ஐப்பசி மாத அநுபவம் – மாமுனிகள் செய்த பேருபகாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இதில் மாமுனிகள் மாஹாத்ம்யம் சிறிது பருகுவோம் “மதுரேண ஸமாபயேத்” என்றபடி ஐப்பசி அனுபவத்தை நாம் மாமுனிகளின் இனிமையோடு பூர்த்தி செய்கிறோம்.

மாமுனிகளே தம் ஆர்திப்ரபந்தத்தில் இருபத்தெட்டாம் பாசுரத்தில்  லோக உஜ்ஜீவனத்துக்காகத் தாம் போது போக்கினபடியைத் தெரிவித்தருளுகிறார்

பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்), திருவாய்மொழிப் பிள்ளை, மாமுனிகள்

பண்டு பல ஆரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்து அருளும் பல்கலைகள் தம்மைக் கண்டதெல்லாம் எழுதி
அவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில் போக நினைவு ஒன்றுமின்றிப் பொருந்தி இங்கே இருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே எழில்விசும்பே அன்றி இப்போது என்மனம் எண்ணாதே

முதல் இரண்டு அடிகளில் (முஸ்லிம் படையெடுப்பின் போது) அழிந்தும் தொலைந்தும்  போன பழைய பூர்வாசார்ய க்ரந்தங்களைத் தேடிப் பிடித்து எடுத்து, பின்புள்ளார் நலன் கருதிப் படியெடுத்து ஓலைச்சுவடிகளில் மீண்டும் எழுதி, தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளில் கேட்டுணர்ந்தும் தம் சிஷ்யர்களுக்குக் கற்பித்தும் இதுவே போது போக்காய் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

அடுத்த இரண்டு அடிகளில் மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் அநுக்ரஹத்தால் எம்பெருமானார் க்ருபை கிடைக்கும் வரை தாம் பரமபதம் அடைவது பற்றி நினைக்கவேயில்லை, அந்த க்ருபை கிடைத்தபின் பரமபத ப்ராப்தியை ஒருக்ஷணமும் மறக்கவேயில்லை என்கிறார்.

மாமுனிகளின் விசேஷ உபகாரத்தைப் போற்றும் வகையில் ஒரு பழம்பாடல் உண்டு:

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல் அந்தணர் வாழ் இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

 

செங்கமலம் மலரும் வயல் சூழ்ந்த திருவரங்கதில் உள்ள அரங்கரைப் போற்றி வாழும் நல்லோர்களின் தமிழ்  வேதம், மாசுமறுவற்ற பொன்போன்ற மாமுனிகள் வந்திலரேல் ஆற்றில் கரைத்த புளிபோல் வீணாகி இருக்கும் என்பது இதன் பொருள்..

மாமுனிகள் தம் விசாலமான ஸத் ஸம்ப்ரதாயப் புலமையை எல்லார்க்கும் பயன்படும்படி அனைத்து சாஸ்த்ரங்களையும் சேர்த்து மிகச் சுருக்கமாக வழங்கினார், மாமுனிகளின் ஔதார்யத்தையும் மஹாவித்வத்தையும் காட்டும் சிலவற்றைக் காண்போம்:

ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள்

  • யதிராஜ விம்சதி – திருவாய்மொழிப் பிள்ளை திருவாணைப்படி மாமுனிகள் தாம் கிருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தபோதே ஆழ்வார்திருநகரியில் பவிஷ்யதாசார்யன் சந்நிதி என்று ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானார் ஸந்நிதி பரிபாலனம் செய்து வந்தார். அப்போது யதிராஜ விம்சதி எனும் இருபது ச்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரத்தை எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்தார். யதிராஜரின் புனரவதாரரான மாமுனிகள் இதில் தம் விஷயமாகத் திருவாய்மொழிப்பிள்ளை  காட்டிய பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். இவர் யதிராஜ புனர் அவதாரர் எனில் இவர்தாமே யதிராஜரைக் கொண்டாடி க்ரந்தம் இடலாமோ எனில் இதற்கு நம் பூர்வர்கள் தரும் விளக்கமானது – எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே ஸ்ரீராமனாக வந்திருந்தபோது பெரிய பெருமாளைத் திருவாராதனம் பண்ணினாற்போல் இதுவும் நமக்கு எவ்வாறு ஆசார்யனை நாம் அணுகுவது, எம்பெருமானாரிடம் எப்படி மிக்க அன்போடிருக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவே.

எம்பெருமானார், மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்

  • தேவராஜ மங்களம் – அழகான மங்களாசாஸன க்ரந்தம் ஆன இதில் மாமுனிகள் காஞ்சி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்கிறார். மங்களாசாசனமே ஸத் ஸம்ப்ரதாயத்தில் உயர்ந்த விஷயம்.  மாமுனிகள் இதில் தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து, திருக்கச்சி நம்பி தேவப்பெருமாளுக்குச் செய்த கைங்கர்யத்தையும் இதில் ஸூசிப்பிக்கிறார். ஆசார்யர் மூலமே எம்பெருமானை அடைய முடியும் என இது காட்டுகிறது.

மாமுனிகள், எம்பெருமானார், திருக்கச்சி நம்பி, தேவப்பெருமாள்

தமிழ் ப்ரபந்தங்கள்

  • உபதேச ரத்தின மாலை – பிள்ளை லோகாசார்யர் மாஹாத்ம்யமும் ஸ்ரீவசன பூஷண மாஹாத்ம்யமும் காட்ட என்றே முக்யமாக எழுந்த இக்ரந்தத்தில் மாமுனிகள் மிக ஆச்சர்யமாக ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் அவதரித்த நாள்கள்/மாதங்கள்/ஸ்தலங்கள் இவற்றை விவரித்து, எம்பெருமானார்க்கு ஸம்ப்ரதாயத்திலுள்ள விசேஷஸ்தானமும், வ்யாக்யானங்கள் எல்லா அருளிச்செயல்களுக்கும் அமையவேண்டும் என்பதில் அவர் ஆவலும், அதனால் திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் அவதரித்த க்ரமமும் அவற்றில் ஈடு திவ்ய சாஸ்த்ரம் பரவி வழி வழியாய் வந்ததையும், ஸ்ரீவசனபூஷண மாஹாத்ம்யம், அதில் சொல்லப்பட்ட ஆசார்ய ப்ராதான்யம், பூர்வர் உபதேசத்தையே அநுஸரித்து அனுஷ்டிக்கை என்பனவும் சாதிக்கப்படுகின்றன. முடிவில் இவ்வழி நடப்பவர்கள் எம்பெருமானாருக்குப் பிரியமாக இருப்ப என்று காட்டப்பட்டுள்ளது

பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீரங்கம்

  • திருவாய்மொழி நூற்றந்தாதி – மாமுனிகளின் ப்ரபந்தங்களில் இது சிறந்த ஒன்று. அறிவாளர்கள் இதைத் தேன் போன்று இனிமையானது என்றே சொல்லுவர். திருவாய்மொழிக்கு வ்யாக்யானமான நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானத்திலேயே மூழ்கி இருந்ததால், மாமுனிகளால் இவ்வளவு எளிய முறையில் திருவாய்மொழியின் அர்த்தத்தை விளக்கமுடிந்தது. இக்காரணத்தினாலேயே பெரிய பெருமாள் தன் ஸந்நிதிக்கு முன்புள்ள சந்தனு மண்டபத்திலேயே மாமுனிகளை ஈடு வ்யாய்க்யானம் காலக்ஷேபம் செய்யுமாறு ஆணையிட்டார்.பிள்ளை லோகம் ஜீயர், இதன் வ்யாக்யானத்தில் “திருவாய்மொழி 1112 பாசுரங்களாய் விரிவாய் இருப்பதால் அதன் ஸாரத்தை எளிதில் க்ரஹிக்க மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி அருளிச்செய்து ஆழ்வார் திருவாக்குகளைக் கொண்டே மிகச் சுருக்கமாக நூறே பாசுரங்களில் ஆழ்வாரின் திருவாய்மொழி போலே அந்தாதித் தொடையிலேயே அமைத்தருளின அத்புத க்ரந்தம்” என்று விளக்கியுள்ளார். இதுபோல் வேறு க்ரந்தமே இல்லை என்பது மெய். பிள்ளை லோகம் ஜீயர் காட்டியருளும் சிறப்புகள்:
    • இராமானுச நூற்றந்தாதி எம்பெருமானார் பெருமையை அறிய உதவுவதுபோல் இது ஆழ்வார் பெருமையை அறிய உதவுகிறது.
    • ஆழ்வாரின் ஒவ்வொரு பதினோரு பாசுரமான ஒரு திருவாய்மொழிக்கு அப்பாசுரங்கள் அனைத்தையும் ஒரே வெண்பாவில் அதாவது பதினைந்து சொற்களில் மாமுனிகள் ஆக்கிவைத்தது உலக இலக்கிய அதிசயம்.
    • அவ்வொரு வெண்பா அந்தப் பதினோரு பாசுரங்களின் மையக் கருத்தை ஈடு வ்யாய்க்யானத்தில் உள்ள விஷயங்களைக் கொண்டு காட்டும், வ்யாக்யானங்களுக்கு அவதாரிகை போல் ஆகும்.
    • ஒவ்வொரு வெண்பாவிலும் ஆழ்வார்க்குள்ள வெவ்வேறு பெயர்கள் மாறன், சடகோபன், காரிமாறன் , வழுதிநாடன், பராங்குசன் என்பன போன்றவை கையாளப்பட்டுள்ளது ஓர் அத்புதம்.
    • இது வெண்பாவாக அந்தாதி முறையில் செய்யப்பட்டுள்ளது (வெண்பா எழுதுபவர்களுக்குச் சிரமம் ஆனால் படிப்பவர்களுக்கு எளிது).
நம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி
    • ஆர்த்தி ப்ரபந்தம் – மாமுனிகளின் எம்பெருமானார் பக்கலுள்ள பரமபக்தியின் தூய வெளிப்பாடு இது. அவரின் சரம காலத்தில் எழுதப்பட்டது இது. ஸத்ஸம்ப்ரதாயத்தில் இது ஒரு முக்யஸ்தானம் வகிக்கிறது. இதற்கான தம் ஆச்சர்யமான வ்யாக்யானத்தில் பிள்ளை லோகம் ஜீயர் “மாமுனிகள் தன் சரம பர்வ நிஷ்ட்டையை (ஆசார்யனே எல்லாம் என்று இருத்தல்) தன் கடைசி க்ரந்தமான இதில் தன் கடைசிக் காலத்தில் அழகாகக் காட்டியுள்ளார்” என்றார்.

எம்பெருமானார் – ஸ்ரீபெரும்பூதூர்

  • ஜீயர் படி திருவாராதனம் – எளிய முறையில் பகவதாராதனம் செய்யும் முறையை மாமுனிகள் இதில் காட்டியருளுகிறார்.பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒருபகுதியான  அவரவர் இல்லத்தில் எழுந்தருளியுள்ள க்ருஹார்ச்சை எம்பெருமானுக்குத் திருவாராதநம் ஸமர்பிக்கும் க்ரமம் இதில் விளக்கப்படுகிறது. எம்பெருமானார் ஸம்ஸ்க்ருத மொழியில் அருளிய நித்ய க்ரந்தம் பயில இயலாதோர்க்கு இது மாமுனிகள் செய்த பேருதவி.

வ்யாக்யானங்கள்

  • ஈடு வ்யாக்யான பிரமாணத் திரட்டு – நம் ஸத்ஸம்ப்ரதாயத்திற்குப் பெருநிதியான நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் மஹாஞானியான நம்பிள்ளை உதாஹரித்துள்ள பல்வேறு சாஸ்த்ர வாக்கியங்களின் ஆகரங்களைக் கண்டுபிடித்து அவற்றை முறையாகத் திரட்டியுள்ளார் மாமுனிகள்.

நம்பிள்ளை ஈடு காலக்ஷேப கோஷ்டி

  • பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் – பெரியவாச்சான் பிள்ளை சாதித்த வ்யாக்யானத்தில் கரையானால் லுப்தமான பாசுரங்களுக்கு மாமுனிகள் வ்யாக்யானமிட்டருளினார். பிள்ளை வ்யாக்யானம் எந்தப் பாசுரத்தில் எந்தப் பகுதியிலிருந்து கிடைக்கிறதோ சரியாக அந்த இடம் வரை மட்டுமே உரை இட்டருளின பாங்கு அரிது.
  • இராமானுச நூற்றந்தாதி – ப்ரபந்ந காயத்ரி எனப்போற்றப்படும் அமுதனாரால் அருளப்பட்டு ம்பெருமாளின் திருவுள்ளத்தால் நாலாயிரத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்ட இராமானுச நூற்றந்தாதிக்கு ரத்தினச் சுருக்கமான வ்யாக்யானம் சாதித்தார்.
  • ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம் – எம்பெருமானாரின் ப்ரிய சிஷ்யர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார். ஸம்ப்ரதாயார்த்தம் விளக்கி பகவதபசாரம் பாகவதபசாரம் இவற்றின் கேடுகள், பகவத் க்ருபை நிர்ஹேதுகம் என்பது, ஆசார்யாபிமானம் என்பவற்றை விளக்கும் க்ரந்தங்களுக்கு அந்தப் பாசுரங்களில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு மூலமான சாஸ்த்ர வசனங்கள்/ச்லோகங்களைத் தொகுத்தருளினார்.
  • முமுக்ஷுப்படி – பிள்ளை  லோகாசார்யரின் திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் இவற்றின் அர்த்தங்களை விளக்கும்  அத்யத்புதமான க்ரந்தத்துக்கு மிக விபுலமான வ்யாக்யானம். இதற்கு மாமுனிகளின் முன்னுரை – https://granthams.koyil.org/2017/12/10/aippasi-anubhavam-pillai-lokacharyar-mumukshuppadi-tamil/ .
  • தத்வ த்ரயம் – மோக்ஷம் விரும்பும் முமுக்ஷு அறிய வேண்டிய சித்த அசித் ஈச்வர தத்துவங்களை விளக்கும் குட்டி பாஷ்யம் என்றே பேர் பெற்ற வேதாந்த க்ரந்தத்துக்கு விபுலமான உரை. இதற்கு மாமுனிகளின் முன்னுரை – https://granthams.koyil.org/2017/09/20/aippasi-anubhavam-pillai-lokacharyar-tattva-trayam-tamil/ .
  • ஸ்ரீவசன பூஷணம் – பிள்ளை லோகாசார்யரின் மிகச் சிறந்த ஈடற்ற சாஸ்த்ரமான ஸ்ரீவசன பூஷணத்துக்கு நெஞ்சுருக்கும் வண்ணமான மிக ஆச்சர்யமான வ்யாக்யானம். ஆசார்ய அபிமானம் என்னும் ஒப்பற்ற விஷயத்தை விளக்கும் அத்புத க்ரந்தம் இது. ஆழ்வார்/ஆசார்யர்கள் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு செய்யப் பட்டது. இதற்கு மாமுனிகளின் முன்னுரை –
  • ஆசார்ய ஹ்ருதயம் – பிள்ளை லோகாசார்யர் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் சாதித்த அத்புத க்ரந்தம் இது. ஆழ்வார்கள் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு செய்யப் பட்டது, நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை வெளியிடக்கூடியது. இந்த க்ரந்தத்தின் ஒவ்வொரு வார்த்தையும் விலையுயர்ந்தது, ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்தது. மாமுனிகள் இதன் ஆழ்பொருட்களை மிக அழகாகத் தன் வ்யாக்யானத்தில் காட்டி அருளியுள்ளார்.

மாமுனிகள் தம் மிக வயோதிக தசையில் திருமேனி தளர்ந்து இருந்தபோது நாயனார் நூலுக்கு உரை எழுதா நிற்க, ஸிஷ்யர்கள் இவ்வளவு பரிச்ரமத்தோடு என் எழுதவேணும் என்று வினவ, அவர், பெருங்கருணையோடு, “உம் புத்ர பௌத்ரர்களான  பின்புள்ளார் இந்த க்ரந்தத்தை நன்கு அனுபவிக்க வேண்டும் என்பதால் அடியேன் ச்ரமம் ஒருபொருளன்று” என்றாராம். இப்படிப்பட்ட அவரின் பெரும் கருணை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது.

மாமுனிகள் வைபவம் பல்படிப்பட்டது,  வாசா மகோசரம் (வாக்குக்கு எட்டாதது). அவர் பன்முக ஆற்றல் கொண்டவராதலால். நாம் இங்கே சில க்ரந்த ரசனைகள் பற்றி மட்டுமே சிறிது கண்டோம்.

தைத்திரீய உபநிஷத்தில் பகவான் கல்யாண குணங்கள் அனந்தம், அவன் தரும் ஆனந்தமும் ஆனந்தம் முடிவற்றது என்றாற்போல் மாமுனிகள் வைபவமும் முடிவற்றது எனினும் சிறிது கண்டோம் ஸமுத்ரக் கரை நின்று ஒருசில அலைகள் காண்பதுபோலே.

அவரது ஸம்ப்ரதாயப் பங்களிப்பு அளவிடற்பாலதன்று. அவற்றுள் சிலவற்றை அனுபவித்தோம். அவர் திருவடி பணிந்து அவர் அருள் பெறுவோமாக.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/11/aippasi-anubhavam-mamunigal/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment