க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 4 – சகடாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< 3 – பூதனை வதம்

கண்ணன் எம்பெருமானின் தொட்டில் பருவத்தில் நடந்த மற்றொரு ஆச்சர்யமான சரித்ரம் சகடாஸுர வதம். இதையும் ஆழ்வார்கள் பல இடங்களில் எடுத்து அழகாக அனுபவித்துள்ளார்கள். நம்மாழ்வார் “தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே!” என்று எம்பெருமானின் இந்த லீலையை அனுபவிக்கிறார்.

ஒரு முறை கண்ணனை ஒரு வண்டியின் சக்கரங்களில் ஒரு தூளியைக் கட்டி அதிலே அவனைத் தூங்கப் பண்ணிவிட்டு தன் கார்யங்களைப் பார்க்கச்சென்றாள் யசோதைப் பிராட்டி. அப்பொழுது கம்ஸனால் ஏவப்பட்ட ஒரு அஸுரன் எம்பெருமானைக் கொல்லும் ஸுலபமான வழியை யோஜித்து, அந்த வண்டிச் சக்கரத்தில் புகுந்து கொள்ளலாம் என்று பார்த்து அவ்வாறே செய்தான். கண்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் அவனை நோக்கி உருண்டு வரத் தொடங்கினான். அந்த ஸமயத்தில் கண்ணன் விழித்துக்கொண்டு பசியினால் தன் தாயின் பாலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தன் திருவடிகளை உயர்த்தி, உதைத்துக் கொண்டு அழத் தொடங்கினான். அப்பொழுது சரியாக அந்தச் சகடாஸுரன் எம்பெருமான் திருவடிக்கு அருகில் இருக்க, திருவடிகள் பட்டவுடன் மிகவும் தளர்ச்சியை அடைந்து, உடைந்து பொடிப் பொடியாக கீழே விழுந்தான். அப்படியே அந்த வண்டியும் சட சடவென்று கீழே விழுந்தது. அதைக் கண்ட யசோதைப் பிராட்டி ஓடி வந்து கண்ணனை எடுத்து அணைத்துக் கொண்டாள். எப்படியோ தெய்வாதீனாகக் கண்ணன் பேராபத்தில் இருந்து தப்பினான் என்றே அவர்கள் அனைவரும் நினைத்தார்கள்.

இதிலே இருக்கும் தாத்பர்யங்கள்,

  • எப்படி நம் எல்லாருக்கும் எம்பெருமான் திருவடிகளே ரக்ஷையாக இருக்கிறனவோ அப்படியே அவனுக்கும் அவன் திருவடிகளே ரக்ஷையாக இருக்கின்றன.
  • எதிரிகளை அழிக்க எம்பெருமான் தனிப்பெரும் முயற்சியெல்லாம் செய்ய வேண்டாம், மிகவும் எளிதாக அதைச் செய்து முடிக்க முடியும்
  • எதிரிகளை அழிக்க எம்பெருமானுக்குத் தனியாக ஆயுதங்கள் எல்லாம் வேண்டாம், திருமேனியின் சக்தியைக் கொண்டே முடித்து விடுவான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 4 – சகடாஸுர வதம்”

Leave a Comment