ஆழ்வார்திருநகரி வைபவம் – மணவாள மாமுனிகள் சரித்ரமும் வைபவமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< நம்மாழ்வார் உலா

ஆழ்வார்திருநகரி திவ்யதேசத்தைத் திருவாய்மொழிப் பிள்ளை புனர் நிர்மாணம் செய்து ஆதிநாதர், ஆழ்வார் மற்றும் எம்பெருமானாருக்கு நித்ய கைங்கர்யம் நன்றாக நடக்கும்படி ஏற்பாடு செய்ததை அனுபவித்தோம். இவ்வாறு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார்திருநகரியில் இருந்து கொண்டு நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக நடத்தி வந்தார்.

அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் ஐப்பசி திருமூல நன்னாளில் ஆதிசேஷனுடைய அம்சமான எம்பெருமானார் தாமே இந்நிலவுலகில் திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் என்ற மஹனீயருக்குத் திருக்குமாரராய் அவதரித்தார். பிறந்த குழந்தையின் தெய்வீகத் தேஜஸ்ஸைக் கண்ட பெற்றோர், இக்குழந்தைக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று ஸ்ரீரங்கநாதனின் திருநாமத்தையே சூட்டினர். சிறு வயதில் தன்னுடைய மாதாமஹரின் (தாயின் தகப்பனார்) ஊரான சிக்கில் கிடாரத்தில், நாயனார், வளர்ந்து வந்தார். தக்க காலங்களில் வைதீக ஸம்ஸ்காரங்களைப் பெற்று, தன்னுடைய தந்தையாரிடத்திலேயே சாஸ்த்ரங்களைக் கற்று வந்தார். பிற்பாடு இவருக்குத் திருக்கல்யாணமும் நடந்து, தன்னுடைய தந்தையாரிடத்திலேயே அருளிச்செயல் மற்றும் ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு ஞான பக்தி வைராக்ய நிதியாகத் திகழ்ந்தார், இவருடைய தகப்பனார் திருநாட்டுக்கு எழுந்தருள இவர் திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேட்டறிந்து, ஆழ்வார்திருநகரியை வந்தடைந்து திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தமக்குத் தஞ்சமாகப் பற்றினார்.

திருவாய்மொழிப் பிள்ளையும், இவருடைய விசேஷமான தன்மைகளைக் கண்டு ஆனந்தமடைந்து இவருக்கு நம் ஸம்ப்ரதாய தாத்பர்யங்களை உபதேசித்து, எம்பெருமானாரையே புகலாகக் காண்பித்து, அந்த எம்பெருமானார் ஸந்நிதியிலேயே நித்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்குமாறு இவரை நியமித்தார். இவரும் எம்பெருமானாரிடத்தில் அதீதமான அன்பு கொண்டு கைங்கர்யங்களைச் செய்து வந்து, யதீந்த்ர ப்ரவணர் என்ற திருநாமத்தையும் பெற்றார்.

திருவாய்மொழிப் பிள்ளையின் கடைசிக் காலத்தில் “நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்க்கக் கூடியவர் யார் உளர்?” என்று வருத்தப்பட, அப்பொழுது நாயனார், “அடியேன் அப்படியே செய்கிறேன்” என்று சொல்ல, திருவாய்மொழிப் பிள்ளை “வெறுமனே சொன்னால் போதாது, சபதமிட்டுக் கொடும்” என்று சொல்ல, நாயனாரும் அப்படியே செய்ய, திருவாய்மொழிப் பிள்ளையும் உளமகிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டார். பின்பு திருவாய்மொழிப் பிள்ளை நாயனாரிடத்தில் “ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரத்தையே பார்த்துக் கொண்டிருக்காமல் திருவாய்மொழி முதலான ப்ரபந்தங்களையே நன்றாக ப்ரசாரம் செய்யும்” என்று ஆணையிட்டு, அதற்குப் பிறகு திருநாட்டுக்கு எழுந்தருளினார். நாயனாரும் அவருடைய சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடித்தார்.

அந்த ஸமயத்தில் வானமாமலை திவ்யதேசத்தைச் சேர்ந்த அழகிய வரதர் நாயனாரிடத்தில் சிஷ்யராகி, வெகு விரைவில் ஸந்யாஸ ஆச்ரமும் ஸ்வீகரித்து, வானமாமலை ஜீயராகி, நாயனாரைப் பிரியாமல் இருந்து கைங்கர்யம் செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் பலரும் நாயனாருக்கு சிஷ்யர் ஆனார்கள்.

நாயனார் ஸம்ப்ரதாய பரிபாலனம் பண்ண ஸ்ரீரங்கத்துக்குச் செல்லலாம் என்று திருவுள்ளம் கொண்டு ஆழ்வாரிடத்தில் அதற்கு அனுமதி கோரினார். ஆழ்வாரும் அனுமதிக்க இவரும் ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். பெரிய பெருமாள் இவர் வரவை மிகவும் ஆனந்தமாக ஒரு உத்ஸவத்தைப் போலே கொண்டாடி, இவரைத் திருவரங்கத்திலே நித்யவாஸமாக இருக்கும்படி ஆணையிட்டார். நாயனாரும் அங்கே இருந்து கொண்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் முதலியவைகளை எல்லாம் மீட்டு சரிசெய்து ஏடுபடுத்தி, காலக்ஷேபங்களையும் நடத்தி வந்தார். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானத்தில் நிபுணராக இருந்ததால் ஈட்டுப் பெருக்கர் என்ற திருநாமத்தைப் பெற்றார்.

திருவேங்கடமுடையானை மங்களாசாஸனம் செய்ய எண்ணி வழியில் பல திவ்யதேசங்களை மங்களாசாஸனம் செய்து, திருமலையை அடைந்து, திருவேங்கடமுடையான் மற்றும் அங்கிருந்த பெரியோர்களின் அன்புக்குப் பாத்திரமானார். பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) எழுந்தருளி அங்கே தேவப்பெருமாளை மங்களாசாஸனம் செய்து, ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானாரை மங்களாசாஸனம் செய்து, பிறகு திருவெஃகாவில் கிடாம்பி நாயனாரிடம் ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் கேட்டார். அக்காலத்தில் இவரின் தேஜஸ்ஸையும் ஞானத்தையும் கண்டு கிடாம்பி நாயனார் இவரை “தேவரீரின் நிஜ ஸ்வரூபத்தைக் காட்ட வேணும்” என்று கேட்க நாயனாரும் ஆதிசேஷ ஸ்வரூபத்தை அவருக்குக் காட்டினார். அதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் திரும்பி நம் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தார்.

நாயனாருக்கு ஒரு ஸமயத்தில் கைங்கர்யத்துக்கு இடையூறாக ஒரு தீட்டு வர, அப்பொழுது நாம் இனி எல்லாவற்றையும் துறந்து ஸந்யாஸ ஆச்ரமம் ஸ்வீகரிப்போம் என்று திருவுள்ளத்தில் கொண்டு, தன்னுடன் வாசித்த, முன்பே ஸந்யாஸியாக இருந்த சடகோப ஜீயரிடம் ஆச்ரம ஸ்வீகாரம் செய்து கொண்டு பெரியபெருமாள் திருமுன்பே சென்று சேவிக்க, பெரியபெருமாளும் இவரை “அழகிய மணவாள மாமுனிகள்” என்று அழைத்து, இவருக்குப் பல்லவராயன் மடத்தை இருப்பிடமாக அளித்து, எல்லா மரியாதைகளையும் செய்தார். மாமுனிகளும் வானமாமலை ஜீயரைக் கொண்டு மடத்தைப் புனர் நிர்மாணம் செய்து, திருமலையாழ்வார் என்ற காலக்ஷேபக் கூடத்தையும் கட்டி, அம்மடத்தில் இருந்துகொண்டு ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தார். ஸ்ரீரங்கம் மற்றும் பல இடங்களில் இருந்து பல ஆசார்ய புருஷர்களும், வித்வான்களும் பெருமளவில் வந்து குவிந்து இவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று இவருக்கு சிஷ்யர் ஆனார்கள்.

மாமுனிகள் ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்கள், தமிழ் ப்ரபந்தங்கள், ரஹஸ்ய க்ரந்த வ்யாக்யானங்கள் என்று பலவற்றை அருளிச்செய்தார். ஸ்ரீரங்கத்தில் நின்றுபோயிருந்த கைங்கர்யங்கள், ஸ்தலத்தார் மரியாதைகள் ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்தினார். தன்னுடைய சிஷ்யர்களைக் கொண்டு பல திவ்யதேசங்களில் பல கைங்கர்யங்கள் நடக்கும்படிச் செய்தார். வானமாமலை ஜீயரைக் கொண்டு பாரத தேசமெங்கும் யாத்ரை செய்வித்து நம் ஸம்ப்ரதாயத்தை ஸ்தாபித்தார். இப்படிப் பல பெருமைகளுடன் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரைப் போலே பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தார்.

பெரியபெருமாள் இவரின் பெருமைகளுக்கு முடிசூட்டும் வகையில், இவரைக் கொண்டு பத்து மாத காலம், தன் உத்ஸவங்களையெல்லாம் நிறுத்தி, ஈடு வ்யாக்யானத்தைச் சொல்லுமாறு பணித்தார். இவரும் எம்பெருமானின் ஆணையைச் சிரமேற்கொண்டு எம்பெருமான், நாய்ச்சிமார்கள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் வீற்றிருந்து கேட்கும்படி, ஸ்ரீரங்கத்துவாஸிகள் ஆழமாக அனுபவிக்கும்படி திருவாய்மொழியின் அர்த்தங்களை மிக விரிவாக எடுத்துரைத்தார். காலக்ஷேபத்தின் சாற்றுமுறை தினமான ஆனி திருமூலத்தன்று, பெரியபெருமாள் தாமே ஒரு அர்ச்சகப் பிள்ளையாகத் தோன்றி, இவருக்கு மிக விசேஷமான “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் | யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ||” என்ற தனியனை ஸமர்ப்பித்தார். இந்தத் தனியனை எப்பொழுது ஸேவாகாலம் நடந்தாலும் முதலிலும் முடிவிலும் ஸேவிக்கும்படி ஆணையிட்டார்.

இப்படிப்பட்ட பெருமைகளை உடைய மாமுனிகள் திருமேனி தளர்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவரின் சரம கைங்கர்யங்கள் மிக ஆச்சர்யமாக அவருடைய சிஷ்யர்களால் நடத்தப்பட்டன.

சிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், சடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருக்கோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுனிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேசங்களிலிருந்தும் மேலும் பல சிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரமபதித்த இடம் : திருவரங்கம்

அருளிச் செய்த க்ரந்தங்கள் : தேவராஜ மங்களம், யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி , ஆர்த்தி பிரபந்தம்.

வ்யாக்யானங்கள் : முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம் , ஆசார்ய ஹ்ருதயம் , பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களிலில் கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும்) , இராமானுச நூற்றந்தாதி . ப்ரமாணத் திரட்டு (ஒரு வ்யாக்யானத்தில் வரும் அனைத்து ச்லோகங்கள் மற்றும் சாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்) : ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம் , தத்வ த்ரயம் , ஸ்ரீ வசன பூஷணம்.

மணவாளமாமுனிகளின் தனியன்:

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்கானவரை, ஞானம் பக்தி போன்றவைகளின் கடலை, எம்பெருமானாரிடம் பேரன்பு உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .

மணவாளமாமுனிகளின் வாழித்திருநாமம்:

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரி(றி)ய மணவாளமாமுனிவன் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment