ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீமன் நாராயணன் ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரம்மாவுக்கு சேதனர்களை உய்விப்பதற்காக நிர் ஹேதுக க்ருபா மாத்ரமடியாக வேதங்களை உபதேசித்தான்.வைதிகர் அனைவர்க்கும் வேதமே ப்ரமாணம். ஒரு ப்ரமாதா (ஆசார்யன்) ஒரு ப்ரமாணம் (சாஸ்திரம்) மூலமாகவே ப்ரமேயத்தை (எம்பெருமானை) நிர்ணயிக்க முடியும். எப்படி எம்பெருமான் பிற எல்லாவற்றினின்றும் அவனை வேறுபடுத்திக் காட்டும்படி அகில ஹேய ப்ரத்யநீகதானத்வம் (எல்லாத் தாழ் குணங்களுக்கும் எதிர்த்தட்டாயிருத்தல்), கல்யாணைகதானத்வம் (அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாயிருத்தல்) எனத் தனிசிறப்புகளோடு திகழ்கிறானோ, அவ்வாறே பிற ப்ரமாணங்களினின்றும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் பின்வரும் சிறப்புகளைப் பெற்றுள்ளது:
- அபௌருஷேயத்வம் – ஒருவரால் படைக்கப்படாமை. ஒவ்வொரு ஸ்ருஷ்டி காலத்திலும் எம்பெருமான் ப்ரம்மனுக்கு வேதத்தைக் கற்றுத் தருகிறான். ஆகவே, சாதாரணர் படைப்புகளிலுள்ள குறைகள் எதுவும் இன்றித் திகழ்கிறது வேதம்.
- நித்யம் – அழியாமல் சாஸ்வதமாய் உள்ளது. தொடக்கமோ முடிவோ இல்லாமல், எப்போதும், அதன் உள்பொருளை நன்கு அறிந்தவனான எம்பெருமானாலேயே ப்ரம்மனுக்கு உபதேசிக்கப் படுகிறது.
- ஸ்வத: ப்ராமாண்யத்வம் – இது பிரமாணம் என்று உணர்த்த இன்னொரு நூலின் தேவையின்றித் தானே அடிப்படையாய் இருப்பது.
வேதங்களின் அளவற்ற பரப்பை உணர்ந்தும், அவற்றை நாள்பட நாள்படக் குறைந்துகொண்டே வரும் மானிட ஞானத்தினால் அறிந்துகொள்வது கடினமென்னும் நினைவாலும், வேத வ்யாசர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பகுத்தார்.
வேதங்களின் ஸாராம்சமே வேதாந்தம். இப்படி எம்பெருமானைப் பற்றிய நுட்பமான விஷயங்களைப் பேசுவன உபநிஷத்துகள். வேதங்கள் உபாசனை முறைகளைப் பற்றிப் பேசும்; வேதாந்தமோ அந்த உபாசனைக்குப் பொருளான எம்பெருமானைப் பற்றிப் பேசும். உபநிஷதங்கள் பல. ஆயினும் பின்வரும் உபநிஷதங்கள் ப்ரதானம்:
- ஐதரேய
- ப்ருஹதாரண்யக
- சாந்தோக்ய
- ஈச
- கேந
- கட
- கெளஷீதிகீ
- மஹா நாராயண
- மாண்டூக்ய
- முண்டக
- ப்ரச்ன
- ஸுபால
- ச்வேதாச்வதர
- தைத்திரிய
உபநிஷதங்களின் ஸாரமாகக் கருதப்படும் வேதவ்யாசரால் தொகுக்கப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரமும் வேதாந்தத்தின் பகுதியாகக் கருதப் படுகிறது.
வேதங்கள் அனந்தம் – எண்ணற்றவை, அளப்பரியன, நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதால் நாம் வேதங்களையும் வேதாந்தத்தையும் ஸ்ம்ருதி, இதிஹாசங்கள், புராணங்களின் துணையோடு அறிகிறோம்.
- மநு, விஷ்ணு ஹாரீதர், யாஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளால் தொகுக்கப்பட்ட சாஸ்த்ரங்கள் ஸ்ம்ருதி எனப்படும்.
- ஸ்ரீ ராமாயணமும், மஹா பாரதமும் இதிகாசங்கள். .ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்த்ரமாகவும், மஹா பாரதம் பஞ்சமோ (ஐந்தாம்) வேதம் என்றும் போற்றப் பெறுகின்றன.
- ப்ரம்மனால் தொகுக்கப்பட்ட பதினெட்டு முக்ய புராணங்களே புராணங்கள் எனக் கருதப் படும். இந்த ப்ரம்மனே, தான் ஸத்வ குணத்திலுள்ளபோது எம்பெருமானையும், ராஜச குணத்திலுள்ளபோது தன்னையேயும், தாமஸ குணத்திலுள்ளபோது அக்னி போன்ற தாழ்ந்த தேவதைகளையும் ஏத்திப் பேசுவதாகக் கூறுகிறார். ஆகவே அந்தந்தப் புராணங்களின் நிலையும் அதுவேதான்.
இவ்வாறு பல்வேறு சாஸ்த்ரங்களும் இருப்பினும் அவற்றால் ஞானம் அடையாது ஜீவர்கள் லௌகிகத்திலேயே மூழ்கிக் கிடந்தது துவள்வதால் எம்பெருமான் தானே கருணையால் அவதாரங்கள் செய்து அறிவூட்டித் திருத்தப் பார்த்தான். மானிடரோ திருந்தாததோடு ஈச்வரனோடும் எதிரம்பு கோக்க முற்பட்டனர்! ஆகவே அவர்களிலேயே சிலரைத் தன் க்ருபையினால் மயர்வற மதிநலம் அருளி, ஆழ்வார்களாக பகவதநுபவம் பெற்று மற்றோர்க்கும் அதைப் பகிர்ந்தளிக்கும் காருணிகர்களாக நிறுத்தியருளினான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார்,திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (நம்மாழ்வாரின் சீடர்), ஆண்டாள் (பெரியாழ்வார் திருமகளார்) என்கிற ஆழ்வார்கள் மூலம் மங்களாசாசனமே வாழ்வாகக் காட்டியருளினான்.
இவ்வாறு ஜீவர்களை உஜ்ஜீவிப்பிக்க எம்பெருமான் ஆழ்வார்களைத் தோற்றுவித்தும் திருப்தியுறாது, நாதமுநிகள் முதலாக மணவாள மாமுனிகள் ஈறாக ஆசார்யர்களையும் தோற்றுவித்தான். ஆதிசேஷனின் அவதார விசேஷமான ராமானுஜர் நம் ஆசார்ய பரம்பரையில் நடு நாயகமாகத் திகழ்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தையும் சிறந்து விளங்கும்படி செய்தார்.
பராசரர், வ்யாசர், த்ரமிடர், டங்கர் போன்ற ரிஷிகள் வழியில் சென்று விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நன்கு ஸ்தாபித்தார். எழுபத்து நான்கு சிம்ஹாசநாதிபதிகள் வாயிலாக விசிஷ்டாத்வைதத்தை எங்கும் பரப்பி, ஆசையுடையோர்க்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை அளிக்கும்படி செய்தார்.இப்படிப்பட்ட இவரின் சிறந்த செயல்களாலும், எல்லோரையும் உஜ்ஜீவிக்கக் கூடியவராய் இருந்ததாலும், நம் ஸம்ப்ரதாயம் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. பின்பு, திவ்ய ப்ரபந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் நன்கு பரப்புவதற்காக அவரே மணவாள மாமுனிகளாக அவதரித்தார். பெரிய பெருமாளும் அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னால் தொடங்கப்பட்ட ஆசார்ய ரத்ன ஹாரத்தைத் தானே முடித்து அருளினான். பின்பு, மாமுனிகளின் சீடர்களான அஷ்ட திக் கஜங்களால், முக்கியமாக அதில் ப்ரதான சீடரான பொன்னடிக்கால் ஜீயர் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் நன்றாக வளர்க்கப் பட்டுள்ளது. அக்காலத்திற்குப் பிறகு பல பல ஆசார்யகள் அவதரித்து நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப்படி ஸம்ப்ரதாயத்தை நன்கு வளர்த்தனர்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/simple-guide-to-srivaishnavam-introduction/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org