ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணன் எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நல்ல முறையில் வளர்ந்து வந்தான். யசோதைப் பிராட்டியும் ஸ்ரீ நந்தகோபரும் மற்றும் உள்ள கோபியரும் கண்ணனிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்தார்கள்.
கம்ஸனுக்கு எப்படியோ கண்ணனே தன்னைக் கொல்லப் போகிறான் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு வேண்டியவர்களான ராக்ஷஸர்களைக் கொண்டு கண்ணனைக் கொன்று விடலாம் என்று பார்த்தான். முதலிலே பூதனை என்னும் ஒரு கொடிய அரக்கியை வரவழைத்தான். அவளிடத்தில் “நீ ஆயர்பாடிக்குச் சென்று அங்கிருக்கும் கண்ணணை எப்படியாவது முடித்து விட்டு வா” என்று கூறி அனுப்பினான். அவளும் உடனே புறப்பட்டு ஆயர்பாடியை அடைந்தாள். அவனிடத்திலே ராக்ஷஸ வடிவுடன் போகாமல் யசோதை போன்ற அழகிய வடிவை எடுத்துக் கொண்டு சென்றாள். யசோதைப் பிராட்டி கண்ணணைத் தூங்கப் பண்ணிவிட்டுத் தன் கார்யத்தைப் பார்க்கச் சென்ற ஸமயத்தில், கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றாள். தன்னுடைய முலைகளிலே விஷத்தைத் தடவிச் சென்ற அவள் கண்ணனுக்கு அந்த விஷம் தடவிய முலைகள் மூலம் பால் கொடுத்து அவனைக் கொன்று விடலாம் என்று பார்த்தாள்.
இவள் வருவதைக் கண்ணனும் உணர்ந்து விட்டான். அவள் வந்தால் அவளைத் தக்க வழியின் மூலம் முடித்து விடலாம் என்று முடிவு செய்திருந்தான். அவள் யசோதையைப் போலவே இருந்ததால் அங்கிருந்த யவரும் அவளை ஸந்தேஹப்படவில்லை. அவளும் நேரே சென்று கண்ணனை எடுத்துத் தன் மடியிலே வைத்துக்கொண்டு அவனுக்குப் பால் கொடுக்கத் தொடங்கினாள். கண்ணனும் தன் தாயிடத்திலே பால் குடிப்பதைப் போலே ஆசையோடே குடிக்கத் தொடங்கினான். ஆனால் பாலோடு சேர்த்து அவள் ப்ராணனையும் குடித்து, அவளைக் கொன்று வீழ்த்தினான். அவளும் “ஹா” என்று கதறிக்கொண்டு பெரிய ராக்ஷஸ உருவத்துடன் கீழே விழுந்து மடிந்தாள். இதைக்கண்ட யசோதை உடனே ஓடி வந்து கண்ணைத் தூக்கிக்கொண்டு அவனை ஆச்வாஸப்படுத்தினாள்.
இந்தச் சரித்ரத்தை ஆழ்வார்கள் பலரும், பல இடங்களில் மிகவும் ஈடுபட்டு அனுபவித்துள்ளார்கள். பூதனையைச் சொல்லும் இடத்தில் “பேய்” என்றும் “பேய்ச்சி” என்றும் “பூதனை” என்றும் சொல்லி, அவள் செய்த க்ரூரச்செயலை நினைத்து பயப்படுகிறார்கள். இதிலே சில ஆச்சர்யமான தாத்பர்யங்களை நாம் பார்க்கலாம்.
- ராமாவதாரத்தில் முதலில் எம்பெருமான் கொன்றது தாடகை என்னும் அரக்கியை. இங்கே க்ருஷ்ணாவதாரத்தில் பூதனை என்னும் அரக்கியை.
- அவள் எப்படி அவனிடத்தில் அன்பு கொண்டவளைப் போலே வேடமிட்டு வந்தாளோ, இவனும் அவளிடத்திலே அன்போடு இருப்பதைப் போலே அவள் பாலைப் பருகினான்.
- எம்பெருமானுக்கே என்று விஷத்தை வைத்திருந்தாலும், அதை அவன் ஆசையோடே எடுத்துக் கொள்வான், அவனுக்காக மட்டுமே என்கிற அந்த எண்ணத்தினாலே.
- அவனுக்கு அவளைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. ஆயினும் அவள் தீய எண்ணத்தோடு வந்ததால், எம்பெருமானால் இயற்கையாகக் கொல்லப்பட்டாள்.
- ஒருவன் எம்பெருமானிடத்திலே அன்பு கொண்டவனைப் போல எத்தனை ஸாமர்த்யமாக வேஷம் போட்டாலும், அதை எம்பெருமான் எளிதில் புரிந்து கொண்டு, அந்த எண்ணத்தைத் தகர்த்து விடுவான்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
அடியேன் இராமாநுசதாசன்