ஸ்ரீ சடகோபன் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

நம்பெருமாள், பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள்

நம்பிள்ளைக்குப் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் ஸம்ப்ரதாயத்தை ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் உயரத்துக்குக் கொண்டு சென்றார் . அப்போது உலூக் கானும் அவன் படைகளும் திருவரங்கத்தைத் தாக்கி, செல்வம் முழுவதையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் திருவரங்கத்தை நெருங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் அந்த ஆக்ரமிப்பைத் தவிர்க்க நம்பெருமாளைத் தெற்கு நோக்கி எழுந்தருளப் பண்ணத் திருவுள்ளம் பற்றினார். பெரிய பெருமாளுக்குக் காப்பாகக் கல்திரை ஒன்று ஏற்படுத்தி மற்றொரு உத்சவ விக்ரஹமும் ப்ரதிஷ்டிப்பித்து நம்பெருமாளோடு நாச்சியார்களையும் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்கள் சிலரோடு தெற்கு நோக்கிக் கிளம்பினார். இவ்வாறு செல்லும்போது வழியில் ஜ்யோதிஷ்குடி என்னும் இடத்தில் உலகாசிரியர் தம் வயோதிக திருமேனி மெலிவுகளால் தாம் திருநாடு ஏகத் திருவுள்ளம் கொண்டார். இவ்விடத்தில்தான் அவர் திருமலை ஆழ்வாரைத் (ஸ்ரீசைலேசர்) தம் சிஷ்யராக ஏற்று, சிறுவரான திருமலை ஆழ்வாரை ஆசீர்வதித்து அவரை ஸம்ப்ரதாயத்தின் அடுத்த ப்ரவர்த்தகராக நியமித்து அருளினார். பின்னர் நம்பெருமாள் திருமாலிருஞ்சோலை , கோழிக்கோடு, திருநாராயணபுரம், சென்று திருமலை அடைந்து அங்கேயே பல ஆண்டுகள் இருந்தார். அதன்பின், ஆற்றல் வாய்ந்த மன்னர்கள் வந்து திருவரங்கத்திலிருந்து ஆக்ரமிப்பாளரை விரட்டியடித்தபின் நம்பெருமாள் திருவரங்கம் மீண்டார். அதற்குப்பிறகு மாமுனிகள் திருவரங்கம் எழுந்தருளி பழைய பெருமைகளை மீட்டுத் தந்தார். அக்காலத்தில் திருவரங்கத்தில் வாழப்பெற்றவர்கள் மஹா பாக்கியசாலிகள் என்பதில் ஐயமேயில்லை, ஏனெனில் பரம காருணிகரான மாமுனிகள் தலைமையில் ஸம்ப்ரதாயம் எல்லாவகைகளிலும் பெரும்பொலிவு பெற்று வளர்ந்த நல்லடிக்காலம் அதுவே.

இந்தப் பின்னணியில் ஸ்ரீ சடகோபரான நம்மாழ்வாரின் பயண விவரங்களைப் பார்ப்போம்:

உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள், நம்மாழ்வார்

நம்பெருமாள் கோழிக்கோட்டில் எழுந்தருளி இருந்தபோது அருகிலிருந்த திவ்யதேசத்து எம்பெருமான்களும் நம்மாழ்வாரும் நம்பெருமாளுடன்
வந்தனர். நம்மாழ்வாரை நம்பெருமாள் பெருமகிழ்ச்சியோடு கண்டு அவரைத் தம்மோடும் நாச்சிமாரோடும் ஒரே ஆசனத்தில் எழுந்தருளப் பண்ண அர்ச்சகருக்கு நியமித்தார்.

நம்பெருமாள் ஆழ்வாருக்குத் தமது முத்துச் சட்டையையும் பிற பஹுமானங்களையும் உவந்தளித்தார். பெருமாள் ஆழ்வாரோடு இருப்பதை பெரிதும் உகந்தார். பின் அவர்கள் கோழிக்கோட்டை விட்டு நீங்கி தேனைக்கீடாம்பை (திருக்கணாம்பி) சென்று சேர்ந்தனர். அங்கிருந்து புறப்படும்போது நம்பெருமாள் ஆழ்வாரை அங்கேயே இருந்துவிட்டு, அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்குப்போகும்படி ஆணையிட்டார்.

ஆழ்வாரின் கைங்கர்யபரர்கள் அவரை இன்னமும் கேரளாவின் உட்பகுதிக்குத் தென்மேற்குப் பகுதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருள பண்ணி சிறிது தூரம் சென்றபின் ஒரு மலைத் தாழ்வரையில் ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டனர். இது நடந்தபின் கொள்ளையர் வந்து இந்த கைங்கர்யபரர்களைக் தாக்கி கொள்ளையடித்து சென்றனர்.

இக்கைங்கர்யபரர்களில் தோழப்பர் என்பார் ஒருவர் இருந்தார். இவர் ஆழ்வாரிடம் பேரன்பு கொண்டவர். மற்றவர்கள் தப்பி சென்றபின் தோழப்பர் திருமலை ஆழ்வாரிடம் சென்று (அப்போது அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால்) அவரிடம் ஆழ்வார் செய்திகளைக் கூறினார். உடனே திருமலை ஆழவார் கேரள அரசனுக்குத் தகவல் தந்து, கேரளா மன்னன் அரசு மரியாதைகளோடு தோழப்பரை வரவேற்று அவரோடு சில சைன்யங்களையும் அனுப்பினான். தோழப்பர் கீழே பள்ளத்தில் ஒளித்துப் பாதுகாக்கப் பட்ட ஆழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ண இறங்கினார். இந்த உயர்ந்த குணத்தாலே தோழப்பர் ஆழ்வாரோடு ஒக்க மரியாதை செய்யப்பட வேண்டும். ஆழ்வார் தோழப்பர் என்னப்பட வேண்டும். தினமும் வகுளாபரண பட்டரோடு திருமஞ்சனம் காண வேணும். தோழப்பர் ஆழ்வார் தோழப்பர் என்று அழைக்கப் படுவதோடு அவர்க்கு ஆழ்வார் திருமஞ்சனக் காலங்களில் அருளப்பாடு மரியாதையும் ஏற்படுத்தப் பட்டது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மரப் பலகையில் அமர்ந்து கீழே இறங்க, மலை முகட்டில் அடியார்கள் அவரை ஆழ்வாரோடு மேலே தூக்க நின்றார்கள். தோழப்பர் ஆழ்வார் அங்கு ஆழ்வார் இருந்த பெட்டியைக் கண்டு, அங்கு தான் கண்டதை ஒரு ஓலையில் எழுதி, அப்பெட்டியையும் ஓலையையும் வைத்து மேலே அனுப்பினார். பின்பு இரண்டாம் முறை சங்கிலியைக் கீழே இறக்க, தான் அதில் ஏறி அமர, பலகை மேலே ஏறும்போது துரதிர்ஷ்டவசமாக அந்தச் சங்கிலி அறுபட்டு தோழப்பர் அப்படியே அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து பரமபதித்தார். தோழப்பரின் திருமகனார் இது கண்டு மிகவும் கலங்கி நிற்க, அங்கிருந்த கைங்கர்யபரர்கள் அவரைத் தேற்றி, “இனி நீர் ஆழ்வாரின் ப்ரிய புத்ரர் ஆவீர், உமது தந்தையாருக்கு ஏற்பட்ட அனைத்து கௌரவங்களையும் பெறுவீர்” என்றனர். ஆழ்வார் முந்திரிப்பு எனும் இடம் சேர்ந்து அவர்க்கு ஸம்ப்ரோக்ஷணைகள் நடந்து ஐந்து நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார்.

ஆழ்வாரின் மாஹாத்ம்யம் அறிந்து கள்ளர்கள் தாம் கொள்ளை கொண்டதைத் திரும்பவும் சமர்பித்தார்கள். கைங்கர்யபரர்களும் திரும்ப வந்தபின் ஆழ்வார் திருக்கணாம்பி சேர்ந்து சில நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார். திருமஞ்சனம், திருவாராதனம், உத்ஸவாதிகள் மிக விமரிசையாக நடந்தன. திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருவட்டாறு போன்ற திவ்ய தேச நம்பூதிரிகளும் போத்திகளும் அடிக்கடி வந்து சேவித்து ஆழ்வாரைப் பிரிய மனமில்லாதவர் ஆயினர்.

இவ்வளவில் திருமலை ஆழ்வார் பிள்ளை லோகாசார்யர் மங்களாசாசனத்தில், கூர குலோத்தம தாசர் ஆசியால் ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று இருக்கும்போது ஆழ்வார் திருக்கணாம்பியில் இருப்பது அறிந்து அவரை சேவிக்கவும் ஆழ்வார் திருநகரிக்கு மீட்டு வரவும் மிக்க ஆசை உள்ளவரானார்.

ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை

 

திருநகரி காடு மண்டியது கண்டு வருந்தி ஆழ்வார் கிளம்பியபோது பலரும் ஊரை விட்டு வெளியேறியதால் இவரே காடு திருத்தி நாடாக்கும் பணியும் மேற்கொண்டு ஆழ்வார் திருநகரி ஊர், கோயில் சுற்றுப்புறங்கள் யாவும் நன்கு நிர்மாணம் செய்து காடு வெட்டி குரு என்று புகழ் பெற்றார். பிறகு ஆழ்வாரை ஆழ்வார் திருநகரிக்கு மீண்டும் எழுந்தருளப் பண்ணி திருப்புளி அடியில் அவர் சந்நிதி ஏற்படுத்தி ஆழ்வாராலேயே சடகோப தாசர் என்று அன்போடு அழைக்கப் பட்டார். திருமலை ஆழ்வாரும் அதை ஏற்று அன்போடு திருவாய்மொழிப் பிள்ளை எனும் பெயரும் பெற்றார். மேலும் திருநகரியின் மேற்குப் பகுதியில் பவிஷ்யதாசார்யன் ஸன்னிதியை நிர்மாணித்து, அதைச் சுற்றி ராமானுஜ சதுர் வேதி மங்கலத்தையும் (நால் வேத விற்ப்பன்னர்கள் கொண்ட திருவீதிகள்) நிர்மாணித்தார்.

பவிஷ்யதாசார்யன், திருவாய்மொழிப் பிள்ளை, மாமுனிகள்

இந்த பவிஷ்யதாசார்யன் விக்ராஹமே மதுரகவி ஆழ்வார் தாமரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய பொது கிடைத்த எம்பெருமானார் விக்ரஹமாகும். அவர் எதிர் பார்த்தது உபதேச முத்திரையோடு ஆழ்வார் விக்ரஹமாதலால் அஞ்சலி  முத்திரையோடு கிடைத்த திருவுருவம் வியப்பளிக்க, ஆழ்வார் சனாதன தர்மத்தை மீண்டும் நிலை நாட்ட வரப்போகும் ஆசார்யன் இராமானுசன் இவரே என அறுதியிட்டார். ஆழ்வார் தம் திருநகரியை விட்டு வெளியேறியபோது இவ்விக்கிரஹம் திருப்புளியாழ்வாரடியில் மண்ணில் புதையுண்டது, திருவாய்மொழிப் பிள்ளையாலே புனருத்தாரணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது..

ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று திருவாய்மொழிப் பிள்ளை மீண்டும் ஊர் திருத்தியபின் ஆழ்வார் புனர் பிரவேசம் செய்தார்.

இவ்வாறாக நம்மாழ்வார் கோழிக்கோடு சென்று திருநகரி திரும்பி, திருவாய்மொழிப் பிள்ளையின் அரிய பெரிய கைங்கர்யத்தால் சம்ப்ரதாயம் பாக்கியம் பெற்றது.

ஆழ்வார் எம்பெருமானார் திருவாய் மொழிப்பிள்ளை ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/05/nammazhwars-divine-journey/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment