ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல்
ஸர்வேஶ்வரன் க்ருஷ்ணாவதாரத்திலே அர்ஜுன வ்யாஜத்தாலே ஸ்வவிஷயமான சரமஶ்லோக முகத்தாலே ப்ரதமோபாயத்தை நிஶ்சயித்துக் காட்டினாப் போலே உடையவரும், அவதார விஶேஷமான தம் பக்கலிலே சரமோபாயத்தை நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.
எங்ஙனேயென்னில்: திருநாராயணபுரத்திலே உடையவர் முதலிகளும் தாமுமாக எழுந்தருளி இருக்கிற நாளிலே முதலியாண்டான் யாதவகிரி மாஹாத்ம்யம் வாசியா நிற்க,
28. अनंत प्रथम रूपम, लक्ष्मणच तथा परम
बलभद्र तृतीयस्तु, कलौ कच्चीद भविष्यति (அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் | பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || ) என்கிற ஶ்லோகம் வந்தவாறே சதுர்த்த பாதத்துக்குப் பொருள் ஏதென்று சில முதலிகள் முதலியாண்டானைக் கேட்க, அவரும் உடையவர் திருமுக மண்டலத்தைப் பார்க்க, உடையவரும், ‘ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாயிருக்கும்’ என்று அருளிச் செய்ய, அதினாலே முதலிகளுக்கு த்ருப்தி இல்லாதபடியைக் கண்டு, “இற்றைக்குச் செல்லும்; பின்னை வெளியிடுகிறோம்” என்றருளிச் செய்ய, அவ்வளவிலே மாஹாத்ம்யத்தை முட்ட வாசித்துக்கட்டி, கோஷ்டியும் குலைந்து போய் அன்று ராத்ரி காலத்திலே முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள் ஐவர்களும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து, “தேவரீர் அடியோங்களுக்கு அவ்வர்த்தத்தை அருளிச்செய்ய வேணும்’ என்ன, “ஆகில் இத்தை ஓருவர்க்கும் வெளியிடாதே கிடீர்கள். இதிலே ப்ரதிபத்தி பிறக்கிறது மிகவும் துர்லபமாயிருக்கும்” என்றருளிச் செய்து,
28. (கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்; நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும். ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப்பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார். இவ்வர்த்தம் பரமரஹஸ்யம்.
உடையவர்தாம் அவதார விஶேஷமென்னுமிடத்தைப் பலரும் வெளியிட்டார்களிறே.
எங்ஙனே என்னில் – அழகர் ஸன்னிதியிலே திருவத்யயனம் நடவாநிற்க, ஒரு நாள் திருவோலக்கத்திலே நம்மிராமாநுசமுடையார்க்கு அருளப்பாடென்று திருவுள்ளமாய் அருள, ‘நாயிந்தே’ என்று முதலிகள் எல்லாம் எழுந்திருந்து, அழகர் திருவடிகளுக்கு ஆஸன்னமாக எழுந்தருள, பெரிய நம்பி வழியிலே சிலர் எழுந்திருந்து வாராமலிருக்க, ‘நாமழைக்க நீங்கள் வாராமலிருப்பானேன்’ என்ன, “இராமநுசமுடையார்க்கு அருளப்பாடென்று தேவரீர் திருவுள்ளம்பற்றுகையாலே அவர் எங்களுக்கு ஶிஷ்யராய் இருக்கையாலே, அவர் எங்களுக்கு ஶேஷபூதரன்றோ என்று வாராமலிருந்தோம்” என்ன, அவரும் “நம்மை தஶரத வஸுதேவாதிகள் புத்ரப்ரதிபத்தி பண்ணினாப் போலே இருந்தது நீங்கள் நம் இராமநுசனை ஶிஷ்ய ப்ரதிபத்தி பண்ணினது. நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரான இவரோட்டை ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்ட உங்களுக்கு கதி ஏது?” என்று அருளிச்செய்தார். பின்பொரு நாள் கிடாம்பியாச்சானை அழைத்து அருளப்பாடிட்டருளி, ஒரு பாசுரம் சொல்லிக் காணாயென்ன, அவரும்,
29. न धर्मनिष्ठोस्मि न चात्मवेदी न भक्तिमास्त्वच्चरणारविन्दे ।
अकिंचनोनन्यगतिश्शरण्य त्वत्पादमूलम शरणम प्रपद्ये ॥ (ந தர்ம நிஷ்டோஸ்மி) என்று தொடங்கி 29. ( அகிஞ்சநோநந்ய கதிஶ்ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே|| ) என்றருளிச் செய்ய , “நம்மிராமாநுசனையுடையையாய் வைத்து அநந்யகதி என்று சொல்லப் பெறாய் காண்” என்றருளிச் செய்தார். அதாவது – “எல்லார்க்கும் புகலிடமாய், ஸர்வோத்தாரகமான நம்மிராமாநுசனிருக்கச் செய்தே உமக்கு ஒரு குறைகளுமில்லை. மார்விலே கைப்பொகட்டு உறங்கும்” என்றருளிச் செய்தார் என்றபடி.
பெருமாள் கோயிலிலே ஒரு வைஷ்ணவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தானாய், அந்தப் பிள்ளை ஐந்து, ஆறு வயஸ்ஸளவும் வார்த்தை சொல்லாமல் ஊமையாயிருந்து, அநந்தரம் இரண்டு மூன்று ஸம்வத்ஸரம் அவனைக் காணாமல் போக, சில நாளைக்குப் பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வந்தவாறே, இந்த ஆஶ்சர்யத்தைக் கேட்கைக்கு, ‘ஊமாய்! நீ இத்தனை நாளும் எங்கு போனாய்?’ என்று சிலர் கேட்க, அவனும் ‘க்ஷீராப்திக்குப் போனேன்’ என்ன, அங்கே விஶேஷமேதென்று கேட்க, “திருப்பாற்கடல் நாதன் ஸேனை முதலியாரை அழைத்தருளி, ‘எல்லாரும் நமக்காளாம்படி நீர் போய் அவதரித்து ஜகத்தையடையத் திருத்தும்?’ என்று நியோகிக்க அப்படியே ஸேனை முதலியாரும் இளையாழ்வாராய் வந்தவதரித்திருக்கிறாரென்று திருப்பாற்கடல் நாதன் ஸன்னிதியிலே ஶ்வேத த்வீப வாஸிகள் ப்ரஸங்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லி, உடனே அந்தப் பிள்ளை அந்தர்த்தாநம் பண்ணிப்போயிற்று.
உடையவர் யாதவப்ரகாஶனோடே ஶாஸ்த்ரபாடம் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளிலே, அந்த ராஜ்யத்து ராஜாவினுடைய பெண்ணை ப்ரஹ்மரக்ஷஸ்ஸு பிடித்து நலிய, அத்தை யாதவப்ரகாஶனுக்கு அறிவிக்கப் பண்ண, அவனும் அதிக்ரூரமான மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு இளையாழ்வார் தொடக்கமானாருடனே சென்று அத்தைப் போகச் சொல்ல, அது முடக்கின காலை நீட்டி, “நீ போகச் சொன்னால் உனக்கு பயப்பட்டு போகேன்” என்று சில வார்த்தைகள் சொல்ல, “ஆனால் நீ யார் போகச் சொன்னால் போவுதி?” என்ன, “உன்னுடனே வாசிக்கிறவர்களிலே ஒருவர் அநந்தகருடவிஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளில் தலைவரிலே ஓருவராயிருப்பார்” என்று உடையவரைக் காட்டி, “அவர் போகச் சொன்னால் அவர் திருவடிகளிலே தண்டனிட்டுப் போகிறேன்” என்று சொல்லுகையாலே, உடையவர் அவதார விஶேஷமென்னுமிடத்தை ப்ரம்ஹ்ரக்ஷஸ்ஸும் வெளியிட்டதிறே.
உடையவரும் ஶாரதா பீடத்துக்கு எழுந்தருளினவளவிலே ஸரஸ்வதியும் எதிரே புறப்பட்டு வந்து, “இவர் ஸர்வேஶ்வரனுடைய அம்ஶாவதாரமே; தப்பாது” என்று சொல்லி அதிப்ரீதியோடே, 30. “कप्यास” श्रुति (கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ) என்கிற ஶ்ருதி வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யவேணுமென்று உடையவரைக் கேட்க, உடையவரும் , “ஶ்ரீமந் நாராயணனுக்கு அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலேயிருக்கும் திருக்கண்கள் “ என்றருளிச் செய்ய, ஸரஸ்வதியும் கேட்டு மிகவும் ஸந்தோஷித்து, “ அவதார விஶேஷமான தேவரீர் நூற்றுக்காத வழி எழுந்தருளினது அடியேனைக் கடாக்ஷிக்கைக்காக எழுந்தருளிற்றே” என்று ஶ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களையும் ஶிரஸாவஹித்து உடையவருக்கு பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தி, உடையவருடைய அவதார ரஹஸ்யத்தை ஸரஸ்வதியும் வெளியிட்டாளிறே.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
In english – https://granthams.koyil.org/2012/12/charamopaya-nirnayam-ramanujar-avathAra-rahasyam/