யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்

<< பகுதி 2

இந்த இரு சகோதரர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து தொன்மையான தத்வ ரஹஸ்யம் (பரம் பொருளின் உண்மையான நிலை பற்றிய ரஹஸ்யங்கள்) தொடக்கமான பல ப்ரபந்தங்களை அருளிச்செய்தனர்; மேன்மையை உடைய பலரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடித்தாமரைகளில் சரணடைந்து தங்கள்  வாழ்வை அவரிடம் விட்டு, மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்

இவ்வாறான சிஷ்யர்களில் கூரகுலோத்தமதாசர், மணப்பாக்கத்துநம்பி, கொல்லிகாவலதாஸர் என்றும் அழைக்கப்பட்ட அழகிய மணவாளப்பெருமாள் பிள்ளை, கோட்டூரில் அண்ணார், விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோரும் அம்மங்கார்களில் (பெண்பால் சிஷ்யர்கள்) திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை) முதலானோரின் திருத்தாயாரும் அடங்குவர். இச்சிஷ்யர்கள் அவருடைய திருவடிகளில் இடையறாது தொண்டு செய்த வண்ணம் இருந்தனர்.  இவர்களின் சரண்யரான பிள்ளை லோகாசார்யர் அவர்களை அழைத்து, நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு வியாக்கியானங்களான ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி இயற்றப்பட்டதன் காரணங்களைப் பரிவோடு கூறுவார்.

சமுத்திரம் போன்ற ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட வேதத்திற்கு நிகரான திருவாய்மொழியில் நிபுணர்களான பல பூர்வாசார்யர்கள் தத்தம் ஞானத்திற்கு ஒப்ப திருவாய்மொழிக்கு வியாக்கியானம் இயற்றுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு இயற்றியிருக்கின்றனர். ஆயிரம் கிளைகளை கொண்ட உபநிஷத்திற்கு நிகராகத் திருவாய்மொழி கருதப்படுகிறது. எம்பெருமானார் (பகவத் ஸ்ரீராமானுஜர்) திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு கருணையுடன் அனுக்கிரஹித்தார். தெய்வீக அம்சத்துடன் அவதரித்த நம்மாழ்வாரின் ஆழ்மனக் கருத்துக்களுக்கு ஒத்த வண்ணம் ஆறாயிரப்படி (படி என்பது உரைநடையில் 32 சொற்கள் கொண்ட அளவு ஆகும்) என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தார்

பின்னர் ஸ்வாமி ராமானுஜரும் மேலும் பல ஆசார்யர்களும் பட்டரை (கூரத்தாழ்வானின் திருக்குமாரர்) திருவாய்மொழிக்கு மேலும் பல சிறப்பான கருத்துக்களைக் கொண்ட, பலரும் புரிந்து கொள்ளும் மற்றுமோர் வியாக்கியானமான ஒன்பதினாயிரப்படியை இயற்றுவதற்கு நியமித்தனர். பட்டர் மாதவர் என்ற பெயர் கொண்ட ஓர் அத்வைதியை வாதம் புரிந்து வென்றார். மாதவர் சம்சார பந்தங்களைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டு பட்டரின் திவ்ய திருவடிகளில் தொண்டு புரிந்து வந்தார். பட்டர் அவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமத்தைச் சூட்டி நம்பெருமாளை சேவிப்பதற்காக அவரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்தார். பட்டருடைய கோஷ்டியில் நஞ்சீயரும் இதர ஜீயர்களும் இருக்கும்பொழுது நம்பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மேல் ஆவேசித்து நஞ்சீயரிடம் “வாரும் நஞ்சீயரே! பட்டரின் உள்ளத்தில் இருப்பது போல் ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தை இயற்றும்” என்று கூறினார். அவ்வண்ணமே நஞ்சீயரும், ஆறாயிரப்படிக்கு பொற்கிரீடம் போன்ற வியாக்கியானமான ஒன்பதினாயிரப்படியை இயற்றினார்.

பட்டருக்கு நம்பெருமாள் மோக்ஷத்தை அளித்தபின் (ஸ்ரீவைகுண்ட பதவி) நஞ்சீயர் சோகமடைந்தவர் ஆனார். நமக்கும் வயதாகிறது; பட்டர் வயதில் இளையவராதலால் தரிசனம் (தரிசனம் என்ற சொல் விசிஷ்டாத்வைத கருத்துக்களை குறிக்கும்) மேலே சிறப்பாக ஊன்றித் தழைக்கும் என்று எண்ணியிருந்தோமே; அனால் இவ்வாறு மாறிப் போயிற்றே என்று எண்ணிய வண்ணம் இருந்தார். துக்கம் தாளாதவராக பட்டரின் திருமாளிகையை அடைந்து அவர் திருவடிகளில் பணிந்தார்.

அவரை தம்மருகே அழைத்த பட்டர் “நீர் மனம் தளர்ந்து சோர்வுறத் தேவையில்லை; இந்தத் தரிசனத்தை மேலே சரியாக தலைமை ஏற்று நடத்த பொருத்தமானவரை பெறுவீர்” என்று கூறினார். இந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் சமாதானம் அடைந்த நஞ்சீயர் அச்சொற்களைத் தம் நினைவில் மறவாதிருக்கும் வண்ணம் தம்முடைய மேல் உத்திரீயத்தில் ஒரு முடிச்சிட்டு வைத்தார். பின்னர் பட்டரின் சரம கைங்கர்யங்களை தகுந்த முறையில் நடத்தினார். பின்வரும் காலத்தில் இருபத்திநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானங்கள் உருவாக முன்னோடியாகத் தாம் வியாக்கியானம் செய்த ஒன்பதினாயிரப்படியை பட்டோலைப்படுத்தி வைத்தார். தம்முடைய பட்டோலையை கைப்பிரதிகளாக்க தக்க நபரை எதிர்பார்த்தவாறு இருந்து வந்தார்.

ஆதாரம் – https://granthams.koyil.org/2021/07/18/yathindhra-pravana-prabhavam-3-english/

அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment