சரமோபாய நிர்ணயம் 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சரமோபாய நிர்ணயம்

<< 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து “இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ, இத்தனை பேருண்டென்று நிஶ்சயித்து அருளிச் செய்ய வேணும்” என்று கேட்க ‘பொன்னாச்சியாரைக் கேளுங்கோள்’ என்று அருளிச் செய்ய, அவர்களும் அங்கே எழுந்தருளி, “எம்பெருமானார் தேவரீரைக் கேட்கச் சொல்லி அருளிச் செய்தார். இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ? இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன, அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு, “அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ? எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமித்தனை” என்று அருளிச் செய்து தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு உள்ளே எழுந்து அருளினார்.

இவர்களும் அப்ராப்தமநோரதராய், உடையவர் ஸன்னிதியிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, போன கார்யம் என்னென்று கேட்டருள, அவர் தமக்குத் தெரியாது. எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமத்தனை – என்று அருளிச் செய்தார் என்ன, நீங்கள் போனபோது அவர் செய்த வியாபாரம் என்னென்று கேட்க, திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக முடித்துத் தரையிலே கிடந்த காவிநூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு, எங்களை அனுப்பி உள்ளே எழுந்தருளினார் என்ன, “அவர் வெறுமனே எழுந்தருளவில்லை. நீங்கள் பண்ணின ப்ரஶ்னத்துக்கு ஸதுத்தரமாகப்பொருள் சொல்லிப்  போனார். உங்களுக்குத் தெரிந்ததில்லையே” என்றருளிச் செய்ய, ஆகிலும் அந்த அர்த்தத்தை தேவரீர் வெளியிட்டருள வேணுமென்ன, உடையவர் அருளிச் செய்தபடி – “அவர், திருக்குழற்கற்றையை உதறினத்தினாலே – இவ்வாத்மாவுக்கு ஆசார்யனைப் பார்க்கும்போது ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி, ஒன்றாக முடிந்து பொகட்டதாலே – இவனுக்கு ஆசார்யனாய் நின்று பேற்றைப் பண்ணிக் கொடுக்கிறவன் ஒருவனென்றபடி; தரையிலே கிடந்த காவி நூலை எடுத்ததினாலே பேற்றுக் குடலாக அறுதியிட்ட ஆசார்யனை விசேஷிப்பதாக நினைத்துப் பேற்றுக்குடலாக அறுதியிட்ட ஆசார்யர் சதுர்த்தாஶ்ரமத்தை ப்ராபித்து காஷாயம் சார்த்தியிருக்கிற எம்பெருமானாரென்று நம்மைச் சொன்னபடி. தலையிலே வைத்ததினாலே நமக்கு மூர்த்தந்யரான இவர் அனைவர்க்கும் அதிஶயாவஹர் என்னுமிடத்தை வெளியிட்டபடி; அங்கிராமல் உள்ளே  புகுந்ததினாலே இப்படிப்பட்ட ஆசார்யனை ஹ்ருதயத்துக்குள்ளே, ‘பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி’ என்கிறபடியே பேணியிட்டு வைத்துக்கொண்டு அநுஸந்தித்துக் கொண்டு இருக்கையே தத்ஸம்பந்திகளுக்கு ஸ்வரூபமென்னும் அர்த்தத்தை வெளியிட்டப்படி”. ஆகையாலே நீங்களும் இவ்வர்த்தத்திலே நிஷ்ட்டராய்ப் போருங்கோளென்று அருளிச் செய்தார். இத்தாலே பொன்னாச்சியாரையிடுவித்துத் தம்முடைய உபாயதாத்மகமான ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

எம்பாரும் வடுகநம்பியும் உடையவர் ஏகாந்தத்திலே எழுந்தருளியிருக்கிறவளவிலே அவர் திருவடிகளிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து, மதுரகவியாழ்வார் “தேவுமற்றறியேன்” என்று ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றையும் ஆழ்வாரிடத்திலே அறுதியிட்டுத் ததேக நிஷ்ட்டராய் ப்ரதமபர்வத்திலே கண்வையாதே எழுந்தருளியிருந்த நிலை அடியோங்களுக்கு உண்டாம்படி க்ருபை பண்ணியருள வேணுமென்ன, மதுரகவியாழ்வார் ஆழ்வாரிடத்திலே பண்ணின ப்ரதிபத்தி உங்களுக்கு நம் பக்கலிலே உண்டாம்படி பண்ணினோமே இனி உங்களுக்குச் செய்ய வேண்டும் அம்ஶம் ஏதென்ன, இந்த ப்ரதிபத்தி யாவதாத்மபாவியாய் நடக்கும் படி பண்ணியருள வேணுமென்ன, ‘ஆசார்யாபிமான நிஷ்ட்டனாகில் இங்ஙனிருக்க வேண்டாவோ?’ என்று மிகவும் உகந்தருளி, 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत् (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கிறபடியே நமக்கிரண்டாகாரமுண்டாகையாலே, இரண்டிடத்திலும் நம் பக்கலிலே இரண்டையும் அறுதியிட்டு “தேவுமற்றறியேன்” என்றிருக்கக் குறையில்லை. இதுதான் உங்களளவுமாத்ரமன்று, நம்முடைய ஸம்பந்திஸம்பந்திகளுக்கும் இந்த ப்ரதிபத்தியேயாயிற்று கார்யகரமாவதென்று அருளிச் செய்தார்.

“ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39. साध्यभावे महाभाओ साधने किम प्रयोजनम (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. उपयोपेयत्वे तदीह तव तत्वं न तू गूणौ (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत्  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38. अत्र परत्र चापि (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே

41. मातापितायुवतयस्तनया विभूतिः
सर्वंयदेव नियमेन मदन्वयानाम्
आदस्य नः कुलपतेर्वकुलाभिरामं
श्रीमत्तदड़िघ्रयुगलं प्रणमामी मुर्ध्ना ॥

(மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment