ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதங்களின் உட்பொருள் அறிதல்
ஆத்மா, பரமாத்மாவின் உண்மை இயல்பு
வேதங்களின் தாத்பர்யம் இன்னதென எடுத்தியம்பியாயிற்றெனக் கூறியபின், பகவத் ராமாநுஜர் அடுத்த இரு பத்திகளில் ஆத்மா, பரமாத்மாக்களின் உண்மை இயல்பைக் கூறுகிறார்,
நான்காம் பத்தி
- ஒரு தனி ஆத்மா, தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்னும் பிரகிருதியின் வெவ்வேறு பரிணாமங்களின் வெவ்வேறு மாறுபாடுகளைப் பெற்றிருப்பதில்லை,
- தனி ஆத்மாவானது ஞானம், ஆநந்தம் எனும் இரு குணங்களை மட்டுமே பெற்றுத் திகழ்கிறது.
- சரீரத்தாலாகும் பேதங்கள் அழிந்தபின், ஓர் ஆத்மாவுக்கும் மற்றொரு ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாடு சொல்லால் விளக்கமுடியாது, அந்தந்த ஆத்மாவின் ஸ்வாநுபவத்தாலேயே வேறுபாடு அறிய முடியும்.
- ஞானம் அல்லது உணர்வு என்பதே எல்லா ஆத்மாக்களுக்கும் அடிப்படை. இது எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானதே,
ஆசார்யர், ஆத்மா உடலினின்றும் வேறுபட்டது அதைவிட மேலானது என்கிறார். உடலையும் மற்றப் பொருள்களையும் செய்யும் பொருளால் ஆனதன்று ஆத்மா என்பதால் அதைப்போல் எப்போதும் மாற்றமும் சிதைவும் அடையாதது. உணர்வே ஆத்மாவின் அடிப்படை, உணர்வும் ஆனந்தமுமே அதன் இயல்புகள். இந்த அடிப்படை ஞானம்/உணர்வு எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானது. பந்தம் இந்த ஞான உணர்வை சுருக்கம் அல்லது விரிவு அடையச் செய்கிறது. இதனால் ஒரு தாற்காலிக மாறுபாடு எழுகிறது. சரீரத்தாலுண்டான வேறுபாடுகள் அழிந்தபின் ஒன்றனுக்கும் மற்றதனுக்கும் ஒரு வேறுபாடும் சொல்ல முடியாது. அவை யாவும் ஒரே மாதிரியான ஆத்மாக்களே, அவரவர் தத்தம் அனுபவத்தாலேயே தம்மை உணரமுடியும்.
இந்த விவரணத்தால் சரீரமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆத்மா எனும் நாஸ்திக வாதம் மறுக்கப்பட்டது. அடிப்படை ஞானம்/உணர்வு (ஸ்வருப/தர்மி ஞானம்), குணம் சார்ந்த உணர்வு/ஞானம் (தர்மபூத ஞானம்) இவற்றின் வேறுபாடு விளக்கப்படுவதால் ஆத்மா குணங்களற்ற ஞானம் மட்டுமே எனும் அத்வைதக் கோட்பாடு மறுக்கப்பட்டது, ஆத்மாக்களில் அவற்றை வேறுபடுத்தும் அடிப்படை குணங்களுண்டென்பதும் மறுக்கப்பட்டது.
ஐந்தாம் பத்தி
- இவ்வண்டம் உணர்வுள்ள ஆத்மாக்கள், உணர்வற்ற பிரகிருதி இரண்டாலும் உருவாகியுள்ளது.
- பகவான் அந்தர்யாமியாய் ஒவ்வொன்றினுள்ளும் உறைந்து நியமித்து நடத்துகிறான்.
- பகவான் ஒருவனே அனைத்தையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து, லயம் அடைவித்து பந்தங்களிலிருந்து மோக்ஷம் தருகிறான்.
- இறைவன் அளப்பரிய மங்கள குணங்களுடையவன், குறைகளுக்கு எதிர்த்தட்டானவன்,
- இறைவனின் உண்மை இயல்பு தனித்வம் வாய்ந்தது, எத்தொடும் ஒப்பிடமுடியாதது.
- அவன் எண்ணற்ற மிக உயர்ந்த மங்கள குணங்களை உடையவன்.
- வேதாந்தத்தில் அவன் ஸர்வாத்மா, பரம்ப்ரஹ்ம, பரம் ஜ்யோதி, பர தத்வம், பரமாத்மா, ஸத் எனப்படுகிறான்.
- அவனே எல்லார்க்கும் மேலான பரமாத்மா நாராயணன்,
- வேதங்களின் லக்ஷ்யம் அவன் புகழ் பாடுவதே,
- பேத ச்ருதி அவன் தனி தனி ஆத்மாக்களில் உள்ளுறை நியந்தாவாக எல்லா அறிவுள்ள அறிவற்ற பொருள்களில் இருப்பதைப் பாடுகிறது,
- அபேத ச்ருதியும் அவன் புகழைப் பாடுகிறது, ஸாமானாதிகரண்ய நியாயத்தால் அறிவுள்ளன, அறிவற்றன என்று வேறுபடுத்திப் பாடுகிறது,
கருத்துரை
பகவத் ராமாநுஜர் வேதாந்தத்தின் நோக்கம் எல்லார்க்கும் மிகப் பெரியனான எம்பெருமான் நாராயணனின் பெருமையைப் பேசுதலே என்று வலியுறுத்துகிறார், “ப்ரஹ்மம்” என்ற சொல் தான் மிக உயர்ந்ததாய் இருந்துகொண்டு, மிக்க உயர்வினை மற்றோர்க்கும் தர வல்லது எனும் பொருளை உடையது,
பகவான் எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டுத் திகழ்கிறான். மாயாவாதிகள் ப்ரஹ்மம் அடிப்படையில் ஆத்மா போன்றோனே என்கின்றனர், இக்கருத்து இங்கு மறுக்கப்படுகிறது. பகவானின் உண்மை இயல்பு ஜீவாத்மா உட்பட எல்லாவற்றையும் கடந்தே நிற்கிறது. கர்மத்தால் பிறப்பு இறப்பில் சிக்கியுள்ள ஆத்மா போலன்றி பகவானின் இயல்பு முற்றிலும் இக்குறைகள் ஒன்றுமின்றி உயர்ந்துள்ளது, பகவான் கருணை, அழகு, பலம், முதலியவற்றால் எல்லை இல்லாதவனாக உள்ளான். வேதாந்தம் அவனை எல்லாரினும் மேம்பட்ட “பரம் ப்ரஹ்மம்” என்றும், எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மா என்பதால் “ஸர்வாத்மன்” என்றும், மிக மேலான ஒளி என்பதால் “பரம் ஜ்யோதி” என்றும், மேம்பட்ட உண்மை என்பதால் “பரம் தத்வம்” என்றும், “ஸத்” என்றும் பேசுகிறது.
வேதாந்தத்தில் உள்ள பாடல்கள் பேதம் அபேதம் என இருவகை ஆகும். பேத வாக்யங்கள் பகவானுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கூறும். அவை அவனே உள்ளே எல்லார்க்கும் நியந்தா என்னும். மற்றவற்றை அவனது சக்திகள், வடிவங்கள், இயல்புகள், மனோ நிலைகள் ஐச்வர்யங்கள், உடல் என்னும். இவ்வாறாக, அவை அவன் எல்லாவற்றையும் நடத்தும், ஆளும் பெருமையைப் பேசுகின்றன. மற்றவை யாவும் அவனுக்குப் பரதந்த்ரமானவை அடங்கியவை, ஆளுகைக்குட்பட்டவை. அவனே ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷிக்கிறான், சித் அசித் உருவான ப்ரபஞ்சம் முழுதும் தன் விருப்பப்படியே நடத்தி ஆத்மாக்களைத் தளைகளிலிருந்து விடுவிப்பதும் செய்கிறான். வேதாந்திகளுக்கு இந்த மோக்ஷ ப்ரதத்வம் ஒரு முக்யமான விஷயம், இதுவும் அவன் கல்யாண குணம் ஆதலால்.
அபேத ச்ருதி வாக்யங்கள் ஆத்மாவை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாதவைகளாகக் காட்டும். இறைவனைப் பற்றிப் பேசும்போது அவை மற்றப் பொருள்களைக் குறிப்பிடும்போது ஸாமாநாதிகரண்யத்தைப் பயன்படுத்துகின்றன. ஸாமாநாதிகரண்யமாவது சொற்களைப் பயன்படுத்தும் ஒரு விதம். எடுத்துக்காட்டாக, “இந்தப் பறவை நீலமாக இருக்கிறது” என்பதில் நீலம் என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது ஆனால், நீலப் பறவை என்பதில் நீலம் என்பது பறவையைக் குறிப்பதாகாது. அச்சொல், நீலமாய் உள்ள ஒரு பறவையைக் குறிக்கிறது. நீலம் என்பது ஒரு இயல்பு, அதைக் குறிக்கிறது, இதேபோலத்தான் வேதாந்தமும், இந்த உலகமே இறைவன், இறைவனே ஒவ்வோர் ஆத்மாவும் என்கிறது, அப்படிச் சொல்கையில், இவ்வுலகம் தானே இறைவன் என்றோ ஒவ்வோர் ஆத்மாவும் தானே இறைவன் என்றோ சொல்லாமல், அவற்றைத் தன் சரீரமாக இறைவன் கொண்டுள்ளான் என்றே உணர்த்துகிறது. பறவையும் நீலமும் பிரிக்க முடியாதாப் போலே இவையும் இறைவனோடு உள்ளன. ஒன்றைச் சொல்லப் பயன்படும் சொல் மற்றதையும் குறிக்கும்.
இறைவன் எல்லாங்கடந்து நிற்கும் ப்ரபாவத்தைச் சொல்வதே பேத ச்ருதியின் நோக்கமாகும். ஒவ்வொரு விஷயமும் இந்த மஹா தத்வத்தையே உள்ளடக்கியுள்ளது என்று விளக்குவதே அபேத ச்ருதியின் நோக்கமாகும்.
இவ்வாறாக இவ்விரண்டு வகைப்பட்ட வாக்யங்களும் ப்ரபஞ்சத்தை விளக்குவதில் ஒன்றுக்கொன்று சார்புள்ளனவாய் இருக்கின்றன.
ஒரு வகை வாக்யங்களை மட்டுமே கைக்கொண்டு அவையே முக்கியம் எனும் சிந்தனைப் போக்கு இவ்விஷயத்தை முற்றிலும் மறந்துவிட்டது, வேதாந்தத்திலேயே ஒரு வகை வாக்யங்களை மட்டும் ஏற்று மற்றதைக் கைவிடும் போக்கே இல்லை. அறிஞர்கள் சிலர் தமக்கு விருப்பமான சில வாக்யங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மிக அல்ப அறிவு தருவன எனப் பிறவற்றைத் தள்ளி விட்டார்கள். பகவத் ராமாநுஜரோ வேதாந்தக் கோட்பாடுகளை முற்றிலும் உணர்ந்து அநுபவிக்க இருவகை வாக்யங்களும் தேவையே, அவை முரண்பட்டவை அன்று. மாறாகத் தொடர்ச்சியான எல்லா வாக்யங்களையும் கோட்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுவன என்று நிறுவியருளினார்,
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/03/vedartha-sangraham-4-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org