ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ஆசார்ய சிஷ்ய சம்பந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< பஞ்ச ஸம்ஸ்காரம்

பஞ்ச ஸம்ஸ்காரத்திலிருந்து ஒருவருடைய ஸ்ரீ வைஷ்ணவ வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது என்று கண்டோம்.  இனி, நம் ஸம்ப்ரதாயத்தின் மிகச் சிறந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் எனும் பெரும் உறவு எத்தகைத்து எனப் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்தின்படி காண்போம்.

”ஆசார்யர்” என்பதற்கு, சாஸ்த்ரங்களை நன்கறிந்து தாம் அனுஷ்டித்து, பிறர்க்கு உபதேசிப்பவர் என்று பொருள். சாஸ்த்ரங்களே, ஒருவர் ஸந்யாசியாய் இருப்பினும் திருமால் பரத்வத்தை ஏற்று ஒழுகாவிடில் அவர் சண்டாளர் தாம் என்கின்றன. ஆகவே ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவராய் இருத்தல் மிக முக்யம். அதாவது திருமாலைப் பரம்பொருளாய் ஏற்று அவன் திருவுளம் மகிழ்ச்சி அடைய வாழ்பவராய் இருத்தல் தலையாயது. பஞ்ச ஸம்ஸ்கார வேளையில் திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகங்களைச் சொல்லி உபதேசிப்பவரே ஆசார்யர் என்பர் நம் பூர்வர்கள். சிக்ஷை பெறுபவன் சிஷ்யன். சிக்ஷை – கல்வி, திருத்தம். இங்கு திருத்தப் படுவதாவது, தவறுகள் குறைகள் நீங்கி ஆசார்யர் வழி காட்டுதலில் நல்வாழ்வு வாழ்தல்.

உடையவர்-கூரத்தாழ்வான் – ஆதர்ச (இலட்சிய)ஆசார்யர்-சிஷ்யர்

நம் பூர்வாசார்யர்கள் ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் பற்றி மிக விபுலமாக ஆய்ந்துள்ளனர்.  அவ்வாறு ஆய்ந்து, இவ்வுறவு ஒரு பிதா புத்ரனுக்குள்ள உறவைப் போன்றது, புத்திரன் எவ்வாறு  முற்றிலும் தந்தைக்காட்பட்டுள்ளவனோ அவ்வாறே சிஷ்யனும் ஆசார்யனுக்காட்பட்டவன் என்று சாதித்துள்ளனர்.

கண்ணன் எம்பெருமான் தன கீதையில், “தத் வித்திப் ப்ரணிபாதேன பரிப்ரச்ணேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே  ஞாநம் ஞாநினஸ் தத்வ தர்சின:” என்றருளினான்.  இது, ஆசார்யன் சிஷ்யன் இருவரின் குணங்களையும் மிக நன்றாக நமக்குணர்த்துகின்றது. இதில் எம்பெருமான், “நீ உன் ஆசார்யனைப் பணிவுடன் அணுக வேண்டும், மிக்க உவப்பும் பணிவுங்கொண்டு அவர்க்குப் பணிவிடைகள் செய்து விநயத்தோடு சந்தேஹங்களைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்” என்று முதல் அடியிலும், “பகவானை நன்குணர்ந்த ஆசார்யன் உண்மை ஞானத்தை உனக்கு உணர்த்துவார்” என்று இரண்டாமடியிலும் கூறுகின்றான்.

ஓர் ஆசார்யரிடம் எதிர் பார்க்கப்படும் குணங்கள்:

  • ஆசார்யர்கள் பொதுவாகப் பிராட்டியோடு ஒக்கப் பேசப்படுமவர்கள், பிராட்டியைப் போன்றே இவர்களும் எம்பெருமானிடத்து சேதனர்களைப் புருஷகாரம் செய்து சேர்ப்பிப்பவர்களன்றோ!
  • பிராட்டியைப் போன்றே இவர்களும் எம்பெருமான் ஒருவனையே அநந்ய கதியாகப் பற்றியுள்ளனர், எம்பெருமானுக்கு மட்டுமே சேஷபூதர்களாயிருக்கின்றனர், எம்பெருமானே உபாயமென்று கொண்டு அவன் முகோல்லாசமே தமக்கு லக்ஷ்யமாய்க் கொண்டுள்ளனர்.
  • பகவதாராதனத்தில் ஈடுபட சிஷ்யர்களுக்கு ஞானமும் வைராக்யமும் புகட்டி, எம்பெருமானே யாவும் என அறிவுறுத்த எல்லையற்ற க்ருபையும் தயையும் கொண்டுள்ளனர்.
  • ஆசார்யன் சிஷ்யனின் ஆத்மோஜ்ஜீவனத்தில் நோக்குள்ளவர் என்கிறார் மாமுனிகள். பிள்ளை லோகாசார்யர், “ஆசார்யன் தம்மையும், சிஷ்யனையும், பலத்தையும் நன்குணர்ந்தவர்” என்கிறார்.
    • ஆசார்யர் தம்மை ஆசார்யராய் நினையாமல் தம் ஆசார்யரையே ஆசார்யராக நினைக்கிறார்.
    • சிஷ்யரைத் தம் சிஷ்யராய்  நினையாமல் தம் ஆசார்யரின் சிஷ்யராய்  நினைக்கிறார்.
    • எம்பெருமானுக்கு எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்களாசாசனம் செய்வதையே நோக்காகக் கொண்ட சிஷ்யனை உருவாக்குவதிலேயே அவர் ஊன்றியுள்ளார்.
  • வார்த்தாமாலையில் சாதித்துள்ள படியும், ப்ரத்யக்ஷ அநுபவத்திலும், தம்மை நாடி உஜ்ஜீவனத்துக்காக குண விமர்சங்கள் செய்யாமல் வந்துள்ளதால் ஆசார்யர் சிஷ்யரை மிக்க கௌரவத்தோடு நடத்தக் காண்கிறோம்.
  • எம்பெருமானே ஆசார்ய பதவியை ஆசைப்பட்டான் என்பர் நம் பூர்வர்கள். ஆனது பற்றியே அவன் ஓராண்வழி ஆசார்ய பரம்பரையில் அந்வயிப்பது; தனக்கும் ஓர் ஆசார்யனை அவன் விரும்பியதாலேயே அழகிய மணவாள மாமுநிகளைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டதுமாம்.

சிஷ்யனின் குணங்களாவன:

  • பிள்ளை லோகாசார்யர் ஸாதிக்கிறார்:
    • எம்பெருமானையும் ஆசார்யனையும் தவிர மற்ற ஐஸ்வர்யங்கள்/ஆத்மானுபவங்களை முற்றிலும் விட்டொழித்தல்.
    • ஆசார்யருக்கு எப்போதும் எத்தொழும்பும் செய்ய இசைந்திருத்தல்
    • ஐஹிக ஐஸ்வர்யாதிகளைக் கண்டு மனம் வெதும்பியிருத்தல்
    • பகவத் விஷயத்திலும் ஆசார்ய கைங்கர்யத்திலும் மட்டுமே ஊற்றமாய் இருத்தல்
    • பகவத் பாகவத விஷயங்களைக் கற்கும்போது அசூயை இல்லாதிருத்தல்.
  • தன் செல்வம் முற்றும் ஆசார்யருடையதே என்றெண்ணி, தன் தேஹ யாத்ரைக்குத் தேவையான அளவுமட்டுமே பொருளை வைத்துக்கொள்ளுதல் .
  • “மாதா பிதா” ச்லோகத்தில் ஆளவந்தார் அருளிச்செய்தபடி ஆசார்யரே எல்லாம் என்றிருத்தல்.
  • ஆசார்யரின் திருமேனிப் பாங்கினைக் கவனித்துக்கொள்ளுதல் .
  • மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில், இவ்வுலகில் உள்ளவரையில் சிஷ்யன் ஆசார்யரை ஒரு க்ஷணமும் பிரிந்திருத்தலாகாது என்று ஸாதிக்கிறார் .
  • ஆசார்ய சந்நிதியில் ஆசார்யப் பிரசம்சையிலேயே உள்ள சிஷ்யன், தனக்கு ஞாநம் தந்த ஆசார்யரிடம் எப்போதும் நன்றி பாராட்டியபடியே இருத்தல் வேண்டும்.

ஆசார்யரின் ஆத்ம ரக்ஷையில் சிஷ்யனுக்கு நோக்கோ அதிகாரமோ இல்லை. ஆதலால் அவரது செயல்கள்/குணங்களைத் திருத்த எண்ணவும் கூடாது, அவரது திருமேனிக் காப்பே சிஷ்யரின் கடமை ஆகும்.

பிள்ளை லோகாசார்யர் ஸாதித்தபடி, ஒரு சிஷ்யனாய் இருப்பது என்பதும் மிகக் கடினமானதே ஆகும்.  ஆகவேதான் இதை நிலை நிறுத்திக் காட்ட எம்பெருமான் தானும் நரன் என்கிற சிஷ்ய வடிவை எடுத்து அனுஷ்டித்துக் காட்டினான், தானே நாராயணனாக உபதேசம் செய்யும் ஆசார்யனாயும் இருந்தான்.  இந்நிலையில், நாம் வெவ்வேறு வகைப்பட்ட ஆசார்யர்கள் பற்றிப் பார்க்கவேண்டும்.
அநு வ்ருத்திப் ப்ரசன்னா சார்யரும், க்ருபா மாத்ரப் ப்ரசன்னாசார்யரும்

அநுவ்ருத்திப் ப்ரசன்னாசார்யரும், க்ருபா மாத்ரப் ப்ரசன்னாசார்யரும்

அநுவ்ருத்திப் ப்ரசன்னாசார்யர்:

முன்பிருந்த ஆசார்யர்கள், தம்மிடம் சரண் புக்காரை ஏற்குமுன் அவர்கள் எவ்வளவுக்கு ஞான வைராஞாதிகலோடிருந்தார்கள் என்று சோதித்துப் பார்த்தே ஏற்றுக் கொண்டார்கள்.  ஓர் ஆசார்யரை அண்டி உஜ்ஜீவிக்க நினைத்த சிஷ்யர் அவர்தம் திருமாளிகை சென்று பணிந்து அவரோடு ஓராண்டாவது இருந்து கைங்கர்யம் செய்து சிஷ்யராக ஏற்றுக்கொள்ளப்படும் க்ரமமே இருந்துவந்தது.

க்ருபா மாத்ரப் பிரசன்னாசார்யர்:

எம்பெருமானாரோ கலியின் ப்ரபாவத்தைத் திருவுளம் பற்றி, இவ்வாறான மிகக் கடிய நிபந்தனைகள் இருக்குமேயானால் லௌகிக வாழ்வை விட்டு மெய்ப்பொருள் அறிந்து மேன்மையைக் கைங்கர்யமாகக் கொள்ள என்னும் சேதனர் அல்லல் அதிகமாகுமேயன்றி அவர்க்கு ஒரு விடுதலை கிட்டாது என்றெண்ணி, “தகுதி”யே சிஷ்யவ்ருத்திக்கு முக்யம் என்பதை, “ஆசை”யே  முக்யம் என்று மாற்றியருளினார். இதனை மாமுனிகள் உபதேச ரத்ன மாலையில் மிக அழகாக, “ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை  உடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்” என ஆச்சர்யமாக எடுத்துக் காட்டினார்.

உத்தாரக ஆசார்யரும்  உபகாரக ஆசார்யரும்

நாயனாராச்சான் பிள்ளை தாமருளிச்செய்த “சரமோபாய நிர்ணயம்” க்ரந்தத்தில் இவ்விருவகைப் பட்ட ஆசார்யர்களையும் பற்றித் தெளிவாக விளக்கி, எம்பெருமானாரின் ஏற்றம் என்ன என்பதைக் காட்டியுள்ளார்.

உத்தாரக ஆசார்யர்

தம்மைச் சரண் புக்க சிஷ்யரை ஸம்ஸார பந்தத்திலிருந்து மீட்டெடுத்துப் பரமபதம் சேர்த்துக் கரைசேர்க்கும் ஆசார்யரே உத்தாரக ஆசார்யர். இவ்வகையில் எம்பெருமான், நம்மாழ்வார், எம்பெருமானார் இம்மூவரே உத்தாரக ஆசார்யர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.  எறும்பியப்பா தமது வரவர முநி சதகத்தில் மாமுநிகளையும் இம்மூவரோடு சேர்த்து உத்தாரக ஆசார்யராகக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீமன் நாராயணன் ஸர்வஞன், ஸர்வ சக்தன், ஸர்வ ஸ்வதந்த்ரன் என்பதால் அவன் எவர்க்கும் மோக்ஷம் தர வல்லவன்.

பெரிய பெருமாள் – திருவரங்கம்

ஸம்ஸாரிகளுக்குத் தத்வஹித புருஷார்த்தங்களையுணர்த்தி, செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளவல்ல நம்மாழ்வார் எவர்க்கும் மோக்ஷம் தர வல்லவர். இதை அவரே,”பொன்னுலகாளீரோ” திருவாய்மொழியில் தூது செல்லும் பக்ஷிகளுக்கு ஸம்பாவனையாக நித்ய விபூதி/லீலா விபூதி இரண்டையும் அவை செய்யும் புருஷகாரத்துக்குத் தாம் ஸமர்ப்பிப்பதாக ஸூசிப்பிக்கிறார்.

நம்மாழ்வார்ஆழ்வார் திருநகரி

ஸ்ரீரங்கநாதனாலும்  திருவேங்கடமுடையானாலும் லீலா விபூதி, நித்ய விபூதி இரண்டுக்கும் “உடையவர்” என இராமாநுசர் நியமிக்கப் பட்டார். அவர் இந்த லீலா விபூதியில் 120 ஸம்வத்ஸரங்கள் எழுந்தருளி இருந்து பகவதநுபவத்தில் மூழ்கியதோடு, எல்லா திவ்யதேசத்தெம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்து அவர்களின் ஆக்ஞையை நிறைவேற்றினார். முழுமையான வகையில் எம்பெருமான் திருவுளப்படியே ஸந்நிதி வழிபாட்டுக் கிரமங்களை நிறுவி 74 ஸிம்ஹாஸனாதிபதிகள், ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் மூலம் இதை நிரந்தரப் படுத்தினார்.

எம்பெருமானார்ஸ்ரீ பெரும்பூதூர்

எம்பெருமான் சாஸ்த்ர மர்யாதைப்படி நடப்பவன் ஆதலால் ஒவ்வொரு சேதனனுக்கும் அவனவன் இச்சை/கர்மாநுகுணமாக மோக்ஷம் தருவதோ, ஸம்ஸாரத்தில் வைப்பதோ செய்கிறான். ஆகவே, உத்தாரகத்வம் எம்பெருமானாரிடத்திலேயே பூர்த்தியாயுள்ளது என்று நாயனாராச்சான் பிள்ளை தலைக்கட்டுகிறார்.

நம்மாழ்வார், பரஜ்ஞானம் பெற்றாரேயாகிலும், தம் அளவு கடந்த ஆர்த்திகாரணமாக மிக்க இளமையிலேயே ஸ்வல்ப உபதேசம் செய்து, பகவதநுபவத்திலேயே மூழ்கி லீலா விபூதியை விட்டகன்றார்.

எம்பெருமானாரோ தமது நிரவதிக கருணையினால் இந்த பரஜ்ஞானத்தின் பலத்தை ஆசை உடையோர்க்கெல்லாம் அவ்வாசை ஒன்றே பற்றாசாகக் கொண்டு வழங்கி, எம்பெருமானிடம் சேர்ப்பிக்கிறார்.

இவ்வாறு, எம்பெருமானாரிடம் மட்டுமே இந்த உத்தாரகத்வ பூர்த்தி உள்ளது என்று நாயனாராச்சான் பிள்ளை உறுதிப் படுத்துகிறார்.

உபகாரகாசார்யர்

நம் ஸம்ப்ரதாயத்தில் நம்மை உத்தாரகாசார்யரிடம் கொண்டு சேர்க்க வல்ல ஆசார்யர் உபகாரகாசார்யர் எனப்படுகிறார்.  நமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் நடக்கும்போது, நம் ஆசார்யர் குருபரம்பரையின் மூலமாக நம்மை எம்பெருமானிடம் கொண்டு சேர்ப்பித்து ஸம்ஸாரத்தைத் தாண்டி பரமபதம் அடைவிக்கிறார்.

நம் ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருக்குள்ள ப்ராதான்யம் ஒப்புயர்வற்றது என்றாலும், உத்தாரகாசார்யர், உபகாரகாசார்யர் இருவருமே நமக்கு இன்றியமையாதவர்கள், உத்தேச்யர்கள்.

ஸமாச்ரயணாசார்யர், ஞானாசார்யர்

நமக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்பவர் நம் ஸமாச்ரயணாசார்யர். நமக்கு க்ரந்த காலக்ஷேபாதிகளால் ஆத்ம ஞானம் வளர்ப்பவர் ஞாநாசார்யர். நம் ஸமாச்ரயணாசார்யருக்கு நாம் எல்லா வகைகளிலும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டாற்போன்றே ஞாநாசார்யரையும் கருதக் கடமைப் பட்டுள்ளோம். சிலருக்கு இருவருமே ஒரே ஆசார்யராய் இருக்கக் கூடும். உண்மையில் நாம் ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவரையும் நம் ஆசார்யராகவே கருதவேணும் என்பது ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யம்.

சுருங்கச்சொல்லில், சிஷ்யன் ஆசார்யனையே முற்றிலும் சார்ந்திருக்கவேண்டும்; ஆசார்யரின் ஐஹிகத் தேவைகள் அனைத்தையும் தாமே பூர்த்தி செய்யவேண்டும். இதற்காக, அவர் எப்போதும் ஆசார்யரோடு தொடர்பிலிருந்து என்ன தேவை என அறிந்துகொள்ள வேண்டும்.

பூர்வாசார்யர்கள் வாழ்விலே பல அத்புதமான நிகழ்ச்சிகள் ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தத்தை விளக்குவனவாக உள்ளன.

  • மணக்கால் நம்பி தம் ஆசார்யர் திருமாளிகையில் பல வகைப்பட்ட கைங்கர்யங்களைச் செய்தார்.
  • இவரே ஆளவந்தாரை நம் சம்ப்ரதாயத்தில் கொணரப் பெரும்பாடு பட்டார்.
  • எம்பெருமானார் ஆசார்யராக இருப்பினும், சிஷ்யர் ஆழ்வானை மிக்க மர்யாதையோடேயே நடத்திக்கொண்டு போந்தார்.
  • ஒருகால் எம்பெருமானார் ஆழ்வானிடம் மனஸ்தாபம் கொண்டார். ஆழ்வான், “அடியேன் எம்பெருமானாரின் சொத்து. அவர் திருவுளப்படி உபயோகித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
  • எம்பார், தன் ஆசார்யன் திருமலை நம்பி ஸயநிக்கும் முன்பாக அவரது படுக்கையில் தாம் படுத்து, சரியாயிருக்கிறதா என்று சோதிப்பார்; இது அபசாரமன்றோ என எம்பெருமானார் கேட்டபோது, அபசாரமே ஆகிலும், எனக்குப் பாபமே சேரிலும் அதனாலென்ன, ஸ்வாமிக்கு சயனம் குறைவற இருக்க வேண்டும் என்றாராம்.
  • எம்பெருமானார் அனந்தாழ்வானிடம் “பட்டரை நாமாகவே எண்ணியிரும், அப்படியே மதித்திரும்” என்றார்.
  • பட்டரும் நஞ்சீயரும் மிகச்சிறந்த ஆசார்ய சிஷ்ய பாவனையிலிருந்தார்கள். நஞ்சீயர் சாதிப்பார் ”அடியேனுடைய ஸன்யாஸ ஆச்ரமம் ஆசார்ய கைங்கர்யத்துக்கு சிறிது இடையூறானாலும், இந்தத் த்ரிதண்டத்தைத் தூக்கி எறிந்து விடுவேன்”.
  • பாசுர விளக்கங்கள் தருவதில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், ஆசார்யரான நஞ்சீயர் தம் சிஷ்யர் நம்பிள்ளை வ்யாக்யானம் சாதிப்பதை மிகவும் உகந்து ஊக்குவித்தார் என்பது ப்ரசித்தம்.
  • பின்பழகிய பெருமாள் ஜீயர், நீராடி வரும் தம் ஆசார்யர் நம்பிள்ளையின் நீர்த்துளி முத்துகள் தெரியும் திருமுதுகைத் திருக்காவேரியிலிருந்து கண்களால் பருகியபடியே வருதற்காகப் பரமபதமும் வேண்டாம் என வெறுத்திருந்தார்.
  • கூர குலோத்தம தாசர் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்தில் கொணர அரும்பாடு பட்டார்.
  • மணவாள மாமுநிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆஞ்யைக்கிணங்கவே ஸ்ரீ பாஷ்யம் ஒரே உரு சாதித்து, பின் எல்லாப் போதையும் அருளிச்செயல் வ்யாக்யானங்களிலும் ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபத்திலேயுமே கழித்தார்.
  • ஒரு ஸம்வத்ஸர  காலம் முழுதும் தன் ஸந்நிதி வாசலிலேயே தன நாய்ச்சிமாரோடு மணவாள மாமுநிகளின் ஈடு காலக்ஷேபம் கேட்டு, ஸ்ரீ ரங்கநாதன் ஆசார்ய சம்பாவனையாக அவர்க்கு “ஸ்ரீ சைலேச” தனியனையும், தன் சேஷ பர்யங்கத்தையும் சமர்ப்பித்தான்.
  • மணவாள மாமுநிகள் தமதேயான திருவாழி/திருச்சங்க இலச்சினைகளைத் தம் சிஷ்யரான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்து, அவரைத் தம் ஸிம்ஹாஸனத்திலேயே எழுந்தருளச்செய்து அப்பாச்சியார் அண்ணாவுக்கு ஸமாச்ரயணம் செய்வித்தார்.

இங்கனே இன்னும் பலவுள. இவ்விசேஷ சம்பந்தம் தெரிந்துகொள்வதற்காகச் சிலவற்றை இங்குச் சொன்னபடி.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/simple-guide-to-srivaishnavam-acharya-sishya/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ஆசார்ய சிஷ்ய சம்பந்தம்”

  1. அருமையான விளக்கம். ஸ்தோத்ர ரத்னம் 59 ஐ சொல்லி பிரார்த்திக்கிறேன். – இவ்வகையே பேற்றுக்குத் தக்க இச்சையிலனேனும், உள்ளவன் போல் நடித்து, உன்றன் மெய்யறியாத் தமோ ரஜோ குணங்கள் மேலாய், மிறையுற்ற கபட மனதுடையேனாகி, பொய் வசனம் கொண்டு துதி புரிந்தேனேனும், பூவளித்தோ இதையே நீ பொருட்டாய்க் கொண்டு, என் உய்யும் வகை உணர்ந்திடுமாறு என்னுள்ளத்தை, உன்னருளால் சிக்ஷித்துத் திருத்துவாயே.

    Reply

Leave a Comment