ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
<< பிள்ளை லோகாசார்யர் – தத்வ த்ரயம் அனுபவம்
ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் பெருமைகளை அநுபவித்து வருகிறோம். இம்மாதத்தில் அவதரித்தோரில் மிகத் தலையாயவர் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். இவரது அத்புத க்ரந்தமான ஸ்ரீவத்சன் பூஷணத்தின் பெருமையையும், அதற்குள்ள தனியன்களையும் அதற்கு மாமுனிகள் அருளிய அவதாரிகையையும் காண்போம். முதலில் தனியன்கள்:
ஸ்ரீவசன பூஷணம் எனும் திவ்ய சாஸ்த்ரமே ஸத்ஸம்ப்ரதாயத்தின் அதிமுக்யமான க்ரந்தம் என்பதால் இதன் பெருமையை விளக்கவே மாமுனிகள் உபதேச ரத்தின மாலையை அருளிச்செய்தார்.
- மாமுனிகள் இக்ரந்தத்தை ஆழ்வார்கள், எம்பெருமானாரின் அவதாரத் திருநக்ஷத்ரங்கள், அவதார ஸ்தலங்கள் இவற்றைக் காட்டித் தொடங்குகிறார்.
- இவற்றை அடைவே தெரிவித்து, ஸம்ப்ரதாயம், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் இவற்றை ப்ரவர்த்திப்பித்ததில் எம்பெருமானாரின் மஹத்தான பங்களிப்பை ஸ்தாபிக்கிறார்.
- பிறகு, திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யானங்கள், அவற்றை அருளிச்செய்த வ்யாக்யாதாக்கள் பற்றித் தெரிவிக்கிறார்.
- பிறகு அவர், நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானம் எவ்வாறு சேமிக்கப்பட்டு ஆசார்ய பரம்பரை வழியாக உபதேசிக்கப் பட்டு வந்தது என்று காட்டுகிறார்.
நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி
- பிறகு அவர் பிள்ளை லோகாசார்யர் பெருமையையும் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ர மாஹாத்ம்யத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.
பிள்ளை லோகாசார்யர் கோஷ்டி
- அதன்பின் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரத்தை விளக்கி, தன் ஆசார்யனிடத்தில் பரிபூர்ண விச்வாஸத்துடன் இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார்.
- இறுதியாக, பூர்வாசார்யர்கள் திருவாக்கைப் பூர்ணமாக ஏற்று அதன்படியே நடக்கவும் பிறர்க்கு உபதேசிக்கவும் வேண்டும் என்று காட்டியருளுகிறார்.
- இந்த அநுஷ்டானத்தின் மிகப்பெரிய பலனாக நாம் பெறுவது எம்பெருமானாரின் க்ருபை என்றும் விளக்கப்படுகிறது.
- எறும்பியப்பா உபதேச ரத்தின மாலையின் இறுதியில் தாம் சேர்த்தருளிய ஓர் அழகான பாசுரம் மூலம் மாமுனிகள் திருவடி ஸம்பந்தம் பெற்றோரை அமானவ புருஷன் தன் கரத்தால் ஸ்பர்சித்து விராஜா நதியைத் தாண்டச் செய்கிறான் என்று அருளிச்செய்தார்.
மாமுனிகள் – ஸ்ரீரங்கம்
ஆகவே, உபதேச ரத்தின மாலை க்ரந்தத்தின் நோக்கமே ஸ்ரீவசனபூஷண ஸாரார்த்தம் தெரிவிப்பதும், அதன் மாஹாத்ம்யம் உணர்த்துவதும் தான் என்று தெளிவாகிறது.
மாமுனிகளின் உபதேச ரத்தின மாலையில் சில பாசுரங்களை அனுபவிப்போம்:
பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்
பாசுரம் 53
அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும்
உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை
புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது
இதன் கருத்தாவது: இப்படிப் புகழ்வாய்ந்த முடும்பை நகரில் திருவவதரித்த அண்ணல் லோகாசார்யர் தம் பெருங்கருணையால் நம்மைப் பல க்ரந்தங்களை அருளிச்செய்து வாழ்வித்தருளினார் எனினும் அவற்றில் ஸ்ரீவசன பூஷணம் பெற்றுள்ள மாஹாத்ம்யம் வேறொன்றுக்கும் இல்லை என்பது வெறும் புகழுரையன்று ஸத்யம்.
பாசுரம் 54
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை
மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு
மின்னணியாச் சேரச் சமைத்தவரே
சீர் வசன பூடணம் என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின்
இதன் கருத்தாவது: முன்பே நம் பூர்வர்கள் அருளிச்செய்த மஹா வாக்யங்களைக் கொண்டே அவர்களின் திருவுளக் கருத்துகளை ஆத்மாவுக்கு ஆபரணம் போல் ஒரு சொல் ஆபரணமாக (வசன பூஷணம்) இந்நூலை அமைத்தபடியால் பிள்ளை லோகாசாரயரே இதற்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று பேரிட்டார்.
பாசுரம் 55
ஆர் வசன பூடணத்தின் ஆழ்பொருள் எல்லாம் அறிவார்
ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார்
ஓர் ஒருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே
எல்லார்க்கும் அண்டாததன்றோ அது
இந்தப் பாசுரத்தில் கருத்தாவது: ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஆழ்ந்த பொருளை உள்ளபடி அறியக்கூடியவர் யார்? அறிந்தாலும் அதை அநுஷ்டிக்கக் கூடியவர் யார்? யாரோ ஒருவர் இருந்தாலும், அது மிக மெச்சத்தக்கதே. ஏனெனில் இது யாராலும் அடையப்பட முடியாத நிலை. பிள்ளை லோகம் ஜீயர், இப்பாசுரத்துக்கிட்ட தம் வ்யாக்யானத்தில் மாமுனிகள் ஒருவரே இதை அறிந்தும் அநுஷ்டித்தும் இருந்தவர் என்று ஸாதிக்கிறார்.
பாசுரம் 61
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான
குருவை அடைந்தக்கால்
மானிலத்தீர் தேனார் கமலத் திருமாமகள் கொழுனன்
தானே வைகுந்தம் தரும்
இப்பாசுரத்தின் கருத்தாவது: உலகோரே! இந்த சாஸ்திரத்தில் ஆழ்ந்த ஞானமும் அந்த ஞானத்தின் படியான அநுஷ்டானமும் உள்ள ஓர் ஆசார்யரை நீர் அடைக்கலம் புகுந்தால் தேன் சேரும் தாமரை மலர் அமர்ந்த திருமாமகள் கொழுநன் ஆன ஸ்ரீமந் நாராயணன் தானே உவந்து உங்களுக்குத் தன் திருவடி நிழலாகிய நித்யப் பெருவீடு தந்து ஒழிவிலாக் கைங்கர்யம் கொள்வான்.
ஸ்ரீவசன பூஷணம் ஸேவிக்கு முன்பாகச் சில விசேஷ தனியன்கள் ஸேவிக்கப் படுகின்றன. நம் மேன்மை மிக்க பூர்வாசார்யர்களையும் எல்லோரின் உஜ்ஜீவனத்துக்காக அவர்கள் செய்த க்ரந்தங்களையும் இப்போது சுருக்கமாகக் காண்போம்.
முதலில் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்“ தொடங்கி பொதுத் தனியன்கள் ஸேவித்தபின்…..
லோககுரும் குருபிஸ்ஸஹ பூர்வை: கூர குலோத்தமதாஸம் உதாரம் |
ஸ்ரீநகபதி அபிராமவரேசௌ தீப்ரசயாந குருஞ்ச பஜேஹம் (தீப்ரசயம் வரயோகி நமீடே) ||
மணவாள மாமுனிகள் ஸாதித்தது. இதன் திரண்ட பொருள்: அடியேன் பிள்ளை லோகாசார்யர், மஹா காருணிகரான கூர குலோத்தம தாஸர், திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை), அழகிய மணவாள பெருமாள் பிள்ளை (மாமுனிகளின் தாய்வழிப் பாட்டனார்/மாதாமஹர்), திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதர் (மாமுனிகள் திருதகப்பனார்) ஆகிய பூர்வாசார்யர்களை வணங்குகிறேன்.
லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||
ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அருளிச்செய்தது. இதன் திரண்ட பொருள்: வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரும், ஸம்ஸாரப் பாம்பினால் கடியுண்டு கட்டுண்டவர்களின் உயிர் காக்கும் மருந்தும் ஆகிய அடியேன் ஆசார்யர் பிள்ளை லோகாசார்யரை வணங்குகிறேன்.
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டின்ய குலபூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||
திருவாய்மொழிப் பிள்ளை அருளியது. இதன் திரண்ட பொருள்: பிள்ளை லோகாசாயார்யாரின் க்ருபைக்குப் பாத்ரரானவரும், கௌண்டிந்ய குலத்துக்கு அணிகலனுமான கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.
நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே ||
மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது. இதன் திரண்ட பொருள்: குந்தீ நகரம் (இப்போது கொந்தகை) எனும் ஊரில் திருவவதரித்தவரும், ஸ்ரீசைலநாதர் (திருமலை ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை) எனும் திருநாமம் கொண்டவரும், கைங்கர்ய ஸ்ரீயினால் எப்போதும் ப்ரகாசமாய் ஜ்வலிப்பவரும் ஆன அடியேன் ஆசார்யரை வணங்குகிறேன்.
லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயிதாந்தரம் |
ஜ்ஞான வைராக்யஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும் ||
மாமுனிகள் ஸாதித்தது. இதன் திரண்ட பொருள்: செந்தாமரையில் சேர்ந்த ராஜ ஹம்ஸ பக்ஷிபோல் பிள்ளை லோகாசார்யர் திருவடியில் பணிந்த (மாதாமஹரான) ஞான வைராக்யங்களில் கடல் போன்ற அழகிய மணவாள பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஜிஹ்வா வததீசதாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ரவிதம் |
ஸுந்தரகுருவர கருணாகந்தளித ஜ்ஞாநமந்திரம் கலயே ||
மாமுனிகள் ஸாதித்தது. இதன் திரண்ட பொருள்: அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையின் திவ்ய க்ருபையால் பேணப்பட்டவரும் குற்றமற்ற சாஸ்த்ர ஞானம் பெற்றவரும் ஆன திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரை வணங்குகிறேன்.
ஸ்ரீவசன பூஷணத்துக்கே உரிய விசேஷத் தனியன்கள்
ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் (பகுதி), ஒன்பது ப்ரகரணங்களாகவும் பகுக்கும் க்ரமத்தை இந்தத் தனியன்கள் விளக்குகின்றன:
புருஷகார வைபவம் ச ஸாதநஸ்ய கௌரவம்
தததிகாரி க்ருத்யம் அஸ்ய ஸத்குரூப ஸேவநம் |
ஹரிதயாம் அஹைதுகீம் குரோருபாயதாஞ்ச யோ
வசனபூஷணேவதஜ் ஜகத்குரும் தமாச்ரயே ||
இதன் எளிய தமிழ் வடிவம்: பின்வரும் விஷயங்களை ஸ்ரீவசன பூஷணத்தில் கருணையுடன் விளக்கிய பிள்ளை லோகாசார்யரை நான் சரணடைகிறேன்.
- எம்பெருமான் சேதனரை ஏற்கும்படி சிபாரிசு செய்யும் பிராட்டியின் மஹிமைகள்
- பகவானை அடைய பகவானே உபாயம் எனும் ஸித்தோபாயப் பெருமை
- எம்பெருமானையே உபாயமாகப் பற்றிய அதிகாரிகள் இயல்பு/செயல்கள்
- இந்த அதிகாரிகள் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
- எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
- ஆசார்யன் அறுதி உபாயம் (வழி) என்பது
ஸாங்காகில த்ரவிட ஸம்ஸ்க்ருதரூப வேத ஸாரார்த்த ஸங்க்ரஹ மஹாரஸ வாக்யஜாதம் |
ஸர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம் வந்தே ஸதா வசநபூஷண திவ்ய சாஸ்த்ரம் ||
இதன் எளிய தமிழ் வடிவம்: ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசார்யர் ஸாதித்ததும் கற்றறிந்த ஞானிகளுக்கு மகிழ்வூட்டுவதும் வேத வேதாந்த விஷயங்களை மிகச் சில சொற்களிலேயே எளிதாக விளக்குவதுமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை அடியேன் எப்போதும் வணங்குகிறேன்.
அகுண்டோத்கண்ட வைகுண்டப்ரியாணாம் கண்டபூஷணம் |
குருணாஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசந பூஷணம் ||
இதன் எளிய தமிழ் வடிவம்: எல்லையிலாப் பேரின்பம் விளைக்கும் பரமபதம் அடைய விழையும் முமுக்ஷுக்களின் பேச்சுக்கு ஆபரணம் போன்றது லோக குருவாகிய பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம்.
பேறு தருவிக்குமவள் தன் பெருமை (1) ஆறு (2) பெறுவான் முறை (3)
அவன் கூறு குருவைப்பனுவல் (4) கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள்தான் (5)
மாறில்புகழ் நற்குருவின் வண்மை (6) யொடெலாம் வசன பூடணமதில்
தேறிட நமக்கருள் முடும்பை இறையவன் கழல்கள் சேரென்மனனே
இத்தனியனின் கருத்தாவது: மனமே! முடும்பை குலம் வந்த வள்ளல் லோகாசார்யர் திருவடிகளை சரணம் பற்றி உஜ்ஜீவனம் அடைவோம். அவர் அருளிய நூலின் ஆறு விஷயங்களாவன:
- புருஷகாரம் செய்யும் பிராட்டியின் பெருமை
- எம்பெருமானே உபாயமாய் இருக்கும் ஸித்தோபாயப் பெருமை
- எம்பெருமானையே உபாயமாகப் பற்றினோர் பெருமை
- அத்தகையோர் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
- எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
- ஆசார்யனே அறுதி உபாயம் என்பது
திருமாமகள் தன் சீரருளேற்றமும் (1) திருமால் திருவடி சேர்வழி நன்மையும் (2)
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (3) மெய்வழியூன்றிய மிக்கோர் பெருமையும் (4)
ஆரணம் வல்லவர் அமரு நன்னெறியையும் (5) நாரணன்றாள் தரு நற்குருநீதியும் (6)
சோதிவானருள் தூயமாகுருவின் பாதமாமலர் பணிபவர் தன்மையும் (7)
தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுமின்றி எடுக்கும்படியையும் (8)
மன்னியவின்பமும் மாகதியும் குருவென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும்
அசைவிலாதவேதமதனுள் அனைத்தையும் (9) வசனபூடண வழியாலருளிய
மறையவர் சிகாமணி வண்புகழ் முடும்பை இறையவன் எங்கோன் உலகாரியன்
தேன்மலர்ச்சேவடி சிந்தைசெய்பவர் மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவரே
இத்தனியனின் கருத்தாவது: முடும்பை வந்த வள்ளல் ஆசார்ய ச்ரேஷ்டர்,வேத விற்பன்னர்களின் முடியில் ரத்னமாக இருப்பவரோ, சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை ஸ்ரீவசன பூஷணத்தின் மூலம் வெளியிட்டாரோ, அத்தகைய பிள்ளை லோகாசார்யரின் தேன் போன்ற திருவடிகளை யார் த்யானம் செய்கிறாரோ அவர் இவ்வுலகிலேயே பேரின்பமான பகவத் பாகவத அனுபவம் மற்றும் கைங்கர்யத்தைப் பெறுவார். ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்திரத்தில் அருளிய பொருள்களாவன:
- ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் ஏற்றம்
- எம்பெருமானை அடைய அவனே உபாயமாய் இருப்பதின் ஏற்றம்
- கர்ம ஞான பக்திகளாகிற பிற உபாயங்களின் தாழ்ச்சி
- எம்பெருமானே உபாயம் என்றுள்ள ப்ரபந்நர் ஏற்றம்
- ப்ரபந்நர் நித்யாநுஷ்டானம்
- சீரிய ஆசார்யனின் குணங்களும் அவர் அநுஷ்டானங்களும்
- நல்ல சிஷ்யனின் இயல்புகள்
- நித்ய ஸூரிகள் தலைவன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா
- ஆசார்யன் உபாயமும் உபேயமும் எனும் சரம பர்வ நிஷ்டை
லோகாசார்ய க்ருதே லோகஹிதே வசனபூஷணே |
தத்வார்த்த தர்சினோ லோகே தந்நிஷ்டாச்ச ஸுதுர்லபா: ||
லோகாசார்யரால் ஜீவர் உத்தரணத்துக்காக அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ வசனபூஷணத்தை நன்கு அறிந்தோரும் அதை அநுஷ்டிப்போரும் காண அரிது.
ஜகதாசார்ய ரசிதே ஸ்ரீமத்வசநபூஷணே |
தத்த்வஜ்ஞாநாஞ்ச தந்நிஷ்டாம் தேஹிநாத யதீந்த்ரமே ||
.ஜகதாசார்யரான யதிராஜரே! பிள்ளை லோகாசார்யரால் அருளப்பட்ட ஸ்ரீமத் வசன பூஷண திவ்ய சாஸ்த்ர ஞானம் பெறவும் அதை அநுஷ்டிக்கவும் அடியேனுக்கு க்ருபை செய்தருள்வீராக!
இவ்வாறு ஓரளவு பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ர மாஹாத்ம்யம் கண்டோம். இனி இதற்கு மாமுனிகள் அருளிய அத்புத வ்யாக்யானத்துக்கு அவர் அருளிய அவதாரிகை காண்போம்.
ஆழ்வார் எம்பெருமானார் பிள்ளைலோகாசார்யர் ஜீயர் திருவடிகளே சரணம்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org