ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< முகவுரை

பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தல்

நாம் ஸ்ரீவைஷ்ணவர் ஆவதெப்படி?

நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் படுவது.

ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப் படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப் படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஆனால் இதில் ஒரு வியத்தகு செய்தி என்னெனில் ஸ்ரீவைஷ்ணவன் ஆதற்கு ஒருவன் ஸ்ரீவைஷ்ணவகுலத்தில் பிறந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீவைஷ்ணவத்வம் ஆத்ம ஸம்பந்தமானது, ப்ராஹ்மண்யம் சரீர ஸம்பந்தமான ஸம்ஸ்காரம். மோக்ஷ மார்க்கம் புகுந்து பிற தேவதாந்தர உபாஸனம் முதலியன விட்டு எம்பெருமானையே சரண் அடைய வழி செய்யும் பஞ்ச ஸம்ஸ்காரம் மொழி, ஜாதி, இனம், நாடு அனைத்தும் கடந்ததாகும்.

பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் இதை நன்கு விளக்குகிறது:
“தாபப் புண்ட்ர ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம:” என்பதில் ஐந்து நடவடிக்கைகளும் சொல்லப்படுகின்றன.

  • தாப: – உஷ்ணம் – சங்கமும் சக்ரமும் உஷ்ணப்படுத்தப்பட்டுத் தோள்களில் பொறிக்கப்படுவது; பாத்திரம் பண்டங்களில் பெயர் குறித்து இன்னார் உடைமை என்பதுபோலே இதனால் நாம் எம்பெருமானுக்கு உடைமை என்பது தெரிவிக்கப் படுகிறது.
  • புண்ட்ர – த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களை உடலில் குறிப்பிட்ட பாகங்களில் தரித்தல்;
  • நாம – தாஸ்ய நாமம் தரித்தல். ஆசார்யனால் வழங்கப்படும் தாஸ்ய நாமம், மதுரகவி தாசன் அல்லது இராமானுச தாசன் அல்லது ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்பது போல
  • மந்த்ர – மந்த்ரோபதேசம். ஆசார்யரிடம் மந்த்ரோபதேசம் பெறுதல். மந்த்ரம் என்பது உச்சரிக்குக்கும் நம் துயர்களைப் போக்குவது. திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் இம்மூன்றும் நம் ஸம்ஸாரத் துயரங்களைப் போக்குவன.
  • யாக – இல்லத்தில் தினமும் எம்பெருமானைத் தொழத் திருவாராதனக் கிரமத்தை அறிதல்.

அடிப்படைத் தகுதிகள்

எம்பெருமானைச் சரண் புகுமுன் நமக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இரண்டுளதாம். அவை:

  • ஆகிஞ்சந்யம் – அடியேனுக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை, முற்றிலும் இயலாதவனாக ஒரு நிறைவும் இல்லாதவனாக உள்ளேன் எனும் பணிவு
  • அநந்ய கதித்வம் – எம்பெருமானைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் லக்ஷ்யங்கள்

சாஸ்த்ரம் “தத்வ ஞாநான் மோக்ஷ:” – ப்ரஹ்ம தத்வத்தைப் பற்றிய அறிவினால் மோக்ஷம் என்கிறது. ஆகவே உரிய ஓர் ஆசார்யர் மூலமாக அர்த்த பஞ்சக ஞாநம் பெற வேண்டுவது ஆவச்யகதை ஆகிறது. இம்மந்த்ரத்தின் உட்பொருளான 1. ப்ரஹ்மம – எம்பெருமான், இறைவன்; 2. ஜீவன் – ஜீவாத்மா; 3. உபாயம் – இவ்விறைவனை அடையும் வழி; 4. உபேயம் – உறுதிப் பொருள், கைங்கர்ய ப்ராப்தி; 5. விரோத – இவ்வுறுதிப் பொருளை அடைவதில் உள்ள தடைகள் என்னும் இவ்வைந்து விஷயங்களே அர்த்த பஞ்சகத்தை உணர்த்தும் மந்த்ரங்களின் உட்பொருளாம். நித்ய விபூதியில் எப்போதும் கைங்கர்யம் செய்ய விழைந்து வேண்டுவதும், எப்போதும் எல்லாவற்றுக்கும் எம்பெருமானையே எதிர்நோக்கி இருப்பதும், இந்நிலவுலகில் இருக்கும்வரை எம்பெருமானுக்கும், ஆசார்யருக்கும் பாகவதருக்கும் தொண்டு செய்தே இருப்பதும் திருவாராதனம், திவ்ய தேச கைங்கர்யம் இவற்றில் போது போக்குதலும் தலையாய கடமைகளாம்.

இச்சீரிய கருத்தினை அனைவரும் அறிந்து உய்யுமாறு அனைவர்க்கும் எடுத்துரைத்தலும் ஒரு பெரிய கைங்கர்யமாகும்.

ஆசார்யரே ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவர் ஆதலின், நாம் அனைவரும் ப்ரபன்னரே ஆகிலும் நாம் ஆசார்யரையும் பாகவதர்களையும் அண்டி நிற்கும் ஆசார்ய/பாகவத நிஷ்டர்களே என்றே இராமாநுசர் முதலாக நம் முதலிகள் அனைவரும் மூதலித்துப் போந்தனர். ஜீவாத்மா தன் உண்மை நிலையை உணர்ந்து பஞ்ச ஸம்ஸ்கார சமயத்தில் ஆசார்யன் மூலமாக எம்பெருமானிடம் சரண் அடைவதால், இதுவே உண்மையான பிறவியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஜீவாத்மா-பரமாத்ம ஸம்பந்தம் மனைவி-கணவன் ஸம்பந்தம் போன்றதால், ஜீவாத்மா மற்ற தேவதைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதின் ஆவச்யகதை அடிக்கடி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறாக, இந்த ஸம்ஸார மண்டலமும் அல்ப அஸாரமான பொருள்களில் ஆசையும் விட்டு, எம்பெருமானின் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்பிச் செல்வதே பிறவிப் பயன் என்பது இவ்வைஷ்ணவ சித்தாந்த ஸாரமாகும்.

யார் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யலாம்?

ஸ்ரீ வைஷ்ணவம் அநாதி காலமாய் இருந்துவரும் ஸம்ப்ரதாயமே ஆகிலும், இராமாநுசர் ஸகல சாஸ்த்ரங்களையும் ஆய்ந்து தமது பூர்வாசார்யர்களான ஆளவந்தார் நாதமுனிகள் போன்றோரின் நெறி நின்று எல்லாக் க்ரமங்களுக்கும் நெறிமுறைகளைத் தெளிவுபட ஏற்படுத்தி வைத்தார். அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை நியமித்து, எவரெவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ள ஆசை உள்ளது, அதற்குத் தக்க உள்ளனர் என்று கண்டுகொண்டு அதைச் செய்துவைக்கச் சில மடங்களையும் ஏற்படுத்தினார். இவ்வேழுபத்தினான்கு ஆசார்யர்களின் வழியிலும், மடங்களின் மரபிலும் வந்தோர் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும் மரபு ஏற்பட்டது.

பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ளுமன்று நாம் என்ன செய்ய வேண்டும்?

  • அதிகாலையில் எழ வேண்டும்.
  • எம்பெருமானோடுள்ள ஸம்பந்த ஞாநம் இன்று பிறப்பதால் இன்றே பிறந்த நாள் என்றெண்ணி எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனையும், ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் சிந்திக்கவேண்டும்.
  • ஊர்த்வபுண்ட்ர தாரணம், ஸந்த்யாவந்தநாதி தினசர்யைகளை அனுஷ்டிக்கவேண்டும்.
  • இயன்ற அளவு புஷ்பம் பழம் ஆசார்யனுக்கும் எம்பெருமானுக்கும் வஸ்த்ரம் சம்பாவனைகளை எடுத்துக்கொண்டு குறித்த வேளைக்குள் ஆசார்யன் மடம்/திருமாளிகை அடைய வேண்டும்.
  • ஸமாச்ரயணம் பெறவேண்டும்.
  • ஆசார்யரிடம் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்க வேண்டும்.
  • ஆசார்யர் அனுக்ரஹிக்கும் உபதேசங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும் .
    மடம்/திருமாளிகப் ப்ரசாதம் ஸ்வீகரிக்க வேண்டும்.
  • அன்றைய பொழுதை மடம்/திருமாளிகையிலேயே இருந்து ஆசார்யரிடம் நேரடியாக எவ்வளவு ஸாரார்த்தம் க்ரஹிக்க முடியுமோ க்ரஹிப்பது.
  • ஸமாச்ரயணம் ஆனவுடனே ஆலுவலகம் ஓடுவது தவிர்த்து அன்றைய நாளை முழுவதும் ஆத்மா சிந்தனையில் நிம்மதியாகச் செலவிடுவது.

பஞ்ச ஸம்ஸ்காரம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா?

ஸமாச்ரயணம் என்பது ஓர் எளிய சடங்கு, அத்தோடு எல்லாம் முடிந்தது என்றொரு தவறான கருத்து நிலவுகிறது. ஸ்ரீவைஷ்ணவ வாழ்வுக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரோடு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் திருநாட்டில் செய்ய வேணுமென்பதே ஒரே லக்ஷ்யம். ஆதலால் அதை அடைய ஆசார்ய அனுக்ரஹமும் பாகவத அனுக்ரஹமும் பெற்று எம்பெருமானின் கைங்கர்யத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடப் பூர்வர்கள் காட்டிய நெறியில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதே இதன் குறிக்கோள்.

பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய நடைமுறை எப்படி இருக்கும் என இதனைப் பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படி ஸூத்ரம் 116ல் தெளிவுபடுத்தியருளும் வகை இதோ:

  • உலகியல் விஷயங்களில் எல்லா ஆசைகளையும் முற்றாக விட்டுத் தொலைப்பது.
  • ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே ஒரே அடைக்கலமாகப் பற்றுவது.
  • நித்ய கைங்கர்யம் எனும் பேறு அவச்யம் கிட்டும் எனும் அசையா நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது .
  • அந்தப் பேற்றை விரைவிலேயே அடைய வேண்டும் எனும் இடையறாத ஆசையோடு தவிப்பது.
  • இவ்வுலகில் இருக்கும் வரை திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செய்தும் எம்பெருமானின் திவ்ய குணாநுபவம் செய்தும் பொழுது போக்குவது.
  • இப்படிப்பட்ட குண சீலர்களான எம்பெருமானின் அடியார் பெருமை உணர்ந்து அவர்களைக் கண்டு மகிழ்வது.
  • திருமந்த்ரத்திலும் த்வய மகா மந்த்ரத்திலும் நெஞ்சை நிலை நிறுத்துதல்.
  • தன் ஆசார்யரிடம் அன்பும் பக்தியும் பெருகி இருத்தல் .
  • ஆசார்யரிடமும் எம்பெருமானிடத்தும் நன்றி விச்வாசம் பாராட்டுதல் .
  • ஸத்வ குண ஸம்பன்னரான மெய்ஞானமும் பற்றின்மையும் சாந்தமும் உள்ள ஸ்ரீவைஷ்ணவரோடு கூடியிருத்தல் .

இதை இன்னும் விளக்கமாகக் காண – https://granthams.koyil.org/2012/08/srivaishnava-lakshanam-5/.

இவ்விஷயத்தில் தம் சிஷ்யர்கள் பலர் மூலமும், எழுபத்து நான்கு ஸிம்ஹாசனாதிபதிகள் மூலமும் பஞ்ச ஸம்ஸ்காரத்தை நிலை நிறுத்தி, ஒழுங்கு படுத்தி இதை ஒரு சாஸ்வதமான நெறியாக்கி நம் யாவர்க்கும் உய்வளித்த ஸ்வாமி எம்பெருமானாரை அவச்யம் நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்ஞானத்திலிருந்து நம்மை எடுத்துத் தூக்கி எம்பெருமான் கைங்கர்யமும் மங்களாசாசனமுமே வாழ்ச்சி எனக் காட்டிய அவர் திருவடிகளை ஸ்மரிப்பது கடமை.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/simple-guide-to-srivaishnavam-pancha-samskaram/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

3 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்”

  1. தேவரீரின் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள்.
    இராமாநுரின் திருவருள் யாவருக்கும் கிடைக்க வேண்டும்.
    பஞ்ச சம்ஸ்காரம் என்பது முதல் படி . அதி சூட்சமமான ஆறு படிகளைக்கடந்த பின் ப்ரபன்ன்னன் என்ற ( ப்ரபந்ந:) படியில் ஒரு ஶ்ரீவைஷ்ணவனின் மனமும் ஆன்மாவின் சிந்தனையும் இணைந்து அமர்கிறது.
    நம்மாழ்வார் ப்ரபந்ந ஜனகூடஸ்தர் என்றும் பகவான் பாகவத ஜன கூடஸ்தர் என்றும் பெரியோர் சொல்வர்கள்.
    தங்களது பதிவு மிகவும் தெளிவாக உள்ளது. விவரங்கள் தேவையான அளவு உள்ளது. ஶ்ரீவைஷ்ணவர்கள் மேலும் மேலும் எண்ணத்தாலும் சிந்தனையாலும் செயலாலும் உயர வேண்டும்.
    இந்த ஆத்மாவின் முதல்வன் எம்பெருமானும் நமது ஆத்மாவின் வழிகாட்டி எம்பெருமானாரும் கருணை உள்ளத்தோடு நமக்கு திருவருள் புரிந்து அரவணைத்துக்காக்க வேண்டும்.
    பகவானின் விருப்பம் இருந்தால் மட்டுமே ஆச்சாரிர்களைப்பற்றியும் ஆழ்வார்களைப்பற்றியும் பகவானைப்பற்றியும் சிந்திக்க இயலும்.
    மிகவும் நன்றியும் வந்தனங்களும்.
    அடியேன் இராமாநுஜ சேவகன்.

    Reply
  2. சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அழகே அழகு. கடைசிப் பத்தி சிகரமாய்ப் பரிமளிக்கிறது. பூர்வர்கள் வாக்கெல்லாம் நினைவுக்கு வரும்படி. வேறு எதைச்சொல்லிப் புகழ? எம்பெருமானார் தரிசனம்.

    Reply

Leave a Comment