யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்

<< தனியன்கள்

கலியுகத்தில் சம்சாரிகளை (விஷயாந்தரங்களில் ஈடுபட்டுள்ளோர்) உய்விப்பதற்காக திருமகள் கேள்வனான ஶ்ரிய:பதி காருண்யத்தோடு பராங்குசர் (நம்மாழ்வார்) பரகாலர் (திருமங்கை ஆழ்வார்) பட்டநாதர் (பெரியாழ்வார்) முதலான ஆழ்வார்களை ஸ்ருஷ்டித்தான். பின்னர் இந்த லோக உஜ்ஜீவனத்திற்காக  காருண்யத்தோடு நாதமுனிகள் ஆளவந்தார் முதலான ஆசார்யர்களை அவதரிப்பித்து அவர்கள் மூலம் நம்மை ரக்ஷித்தான். ஆழ்வார்கள் ஆசார்யர்களின் மேன்மைகளை இவ்வுலகத்தாரும் பின்னர் தோன்றுவோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பின்பழகிய பெருமாள் ஜீயர், குருபரம்பரா ப்ரபாவம் (ஆழ்வார்கள், ஆசார்யர்களின் சிறப்புகள்) என்ற ப்ரபந்தத்தை அருளினார். பின்னும் சித் (உணர்வுள்ளவை) அசித் (உணர்வற்றவை) ஆகிய படைப்புகளின் ஈஶ்வரனான எம்பெருமான் அனைத்து சேதனர்களையும் ஜீயரின் (மணவாள மாமுனிகள்) சொற்களையும் செயல்களையும் கொண்டு ரக்ஷிப்பதற்காக காருண்யத்தோடு யதீந்த்ர ப்ரவணரை (துறவிகளுக்கு அரசரான ஸ்ரீ ராமாநுஜரிடத்தில் அன்பு பூண்டவர் – மணவாள மாமுனிகள்) படைத்தான். அத்தகைய மணவாள மாமுனிகளின் மேன்மையைப் பிள்ளை லோகம் ஜீயர் தம்முடைய யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் என்ற பிரபந்தத்தில் தம்முடைய ஆசார்யரின் (அவருடைய திருத்தகப்பனார் ஸ்ரீ சடகோபாசார்யர்) அனுக்ரஹத்தோடும் கந்தாடை நாயன் (முதலியாண்டான் வம்சத்தவரான கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமியின் திருமகனார்) அனுக்ரஹத்தோடும் அருளிச் செய்தார்.

பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

(கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

(1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

ஆதாரம் – https://granthams.koyil.org/2021/07/16/yathindhra-pravana-prabhavam-1-english/

அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment