ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
தொடர்ந்து ஸ்ரீபாஷ்யத்தின் மங்கள ச்லோகத்துக்கு அருளிச்செயல் எவ்வாறு அடியானது என்று பார்ப்போம்.
வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே
இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர்வாழிகள்/ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்
இது எம்பெருமானுக்கேற்பட்ட வசனம், வெவ்வேறு வகைப்பட்ட ஆத்மாக்களை ரக்ஷிப்பதொன்றே லக்ஷ்யமானவன் என்று பொருள்படும்.
ஆயினும் இது இராமானுசர் கருதிய பொருளன்று. ச்ருதப்ரகாசிகா பட்டரும் வேதாந்ததேசிகரும் கூட வேறு பொருளே கருதினார்கள்.
வெவ்வேறு பொருள்களை அறிய, ஸம்ஸ்க்ருதத்தில் இச்சொற்களின் பொருளைப்பார்ப்போம். ”வ்ராத” எனும் சொல் ஸமூஹ, பரிஷத் எனும் சொற்களுக்கு ஈடானது. இது ஒரு குழு அல்லது ஜாதியைக் குறிக்கும். உதாரணமாக, ப்ராஹ்மண ஸமூஹம். கூட்டமான தொகுதியான பிராமணர்களைக் குறிக்கும். இக்கூட்டுச்சொல் ஷஷ்டி தத்புருஷ ஸமாஸத்தால் தீர்க்கப்படுகிறது. ராஜ பரிஷத் என இன்னொரு சொல் பார்ப்போம். ஸமூஹம், பரிஷத் இரு சொற்களும் ஒரே பொருளுடையனவாயினும், இச்சொல்லின் பொருள் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு அரசர்களின் கூட்டம் என்றன்று பொருள், மந்திரிகள் மக்கள் போன்றோர் இருக்க மன்னன் தலைமையில் உள்ள சபை என்று பொருள். இதுவும் ஷஷ்டி புருஷ ஸமாஸமே ஆயினும் ப்ராஹ்மண ஸமூஹம் போன்றதன்று.
ஆகவே இத்தகு சொற்கள் ஒரு ஸமூஹம், கூட்டம் என்பதனை மட்டுமின்றி, அரசன், அமைச்சர், குடிகள் எனத் தொடர்புடையனவையும் காட்டவல்லன எனத் தெளியலாம்.
ஆகவே, வ்ராத என்பது அடியார் குழாங்களை மட்டுமல்லாது அவரோடு தொடர்புள்ள ஸம்பந்திகளையும் காட்டும். விவித எனும் அடைமொழி இதைக்காட்டுகிறது. அவ்வடியார்களோடு தொடர்புள்ளோர் வெவ்வேறு குணங்களும், நிலைகளும், பிரிவுகளும் ஆனவர்களாய் இருக்கலாகும். எனினும் வேறுபாடுகள் கருதாது எம்பெருமான் அவர்கள் யாவரையும் ரக்ஷிக்கிறான்.
இதை நிரூபிக்கும் பிரமாணமாவது:
பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்
ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால் அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது.
இந்த ச்லோகத்தில் சிறப்பு ஏதேன்னில், மனிதன் எனும் சொல் விலங்கு, பறவை என்பவற்றின் இடையில் வருகிறது. ஆகவே மனிதன் எனத் தனி இயல்புகள் விசேஷமல்ல ஆனால் ஸம்பந்தமே முக்யம் என்பது. மேலும் இவ்வுயிரை ரட்சிக்கும் எம்பெருமான் இவன் மனிதன் மேதாவி என்றோ, இவ்விலங்கு இவ்வியல்பினது என்றோ பாராது ஸம்பந்தம் ஒன்றையே நோக்கி ரக்ஷிக்கிறான். ஏவ என்னும் சொல் வேறு எதுவும் முக்கியமில்லை எனக்காட்டும்.
இவ்வர்த்தம் மிக முக்கியம் ஏன் எனில், இது எம்பெருமானின் மிக முக்கியமான ஒரு குண விசேஷங்காட்டுமதாகும், அதாவது தன்னடியார்களையும் கடந்து அவர்தம் ஸம்பந்திகளுக்கும் அன்பு காட்டுபவன் என்பது. இவ்வர்த்தம் கொள்ளாவிடில் விவித வ்ராத எனும்சொற்கள் பொருளற்றுப்போம்.
இவ்வர்த்தமே எம்பெருமானார் விரும்பியது, அதவே ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றியது என்பதால். இவ்வர்த்தத்தை ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11), “எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.
ஸ்ரீநிவாச
ப்ரம்ம சூத்ரங்களில் எங்குமே லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம். ஆகிலும் எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத்தோற்றும் முதல் ச்லோகத்திலேயே எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார். இது ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ச்ரிய:பதி என்றே கண்டதாலும், திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.
பக்தி ரூபா சேமுஷீ பவது
ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை. ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது, ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.
ஒரே ஒரு சொல்லில் எம்பெருமானார் ஆழ்வார்களின் நெறியைப் பின் பற்றி விசிஷ்டாத்வைதத்தின் உயிர் நாடியான தத்த்வத்தைக் காட்டினாராயிற்று. நம்மைச்சுற்றி ஆன்மீக உலகம் ஞானமார்க்கம் என்றும் பக்திமார்க்கம் என்றும் இரண்டு பிரிவுகளாயுள்ளது. வரலாற்று ரீதியில் இப்பிரிவுகளிடையே உள்ள பேதங்கள் நன்கு காட்டப்பட்டுள்ளன. எம்பெருமானாரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம் பலபோதுகளில் பக்திமார்கமே என்று தவறாகக் காட்டப்படுகிறது. இப்பகுப்புகளில் உள்ள குழப்பம் யாதெனில் பக்திமார்கமென்பது வறண்ட, தவறக் கூடிய ஞான மார்கத்தில் வேறுபட்டது, ஞான மார்க்கம் பக்தி எனும் வெறும் உணர்வுகளில் வேறுபட்டது என்றே கருத்து நிலவகிறது.
விசிஷ்டாத்வைதம் ஞானம் பக்தி இரண்டும் முரண்பட்ட கருத்துகள்/வழிகள் எனக் காண்பதில்லை, ஒன்றிற்கு மற்றது படிக்கட்டு என்றும் காண்பதில்லை, மாறாக இரண்டும் ஒன்றே என்கின்றது. ஆத்ம விஷயங்களில் ஞானம் பக்தி ரூபமானது, வேறு வடிவமற்றது. ஆகவே ஞானம் என்பது வறண்ட வெறும் கோட்பாடுகளின் தொகுப்போ அல்லது பக்தி என்பது வெறும் உணர்வுகளின் குழம்போ அன்று. நிரதிசய நிரவதிக கல்யாணகுணங்களையுடைய ச்ரிய:பதி எம்பெருமான் தேஜோரூபமான ஸர்வாவய ஸௌந்தர்யம் உடையனாய் கமலக்கண்களும் நம் மனம் கவர் தோற்றமும் இயல்பும் உடையனாய் எல்லாரையும் ஆட்கொள்ளும் அன்புக்கிடமாய் நிர்ஹேதுக க்ருபாளுவானவன் எனும் ஞானமே பக்தியின் வடிவம்.
நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒருவிஷயம் பக்தி என்பது பக்குவப் படாத ஞான ஹீனர்களுக்கான வழி என்பது (ஒருவேளை தமக்கு ஞானமுண்டு எனும் மயக்கத்தால் இப்படி ஒரு கர்வம் வரக்கூடும்!). இது அவர்கள் தங்களின் விசேஷத்தை முன்னிறுத்துவதற்காகக் கூறும் கருத்து மட்டுமே என்பதையும் இதற்கு சாஸ்த்ரத்தில் ப்ரமாணம் ஏதும் இல்லை என்பதையும் நாம் திண்ணமாகக் கூறலாம்.
ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” . அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி. ஆழ்வார் எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது, பக்தி என்பது எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார். ஆழ்வார் காட்டிய நெறியை எம்பெருமானார் நன்கு பின்பற்றினார். அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/19/dramidopanishat-prabhava-sarvasvam-21-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org