ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< ரஹஸ்ய த்ரயம்

மூன்று தத்வங்கள் – ஒரு சுருக்கம்

தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என மூன்றாகப் பகுக்கப் படுகின்றன.

பரமபதமாகிய நித்ய விபூதியிலும், ஸம்ஸார மண்டலமாகிய இந்த லீலா விபூதியிலுமுள்ள கணக்கற்ற ஜீவாத்மாக்கள் சித். ஞானத்தால் ஆனவையும், ஞானமுள்ளனவும் சித் ஆகும். ஞானம் என்பது ஆனந்தமானதால், ஞானமுள்ள சித் தூய ஞானத்திலுள்ளபோது ஆனந்தமாயுள்ளது. இந்த சித், எப்போதும் விடுதலையாகிக் கட்டுகள் தளைகளில்லாத நித்ய ஸூரிகள், முன் ஸம்ஸாரத்தில் கட்டுண்டிருந்து இப்போது விடுதலையாகி இருக்கும் முக்தர்கள், இப்போது ஸம்ஸாரத்தில் கட்டுண்டு துன்புற்றுழலும் பத்தர் என மூவகையினர். இதில் பத்தர், தளையிலிருந்து விடுபட விரும்பும் முமுக்ஷுக்கள் என்றும், தளையில் இன்புதுன்புகளை அநுபவித்துக் கிடக்கும் புபுக்ஷுக்கள் என்றும் இரு வகை. முமுக்ஷுக்களில், கைவல்யம் எனும் சுய இன்பம்தேடும் கைவல்யார்த்திகள் என்றும், எப்போதும் வேறு பயன் கருதாது இறைப்பணியே பலன் என்றுள்ள கைங்கர்யார்த்திகள் என்றும் இருவகை. மேலும் அறிய https://granthams.koyil.org/2013/03/06/thathva-thrayam-chith-who-am-i/ பார்க்கவும்.

senses-elements - tamil

அறிவற்ற அனைத்துப் பொருள்களும், நம் புலன்களுக்கு உட்பட்டு உணரப்படுவனவும் அசித். ப்ரளயத்தில் இவை உரு மாய்ந்து கிடந்து, ஸ்ருஷ்டி காலத்தில் உருவுள்ளனவாகும். இவை நித்ய விபூதி லீலா விபூதி இரண்டிலுமுண்டு. பொருளியல் உலகில் இவை அறியப்படுவனவாகவும், ஆத்மீக விஷயங்களில் அறிய உதவுபவையாவும் உள்ளன. அசித், பரமபதத்தில் உள்ள தோஷமில்லாத, ரஜோ தமோ குணங்கள் கொஞ்சம் கூட சேராத சுத்த ஸத்வம்,  நன்மையும் தீமையும் கலந்த, ரஜோ தமோ குணங்கள் கலந்த மிஶ்ர ஸத்வம், நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட, ஸத்வ ரஜோ தமோ குணங்கள் ஒன்றுமில்லாத காலம் – ஸத்வ ஶுன்யம் என்று பகுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://granthams.koyil.org/2013/03/thathva-thrayam-achith-what-is-matter/ பார்க்கவும்.

ஈச்வரன் ஸ்ரீமன் நாராயணன். ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாருடன் கூடிய அவனே பரம்பொருள். பகவான் எனும் சொல், ஞாநம் (அறிவு), பலம் (வலிமை), ஐச்வர்யம் (ஆளுமை), வீர்யம் (துணிவு), சக்தி (ஆற்றல்), தேஜஸ் (பொலிவு) எனும் ஆறு குணங்களையுடையவன் என்று பொருள்படும். ஈஸ்வரன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவன். அவன் தாழ்ந்த குணங்கள் எதுவுமற்றவன். எல்லா சித் அசித்துகளும் அவனையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவனே அவற்றின் ஜீவனையும், அவற்றைத் தாங்கி நிற்பவனாயும் உள்ளான். மேலும் அறிய https://granthams.koyil.org/2013/03/thathva-thrayam-iswara-who-is-god/ பார்க்கவும்.

இம்மூன்றனுக்கும் சில ஒற்றுமைகளுமுண்டு:

  • ஈச்வரனும் சித்தும் அறிவுள்ளவர்கள்
  • சித் அசித் இரண்டுமே ஈச்வரனின் உடைமைகள்
  • ஈச்வரன் அசித் இரண்டுமே சித்தைத் தம் இயல்பினவாக்க வல்லன. அதாவது சித் – ஜீவாத்மா உலகியல் இன்பத்தில் மூழ்கினால் அவன் அவற்றின் இயல்புகளை ஏற்கிறான்; அவ்வாறன்றி பகவத் விஷயத்தில் ஊன்றினால் பாகவதனாக, உலகியல் மாசுகள் நீங்கி தளைகள் அறுபட்டுப் பேரின்பம் எய்தவனாகிறான்.

இம்மூன்றனுள்ளும் உள்ள வித்யாசங்கள்:

  • ஈச்வரனின் தனிச்சிறப்பியல்பாவது அவன் யாவற்றினும் மேம்பட்டவன், எல்லாவற்றிலும் எப்போதும் எல்லா வகையிலும் உள்ளவன்.
  • சித்தின் சிறப்பாவது ஈச்வர கைங்கர்யத்திலேயே தான் எப்போதும் இருக்கவேண்டும் எனும் ஞாநம் உள்ளவன்.
  • அசித்தாவது எவ்வகை அறிவுமின்றி, எப்போதும் பிறர் அனுபவத்துக்கான கருவியாயே இருத்தல்.

இவ்வரும் பொருள்கள் யாவும் பிள்ளை லோகாசார்யரின் தத்வ த்ரயம் நூலில் மிகச் செழுமையாக விளக்கப் பட்டுள்ளன. மேலும் அறிய https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-pillai-lokacharyar-tattva-trayam/ பார்க்கவும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/thathva-thrayam-in-short/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம்”

Leave a Comment