ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
“ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை” என்றும் “பிறந்தவாறும்” என்றும் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்றும் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து” என்றும் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களான ஆழ்வார்களும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரும் கண்ணன் எம்பெருமானுடைய அவதாரத்தை மிகவும் கொண்டாடுகிறார்கள்.
எம்பெருமானுடைய பிறவிகள்/அவதாரங்கள் அவனுடைய கருணையினாலே ஏற்படுகின்றன என்பதை முன்பே நாம் பார்த்தோம். எப்படி ஒரு தாய் கிணற்றில் விழுந்த பிள்ளையை எடுக்கத் தானே கிணற்றில் குதிப்பாளோ, அதே போல, எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் தத்தளிக்கும் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காகத் தானே அவதாரங்களைச் செய்கிறான். அப்படி அவதரிக்கும்போது பல அற்புதமான லீலைகளைச் செய்து இங்குள்ளவர்களின் மனதைக் கவர்ந்து தனக்காகவே ஆக்கிக் கொள்கிறான். அவனுடைய அவதாரங்கள் மற்றும் லீலைகளின் சிறப்புகள் என்னவென்றால்
- அவன் இவ்வுலகத்தில் வந்து பிறந்தான் என்று உணர்ந்தால் நமக்கு ஸம்ஸாரத்தில் பிறவி இல்லாமல் போய்விடும்
- அவன் இவ்வுலகில் பிறந்து ஒரு தாயிடம் பால் குடித்தான் என்று உணர்ந்தால் நாம் இனி இவ்வுலகில் பிறந்து பால் குடிக்க வேண்டாதபடி ஆகும்
- அவன் வெண்ணெய் திருடி, அதனால் உரலில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டு அழுதான் என்று உணர்ந்தால் நம் இந்த ஸம்ஸாரத்தில் கட்டுப்பட வேண்டாதபடி ஆகும்
த்வாபர யுகத்தின் இறுதியில், இவ்வுலகில் கம்ஸன், ஜராஸந்தன் முதலிய தீயவர்களின் ஆதிக்கம் அதிகமானதால், ப்ரஹ்மா முதலான தேவர்கள் எல்லாரும் ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனின் இருப்பிடமான திருப்பாற்கடலுக்குச் சென்று “தேவரீர் இந்த உலகில் வந்து அவதரித்து, நல்லோர்களை ரக்ஷித்து தீயவர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்” என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் “தக்க ஸமயத்தில் நாம் வந்து தோன்றி ஆவன செய்வோம்” என்று அவர்களுக்கு ஆறுதல் அளித்து அனுப்பினான்.
தேவகிப் பிராட்டியும் ஸ்ரீ வஸுதேவரும் முன் ஜன்மங்களில் ஒருமுறை எம்பெருமானே தங்களுக்குப் பிள்ளையாக வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால் அவர்களுடைய பிள்ளையாகவே அவதரிப்பதாக எம்பெருமான் ஸங்கல்பம் செய்து கொண்டான். கம்ஸனுடைய தங்கை தேவகிப் பிராட்டிக்கும் ஸ்ரீ வஸுதேவருக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்தது. கம்ஸன் மணமக்களைத் தன் தேரிலே ஏற்றி நகர்வலம் அழைத்து வந்தான். அச்சமயத்தில் ஆகாசத்திலிருந்து ஒரு பேரொலி “தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னுடைய மரணத்துக்குக் காரணம் ஆவான்” என்று அறிவிக்க, அதைக் கேட்ட கம்ஸன் மிகவும் கலக்கத்தை அடைந்தான். கோபத்துடன் தேவகியையும் ஸ்ரீ வஸுதேவரையும் தன் வாளைக்கொண்டு கொல்ல முற்பட்டான். அப்பொழுது ஸ்ரீ வஸுதேவர் “கம்ஸா! எங்களால் உனக்கு எந்தத் துன்பமும் இல்லை. எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை உன்னிடத்திலேயே கொடுத்து விடுகிறோம்” என்று வேண்டிக்கேட்க, கம்ஸனும் மனம் இரங்கி அவர்களைக் கொல்லாமல் விட்டான்.
பின்பு கம்ஸன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து வைத்தான். அவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையாகப் பிறக்க, கம்ஸனும் ஒவ்வொரு குழந்தையாகக் கொன்று வந்தான். ஏழாவதாக தேவகியின் கர்ப்பத்தில் எம்பெருமானுடைய அம்சாவதாரமான, ஆதிசேஷனுடைய நேர் அம்சமான நம்பி மூத்த பிரான் (பலராமன்) தோன்ற, எம்பெருமானுடைய ஸங்கல்பத்தால், அங்கிருந்து எடுத்து ஸ்ரீ வஸுதேவருடைய மற்றொரு மனைவியான ரோஹிணியின் கர்ப்பத்தில் மாற்றப்பட்டார். அக்காலத்தில் ரோஹிணி ஸ்ரீ வஸுதேவருக்கு நெருக்கமானவரான ஸ்ரீ நந்தகோபரின் ஊரான திருவாய்ப்பாடியில் வாழ்ந்து வந்தாள். அங்கேயே பலராமனைப் பெற்றெடுத்தாள்.
எட்டாவதாக, எம்பெருமான் கண்ணனாக தேவகிப் பிராட்டியின் கர்ப்பத்தை வந்தடைந்தான். ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் அஷ்டமி திதியில், வட மதுரையில், சிறைக்கூடத்தில், நள்ளிரவில் வந்து தோன்றினான். பிறக்கும்பொழுதே நான்கு கைகளில் சங்கு சக்கரங்கள் முதலியவற்றோடு, தன் உண்மை உருவமான விஷ்ணு ரூபத்திலே வந்து தோன்றினான். அதைக் கண்ட தேவகிப் பிராட்டியும் வஸுதேவரும் மிகவும் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தனர். ஆனால் உடனே அவர்களுக்கு எம்பெருமானுக்கு என்ன ஆகுமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவர்கள் எம்பெருமானிடத்தில் இந்த தெய்வ உருவை மறைத்துக் கொண்டு ஒரு மனித உருவிலே இருக்கும்படி ப்ரார்த்தித்தார்கள். எம்பெருமானும் அவ்வாறே செய்தான். பின்பு வஸுதேவரின் விலங்குகள் அறுந்து விழும்படியும் சிறைக் காவலாளிகள் தூங்கி விழும்படியும், கதவுகள் தானே திறக்கும்படியும் செய்து, வஸுதேவரைப் பார்த்து “என்னை யமுனைக்கு அக்கரையில் இருக்கும் திருவாய்ப்பாடியில் யசோதைப்பிராட்டி மற்றும் நந்தகோபரிடத்தில் கொண்டு சேர்த்து அவர்கள் ஈன்றிருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வாரும்” என்றான். அவரும் அவ்வாறே புறப்பட்டு கண்ணனைத் தன் தலையின் மேலே ஒரு கூடையில் வைத்துக்கொண்டு சென்று யமுனைக்கரையை அடைய அங்கே பெருமழையினால் பெருவெள்ளமாக யமுனை ஓடுவதைக் கண்டு திகைக்க, எம்பெருமானின் கருணையினால் யமுனைக்கு நடுவிலே ஒரு பாதை ஏற்பட, ஆதிசேஷன் எம்பெருமானுக்குக் குடையாக இருக்க, அப்பாதையின் வழியே யமுனையைக் கடந்து, நந்தகோபர் அரண்மனையைச் சென்று சேர, அப்பொழுது யசோதைப் பிராட்டி பெற்றெடுத்த யோகமாயையான துர்கையை எடுத்துக் கொண்டு கண்ணனை அங்கே விட்டு விரைவில் சிறையை வந்தடைந்தார். அவர் உள்ளே வந்தவுடன், எல்லாம் முன்பு இருந்த நிலைக்கு மாற, தேவகிப் பிராட்டியும் வஸுதேவரும் நடந்த எல்லாவற்றையும் மறந்து விட, குழந்தை அழத் தொடங்க, காவலாளிகள் கம்ஸனிடம் சென்று குழந்தை பிறந்ததை அறிவித்தனர். கம்ஸன் உடனே சிறைக்கு வந்து எட்டாவது பிள்ளையை நான் கொன்று என் ஆபத்தை தவிர்த்துவிடுவேன் என்று சொல்லி, அக்குழந்தையைக் கையில் வாங்க, அப்பொழுது அக்குழந்தை அவன் கையில் இருந்து விடுபட்டு ஆகாசத்தை அடைந்து, துர்கை வடிவை அடைந்து “உன்னைக் கொல்லப் பிறந்தவன் ஆபத்தின்றி வாழ்கிறான். தக்க ஸமயத்தில் நீ கொல்லப்படுவாய்” என்று சொல்லி மறைந்தாள். இதனால் கம்ஸன் மிகவும் கோபத்தை அடைந்து, எல்லா இடங்களிலும் பிறந்த குழந்தைகளைத் தேடுமாறு சொன்னான்.
இனி, இங்கே திருவாய்ப்பாடியில், யசோதைப் பிராட்டி அழகான ஆண் குழந்தையைப் பெற்றிருப்பதைக் கேள்வியுற்ற அனைத்து இடையர் குல ஆண்களும் பெண்களும், மிகவும் ஆனந்தப்பட்டு, கண்ணன் பிறப்பை மிகவும் ஆனந்தமாகக் கொண்டாடினர்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org