ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – தனியன்கள்

நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது.  இவ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்கு முன்பாக நாம் இத்திவ்ய சாஸ்த்ரத்தின் தனியன்கள் உள்பட சில மாஹாத்ம்யங்களைக் கண்டோம்.

இனி மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அவதாரிகையைக் காண்போம்:

திருமந்த்ரம் ஸகல வேத ஸாரம். அதிலுள்ள மூன்று பதங்களும் (அநந்ய சேஷத்வம் – எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்தல், அநந்ய சரணத்வம் – எம்பெருமான் ஒருவனையே புகலாகப் பற்றுதல், அநந்ய போக்யத்வம் – எம்பெருமான் குணங்களையே அநுபவித்து நாம் அவன் அநுபவத்துக்கே பொருளாயிருத்தல்) மூன்று தத்வங்களை உணர்த்தும். இம்மூன்று கோட்பாடுகளும் எல்லா ஜீவர்களுக்கும் பொதுவானவை. “யத்ர ருஷயப் ப்ரதம ஜாயே புராணா” என்றதில் சொன்னாப்போலே  எப்போதும் எல்லா வேளைகளிலும் பரமபதத்தில்  எம்பெருமான் பற்றிய திவ்ய ஞானத்தால் சுத்த ஸத்வ அநுபவத்தில் “தில  தைலவத் தாரு வஹ்நிவத்” என்றபடி எள்ளுக்குள் எண்ணெயும் மரத்தினுள் அக்னியும் போல் ஆழ்ந்திருக்கக்கூடியவையான நித்யஸூரிகளைப் போலே  எல்லா ஆத்மாக்களுக்கும் தகுதி இருக்கும்போதும்,  “அநாதி மாயயா சுப்த:” என்றதில் சொன்னபடி காலங்காலமாக அறியாமை இருளில் மூழ்கி புண்ய பாப மாயைகளில் சிக்கி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர பிறவிச்சுழல்களில் மாறிமாறித் தவித்து, கர்ப்பம், ஜன்மம், பால்யம், யௌவனம், மூப்பு, மரணம், நரகம் என்று ஏழு நிலைகளிலும் முடிவற்ற துயர் அனுபவிக்கும்  கட்டுண்ட ஆத்மாக்கள் மேலும் மேலும் (தேஹமே ஆத்மா என மயங்கும்) தேஹாத்மபிமானம், (தனக்குத் தானே தலைவன் எனும்) ஸ்வாதந்த்ர்யம், தகுதி இல்லாதார்க்கு ஆட்பட்டு சேவகம் செய்யும் அந்ய சேஷத்வம்  எனக் கிடக்கும்பகவத் த்வேஷம் மாறி எம்பெருமான் பக்கல் அவன் க்ருபையால் ஜனன காலத்திலேயே அருளப்பட்டு ரஜஸ் தமஸ்ஸுகள் ஒழியப்பெற்று ஸத்வம் ஓங்கி முமுக்ஷு ஆகவேணும்.

இவ்வாறு யாதானும் ஒரு வழியில் எம்பெருமானை விட்டு நீங்குவதையே தன் முயற்சியாகக் கொண்டு  உழல்வோரிடையே எம்பெருமானின் ஜாயமான கடாக்ஷம் யாரோ சிலர்க்கு க்ருபா மாத்ரமாகக் கிட்டி, ரஜஸ்ஸும் தமஸ்ஸும் நீங்கி ஸத்வம் ஓங்குகிறது.

  • மோக்ஷம் விரும்புபவர்  தத்வம் (ஆத்மா எம்பெருமானுக்கு அடிமைப்பட்டது என்னும் உண்மை), ஹிதம் (வழி), புருஷார்த்தம் (எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்தல்) ஆகிய இவற்றை அறிய வேண்டும்.
  • இம்மூன்று தத்வங்களையும் சாஸ்த்ர மூலமாக அறியவேணுமாகில் வேத அப்யாசம் பிரதானம் ஆகிறது. “அநந்தா வை வேதா:” என்றபடி வேதங்களோ எண்ணிறந்தன. வேதத்தின் கோட்பாடுகளை நிர்ணயிக்க “ஸர்வ சாகாப் ப்ரத்யய ந்யாயம்” என்ற வேதத்தின் பல்வேறு பகுதிகளையும் அறிந்துகொள்ளுதல் எனும் கட்டாயம் உள்ளது. குறைந்த அறிவே உள்ளவர்களுக்கு இது மிகக் கடினம்.
  • வேதக் கோட்பாடுகளை அறிவது கடினம் என்பதால் வேதங்களை நன்கு கற்றறிந்து ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களைத் தந்த வ்யாஸர் போன்ற ருஷிகளின் துணையை நாட வேண்டும்.  அனால் இதுவும் ஸாராஸார விபாகமுணர்ந்தோர்க்கே இயலும்.
  • தானே க்ருபா மாத்ரமே காரணமாக ஆசார்ய பதத்தையும் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் சேதனர் உய்வுக்காகத் திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம் இவற்றை வெளியிட்டருளினான்.
  • எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் முழு வேதங்களையும் உணர்ந்த பராங்குச பரகாலாதி ஆழ்வார்கள் திராவிட வேதம் என்றும், வேதங்கள் என்றும் உபாங்கம் என்றும் போற்றப்படும் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டருளினர். ஆனால் அளவுபட்ட ஞானம் உடையோர் திவ்ய ப்ரபந்தங்களின் கருத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
  • பகவத் விஷயத்தில் ஆசையுள்ளோரும் ஞானக் குறைவினால் அவற்றை அறிய முடியாதபடி உள்ளதைக் கண்டு ஆழ்வார்களால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற, பரம காருணிகர்களான நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுத் தெளிந்தவராதலால் யாவரும் எளிதில் உணர இவற்றை ஸத் ஸம்ப்ரதாயார்த்தமாக பல க்ரந்தங்களில் எடுத்துரைத்தனர்.

ஆசார்ய பரம்பரை

  • அவர்களை அடியொற்றி, பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் நம்மனோர் உய்வுக்காக இந்த ரஹஸ்ய விஷயங்களை பல க்ரந்தங்களில் ஏடுபடுத்தி அருளினார். இக்கொள்கைகளின் சீர்மை கருதி முன்பிருந்த ஆசார்யர்கள் இவற்றைப் பொதுவில் உபதேசிக்காமல் சிஷ்யர்களுக்குத் தனிமையிலேயே உபதேசித்தனர். ஆனால் பிள்ளை லோகாசார்யரோ, லோகத்தாரின் துயர நிலை கண்டு பெரும் கருணையுடன், எம்பெருமானே ஸ்வப்ன முகேன நியமித்தருளியபடி க்ரந்த ரூபமாக்கி அதற்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று பேரும் இட்டு வைத்தார்.

முன்பே (காஞ்சி வரதராஜன் எனும்) பேரருளாளப் பெருமாள் தம் நிர்ஹேதுக க்ருபையால் மணற்பாக்கத்தைச் சேர்ந்த நம்பி எனும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர்க்குச் சில தத்வங்களை உபதேசித்து, கனவில், “மீதியை உமக்கு நாம் இரண்டாற்றின் (காவிரி) நடுவில் சொல்கிறோம்” என்ன, அவரும் ஸ்ரீரங்கம் வந்து பெரிய பெருமாளை வணங்கித் தாம் இன்னாரென்று அறிவியாதே பேரருளாளன் சாதித்தருளிய  விஷயங்களையே சிந்தித்திருந்தார்.

பிள்ளைலோகாசார்யர் காலக்ஷேப கோஷ்டி

ஒருநாள் அவர் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் தனித்திருந்தபோது, பகவத் ஸங்கல்பத்தால், அங்கு பிள்ளை லோகாசார்யர் தம் சிஷ்யர்களோடே வந்து அவர்களுக்குக் காலக்ஷேபமாக ரஹஸ்யார்த்தங்கள் ஸாதிக்க, மறைந்திருந்து கேட்ட நம்பிகள் தமக்கு முன்பு தேவப்பெருமாள் சொன்ன அதே வார்த்தைகளாய் இருக்க, வியந்து, வெளிப்பட்டு, அவரை வணங்கி, பிள்ளை லோகாசார்யரை, “அவரோ நீர்?” என்று வினவ, பிள்ளை லோகாசார்யரும்  தனியிடத்தில் காலக்ஷேபம் ஸாதிக்க வந்தவிடத்தில் இது நடக்க, “ஆம்!  செய்ய வேண்டுவது என்?” என்று வினவினார். நம்பிகளும் தேவப்பெருமாள் தமக்கு ஸ்வப்னத்தில் ஸாதித்தவைகளையும், இரண்டு அர்த்தங்களும் ஒன்றாய் இருப்பதையும் சொல்லி, இவற்றை க்ரந்தமாக்க வேண்டும் எனும் பெருமாள் நியமனத்தைக் கூற, பிள்ளை லோகாசார்யரும் மிகவும் உவந்து, “எம்பெருமான் திருவுள்ளம் அது ஆகில் அவசியம் செய்வோம்” என்று இசைந்தார். இச்சரித்ரம் எல்லோராலும் ப்ரசித்தமாக அறியப்பட்டதன்றோ?

ஓர் ஆபரணத்தில் பல உயர்ந்த கற்கள் அழுத்தப்பப்பட்டால் அதை ரத்ன பூஷணம் என்று சொல்வது போல் பூர்வாசார்யர்களின் பல ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே இந்நூல் அமைந்தபடியாலும் இதைப் பயில்வோர்க்கு ஞானப்ரகாசம் உண்டாகிறபடியாலும், இது ஸ்ரீவசன பூஷணம் என்றே சொல்லப்படுகிறது.

பிள்ளை லோகாசார்யர்மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்

இவ்வாறாக ஸ்ரீ வசன பூஷணத்துக்கு மாமுனிகளின் வ்யாக்யான அவதாரிகையின் முன்னுரைப் பகுதி அமைகின்றது. இந்த க்ரந்தமும் இதற்கு மாமுனிகளின் வ்யாக்யானமும் நமக்குக் கிடைத்த விலையுயர்ந்த நிதியாகும். இந்த திவ்ய க்ரந்தமும் இதற்கான மாமுனிகளின் வ்யாக்யானமும் ஓர் ஆசார்யரிடம் கேட்டு உணரத்தக்கவையாம். நாமும் நம் ஆசார்யர்களின் திருவடிகளை வணங்கி அவர்கள் அருள் பெறுவோம்.

இனி நாம் மாமுனிகளின் அவதாரிகையை அடுத்த கட்டுரையில் தொடர்ந்து ஸேவித்து அனுபவிப்போம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/11/aippasi-anubhavam-pillai-lokacharyar-sri-vachana-bhushanam-1/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment