ஐப்பசி மாத அநுபவம் – முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3

ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம்.

இப்போது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கில் முதலாழ்வார்களுடன் எம்பெருமானார் ஸம்பந்தம் கூறும் பாசுரரங்களும் அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானமும் ஸேவிக்கப் ப்ராப்தம்.

அமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியை நம் பூர்வர்கள் ப்ரபந்ந காயத்ரி என்று கொண்டாடுவர். எவ்வாறு த்ரைவர்ணிகர்க்கும் காயத்ரி மந்த்ரமோ அவ்வாறே ப்ரபந்நற்கு இந்த க்ரந்தம் என்றபடி. இது நித்யாநுஸந்தேயமாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவுளப்படி இது மதுரகவிகள் நம்மாழ்வாரைப் பற்றி அருளிய கண்ணி  நுண் சிறுத்தாம்பு போலே சரம பர்வ நிஷ்டையைக் குறிப்பதாய் திவ்ய ப்ரபந்தத்திலும் ஒரு பகுதி ஆயிற்று.

இதில் ஏழு பாசுரங்கள் அமுதனார் அருளிய அவதாரிகை எனவும், எட்டாம் பாசுரம் முதலே நூல் (க்ரந்தம்) எனவும் கூறுவர்.  இதில் எட்டு, ஒன்பது, பத்தாவது பாசுரங்களில் முதலாழ்வார்கள் பெருமையோடு எம்பெருமானார் மாஹாத்ம்யம் சொல்லப்பட்டிருப்பதை அநுபவிக்கலாம் .

புஷ்பவல்லித் தாயார், தேஹளீசப் பெருமாள் – திருக்கோவலூர்

பாசுரம் 8

வருத்தும் புறவிருள் மாற்ற எம் பொய்கைப்பிரான்
மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்தன்றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே இருத்தும்
பரமன் இராமாநுசன் எம் இறையவனே

 

இப்பாசுரத்துக்கு மாமுனிகள் விளக்கம்:  சாஸ்த்ர ஞானமற்றோர்  ஸ்ரீமந் நாராயணனே யாவற்றுக்கும் அந்தர்யாமி,  எல்லாத் தேவர்களும் அவன் ஆணைகளையே நடத்துகின்றனர் என்று அறியாமல் (அக்னி, வாயு போன்ற) ப்ரக்ருதி ஸம்பந்தங்களால் தமக்குத் துன்பங்கள் வருவதாய் எண்ணி வருந்துவர். ப்ரபந்நர்களின் தலைவரான பொய்கை ஆழ்வார் வேதாந்த ஸாரத்தை யாவரும் அறியலாம்படி எளிய தமிழில் அருளினார். திருக்கோவலூர் இடைக்கழியில் எம்பெருமானோடு ஏற்பட்ட நெருக்கத்தில் அவர், “வையம் தகளியா” என முதல் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே அவனது அளப்பரிய பெருமைக்கு  ஞான விளக்கேற்றினார். அத்தகைய பொய்கை ஆழ்வார் காட்டிய கொள்கைகளை தன் நெஞ்சில் பேரன்புடன் பேணும் எம்பெருமானாரே நம் தலைவர்.

பாசுரம் 9

இறைவனைக் காணும் இதயத்திருள்கெட
ஜ்ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத் திருவடி தாள்கள்
நெஞ்சத்துறையவைத்தாளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் மறையினைக் காத்து
இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

 

இப்பாசுரத்துக்கு மாமுனிகள் விளக்கம்: நம் நாதன் நாராயணன் என நாம் உணரவேண்டிய நம் மனம் அஞ்ஞான இருளில் கிடக்கிறது. நம் மனத்தில் பரஜ்ஞானம் என்கிற திருவிளக்கை ஏற்றி உய்விக்கும் நாதர் பூதத்தாழ்வாரே. வேதத்தை நம்பாத புறச்சமயிகள் (பாஹ்யர்), நம்பியும் விபரீதப் பொருள் கூறும் கோணல் பார்வையாளர்கள் (குத்ருஷ்டி) இவர்கள் நடுவே மறையின் பொருளை எம்பெருமானார் பூதத்தாழ்வார் அடியொற்றி விளக்கியதை அவர் அடியார்களும் கண்டு, பரப்பினர்.

பாசுரம் 10

மன்னிய பேரிருள் மாண்டபின்
கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும்
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசற்கன்பு பூண்டவர் தாள்
சென்னியிற் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே

 

இப்பாசுரத்துக்கு மாமுனிகள் காட்டும் விளக்கம்: பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய ஞான தீபத்தில், முதல் திருவந்தாதிப் பாசுரம் (89) “நீயும் திருமகளும்” என்றபடியே கொள்ளாத திருமாமகளோடுங்கூடவே எம்பெருமானின் திவ்ய ஸ்வரூபம் சேவித்து, கிருஷ்ணாவதாரத்தில் போலே திருக்கோவலூரிலே அடியார் கார்யம் செய்யப் பாரித்த நிலையைத் தீந்தமிழில், “திருக்  கண்டேன்” என்று பாடிய தமிழ்த் தலைவன் பேயாழ்வாரை எம்பெருமானார் போற்றுகிறார். இத்தகு ஆழ்வாரைப் போற்றுவோர் திருவடிகளைப் போற்றித் தங்கள் திருமுடிகளில் சூடும் மலராகக் கொள்கிறார்களோ, அத்தகைய இராமானுசரடியாரே மிகவும் உயர்ந்தவர்கள்.

திருவரங்கத்து அமுதனார் – ஸ்ரீரங்கம்

மாமுனிகள்ஆழ்வார் திருநகரி

ஆக முதலாழ்வார்களுக்கும் எம்பெருமானாருக்கும் உள்ள விசேஷ ஸம்பந்தத்தை மாமுனிகள் திவ்ய ஸூக்திகள் மூலம் அநுபவிக்கப் பெற்றோம். இப்படிப்பட்ட முதலாழ்வார்கள், எம்பெருமானார், அமுதனார் மற்றும் மாமுனிகள் திருவடிகளில் பணிந்து அவர்கள் அருள் பெறுவோமாக.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/11/aippasi-anubhavam-mudhalazhwargal-emperumanar/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment