ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதத்தின் உட்பொருளை அறிதல்
அத்வைத விமர்சம்
பத்தி 35
ப்ரஹ்மத்தின் உண்மை இயல்பு தானே தெரிவதற்கு இருப்பின் (ஸ்வயம் ப்ரகாசம்), அதில் வேறொரு இயல்பு ஏறிட முடியாது. உதாஹரணமாக, ஒரு கயிறு தெளிவாகப் பார்க்கப் படும்போது, அதைப் பாம்பு என்று யாரும் எண்ண மாட்டார்கள் அன்றோ.
அத்வைதியான நீங்களும் இதற்கு இசைகிறீர்கள். ஆகையால், அவித்யை என்று ஒன்றைக் கொண்டு, இதனால் ப்ரஹ்மம் மறைக்கப் படுகிறது என்கிறீர்கள்.
அவித்யையால் மறைக்கப்பட்ட ப்ரஹ்மத்தின் அம்சத்தையே சாஸ்திரம் வெளியிடவேண்டும். இல்லாவிடில், சாஸ்திரத்தால் அஞ்ஞானத்தைப் போக்கவே முடியாது.
கயிறு – பாம்பு உதாரணத்தில் கயிற்றின் சில பண்புகள் “பாம்பு” என்கிற ப்ரமத்தைக் கடந்து தோற்றுவதாலேயே ”இது பாம்பு” என்கிற எண்ணம் நீங்குகிறது. ப்ரம்ஹத்தின் ஏதோ ஒரு இயல்பு சாஸ்திரத்தால் உணர்த்தப்பட்டு அதனால் ப்ரமம் விலகுகிறது என்று கொண்டால், ப்ரஹ்மம் ஸவிசேஷம் (குணங்கள் உடையது) என்று தேறிவிடும். ப்ரமாணத்தில் உறுதி உடையாருக்கு குணங்களற்ற பொருளை நிரூபிக்க எந்தப் பிரமாணமும் கிடைக்காது.
கருத்துரைகள்
உலகின் அனுபவத்தை விளக்க அத்வைதி அத்யாஸம் அதாவது ஏறிடுதல் எனும் உத்தியைக் கைக்கொள்கிறார். இவ்வுலகம் ப்ரஹ்மத்தின் மீது ஏறிடப்பட்டுள்ள ஒரு மாயை. தானே ஸ்வயம் ப்ரகாசமாய் உள்ள ப்ரஹ்மத்தை மறைக்க வேறொரு தத்துவம் தேவைப்படுகிறது. இதற்கே அத்வைதி அவித்யை அல்லது அறியாமையை உபயோகிக்கிறார்.
வேத ஞானம் இந்த அறியாமை/மாயையை நீக்குவதால் வேதம் ப்ரஹ்மத்தின் ஏதோ சில இயல்புகளையாவது உணர்த்தவேண்டும். அவ்வாறு உணர்த்தியே அது அறியாமையை விலக்க வேண்டும்.
அத்வைதி அடிக்கடி கயிறு – பாம்பு உதாரணத்தை எடுக்கிறார். கயிறு பற்றிய மாயை அதன் இயல்பை அறிவதால் ஒழிக்கப் படமுடியும். அதேபோல் அஞ்ஞானத்தால் வரும் அறியாமையை வேதம் விலக்கி ப்ரஹ்மத்தை உணர வைக்கமுடியும்.
வேதம் ஒரே ஓர் இயல்பை வெளியிடுமாயினும் ப்ரஹ்மம் ஸவிசேஷம் என்றே தேறும். அதன் சில அல்லது எல்லா இயல்புகளும் ஆத்மாக்களுக்குப் புலப்படுவதில்லை. வேத ஞானமே இந்த அறியாமைத் திரையைக் கிழிக்கிறது..
பத்தி 36
நிர்ணயிக்க முடியாத நோக்கில்கூட (நிர்விகல்ப ப்ரத்யக்ஷம்) இயல்புகள் உள்ள பொருளே உணரப்படும். இல்லாவிடில், ஸவிகல்ப ப்ரத்யக்ஷம் – நிர்ணயமுள்ள நோக்கு – என்று ஒன்று இருக்கவே முடியாது. இயல்புகளின் ஒற்றுமையை உணர்வதே நிர்ணயமுள்ள நோக்கு/பார்வை ஆகும். பசுத்தன்மை என்பது பல பசுக்களில் உள்ள ஒரே மாதிரியான இயல்புகளின் கூட்டறிவே ஆகும். இந்த ஒற்றுமையே பசுக்கள் பற்றிய நம் பார்வையை நிர்ணயிக்கிறது. இதை முதலில் உணர முடியாவிடில், பிறகு நமக்கு ஏற்படும் பார்வை/ஞானத்தை முதலில் வந்ததோடு ஒப்பிட முடியாது.
கருத்துகள்
ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிக்க முடியாத பார்வையே முதல் பார்வை ஆகும். பிறகு, பார்க்கப் பார்க்க நமக்கு அதன் இயல்புகள் புலப்படுகின்றன. எந்த இயல்பும், குணமும் முதலில் புலப்படாவிடில் நமக்கு அந்தப் பொருளின் இயல்பு எப்போதும் தெரியாமல் இருந்துவிடும். முதலில் அவை உணரப்படுவதாலேயே பின்னர் இவ்வியல்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பத்தி 37
இதில், ஒரே பொருளில் வேற்றுமை, ஒற்றுமை இரண்டும் பொருத்தப் படுவது மறுதலிக்கப் படுகிறது. இயல்பு/பண்பு என்பது ஒரு பொருளின் ஒரு நிலை/பிரகாரம் என்பதால் அது பொருளிலிருந்து வேறுபட்டது. ஆயினும், அதே காரணத்தால் அது தனியாய் இருக்கவும் முடியாது, அறியவும் முடியாது.
கருத்துகள்
இதே வாதங்களால் நம்மால் பேதாபேத வாதிகளையும் மறுதலிக்க முடியும். ப்ரஹ்மத்தில் வித்யாசம், ஒற்றுமை இரண்டையும் ஸமன்வயப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் முற்றிலும் மாறுபட்ட இரு இயல்புகளை ப்ரஹ்மத்தின்மீது சுமத்துகிறார்கள்.
உலகமும் ஜீவர்களும் ப்ரஹ்மத்தின் இயல்புகள் (ப்ரகாரம்). இயல்பு என்பது வஸ்துவிலிருந்து கண்டிப்பாக வேறுபட்டது. உதாரணமாக, சிவப்பு நிறம் என்பது ரோசாப்பூ ஆகாது. ஆனால், இந்த நிறத்தைத் தனியாகப் பார்க்க முடியாது. அது தனியாய் இருக்க முடியாது. ரோசா போன்ற ஒன்றோடு அல்லாமல் சிவப்பைத் தனியே பார்க்க முடியாது. ஆகவே பண்பு, வஸ்து இரண்டும் தனியானவை. பண்பு/இயல்பு, வஸ்து இரண்டும் பிரிக்க முடியாதவை (அப்ருதக் ஸித்தி). ஆகவே பொருள்கள் ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை. இது புரிந்தாலே நம்மால் ப்ரஹ்மத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பத்தி 38
ப்ரஹ்மத்தை மறைக்கும் குணங்களை வேதம் மறுக்கிறது, ப்ரஹ்மத்தை குணமற்றதாகக் காட்டுகிறது என்பாரேல், “அந்த வேத வாக்கியங்கள் எவை?” என்றே கேட்க வேண்டும்.
அத்வைதி சொல்வார்: “வாசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்” என்று வேதம் சொல்கிறது. களி மண்ணே உண்மை. பெயர், உருவம், எல்லாம் உண்மை அல்ல. இவை மொழியால் வருபவை. இந்த உதாரணத்தால் ப்ரஹ்மம் மட்டுமே உண்மை, குணங்கள் யாவும் மறுக்கப் படுகின்றன,
இதற்கு விடை – இது அப்படின்று. வேதம் ஒன்றை அறிவதால் எல்லாம் அறியப் பட்டதாகும் என்று உறுதி தந்தது. இதிலிருந்து, “ஒன்றை அறிவதால் பிறவற்றைப் பற்றிய அறிவு எப்படி ஏற்படும்?” எனும் கேள்வி எழுகிறது. இந்த விஷயமே வேதத்தால் விளக்கப் படுகிறது. அது எந்த குணத்தையும் மறுக்கவில்லை, அதே களிமண் தன் நிலை, உபயோகம் இவற்றைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது. எல்லாவற்றிலும் பொருள் ஒன்றே. ஆகவேதான், பொருளின் நிலை, இயல்பு பற்றி அறிவது அதன் முழு அறிவைத்தரும். நாம் சொன்னதற்கு வேதத்தில் எவ்வித மறுப்பும் இல்லை.
பத்தி 39
“ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிய முடியும்” எனும் வேத லக்ஷ்யம் ப்ரஹ்மம் தவிர எல்லாமே மாயை/பொய் என்றால், களிமண் பற்றிய உதாரணமே தவறாகும்.
ச்வேதகேது கயிறு – பாம்பு மாயையை முன்பே அறிந்து, அவன் பானை, பாத்திரம் ஆகியவற்றைக் களிமண்ணின் மாயை என அறிவான் என நாம் ஊகிக்க முடியாது. இது மிகவும் இயல்பற்ற அறிதல் ஆகும். அவ்வாறு அறிந்திருந்தாலும் எதைக்கொண்டு இங்கு பானை முதலாவை மாயை என்று அவன் உணர்ந்தான்? கயிறு – பாம்பு உதாஹரணதுக்கும், களிமண் – பானை உதாஹரணதுக்கும் என்ன ஸம்பந்தம், அது எங்கு நிரூபிக்கப் படுகிறது? உதாஹரணத்தில் ஏதோ ஒரு பண்பு அறியப்பட்டாலேயே, அதைக்கொண்டு தெரியாத பொருளை விளக்க முடியும். உதாஹரணத்திலும் புதிதாக ஒன்றை விளக்கி, பிறகு அவன் அறியாத விஷயத்திலும் புதிதாக ஒன்றை ஒரே வாக்கியத்தால் உணர்த்த முடியாது. இது உதாரணத்தின் பயனுமல்ல.
கருத்துகள்
உதாரணங்கள் எப்படிச் செயல்படும் என்பது அத்வைதிக்கு விளங்கவில்லை. உதாரணம் காட்டும் போது, காட்டப்படும் விஷயம் கேட்பவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும், அதைக்கொண்டு அறியாதது உணர்த்தப்படும் என்பதே சரி ஆகும்.
உதாரணத்திலும் அறியாத விஷயம் இருக்குமாயின் எந்த அறிவையும் உணர்த்த முடியாது. அத்வைதி தனக்கு சாதகமானதெல்லாம் ச்வேதகேது முன்பே அறிந்ததாகக் கொள்வது பொருந்தாது.
தந்தையின் வாக்காலேயே அவன் இரண்டையும் (உதாரணத்தின் நோக்கு + புதிய அறியாத விஷயம்) அறிந்தான் என்று கொள்ள முடியாது. உதாரணம் காட்டும் போது, ஒன்று அறிந்தும், மற்றொன்று அறியாமலும் இருக்க வேண்டும். இரண்டும் அறியப்படாமல் இருக்குமாயின் கேட்பவருக்கு ஒன்றும் விளங்காது.
ஆக, மண்ணின் மாற்றங்களே பானை முதலானவை என்று ச்வேதகேது அறிந்தான் என்று கொள்வதே இயல்வானதும் பொருத்தமானதும் ஆகும். பானை முதலானவை கயிறில் பாம்பு போல் பொய்யானவை என்று அவன் அறிந்தான் என்று கொள்வது அனாவசியம் ஆகும்.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/10/vedartha-sangraham-11-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org