நம்பிக் காத்திருந்தனர் கலைவாணியும் அவளுக்குத் தொண்டு புரியும் சேடிப் பெண்களும்.

மனைவி பெயர் சொல்லப் பிரமனுக்கும் ஆசை தான்.. ஆனால் . பொய் சொல்லுவதற்காகவா , வேதங்களை, தான் கற்றது !

மனைவியின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தவாறே அவர் சொன்ன பதில் நாமங்கையை (ஸரஸ்வதியை) நடுங்கச் செய்தது !;

“பெருந்தேவியான ஸ்ரீ மஹாலக்ஷ்மீ” இது தான், பெண்களில் சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு ஸரோஜாஸநன் (தாமரை மலரை ஆஸநமாகக் கொண்டவன்) கூறிய பதில்!

பின்விளைவு அறியாதவனாய் உண்மையே உரைத்திட்டான். அதற்கான பரிசும் காத்திருந்தது !

“தெள்ளுகலைத் தமிழ் வாணீ” கோபத்தால் கண் சிவந்தவளாய், நெருப்பை உமிழுமாப்  போலே பிரமனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பணிப்பெண்களை சற்றே அவள் பார்க்கவும் , அவர்களும் கலைவாணீ தன் ஜாகையை மாற்றப் போகின்றாள் என்பதனைப் புரிந்து கொண்டவர்களாய் அவள் உடைமைகளை (பயணத்திற்காக) எடுத்து வைக்கத் தொடங்கினார்கள்..

செய்வதறியாது நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் ப்ரம்மா !

அதனாலும் அவர் “திசைமுகன்” என்று அழைக்கப்பட்டார் போலும் !

ஸரஸ்வதி கிளம்புவதற்குத் தயாரானாள் … “வருகிறேன்” – இவ்வார்த்தை மட்டுமே அவள் அச்சமயம் உதிர்த்தது . எங்கு. ஏன் . எதையும் சொல்வதற்கு அவளும் தயாரில்லை . கேட்கும் தைரியமும் நான்முகனுக்கில்லை !

பிரச்சினை என்றால், மனிதர்களான நாம் தலையைச் சொறிவது உண்டு.  நான்முகனுக்கு அதிலும் பிரச்சினையே !

ஆம் ! எந்தத் தலையைச் சொறிவது என்கிற பிரச்சினை ! ஐயோ பாவம் .. தடுமாற்றத்திலிருந்தான் பிரமன் .

நாமகள் தன் கணவனைத் துறந்தாள். (தன் பெயரினில் ஓடும்) ஸரஸ்வதி நதிக்கரையில் தவமியற்ற அமர்ந்தாள்.

பிரமன் வேதனையடைந்தாலும், திருமகளே பெண்களிற் சிறந்தவள் என்கிற உண்மையுரைத்தோமே என்று மகிழ்ந்திருந்தார் !

அம்மகிழ்ச்சியும் நீடித்திருக்கவில்லை ! பிறிதோர் பிரச்சினையுடன் தேவகுரு

(ப்ருஹஸ்பதி) முதலானோர் பிரமனை முற்றுகையிட்டிருந்தனர் .

என்ன பிரச்சினை அது ?!

அறியக் காத்திருப்போம் !!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 1”

Leave a Comment